Published:Updated:

வானவில் ஏன் வளைஞ்சு இருக்கு? - வாக்கிங் டாக்கிங் 9 #MyVikatan

Representational Image
Representational Image

சூப்பர் மார்க்கெட் போனாலே… HIGH PRESSURE வந்துடும்… ஒரு பொருள் தான் சொல்லி… சூப்பர் மார்க்கெட் போயிட்டு போன் செய்யுங்கன்னு சொல்லுவாங்க… போன் செஞ்சு கேட்டா… போனிலேயே பெரிய லிஸ்ட் வரும்…அது அடுத்த டென்சன்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இனியவன் வந்து நிற்கும் போது காலை நேரம் சற்றே வெளிச்சம் பிடித்திருந்தது…

``கோழி கூவும் போது வந்து நிக்கிறீங்க… உங்க நேரம் தவறாமை எனக்கு ரொம்ப பிடிக்கும்…’’

``ஹலோ…. சி.ஆர்.... ’’என கலகலவென சிரித்தார்.

``இதுக்கும்மா சிரிப்பு…?’

``என் பிரச்சனை எனக்கு…’’

``அப்படியென்ன பிரச்சனையோ?’’

``சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் அதிகமாக கேட்கும்போதே சத்தமில்லாமல் வாக்கிங் கிளம்புவனே புத்திசாலி!’’

``ஆஹா… வீட்டுக்கு வீடு வாசப்படி…’’

``ஆத்திரப்பட்டா சிக்கல் தான்…’’

``அது என்னமோ சரிதான்… டால்ஸ்டாய் சின்ன பையனா இருக்கும் போது ஒன்பது வயசு சிறுமியைக் காதலிச்சிருக்கிறார்…’’

``அந்த வயசில இதெல்லாம் தேவையா அவருக்கு?’’

``அந்த பொண்ணு இவரைக்கண்டுக்காம மத்தவங்கிட்ட பேசிட்டு இருந்திருக்கு…’’

``அப்படிதானே பெரும்பாலும் நடக்கும்…இனியவன்’’

``அனுபவமோ?’’

``ஹா…ஹா..ஹா…அதெல்லாம் இப்ப பேசி என்ன பிரயோஜனம்? டால்ஸ்டாய் கதையைச் சொல்லுங்க’’

``கோபத்தில டால்ஸ்டாய் அந்த பொண்ணை மாடியிலிருந்து தள்ளி விட்டுட்டார்.’’

Representational Image
Representational Image

``அச்சச்சோ…அந்த பொண்ணுக்கு என்னாச்சு…’’

``ஒண்ணும் ஆகலை…’’

``பழிக்கு பழியா… அவரை குழியில தள்ளி விட்டிருச்சா?’’

``அப்படியும் சொல்லலாம்! ’’ எனச் சிரித்தார்.

``கடைசியா என்னதான் ஆச்சுன்னா… அந்த பொண்ணு 25 வருஷம் கழிச்சு அவருக்கு மாமியார் ஆயிட்டா…’’

``இதுக்கு தான் நம்ம நடத்தை… ஆடு மேச்சது மாதிரியும் இருக்கணும்! அண்ணனுக்குப் பொண்ணு பார்த்தது மாதிரியும் இருக்கணும்!’’

``ரைட்…ரைட்… சரி போலாம் நடங்க?’’

இனியவன் குடையை மடக்கி வைத்துக்கொண்டார்…

தூறல் நின்று போயிருந்தது…

``அங்கே பாருங்க வானவில்…’’

``ச்சே…வானவில் பார்த்து ரொம்ப நாளாச்சு…’’

``லாக்டவுனில் எல்லாமே மாறி போச்சு…’’

``வானவில் எப்படி…?’’ எனது கேள்வி முடியும் முன்னே இனியவன் பேச ஆரம்பித்தார்.

``வானவில்… மழைத்துளியில் சூரிய ஒளி எதிரொளிப்பால் வருது…’’

``அது எனக்குத் தெரியும்… வானவில்…?’’

``எத்தனை கலர்ன்னா கேட்கிறீங்க… VIBGYOR ஏழு நிறங்கள்…’’

``அதெல்லாம் நான் பத்தாவது படிக்கும் போதே படிச்சுட்டேன்…’’

``இன்னுமா உங்களுக்கு ஞாபகம் இருக்கு?’’

``எனக்கு ஞாபக சக்தி அதிகம்!’’ எனச்சொன்னேன்.

அதற்கு இனியவன் சிரிக்கவே எனக்கு கோபம் கோபமாக வந்தது…

``வீட்டில வாங்கிட்டு வரச் சொன்ன பொருள்களை மறந்து போய் எத்தனையோ நாள் என் கண் முன்னாடி திட்டு வாங்கியிருக்கீங்க…’’

``சூப்பர் மார்க்கெட் போனாலே… HIGH PRESSURE வந்துடும்… ஒரு பொருள் தான் சொல்லி… சூப்பர் மார்க்கெட் போயிட்டு போன் செய்யுங்கன்னு சொல்லுவாங்க… போன் செஞ்சு கேட்டா… போனிலேயே பெரிய லிஸ்ட் வரும்…அது அடுத்த டென்சன்!’’

``சூப்பர் மார்க்கெட்டா? டிபார்மெண்டல் ஸ்டோரா?’’

``உண்மையிலேயே குழம்பி போய்ட்டேன்…’’

``எப்படி சொன்னா என்னங்க இனியவன்? எப்படி தலையை சுத்தினாலும் வாய்க்கு தானே உருண்டை வரணும்?’’

``ஹா ஹா ஹா… அதாவது தேவையான எல்லா பொருள்களையும் வகைவகையா பிரிச்சு வைச்சிருந்தா… அது டிபார்மெண்டல் ஸ்டோர்! வீட்டு உபயோகப்பொருட்கள் மட்டும் அடுக்கி வைச்சு நாமளே போய் எடுத்துக்கிட்டா சூப்பர் மார்க்கெட்… உணவு பொருட்கள் அல்லாம பொருட்கள் வித்தா ஹைபர் மார்க்கெட்…’’

``சூப்பர்… ஹைப்பர் நல்லாருக்கே…நமக்கு தான் அப்பப்ப ஹை பிரஸ்ஸர் வந்துடுது…’’

``நீங்க வெளியே கிளம்பும்போது உங்க மனைவி வாங்க சொல்லும் பொருட்களை மனப்பாடம் செய்வதை 10 ஆம் வகுப்பில் செஞ்சிருந்தா…ஸ்டேட் பர்ஸ்டே வாங்கியிருப்பீங்க…’’

``எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை…’’

இனியவன் சொல்வது உண்மைதான். பொருட்களை மறந்து விடாமல் இருக்க துண்டு சீட்டில் எழுதி வைப்பேன். அந்த துண்டு சீட்டினை மறக்காம இருக்க யாரிடமாவது சொல்லி வைப்பேன். அதையெல்லாம் மீறி சில சமயம் மறந்து போய் அரச்சனை வாங்கிய வரலாறும் உண்டு!

``மறக்காம இருக்க என்ன செய்யலாம் இனியவன்?’’

``கூச்சப்படாம மொபைல நோட் பண்ணி வைச்சுக்குங்க…’’

``அட போப்பா… இந்த மாதிரி வாழ்வாதார பிரச்சனைக்கெல்லாம் மொபைலை நம்பக்கூடாது…’’

``எப்படியோ வானவில்லை சரியா ஞாபகம் வைச்சிருக்கீங்க… அது போதும்!’’

இந்த பதிலைகேட்டு விட்டு, எடக்குமுடக்கா எதாவது கேட்டு வைக்க வேண்டுமென திட்டமிட்டேன்.

``வானவில் ஏன் வளைஞ்சு இருக்கு?’’

இந்த கேள்வி கேட்டவுடன் எனக்கு முழு திருப்தி. அவர் யோசிக்கட்டும்!

இனியவன் எதோ பதில் சொல்ல ஆரம்பிக்கமுன் கடந்து போன கார் ஒன்று சேறினை வாரி இறைத்தது…

இனியவன் அனிச்சையாக என் சட்டையின் மீதிருந்த சேற்றினைத் தட்டி விட்டார்…

``பார்த்து போக தெரியாதா? ன்னு வீட்டில திட்டுவாங்களே!’’

``வீட்டில திட்டின என்ன செய்வீங்க?’’

``நான் எதுவும் பேச மாட்டேன்! திரும்ப கோபத்தில நாம எதாவது சொன்னா… வருத்தத்தில சொன்னதையே சொல்லிட்டு இருப்பாங்க…’’

``விடுங்க, சங்க காலத்தில கூட திரும்ப திரும்ப சொல்லி வருந்திட்டு இருப்பதை குறுந்தொகையில காமஞ்சேர் குளத்தார் ஒரு பாடல் பாடி இருக்கிறார்!’’

``சேறான நேரத்தில…அவரு பேரும் சேரா?’’

சிரித்துக்கொண்டு SHARE பண்ணவா? எனக்கேட்டார்…

``சேறே பண்ணியாச்சு…சேர் பண்ணா என்ன?’’

பாட ஆரம்பித்தார்…

Walking
Walking
Image by Daniel Reche from Pixabay

நோம் நெஞ்சே; நோம் நெஞ்சே;

இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி

அமைதற்கு அமைந்த நம் காதலர்

அமைவிலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே’

நெஞ்சே வெடிச்சுடும்…அர்த்தம் சொல்லுங்க…

வருந்துகிறது என் மனம், வருந்துகிறது என் மனம்!

அவரின் பிரிவால் சூடான கண்ணீரால் கண்ணிமைகள் பொசுங்கி விடும்போல இருக்கிறது. என்னை ஆறுதல்படுத்த வேண்டிய என்னவன் பிரிந்திருப்பதால் என் மனம் வருந்துகிறது.

அவர் கூட இல்லையே, என நெஞ்சு வலிக்குதே! என் நெஞ்சு வலிக்குதே! என திரும்ப திரும்ப புலம்புவதைச் சொல்லி தப்பிக்கலாம் என இனியவன் நினைத்திருக்கலாம் என நினைத்து மீண்டும் கேட்டேன்…

``வானவில் ஏன் நேரா இல்லாம…வளைஞ்சு இருக்கு?’’

``அதுவா… நீங்க ஏற்கனவே சொன்ன மாதிரி சூரியஓளி முழு அக எதிரொளிப்பாகுது. நீர்த்திவலைக்குள் செல்லும் பல நிறக்கதிர்களின் வேகம் நிறத்திற்கு நிறம் மாறும். அதனால், அது உள்ளே புகுந்து வெவ்வேறு கோணங்களில் வெளியே வருது. ஒவ்வொரு நிறமும் ஒவ்வொரு கோணத்தில வளைஞ்சு அடுத்தடுத்து வில் போல தெரியுது.’’

நான் அமைதியானேன்… என் எண்ணம் முழுவதும் சட்டையில் பட்ட சேற்றின் மீதே இருந்தது.

``என்ன கார் காரன் மீது கோபமா?’’

``ஆமா… நம்ம கிட்ட பூமராங் இருந்தா அவனை அடிச்சுட்டு திரும்ப வர வைக்கலாம்…’’

``அது தான் இப்ப இல்லையே… ஆனா ”BOOMERANG APP” இருக்கு…’’

``அந்த “APP” சட்டையை கிளீன் செஞ்சு கொடுக்குமா?’’

``இல்லை…இல்லை… இது நமக்கு நாமே திட்டம் போல… இந்த ஆப்பை பயன்படுத்தி நம் மெயிலை ஓபன் செய்யாமலையே…நம் மெயிலுக்கு நாமே மெயில் அனுப்பிங்களாம்…’’

``நல்லாயிருக்கே… ஆமாம், மெயில் ஓபன் செஞ்சு, கம்போஸ்க்கு போய், பைல் அட்டாச்ன்னு செம கடுப்பாகும்… இது ஈஸியா இருக்கே… இதே மாதிரி வாட்ஸ்ப்புக்கு எதாவது இருந்தா சொல்லுங்க… தினமும் காலையில் எழுந்து வாசல் கூட்டி க்ளீன் செய்ற மாதிரி ஆயிரெத்தெட்டு பார்வேட் மெசேஜ்கள்…’’

``நான் அனுப்புறதை நீங்க பத்து பேருக்கு அனுப்புங்க… அஞ்சு நிமிஷத்தில நல்லது நடக்கும்…’’

``போதும்,..போதும்… நல்லது நடந்தது…’’

-வாக்கிங் தொடரும்

-சி.ஆர்

முதல் பாகம் : ``தமிழய்யா சொன்ன ஆங்கில வார்த்தைப் புதிர்..!'' - வாக்கிங் டாக்கிங் - 1 #MyVikatan

இரண்டாம் பாகம் : திருமதியின் எசப்பாட்டு! - வாக்கிங் டாக்கிங் 2 #MyVikatan

மூன்றாம் பாகம் : ``ஓஹோ.. இதான் பவுடர் கலையாத நடையா.. !‘’- வாக்கிங் டாக்கிங் - 3

நான்காம் பாகம் : ஒரே ஒரு கேள்வி.. மொத்தமா நான் காலி..!

ஐந்தாம் பாகம் : கணக்கா, கணிதமா? - வாக்கிங் டாக்கிங் 5

ஆறாம் பாகம் : ABC விதி கூட தெரியாதா? - கேள்வி கேட்டு மடக்கிய திருமதி!

ஏழாம் பாகம் : ``இன்னிக்கு நிலவரப்படி உலகில் இரண்டே சாதி தான்..!?’’

எட்டாம் பாகம் : பொய் பேசுனா கண்டுப்பிடிக்குறது ஈசி..!

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு