மனித வாழ்க்கையில் நேரம் இன்றியமையாதது. வாழ்வின் நீளத்தை மனிதர்க்கு அளந்துகாட்டுகிறது நேரம். தொழில்நுட்ப ரீதியாகவும் சரி, உணர்ச்சி ரீதியாகாவும் சரி நேரம் நம் வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்று. நேரத்தை நாம் பயன்படுத்துவதில் கடிகாரத்தின் பங்கு இன்றியமையாதது. சுவர்க் கடிகாரம் தொடங்கி இன்றைய ஸ்மார்ட் வாட்ச் வரை கடிகாரத்தின் வளர்ச்சி வியக்கத்தக்கது. நவீன கடிகாரங்கள் தொழில்நுட்பங்களுடன் அதன் கவர்ச்சித் தன்மையால் மக்களை ஈர்க்கிறது. 600 ஆண்டுகள் பழமையான ஒரு வானியல் கடிகாரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆர்லஜ் (Orloj) என்ற பெயரில் குறிக்கப்படுகிறது 600 வருடங்களுக்கு முன் ப்ராக் நாட்டில் அமைக்கப்பட்ட ஒரு வானியல் கடிகாரம். 1410 ஆம் ஆண்டு ப்ராக்கில் அமைக்கப்பட்ட இந்த வானியல் கடிகாரம் 600 ஆண்டுகளைக் கடந்து இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தக் கடிகாரத்தின் அழகை ரசிக்கவே மக்கள் கூட்டம் ப்ராக் நாட்டுக்குப் படையெடுக்கிறதாம். 13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஐரோப்பாவின் பல நகரங்களில் வானியல் கடிகாரங்கள் பிரபலமாகத் தொடங்கின. இந்த வகை வானியல் கடிகாரங்கள் சிறப்பே நேரம் மட்டுமின்றி வேறு பல தகவல்களையும் நமக்கு ஒருசேரத் தருவதுதான். வானியல் கடிகாரங்கள் காண்போரைக் கவர்வதோடு நேரம், நாள், சூரிய சந்திரனின் இருப்பிடம், குறிப்பிட்ட நிமிடத்தின் ராசி, நட்சத்திரங்கள் அமாவாசை பௌர்ணமி நேரங்களையும் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
பண்டைய கால முறைகளின் சாயல் இன்றளவும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஆர்லஜ் கடிகாரமானது உருவாக்கப்பட்ட முதலில் வானியல் கடிகாரமாகவே உருவாக்கப்பட்டாலும் பின்னர் காலத்திற்கேற்ப நவீனத்துவமும் அதில் சேர்க்கப்பட்டது. ஆர்லாஜ் உருவாக்கப்பட்ட நூறு வருடங்களுக்குப் பின் நாட்காட்டியும் நான்கு சிற்பங்களும் அதனுடன் இணைக்கப்பட்டது. நான்கு சிற்பங்களும் நேரத்திற்கு ஏற்ப அசையும் தன்மையும் கொண்டிருக்கிறதாம். 1600-களில் நான்கு சிற்பங்களும் நான்கு மனித இயல்புகளைக் குறிக்கும் விதமாக மாற்றியமைக்கப்படுகின்றது. மனிதன் ஒருவர் கண்ணாடியில் தன்னை பார்ப்பது போன்ற சிற்பம் தற்பெருமையைக் குறிப்பதாகவும், கஞ்சன் ஒருவன் தங்க நாணயப் பை வைத்திருப்பது போன்ற சிற்பம் பேராசையைக் குறிப்பதாகவும், இசைக் கருவியை இசைப்பது போன்ற சிற்பம் காமத்தைக் குறிப்பதாகவும், மனித எலும்புக் கூடு போன்ற சிற்பம் மரணத்தைக் குறிப்பதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த எலும்புக்கூடு சிற்பம் மட்டும் மணி அடிக்கிறது, அதனுடன் மற்ற சிற்பங்கள் தலையசைக்கிறது. மனித வாழ்க்கையை இந்த நான்கு பண்புக்குள் அடக்கிவிடலாம் என்பதை ஆகச் சுலபமாகச் சொல்லிவிட்டார்கள் ஆர்லஜை உருவாக்கியவர்கள்.

1948-லிருந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த வானியல் கடிகாரம் புதுப்பிக்கப்படுகிறது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த நாட்டு அரசு கடிகாரத்தைச் சீர்படுத்துவது வழக்கம். தற்போது சிற்பங்களின் மேற்பூச்சு செய்யும் பொருட்டு அரசு நீக்கியுள்ளது. ஒவ்வொரு மணி நேரத்திலும் ஆயிரக் கணக்கான மக்கள் இந்த பழமையான கடிகாரத்தைக் காணக் கூடுகின்றனர். உச்சி முள் 12 நெருங்கையில் கூட்டம் அதிகம் இருக்குமாம். அரைமணி நேரத்திற்கு முன் வந்து சிற்பங்கள் அசைவைப் பார்த்துச் செல்லும் கூட்டமும் ஏராளம். வாய்ப்பு கிடைத்தால் இந்த வானியல் கடிகாரத்தைப் பார்க்க ஒருமுறை ப்ராகுக்கு விசிட் அடியுங்களேன்.
இந்த ஆர்லஜ் வானியல் கடிகாரத்தை வீட்டில் இருந்தபடியே கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் காண இங்கே கிளிக் செய்யவும்.
கடிகாரத்தின் உட்பக்கம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காண இங்கே கிளிக் செய்யவும்.