Published:Updated:

``இன்னிக்கு நிலவரப்படி உலகில் இரண்டே சாதி தான்..!?’’ - வாக்கிங் டாக்கிங் 7 #MyVikatan

Representational Image
Representational Image

பேசிக்கொண்டிருக்கும் போதே எங்களைத்தாண்டி… ஒரு இளைஞன் சைக்கிளில் அந்த வண்டிகளுக்கிடையே வளைந்தும் நெளிந்தும் ஜீப்பைத் தாண்டி அவசரமாக போனான். அவன் போட்டிருந்த ஜீன்ஸ் பேண்ட்டிலிருந்து கீறில்களோடு நூல் பிசிறுகள் காற்றில் பறந்தன...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

முதல் பாகம் : ``தமிழய்யா சொன்ன ஆங்கில வார்த்தைப் புதிர்..!'' - வாக்கிங் டாக்கிங் - 1 #MyVikatan

இரண்டாம் பாகம் : திருமதியின் எசப்பாட்டு! - வாக்கிங் டாக்கிங் 2 #MyVikatan

மூன்றாம் பாகம் : ``ஓஹோ.. இதான் பவுடர் கலையாத நடையா.. !‘’- வாக்கிங் டாக்கிங் - 3

நான்காம் பாகம் : ஒரே ஒரு கேள்வி.. மொத்தமா நான் காலி..!

ஐந்தாம் பாகம் : கணக்கா, கணிதமா? - வாக்கிங் டாக்கிங் 5

ஆறாம் பாகம் : ABC விதி கூட தெரியாதா? - கேள்வி கேட்டு மடக்கிய திருமதி!

நண்பர் இனியவன் சரியாக 6.30 மணிக்கு வீட்டின் வாசலுக்கு வெளியே நின்று கைகளை அசைத்தார்.

அவசரமாக ஷுவை தேடினேன். திசைக்கொன்றாகக் கிடந்தன.. சில பேர் ஷு போட விரும்பாதற்கு மிக முக்கிய காரணம் ஷு லேஸ் தான். ஷு லேஸை லேசில் கட்ட முடிவதில்லை. அது எப்போதும் கடைசி நேரக் காரியமாக இருப்பதால் சில சமயம் பயங்கர எரிச்சல் தரக்கூடிய விஷயமாக மாறிவிடும். அவசரமாக புறப்படும் போது முடிச்சு விழுந்து விடும். அதை உட்கார்ந்து குனிந்து அல்லது ஷுவை கையிலெடுத்து சிக்கலை நீக்கி மறுபடியும் கட்டுவதற்குள் வேர்த்து விறுவிறுத்து விடும். அதன் டென்சன், போகும் இடம் வரை கூடவே வரும்! இருக்கும்!!

ஆனால், இனியவன் அந்த ஷு விஷயத்தில் நிதானமாக இருப்பார். எப்போதும் ஷு பளபளன்னு இருக்கும். சில சமயம் இரவே புறப்பட்டு ஷு போட்ட மாதிரி வந்து நிற்பார்…

இன்று அப்படிதான்…நடக்க ஆரம்பித்தோம்…

சார்… என அழைத்தார்.

அவர் எதற்காக அழைத்தார் என அறியும் முன், ”இனியவன், என்னை சும்மா சி.ஆர்- ன்னே கூப்பிடலாம்! எனக்கென்ன வயசா ஆயிடுச்சு?” எனக் கேட்டேன்.

``இன்னிக்கு நிலவரப்படி உலகில் இரண்டே சாதி தான்..!?’’ - வாக்கிங் டாக்கிங் 7 #MyVikatan

வயசில மூத்தவர் நீங்க… அதனால தான்!

பரவாயில்லை… சி.ஆர்ன்னே கூப்பிடுங்க!

பசங்கள ஸ்கூல சேர்க்கும் பொது சாதி, மதம் சொல்ல விரும்பாதவங்களை கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு சொல்லிடாங்களாமே!

நல்ல விஷயம் தான் இனியவன்! இன்னிக்கு நிலவரத்தில உலகில இரண்டே சாதி தான்…

என்ன இனியவன், நாதஸ் திருந்திட்டானா?

இல்லைங்க சி.ஆர்…! பாசிட்டிவ், நெகடிவ்…

ஹா ஹா ஹா…

சில பேருக்கு எல்லா அறிகுறி இருந்தும் பாசிட்டிவ் வரல…

”யோசிச்சு பாசிட்டிவ்வான முடிவை சொல்லுங்க”ன்னு சொல்ற காலம் மலையேறி போச்சு. ”பாசிட்டிவா” வரக்கூடாதுன்னு நினைக்கிற அளவுக்கு உலகம் மாறிடுச்சு…இனியவன்.

சில பேர் நேரிடையா… சி.டி ஸ்கேனுக்கு போயிட்டாங்க…

சினிமா சி.டிக்கு பின்னால இப்ப சி.டிங்கிற வார்த்தையே பேமஸ் ஆயிடுச்சு…

ஆமாங்க… ”கம்ப்யூட்டர் டோமோகிராஃபி” யை தான் சி.டி ஸ்கேன்னு சுருக்கிட்டோம்!

அதைமட்டுமா சுருக்கிட்டோம்? இந்த கொrரோனா வாழ்க்கையையே மூன்று எழுத்தில் சுருக்கி வைச்சுடுச்சு… யாரும் நேரில போய் ஆறுதல் கூட சொல்ல முடியாத சூழ்நிலை! எவ்வளவு பெரிய VIP யா இருந்தாலும் அஞ்சலி கூட RIP க்குள்ள சுருங்கிடுச்சு…

விடுங்க சி.ஆர்! வாழ்க்கை மூன்று வார்த்தையில இருந்தது இன்னிக்கு மூன்று எழுத்தில் சுருங்கிடுச்சு…

அதென்ன மூன்று வார்த்தைகள் இனியவன்?

இதுவும் கடந்து போகும்…

இதுவும் நடந்து போகும்!

எப்படிங்க சி.ஆர்?

லாக்டவுன்ல பஸ் இல்லையே!

ஹா ஹா ஹா… இனியவன் மெதுவாக சிரிக்கும் போது மாஸ்க் மேலும்கிழும் ஆடியது.

சி.டி ஸ்கேன் எடுத்தாலும் ஆபத்துன்னு சொல்றாங்களே!

இதிலும் எக்ஸ்-ரே தான் பயன்படுத்துறாங்க… ஆனா, எக்ஸ்-ரே தர பாதிப்பை விட பல மடங்கு பாதிப்பு அதிகம். அதனால், தேவைப்பட்டா மட்டும் சி.டி ஸ்கேன் எடுத்தா போதுங்க…சி.ஆர்!

ஆமாங்க இனியவன்…

வழிமேல்… நிறைய டூ விலர்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு இருந்தன…

லாக்டவுன் சமயத்தில் கூட இவ்வளவு வண்டிகளா?

ஆமாங்க…சி.ஆர்! டிராபிக் ஜாம் இன்னிக்கு நேத்து நடக்கிற கதையா என்ன?

புதுக்கதையா…

பழைய கதைதான்…ரோம் நகரில் டிராபிக்ஜாம் தாங்க முடியாம போனதால, பகலில் இரதங்கள் எதுவும் வீதிகளில் செல்லக்கூடாதுன்னு அரசு உத்தரவு போட்டிருந்தாராம் ஜூலியஸ் சீசர்…

சிசரோ?

சிசரோ இல்லைங்க… சீசர்

உச்சரிப்பு மாறினால் எல்லாம் மாறிடும்… ”இறந்தவர்களின் வாழ்க்கை வாழ்பவர்களின் நினைவில் இடம் மாறுகிறது” எனச் சொன்னவர் தான் சிசரோ! ரோமானிய எழுத்தாளர். ஜுலியஸ் சீசர் ரோமப் பேரரசர்! நாள்காட்டியை உருவாக்கியவர்!

ஒ…

சீசரைப்பத்தி இன்னொரு நியூஸ் கூட இருக்குது…

என்னது இனியவன்?

சமீபத்தில் கூட நம்ம சுகாதார அமைச்சர் விருப்பப்பட்ட தேதியில் சிசேரியன் செய்வது தடுக்கப்படுமுன்னு சொன்னாரே…

ஆமாம்… சீசருக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?

இருக்கு…

சொல்லுங்க…

சீசர் பிறந்த போது தாயின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை செஞ்சு தான் எடுத்தாங்களாம். அதனால வயிற்றைக்கிழித்து குழந்தையை வெளியே எடுக்கும் அறுவை சிகிச்சைக்கு சிசேரியன்னு பெயர் வந்ததாம்…

Representational Image
Representational Image

வழியில் ரேஷன் கடையில் அரசு தரும் 2000 க்காக வரிசை நீண்டிருந்தது… அதற்காக வந்தவர்களின் வண்டிகள் தான்! ஜீப் ஒன்றும் நின்றிருந்தது.

பேசிக்கொண்டிருக்கும் போதே எங்களைத்தாண்டி… ஒரு இளைஞன் சைக்கிளில் அந்த வண்டிகளுக்கிடையே வளைந்தும் நெளிந்தும் ஜீப்பைத் தாண்டி அவசரமாக போனான். அவன் போட்டிருந்த ஜீன்ஸ் பேண்ட்டிலிருந்து கீறில்களோடு நூல் பிசிறுகள் காற்றில் பறந்தன. இனியவன் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

என்ன சிரிப்பு? சொல்லிட்டு சிரிங்களேன்…

நான் அவன் காதலியை சந்திக்க ஓடுறான்னு நினைக்கிறேன்…

எப்படி சொல்றீங்க?

அதுதான்…சைக்கிள் கேரியரில் என்னவோ இருக்கே…

இந்த வயசில கேரியரை மாத்துவதே காதல் தானே?

இன்னும் பலமாக இனியவன் சிரிக்க ஆரம்பித்தார்..

எதோ சொல்ல வருகிறார்.

அந்த ரேஷனையும் அவன் பேஷனையும் நினைச்சு சிரிச்சேன்…

என்ன?

ரேஷனில எடை குறைவா இருக்கும்… பேஷனில உடை குறைவா இருக்கும்… அது தான்.

ஜீப்பை நெருங்கும் போது தீடிரென ஜீப்பிற்குள்ளிருந்து நாய் குரைத்தது.

எதிர்பாராத நாய் பாய்ச்சலில் என்னையறியாமல் பயந்து ஓட ஆரம்பித்தேன்.

நான் ஓட்டமும் நடையுமாக திரும்பிப் பார்க்காமல் நியூ பேக்கரி அருகில் போய் தான் நின்றேன். படபடப்பு இன்னும் இருந்தது.

என்னை நோக்கி வந்து கொண்டிருந்த இனியவன் முகத்தில் சிரிப்பு இன்னும் இருந்தது.

ஜீப்புக்குள்ள நாய் கட்டி வைச்சிருக்காங்க…. நீங்க அதை கூட கவனிக்காம ஓடியாந்துட்டீங்க…

ஜீப்புக்குள்ள நாய் இருக்குமுன்னு நான் கனவா கண்டேன்? சற்று கோபம் வந்தது.

ஜீப்புன்னாவே எல்லா காரியங்களுக்கும் பயன்படும் வண்டி தானே?

நல்ல வண்டி போங்க… இனியவன்! குலை நடுங்கி போச்சு தெரியுமா?

GENERAL PURPOSE சுருக்குமா ஜீப் (GP – JEE P)ன்னு பெயர் வந்துடுச்சு!

சுருக்குமா… எனக்கு உயிர் போய் உயிர் வந்துடுச்சு…இன்னிக்கு எல்லா கதையும் சுருக்குமா இருக்கே…

இன்னும் பலமாக இனியவன் சிரித்துக்கொண்டே,”அங்க பார்த்தீங்களா சார்?” என்றார்.

நான் அப்பவே சொன்னேனே அந்த சைக்கிள் அதுக்கு தான் அவ்வளவு ஸ்பீடா போகுதுன்னு

காலை நேரமானாலும், அங்கே சைக்கிளில் வந்த இளைஞன் ஒரு இளம்பெண்ணோடு பேசிக்கொண்டு நின்றிருந்தான்.

ச்சே! நான் அந்தப் பையனை சொல்லலை… அந்த போர்டைப் பாருங்க…

நான் விளம்பர பலகையைப் பார்த்தேன்.

அதில் என்ன ஸ்பெஷல் ?

பால் டீ 20 ரூபாவாம்…

நியூ பேக்கரியில் வைக்கப்பட்ட விளம்பர பலகையை ஒட்டி சைக்கிள் நின்றிருந்தது. விளம்பர பலகையில், எழுதியிருந்த வாசகங்கள் இளம்பெண்ணோடு பேசிக்கொண்டிருந்த இளைஞனால் மறைக்கப்பட்டு ’பால் டீ 20 ரூபாய்’ என்பது மட்டும் கொட்டை எழுத்தில் தெரிந்தது.

விலை அதிகமா போட்டிருக்கே! இவங்க மட்டும் பாலில் மினரல் வாட்டரா கலக்கிறாங்க?

இனியவன் ஒன்றும் பேசாமல் நடக்க ஆரம்பித்தார்.

அவர்களை கடக்கும் போது, எதேச்சையாக பேசிக்கொண்டது காதில் கேட்டது.

இல்லைடா… வேண்டாம்…

ஏன் ?

இவ்வளவு காஸ்டிலியான்னு டிரெஸ் வாங்க ஏதுடி பணம்? ன்னு அம்மா கேட்பாங்க…

எதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தானே?

சற்று மெளனித்து பதில் வந்தது.

முடிஞ்சா செய்ய மாட்டேனாடா?

இந்தா பிடி.. என்னவோ பண்ணு…

இந்த உரையாடல் நடந்துகொண்டிருக்கும்போதே அவர்களை கடந்து விட்டோம்.

பார்த்தீங்களா இனியவன்… கிப்ட் எப்படின்னு?

Representational Image
Representational Image

இதெல்லாம் சகஜம் சார்… கிப்ட் கொடுக்கிறது இன்னிக்கு நேத்தா நடக்குது?

நம்ம காலத்தில பைவ் ஸ்டார் வாங்கி தந்தாவே பெரிய கிப்ட்…

அந்த காலத்திலும் கிப்ட் இருந்திருக்கு…

ஓ… அப்படியா?

நற்றிணைப்பாடல் ஒன்றை இனியவன் பாட ஆரம்பித்து விட்டார்.

சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா

அலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுகக்

கன்றுதாய் மருளுங் குன்ற நாடன்

உடுக்குந் தழைதந் தனனே அவையாம்


உடுப்பின் யாயஞ் சுதுமே கொடுப்பின்

கேளுடைக் கேடஞ் சுதுமே ஆயிடை

வாடல கொல்லோ தாமே அவன்மலைப்

போருடை வருடையும் பாயாச்

சூருடை அடுக்கத்த கொயற்கருந் தழையே.

(நற்றிணை: 359)

சூப்பர்… அதுக்கு விளக்கம் என்ன?


தலைவன் கொடுத்த தழையாடை, மலையாடு கூட போக முடியாத தெய்வம் வாழும் மலையிலிருந்து பறிக்கப்பட்ட தழைகளிலிருந்து செய்யப்பட்டது. இதை இப்போது உடுத்த முடியாது. உடுத்தினால் இவ்வளவு அறிய தழையுடைய உடையை யார் கொடுத்தது எனக்கேட்பாள். இதை அவனிடம் திருப்பி கொடுக்கவும் முடியாது. கொடுத்தால் அவனின் மனம் வாடிப் போகும். உடுக்காமாலும் கொடுக்காமலும் கீழே போட்டால் தழையாடை வாடிப்போகும். அதனால் மலையின் தெய்வம் வருத்தும். இப்போது என்ன செய்வது எனத்தடுமாறினாள் என நுட்பமாகச் சொல்லியிருக்கிறது பாடல்.

அடடா… நான் கூட திருமதிகிட்ட அவங்க பிறந்த நாளுக்கு என்ன கிப்ட் வேணுமுன்னு கேட்டேன்?

என்ன சொன்னாங்க சி.ஆர்?

எதுவுமே வேண்டாமுன்னு ”நகை”க்கிறாங்க…

நல்ல ”நகை”ச்சுவை எனக்கூறி சிரித்தார் இனியவன்.

-வாக்கிங் தொடரும்

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு