பெற்றோர்களின் மனமாற்றம்..! - அரசுப் பள்ளிகள் இனி செய்ய வேண்டியது என்ன? #MyVikatan

கடலில் விழுந்தவன் தப்பிக்கக் கிடைத்த தக்கையைப் போலத்தான் அரசுப்பள்ளி இவர்களை கரை சேர்க்க உதவுகிறது...
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
ஆகஸ்ட் 17 ம் தேதி காலை.. எங்கள் பகுதியின் முன்னணி அரசு துவக்கப்பள்ளியில் காலை 8 மணி முதலே பெற்றோர்கள் சமூக இடைவெளியுடன் சாரை சாரையாய் வந்தனர். விண்ணப்பப் படிவத்தை ஆர்வத்துடன் பூர்த்தி செய்தவர்கள்,
''என் குழந்தை பிரைவேட் ஸ்கூல்ல படிச்சது. TC இல்லைங்க பரவாயில்லீங்களா, ஒரு வாரத்தில் வாங்கிக் கொடுத்திட்றேன்’’ எனக்கூறி இலவசமாய் சேர்க்கை முடித்து புதுப்புத்தகத்துடன் குழந்தையை அழைத்துச் சென்றதை பார்க்க நேர்ந்தது மகிழ்ச்சியாய் இருந்தது.

ஒரு சில பெற்றோர்கள் தனியார் பள்ளியிலிருந்து மீளாத பயத்துடனும் தயக்கத்துடனும், ’’டி.சி தர மாட்டீங்கிறாங்க... பிள்ளைகளை சேர்க்க முடியுமா’’ என கெஞ்சும் குரலில் கேட்டவருக்கு, தாராளமாய் சேர்க்கலாம்; ஆங்கில மீடியத்திலேயே சேர்த்துக் கொள்ளலாம் எனச் சொன்னவுடன்தான் அவர்களுக்கு உயிரே வந்தது.
பூர்த்தி செய்து படிவத்தைக் கொடுக்கும் போது பள்ளி வளர்ச்சிக்கு வைத்துக் கொள்ளுங்கள் என சில நூறு ரூபாய்களை மனதார கொடுத்ததை பார்க்க முடிந்தது. தமிழகம் முழுவதும் கடந்த வாரங்களில் நடந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்கள் தான் இவை. கடலில் விழுந்தவன் தப்பிக்கக் கிடைத்த தக்கையைப் போலத்தான் அரசுப்பள்ளி இவர்களை கரை சேர்க்க உதவுகிறது.
பெற்றோர் மனமாற்றம்
சாதாரண மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் குறைந்தபட்சமாய் எல்.கே.ஜி எனில் சில ஆயிரங்களிலும் சீருடைக்கு தனியாகவும் கட்ட வேண்டும். முதலில் புத்தகத்திற்கு மூன்றாயிரம் கட்டி புத்தகம் வாங்கினால் அதன் பின் தவணை முறையில் கட்டலாம். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் லாக்டெளன் அமலானதால் பலர் கடைசி கட்ட தொகையை கட்ட முடியவில்லை.
இந்த ஆண்டு புதிய வகுப்பிற்கான தொகை மற்றும் கடந்த ஆண்டிற்கான நிலுவைத் தொகையும் கட்ட வேண்டியுள்ளதால் பலர் அப்பள்ளியின் பக்கம் செல்லாமல் அரசுப் பள்ளிகளை நாடி வந்துள்ளனர். பெற்றோரின் வருமான இழப்பும், குழந்தைகளை படிக்க வைக்க வேண்டிய சுமையும் உள்ளதால் அரசுப் பள்ளிக்கான ஆப்சனை தேர்ந்தெடுக்கின்றனர்.

ஊரில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்பு, நல்லபெயருள்ள அரசுப் பள்ளிதான் முதல் விருப்பம். ஈராசிரியர் பள்ளி, கிராமப்புற பள்ளிக்கு நோ சொல்லிடுறாங்க.
ஆன்லைன் வகுப்பு போன்ற செயல்பாடுகளை அரசுப் பள்ளி ஆசிரியர்களும் செய்வதால் கூடுதல் ஸ்கோர் செய்கிறது அரசுப்பள்ளி. மேலும் 14 வகை இலவசப் பொருட்களும் வழங்குவதால் முழு திருப்தியுடன் சேர்க்கின்றனர்.
தனியார் பள்ளியில் கிடைத்த திருப்தி ஓரளவு கிடைக்கும் பள்ளிகளையே முதலில் தேர்வு செய்கின்றனர்.
#அடையாள எண்
தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசுப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவ மாணவியருக்கும் எமிஸ் (Education Management Information System) எனும் 18 இலக்க அடையாள எண் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த எண் இருந்தால் அந்த மாணவனின் விபரம், வகுப்பு, படிக்கும் பள்ளியின் பெயர் என அனைத்து விபரங்களும் இருக்கும்.
ஒரு மாணவர் வேறு பள்ளிக்கு செல்வதாய் இருந்தால் மாற்றுச் சான்றிதழில் (T.C) அந்த எண்ணை குறிப்பிட்டு தனது பள்ளியிலிருந்து அந்த எண்ணை நீக்கிவிடுவர். புதிய பள்ளியின் ஆசிரியர்கள் அந்த எண்ணை எடுத்து தனது பள்ளியில் அட்மிட் செய்து கொள்வர்.
பழைய பள்ளியில் இருந்து எடுத்துவிடவில்லை எனில் புதிய பள்ளி ஆசிரியர்கள் Raise request அனுப்பினால் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது இன்னும் சர்வர் மாற்றாததால் புதிய மாணவர்களை அட்மிட் செய்ய முடியவில்லையென ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்த எண் இருந்தால் தான் வருங்காலத்தில் புத்தகம் உள்ளிட்ட இலவச பொருட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.தனியார் பள்ளிகள் கட்டண நிலுவை உள்ளதால் டி.சி தரவும் இந்த எண்ணை எடுத்து விடவும் கறார் காட்டுகின்றன.

#பெற்றோரின் எதிர்பார்ப்பு
தனியார் பள்ளியிலிருந்து வருவோரின் முதல் எதிர்பார்ப்பு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர். ஆனால் பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. துவக்கப்பள்ளிகளில் 60' மாணவர்க்கு ஒரு ஆசிரியரும், பல பள்ளிகளில் 20 குழந்தைகளுக்கு இரண்டு ஆசிரியர்களும் உள்ள மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு இங்கு நிகழ்கிறது. இந்த ஆண்டு சேர்க்கை சரிந்த பள்ளிகளில் எண்ணிக்கைக்கு அதிகமான ஆசிரியர்களும் உள்ளனர். இதற்கு ஒரே தீர்வு பணி நிரவல் தான். ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்யாது மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் செய்வதுதான் ஒரே தீர்வு.
அப்போது தான் சமமான வேலையை அனைத்து ஆசிரியர்களிடமிருந்தும் பெற முடியும். பணி மாறுதல், நிரவல் செய்தால் புதிய ஆசிரியர்களை நியமிக்க முடியும்.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களில் பணியிடம் அதிகம் காலியாக உள்ளது. 300 பேருக்கு ஒரு தமிழாசிரியர் இருக்கும் பள்ளிகளெல்லாம் இருக்கின்றன.
நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் அதிகம்.35 மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப எடுத்தால் பல உபரி ஆசிரியர்களை மாற்றுப்பணியில் மேல்நிலை வகுப்பிற்கு பாடம் எடுக்க அனுப்பலாம். குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படாது.
#அரசு செய்யவேண்டியது
ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேரும் எண்ணிக்கைக்கேற்ப செப்டம்பரில் கருத்துரு அனுப்பி பணியிட அனுமதியை அரசு அளிக்கும். இந்த ஆண்டு பணியிடம் அனுமதித்தால் அடுத்த ஆண்டுதான் ஆசிரியர் அப்பள்ளிக்கு செல்ல முடியும். விளைவு ஒரு வருடம் கூடுதலாய் சேர்த்த குழந்தைகளுக்கு ஆசிரியர் இல்லை. இதனால் மனமுடையும் பெற்றோர்கள் மீண்டும் தனியார் பள்ளியை நாடும் சூழல் வரலாம். எனவே அந்த ஆண்டே பள்ளியில் சேரும் மாணவ மாணவியர் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களை நியமித்தால் தரத்தை தக்க வைக்கலாம்.

ஆங்கில வழி ஆரம்பித்த திட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆனால் அதற்கென தனியாக ஆசிரியர் இல்லாததால் தமிழ் வழி மாணவர்களுடனேயே ஆங்கில வழி மாணவர்களும் இருக்கும் அவலம். இதனை இந்த ஆண்டாவது களைய ஏற்பாடு செய்யலாம். SSA திட்டம் முடிந்துவிட்டதால் அரசுப் பள்ளிகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக கட்டிடம் கட்டித்தரப்படுவதில்லை. இதனால் வகுப்பறையின்றி தவிக்கும் பள்ளிகளும் உண்டு. புள்ளி விபரங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அடிப்படை வசதிகளுக்கும் கொடுக்கலாமே.!
#ஆசிரியர்கள்
இத்தனை இடர்களிலும் பெற்றோரும் மாணவர்களும் அரசுப் பள்ளியை நம்பி வருகிறாரென்றால் அது அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களை மட்டும் நம்பித்தான். கடந்த பத்து ஆண்டுகளில் தகுதித் தேர்வு எழுதி வந்தவர்களால் இன்னும் அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆசிரியர்களும் முதுநிலைப்பட்டம், பல்வேறு விதமான பயிற்சிகள், தனியார் பள்ளியிலிருந்து படிப்பு வரவில்லையென வெளியேற்றப்பட்டு வரும் மாணவர்களை கூட பாஸ் மார்க் வாங்க வைக்கும் உங்கள் திறமையும் கடமையும் போற்றுதலுக்குரியது. ஆனால் அவ்வாறு வாழ்த்தப்பட வேண்டியவர்கள் குறைவாய் இருப்பது தான் ஒரே மைனஸ். பலபேர் இருந்தால்தான் அரசுப்பள்ளியை ஏற்றம் பெற வைக்க முடியும்.
தலைமை ஆசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கும் ஏழாம் பொருத்தம் பல பள்ளிகளை பாழ் செய்து விடுகிறது. ஈகோவை களைந்து கூட்டு உழைப்பில் கவனம் செலுத்தும் காலகட்டம். நலத்திட்டங்கள், பயிற்சி என அடிக்கடி செல்வதால் அரசுப்பள்ளியில் பணிப்பளு அதிகம். இதற்கு தக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

இன்றும் பல பள்ளிகளில் எந்த வித முயற்சியும் எடுக்காததால் இந்த ஆண்டு சேர்க்கை மிக மிகக் குறைவு.ஒரு சில பகுதிகளில் மக்கள் தொகை இல்லையென்றாலும், மக்கள் தொகை இருக்கும் பகுதியிலும் சரிவர கடமை செய்யாததால் தனியார்ப் பள்ளிக்கு குழந்தைகள் செல்லும் அவலமும் உண்டு.விளைவு வருடந்தோறும் பள்ளிகளை மூடும் நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.கடந்த ஆண்டு 45 பள்ளிகளில் ஒருவர் கூட சேரவில்லையென புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.
தற்போது பல பள்ளிகளில் சேர்க்கையை ஊக்குவிக்க தலைமையாசிரியர்கள் பரிசுப் பொருட்கள், ஸ்மார்ட் போன் போன்றவைகளை வழங்கி வருகின்றனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கல்வித் துறை அதிகாரிகள் உட்பட அனைவரின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் சேர்க்கும் பொதுப்பள்ளி முறை நடைமுறைக்கு வந்தால் அரசுப் பள்ளியின் புகழ் வானளாவ உயரும்.
#எதிர்பார்ப்பு
தேடலில் சிறந்தவரும், பாடப்புத்தகத்திற்கு அப்பால் உள்ளதை கற்றுக்கொடுப்பவருமே சிறந்த ஆசிரியர். அந்தக்காலத்தில் இருந்த அர்ப்பணிப்பு ஆசிரியர்களை விட அதிகம் இருக்க வேண்டும் என்பதே முழு எதிர்பார்ப்பும் பெற்றோர்களுக்கு. நல்ல கட்டமைப்பு, விடுப்பு எடுத்தாலும் அக்குழந்தைக்கான மாற்று ஆசிரியர்களை நியமித்தல் போன்ற சில வசதிகளை செய்து தரவேண்டும். நேற்றைய மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆசிரியர்களே இன்றைய அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.. அங்கு கொடுத்த அதே உழைப்பையும் ஈடுபாட்டையும் எதிர்பார்க்கிறோம். அரசுப் பள்ளி மீது பெற்றோர்க்கு நம்பிக்கை ஏற்பட கொடுத்த அருமையான சந்தர்ப்பம் இது.. இதில் தங்கள் முழு உழைப்பையும் ஈடுபாட்டையும் காண்பித்தால் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தங்கள் பணிப்பாதுகாப்பு உறுதி.

இத்தனை லட்சம் மாணவ மாணவியர் சேர்ந்துள்ளது என சொல்லும் அரசு..அவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்களையும், கட்டமைப்பையும் செய்து கொடுக்க வேண்டிய கடமையும் உள்ளது.பதிவேடுகளை பராமரிப்பது,அதீத புள்ளிவிபரங்களை கோருவதில் கவனம் செலுத்துவதை போல முறையான கல்வி போய் சேர்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.அவ்வாறு இக்கல்வி ஆண்டினை அசுர பலத்தோடு, கூட்டு முயற்சியில் செய்தால் மட்டுமே அரசுப் பள்ளிகளின் தரம்..நிரந்தரமாகும்.!
-குறளரசி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.