Published:Updated:

`கொரோனா லாக் டவுன்..!' - மாணவர்களுக்கு அரசு செய்ய வேண்டியது என்ன? #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்து விட்டன.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்து விட்டன.

சாதாரணமான தேர்வு விடுமுறைகளுக்கும், தற்போதைய விடுமுறைக்கும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. இவ்விரண்டும் முற்றிலும் வெவ்வேறானவை.

சாதாரணமாக தேர்வு விடுமுறைகளில் மாணவர்கள் தங்கள் விருப்பம்போல் வெளியூர்களில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்கும், சினிமா, பார்க் உள்ளிட்ட பொழுதுபோக்குகளுக்கும் செல்வர்.

எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர். மாறுபட்ட சூழலில் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வர்.

Representational Image
Representational Image

ஆனால் தற்போதைய விடுமுறையில் மாணவர்களால் எந்த ஒரு ஊருக்கும் செல்ல முடியவில்லை. வீட்டிற்கு வெளியே வந்து விளையாடவோ அல்லது தாங்கள் விரும்பும் செயல்களைச் செய்யவோ முடியவில்லை. வீட்டிற்குள்ளேயேதான் இருக்கவேண்டும் எனும் சூழல். இது காலத்தின் கட்டாயம். வேறு வழியில்லை.

சுவர் இருந்தால்தானே சித்திரம்!

எனினும் இன்றைய சூழலில் நாட்டின் மனித வளங்களான நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் வீட்டிற்குள்ளே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனும் கேள்வி இயல்பாக எழுகிறது.

அனைத்துப் பெற்றோர்களுமே இந்த நோய் குறித்து தம் குழந்தைகளுக்கு தெளிவாகக் கற்றுக்கொடுப்பர் என்று கூற முடியாது.

சிக்கலான இன்றைய சமூக மற்றும் பொருளாதாரச் சூழலில் அது நடைமுறை சாத்தியமும் இல்லை. சில மாணவர்கள் நோய் குறித்த அதீத பயம் அல்லது அறியாமையில் இருக்கவும் வாய்ப்புண்டு.

பெற்றோரிடமோ அல்லது ஆசிரியரிடமோ சிறப்பான வழிகாட்டுதல்களைப் பெற்ற மாணவர்கள் புத்தக வாசிப்பு, ஓவியம், நீதிக் கதைகள் பார்த்தல், மரம் நடுதல், வீட்டுத் தோட்ட வேலைகள், புதிய படைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட ஆக்கத்திறன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் அனைத்து மாணவர்களுக்குமே இத்தகைய வழிகாட்டுதல்களோ, வாய்ப்புகளோ கிடைப்பதில்லை. பல மாணவர்களுக்கு டிவியும் செல்போனுமே அவர்களின் உலகம் ஆகிவிடவும் பெரும்பான்மை வாய்ப்பு உள்ளது. இது ஒரு உளவியல் சார்ந்த சிக்கலாகவும் உருவெடுக்க வாய்ப்புண்டு.

Representational Image
Representational Image

இத்தகைய சூழலில் ஒரு ஆசிரியர் மாணவர்களைத் தொடர்புகொண்டு அவர்களுக்கு முறையாக வழிகாட்ட வேண்டும் என்பது அடிப்படை அறம் ஆகும். ஆனால் அதற்கான வாய்ப்புகள் தற்போது உள்ளதா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

கற்றல் என்பது பாடப் புத்தகங்களை மட்டுமே கற்பது கிடையாது. மனிதனின் நடத்தையில் மாற்றம் உண்டாக்குவதும், ஒருங்கிணைந்த ஆளுமைத் திறன்களில் ஏற்படும் வளர்ச்சியும் கற்றலாகின்றன.

புத்தகங்களைத் தாண்டி கற்றுக்கொள்ளும் மாணவர்களே பெரும் சாதனையாளர்களாக வருகிறார்கள் எனும் சூழலில், மாணவர்கள் தற்போது விடுமுறையில் எவற்றிலிருந்து எவற்றைக் கற்றுக் கொண்டு இருக்கின்றனர் என்பது மிகப் பெரிய கேள்வியாகவே அமைந்துள்ளது.

Representational Image
Representational Image

தொழில்நுட்ப வசதிகள் மூலமாக ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு மாணவர்கள் முறையாகக் கற்றுக்கொள்ள முடியும். ஆசிரியர்களால் வீட்டிலிருந்தே வழிகாட்டவும் முடியும். ஆனால் தற்போதைய சூழலில் அரசுப் பள்ளியின் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் ஸ்மார்ட்போன் வைத்திருப்பார்கள் என்று கூறமுடியாது.

எனவே ஒரு ஆசிரியர் சுயமாகப் பெரும் முயற்சி எடுத்தாலும் குறைந்த மாணவர்களுக்கு மட்டுமே சிற்சில வழிகாட்டுதல்களை அளிக்கமுடிகிறது.

அரசால் மட்டுமே "Learn From Home" எனும் கற்றல் - கற்பித்தல் கட்டமைப்புக்குத் தேவையான தொழில்நுட்ப வளங்களை ஏற்படுத்தித்தர முடியும்.

சீனாவில் வைரஸ் தாக்குதலால் பள்ளிகள் அனைத்தும் மாதக்கணக்கில் மூடப்பட்டுள்ளன. ஆனால் 5G தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனிலேயே விர்ச்சுவலாகக் கற்பிக்கப்படுகின்றன.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் 4G LTE தொழில்நுட்பத்தினைவிட 10 முதல் 100 மடங்கு 5ஜியின் பதிவிறக்க வேகம் அதிகம் என்று கூறப்படுகிறது.

Representational Image
Representational Image

இந்தியாவில் இத்தகைய சூழல் இன்னும் ஏற்படவில்லை. DIKSHA (Digital Infrastructure Knowledge Sharing) எனும் Flatform மூலம் 1 முதல் 12 வகுப்புகளுக்கான வீடியோக்கள்,

பாடப்பொருள்கள், மதிப்பீடுகள், புத்தகங்கள் மனிதவள மேம்பாட்டுத்துறையின் (MHRD) துணையுடன் தமிழக அரசால் ஆன்லைனில் தற்போது வழங்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு பாடங்கள் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால் இவையெல்லாம் முன்பே தயார் செய்யப்பட்டு அப்லோட் செய்யப்பட்டவை.

இதில் ஆசிரியர்கள் மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள வாய்ப்பு இல்லை. அவற்றை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிப்பதும் கடினம்.

Representational Image
Representational Image

எத்தனை தொழில் நுட்பங்கள் வந்தாலும் அது ஒரு ஆசிரியரின் நேரடியான கற்பித்தலுக்கு என்றுமே ஈடாகாது. ஆனால் ஆசிரியர், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விர்ச்சுவல் முறையில் மாணவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்குக் கற்பிக்கும்போது அது நேரடிக் கற்பித்தல் அளவு இல்லாவிடினும் ஓரளவேனும் மேம்பட்ட பயனைத் தரக்கூடியதாகவே இருக்கும்.

ஆனால் தற்போது அதற்கான வாய்ப்பு நம்முடைய மாணவர்களுக்கு இல்லாத ஒரு சூழலே நிலவுகிறது.

நாம் கொரோனா போன்ற அசாதாரணமான சூழலை இதுவரை எதிர் கொண்டதில்லை என்பதால் இத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்பிக்கும் முறைகள் பற்றி இதுவரை நாம் யாரும் சிந்திக்கவில்லை. ஆனால் இது நமக்கு ஒரு பாடம். ஆசிரியர்களின் சிறப்பான நேரடி கற்பித்தலுடன், விர்ச்சுவல் முறையிலும் எப்படியெல்லாம் புதுமையாகவும் திறனார்ந்தும் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை இனி நாம் திட்டமிட வேண்டும். இந்த அசாதாரண சூழ்நிலையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய எண்ணற்ற பாடங்களில் இதுவும் முதன்மையான ஒன்றே!

Representational Image
Representational Image

எனவே இனிவரும் காலங்களில் மாணவர்களுக்கு நீண்ட அசாதாரணமான விடுமுறைகள் அளிக்கப்பட்டால், அவர்களை ஆசிரியர்கள் தொடர்பு கொண்டு கற்பிக்கத் தேவையான தொழில்நுட்ப வசதிகளைக் கண்டறிவதும், தற்போதுள்ள வசதிகளை மேம்படுத்துவதும் அரசின் கடமையாகும்.

இது காலத்தின் கட்டாயமும் கூட!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு