Published:Updated:

ABC விதி கூட தெரியாதா? - கேள்வி கேட்டு மடக்கிய திருமதி! - வாக்கிங் டாக்கிங் 6 #MyVikatan

Representational Image
Representational Image

சட்டென கேட்கும் கேள்விக்கு கணவன் சுற்றி வளைத்து பதில் சொல்வான்! சுற்றி வளைத்து கேட்கும் கேள்விக்கு மனைவி பட்டென பதில் சொல்வான் என்பது என் விஷயத்தில் சரியாகவே இருந்தது.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

முதல் பாகம் : ``தமிழய்யா சொன்ன ஆங்கில வார்த்தைப் புதிர்..!'' - வாக்கிங் டாக்கிங் - 1 #MyVikatan

இரண்டாம் பாகம் : திருமதியின் எசப்பாட்டு! - வாக்கிங் டாக்கிங் 2 #MyVikatan

மூன்றாம் பாகம் : ``ஓஹோ.. இதான் பவுடர் கலையாத நடையா.. !‘’- வாக்கிங் டாக்கிங் - 3

நான்காம் பாகம் : ஒரே ஒரு கேள்வி.. மொத்தமா நான் காலி..!

ஐந்தாம் பாகம் : கணக்கா, கணிதமா? - வாக்கிங் டாக்கிங் 5

***

இன்று திருமதியுடனான வாக்கிங்…


இருவரும் நடக்க ஆரம்பிக்கிற வேளையில்…


ஏங்க மழை வந்தா துணிகள் எல்லாம் நனைச்சுடும்… எனச் சொல்லி முடிப்பதற்குள் நான் மாடிப்படிகளில் ஏறிக்கொண்டிருந்தேன்.

அவசர அவசரமாக துணிமணிகளை மொத்தமாகச் சேகரித்துக் கட்டில் மேல் விசிறி விட்டு வந்தேன். நான் வீட்டிற்குள்ளிருந்து வெளியேறும் சமயத்தில்.“ ஏங்க… அப்படியே…துணிப்பை எடுத்து வாங்க!”

வரும்போது கீரை எதாவது வாங்க வேண்டியிருக்கும் என நினைத்துக்கொண்டே வேகமாக திரும்பும் போது கால் தடுக்கி விழப்போனேன். அங்கே இருந்த மர நாற்காலியைப்பிடித்ததில் அது ஒரு கூச்சலிட்டு ஆடி அமர்ந்தது.

என்னங்க சத்தம்?

சட்டை விழுந்துடுச்சு…

பொய் சொல்றீங்க…அதுக்கா இவ்வளவு சத்தம்?

”சட்டைக்குள்ள” நான் இருந்தேன்…

திருமதிக்கு சிரிப்பு வந்து போனது…

பார்த்து வர வேண்டியது தானே! … வாயைத்தொறந்தாவே பொய்…

நான் பொய் சொல்றதை எப்படி கண்டுப்பிடிக்கிற?

அதெல்லாம் சொல்லக்கூடாது…

ஏன்…அப்புறம் கண்டுப்பிடிக்க முடியாதுன்னா?

ச்சே…புருஷன் பேசறது பொய்ன்னு கண்டுப்பிடிக்காம இருக்க முடியுமா? சில வேளைகளில கண்டுக்காம விட்டுடறது தான்… போச்சாதுன்னு…

எதாவது பேசிட்டு எல்லா விரலையும் மடக்கிட்டு ஊதுகுழல் போல வைச்சு வாயை மறைப்பீங்க…

அய்யய்யோ…

இப்படியெல்லாம் கவனிச்சுருக்கேன்னு ஆச்சரியமா?

இல்ல…இல்ல…

அப்புறம்…

அட… இது எங்க மேனேஜரிக்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன்…

எப்படி?

Representational Image
Representational Image

எங்க மேனேஜர்,”சூப்பர் சார்… உங்கக்கிட்ட ஒப்படைச்சா தான்… சரியா வேலையை முடிச்சுக் கொடுப்பீங்க”ன்னு அடிக்கடி சொல்லும் போது இப்படிதான் கையை வைச்சிருப்பார்…

உங்களைப்பத்தி என்னை விட உங்க மேனேஜருக்கு அதிகமா தெரியுமோ?

உன்னை மிஞ்ச முடியுமா? என மூக்கு மேல் விரல் வைத்துக்கொண்டேன்.

இப்ப கூட பொய் தான் சொல்றீங்க…


”அட சாமி… ” எனப் பலமாகச் சிரித்தேன்.


உங்களுக்கே தெரியாம அனிச்சையாக மூக்கைத் தடவீங்க… பார்க்கிறதுக்கு மூக்கைத் தேய்க்கிறது போல இருக்கும்… மூக்கு மேல விரலை வைக்கிறது போலவும் இருக்கும்…

”சொல்லும்மா… நீ சொல்றது தான் சரி! இந்த ஐடியா வேறு யாருக்கும் வராது!”ன்னு உங்கப்பா உங்கம்மாகிட்ட பேசும்போது மூக்கு மேல விரல் வைக்கிறதெல்லாம் கணக்கில் வராதா?


எங்கப்பா மட்டுமல்ல…அது யார் செஞ்சாலும்… பொய்யின் அறிகுறி தான்.


இனிமேல்… மூக்கைத்தொடவே மாட்டேன்…


உங்க மூக்கை நாக்கால தொட்டா… நான் நம்புறேன்…

”நான் சின்ன வயசிலிருந்து நிறைய புக்ஸ் லைப்ரரி போயெல்லாம் படிச்சிருக்கேன். ஆனா… இந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியலையே…” எனச் சிரித்ததால் வந்த கண்ணீரைத் துடைத்தேன்.

அப்புறம் வேறென்னென்ன டெக்னிக் வைச்சிருக்க?

எல்லாத்தையும் உடனே சொல்லக்கூடாது… கொஞ்ச கொஞ்சமா தான் சொல்லணும்…


இனி என்னவெல்லாம் வருதோ என திக் திக் என்றிருந்தது. அமைதியாக நடக்க ஆரம்பித்தேன்.


எதிரில் ஒரு பழ வண்டி வந்தது. அனிச்சையாகவே என் பாக்கெட்டிற்கு கை போனது. பர்ஸ் இருக்கா? இல்லையா? என அறியதான். சிலபல சமயங்களில் பொருள் வாங்கியப் பின் தான் பர்ஸ் மறந்து போனது தெரிய வரும். ஒரு சமயம் காருக்கு பெட்ரோல் அடித்துவிட்டு பர்ஸ் இல்லாமல், திருமதி வந்து மீட்டு எடுத்தது போன்ற நிகழ்கவுகளும் நடந்தததுண்டு. அந்த மாதிரி நேரங்களில் கடைக்காரர்களைக் கூட எனது அருமைப்பெருமைகளைச் சொல்லி சரிகட்டி பின்னர் கொண்டுபோய் கொடுத்து விடுவேன். ஆனால், அந்த மறதிக்குப்பின் திருமதியிடம் வாங்கும் ஏச்சும்பேச்சும் கணக்கிடலங்கா… அந்த நிகழ்வினை மட்டும் சுட்டிக்காட்டித் திட்டினால் எந்த பிரச்சனையுமில்லை. ஆனால், திருமண நாள் முதற்கொண்டு நடைபெற்ற ஞாபகமறதிகள் வரிசைக்கட்டிக்கொண்டு வரும்.

துரியன் பழம்
துரியன் பழம்

நல்லவேளையாக பர்ஸ் இருந்தது! பல் தெரிந்தது.

வண்டியில் அருகில் வரவே அதில் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் இருந்தன. எனது இடது கையில் இரண்டு கிலோ பழங்களோடு துணிப்பைத் தொங்க ஆரம்பித்தது.

வண்டியின் மூளையில் பலாப்பழத்தில் முட்கள் இருப்பது போல தோலுடைய சிறிய பழங்களின் மீது திருமதியின் பார்வை விழுந்தது.


அதென்ன துரியன் பழம் தானே?

ஆமாங்க… மேடம்! முள்நாரிப்பழம்-ன்னு நாங்க சொல்வொம்!

Oh..GOD! ஒரு பழம் எவ்வளவு?


ஐநூறு ரூபா…


கொஞ்சம் குறைச்சுக்கொடுங்க…


எங்களுக்கே அதே விலைக்கு தான் தராங்க… அதில பெரிசா லாபம் இல்லை.


”பெரிசா லாபம் வராது!” என்பது எல்லா வியாபாரிகளின் சர்வதேச வாக்கியம் என்பது மனதில் ஓடியது.

இரண்டு கொடுங்க…


தொள்ளாயிரம் ரூபா கொடுங்க…


ஐநூறு ரூபா தான் கொடுப்பேன்…

எனக்கும் வேண்டாம் உங்களுக்கும் வேண்டாம் எட்டு நூறு ரூபா கொடுங்க…

நான் கையில் வைத்திருந்த அந்த துரியன் பழத்தை துணிப்பையில் போடவா…வண்டியில் போடவா என யோசித்துக்கொண்டிருக்கும் போதே…

வேண்டாம்…

திருமதி நகர ஆரம்பிக்க…

சரி… ஆறு நூறு ரூபா… கொடுங்க..

இரண்டு துரியன் பழங்கள் சிரித்துக்கொண்டே துணிப்பைக்குள் விழுந்தன.


நான் பேரம் பேசியிருந்தால் 800 ரூபாய்க்கு மேல் தான் கொடுத்திருப்பேன். பொதுவாகவே ஆண்களுக்கு பேரம் பேச தெரியாதா? இல்லை, பேரம் பேசும் பொறுமை இல்லையா எனத் தெரியவில்லை.

இந்த பழத்தைப்பார்த்ததும் கடவுளுக்கு நன்றி சொன்னியே…

அப்படியும் வைச்சுக்கலாம்…

வேற எப்படி வைக்க?

அது GOD OF ALL FRUITS…

வாவ்…பழங்களின் கடவுளா?

ஆமாங்க…

கேக், ஐஸ்க்ரீமில் வருமே…

பதில் வரவே இல்லை!.

என்ன பேசாம நடக்கிற…

லாக்டவுனில் நடக்காம இருந்து… இப்ப பத்தடி நடந்தாவே மூச்சு வாங்குதுங்க…

எதுக்கு பத்தாவது அடி நடக்கற? ஒன்பதாவது அடியோடு நிறுத்துக்கோ!

ஜோக் அடித்ததாக நினைத்தேன். அங்கே சிரிப்பு இல்லை…

”உங்களுக்கு கம்ப்யூட்டர் மூளை… அதனால் தான் இப்படி” என கொஞ்சம் எரிச்சலாகவே பதில் வந்தது.

உண்மையாவா சொல்ற? எனக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. நீண்ட காலம் கழித்து பாராட்டு வந்துள்ளது.

க்கூம்… எதையும் சுயமா சிந்திக்கிறதேயில்லையே…. அதைச் சொன்னேன்.

சும்மா… ஜோக்குக்கு சொன்னேன்.

நான் உண்மையாவே மூச்சு வாங்குதுன்னு சொல்றேன்… உங்களுக்கு கிண்டலா?

இல்….ல! அது வந்து…

துரியன் பழம்
துரியன் பழம்

சட்டென கேட்கும் கேள்விக்கு கணவன் சுற்றி வளைத்து பதில் சொல்வான்! சுற்றி வளைத்து கேட்கும் கேள்விக்கு மனைவி பட்டென பதில் சொல்வான் என்பது என் விஷயத்தில் சரியாகவே இருந்தது.

இப்ப நான் மயங்கி விழுந்தா… என்ன செய்வீங்க?

மனைவியின் கற்பனையான கேள்விகளுக்கு கற்பனைக்குக்கூட பதிலை நினைத்துப் பார்க்கக்கூடாது என்பது எனக்குத் தெரியாதா என்ன?

அமைதியாகவே வரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு நடந்தேன். மனைவியின் முன் பெருங்கோபத்தைக்கூட அடக்கி விடலாம். ஆனால், சிரிப்பை அடக்க முடியாது போல! மிகவும் சிரமப்பட்டு சாலையை நேராகப் பார்ப்பதுப் போல நடக்க ஆரம்பித்தேன்.

உங்களுக்கு ABC விதி கூட தெரியாதா?

என்னடா இது ABCD கூட தெரியாத மக்கா நாம…? கொஞ்சம் என்பதற்குக் குறைவாகவே ரோசம் வந்தது. அதற்கு மேல் வரக்கூடாது அல்லவா?

சமீபத்தில படித்த டுவிட் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. தத்துவஞானிகள் பிறப்பதில்லை! திருமணத்திற்குப் பிறகு உருவாக்கப்படுகிறார்கள்.

எனக்கு ABCD கூடவா தெரியாது? என் குரலில் ABCD தெரியும் என்ற உறுதி இருந்தது.

ABCD இல்ல… நான் கேட்டது ABC…

எங்கடி போச்சு?

என்ன வாய் நீளுது?

அட… ABCD ல… D ஐ காணோமோன்னு கேட்டேன்…

ஓ… அதுதானே பார்த்தேன்… என்னடா இது புதுப் பழக்கமுன்னு? நான் கேட்டது FIRST AID பத்தி…

எனக்கு BAND AID தான் தெரியும்… நீ ஊருக்கு போன சமயத்தில காய்கறி வெட்டும் போது சின்ன காயம் ஆயிடுச்சுன்னா வாங்கிப் போட்டுக்குவேன் எனக்கூறிக்கொண்டே கண்களைத்தேய்த்தேன்…

திருமதியிடமிருந்து சிரிப்பு வந்தது…

ஏன்… சிரிக்கிற?

அந்த BAND AID கண்டுப்பிடிச்ச கதையே அப்படி தான்… நியூ ஜெர்சியல டிக்சன் என்பவரு, அவருடைய வீட்டுக்காரி கிச்சன்ல காய்கறி நறுக்கும்போது அடிக்கடி விரலை வெட்டிக்குவாங்களாம்… டிக்சன் மருந்து கட்டிவிட்டு சலிச்சு போய்… பல நாள் யோசிச்சு இந்த ரெடிமேட் BAND AID ஐ கண்டுப்பிடுச்சாராம்…

Representational Image
Representational Image

சலிச்சுபோய்ன்னு ஏன் சொல்ற? எல்லா ஆண்களும் அப்படியே இருக்கணுமுன்னு அவசியமா?

நாடு மாறுனாலும் காட்சி மாறாது… தெரியுமா?

நல்லதே நினைக்க மாட்டியா? சரி சரி… அதென்ன ABC…?

An open Airway, Breathing and Circulation… அதாவது யாராச்சு பேச்சுமூச்சு இல்லாம விழுந்துட்டா… நாம செய்ய வேண்டிய முதல் காரியம்…முதல் உதவி…! காத்தோட்டம்… சுவாசம் கொடுத்து…நுரையீரலுக்குள் காத்தை உள்ளே அனுப்பினா… நின்னுபோன இதயத்திக்கு சீரான அழுத்தம் கொடுத்து நின்னு போன உறுப்புகளை மறுபடியும் இயக்க வைக்க முடியும்!

ஆமாம்…போன வாரம் கூட. ஒரு வயசு பையன் தெலுங்கானாவில ரோடை கிராஸ் பண்ணும் போது பைக் மோதி மூர்ச்சையாகி விழுந்துட்டான். அங்கிருந்த போலிஸ்காரர், உடனடியா சி.பி.ஆர் ன்னு சொல்ற மார்பில் அழுத்தம் கொடுத்து சுவாசத்தை மறுபடியும் வர வைச்ச வீடியோ வைரல் ஆச்சு… நானும் பார்த்தேன்…அந்த போலிஸ்காரர் பேரு கூட கலீல்… உலகமே பாராட்டுச்சு… தெரியுமா?

தெரியும்… தெரியும்… இதை தான் நானும் கேட்டேன்… இதெல்லாம் எங்கப்பா… அடிக்கடி சொல்வார்..

அந்தளவுக்கு மாமா பிட்னஸா இருப்பாரா?

ஆமாம்…அவர் ரொம்ப நேரம் ஓடுவார்…


ஆனா…உனக்கு பத்தடிக்கே மூச்சு வாங்குதே…

சுமாரா அவர் எவ்வளவு தூரம் ஓடுவார் தெரியுமா?


எவ்வளவு தூரம் ஓடினாலும் சுமாரா தானே ஓடுவார்?

இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை…நீங்க எவ்வளவு தூரம் ஓடுவீங்க?

கல்யாணத்துக்கு முன்ன ரொம்ப தூரம் ஓடிட்டு இருந்தேன்…

”க்கூம்…பொசுக்கு கெட்ட மத்தாளம் பொத்து பொத்துன்னுச்சாம்!

அது என்ன கோளாறுன்னு கேட்டதுக்கு

நனைஞ்ச கோளாறுன்னுச்சாம்..”

திருமதியின் சொலவடையில் படுபயங்கரமாக ஜெர்க் ஆகி அமைதியாகி விட்டேன்!

Representational Image
Representational Image

அதை வைச்சு ஒரு கேள்வி கேட்டால் என்னத் தோன்றியது.

நான் ஓட மாட்டேன்னு தண்டோரா அடிச்சு சொல்லுமா?

ஏன் மத்தளம் அவ்வளவு கேவலமா? ”மத்து” ன்னா ஓசை…தளம்-ன்ன்னு சொன்னா எல்லாத்துக்கும் உங்கள மாதிரி ஆதரவு தருவது. அதாவது இசைக்கருவிகளுக்கெல்லாம் தளமாக இருப்பது. அதனால, அது மத்தளம்!


அய்யோ… புல்லரிக்குது! இதெல்லாம் யாரு சொல்லிக்கொடுத்தா…

எல்லாம் ”பேச்சுவாக்” கில கத்துக்கிறது தான்…

ஆமாம்… நம்ம பேசுறது கூட பேச்சு…WALK… தானே?

ஓ… டாக்கிங்… வாக்கிங்…

இல்லை… வாக்கிங் டாக்கிங்…

-டாக்கிங் தொடரும்!


-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு