Published:Updated:

அந்த ரன் அவுட் மட்டுமே இங்கே பிரச்னையில்லை... இந்தியா சறுக்கியது இங்கெல்லாம்தான்! #IndVsNz

கார்த்தி

சச்சின் 18 ரன்களுக்கு அவுட் ஆனபோது, ஒட்டுமொத்தமாக அழுது தீர்த்திருப்போம். ஒன் டவுன் வந்த கம்பீர் அன்று ஆடியது மற்றுமொரு வாழ்நாள் இன்னிங்ஸ்.

 Virat Kohli and K.L. Rahul react after their loss.
Virat Kohli and K.L. Rahul react after their loss. ( AP )

மீண்டும் ஒரு நாக் அவுட் போட்டி , மீண்டும் ஒரு தோல்வி என இதை எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை. Indians play the same old song in knock outs என ஆங்கில ஊடங்களில் படித்த தலைப்பு நினைவுக்கு வருகிறது. ஆம், Indians had again played the old song. ஏனெனில், வெளிநாட்டில் நடக்கும் ஒரு ஐசிசி தொடரில் , இந்தியா இவ்வளவு ஆதிக்கம் செலுத்தியதில்லை. இங்கிலாந்திடம் மட்டுமே லீக் போட்டியில் தோற்று,நம்பர் ஒன் அணியாக ஒரு தொடரில் இந்திய அணி நாக் அவுட் போட்டி சென்றதெல்லாம் நினைவு தெரிந்து என்றும் நடந்ததில்லை. ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் கோலி, நம்பர் 2 பேட்ஸ்மேன் ரோஹித். தரவரிசையில் நம்பர் ஒன் பௌலர் பும்ரா... சரி, இனி புலம்பிப் பயனில்லை. எங்கே சறுக்கியதெனப் பார்ப்போம்.

New Zealand's Trent Boult, without cap, celebrates with teammates after dismissing India's Ravindra Jadeja during the Cricket World Cup semifinal match.
New Zealand's Trent Boult, without cap, celebrates with teammates after dismissing India's Ravindra Jadeja during the Cricket World Cup semifinal match.
AP

சிம்ம சொப்பனாக இருந்த இந்தியாவின் பேட்டிங் வரிசை 5 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டை இழந்து நிர்கதியாய் நின்ற போது அடுத்த என்ன செய்வது எனத் தெரியாமல் விழி பிதுங்கியது. கிட்டத்தட்ட 28 மணி நேரம் நடந்த போட்டி. இரு தினங்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒற்றுமையாய் நினைத்து எடுத்த சமீபத்திய முடிவு நியூசிலாந்தை எளிதாய் வென்றுவிடுவோம் என்பதுதான்.

ஒரு ரசிகனின் மனநிலை பெண்டுலம் போல் இரு பக்கமும் ஊஞ்சலாடியிருக்கும். முதல் நாள் மழை பெய்யக்கூடாது. பிறகு மழை குறுக்கிட்ட போது, சீக்கிரம் மழை நிற்க வேண்டும். பிறகு அந்த நாள் முற்றிலுமாக முடிந்த போது அடுத்த நாள் மழை வரக்கூடாது. ரிசர்வ் தினத்துக்கான விதி சாத போட்டிகளுக்கும் ஒரு மாதிரியும், ஐசிசி தொடர்களுக்கும் ஒரு மாதிரியும் இருப்பதை அனைத்து ஊடகங்களும் பாகம் பிரித்து விளக்கிக்கொண்டு இருந்தன.

சென்னை மவுன்ட் ரோடில் இருக்கும் சாமான்யனும் இணையத்தில் தேடியது மான்செஸ்டரின் வெதர் ரிப்போர்ட்டைத்தான். இரண்டாம் நாள் காலை சேவக், `சூரிய ஒளி தெரிகிறது’ என ஒரு படத்தைப் பதிவு செய்தார். உற்சாகமாகத் துள்ளிக் குதித்தனர் இந்தியர்கள். ஏனெனில் நாம் வெல்லப்போகிறோம், இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலிய அணியை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளப் போகிறோம் என்கிற மனநிலை எல்லோரிடமும் இருந்தது.

பிறகு 5 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் விழுந்தபோது, மீண்டும் விதிகளின் பக்கம் திரும்பினோம். 20 ஓவர் இந்தியா விளையாடும் முன்னர், மழை மீண்டும் வந்து, ஆட்டம் நடைபெறாமல் போனால், நெட் ரன்ரேட் அடிப்படையில் இந்தியா இறுதிப்போட்டிக்குச் சென்றுவிடலாம். பெண்டுலம்கள் வேக வேகமாய் அடிக்க ஆரம்பித்தது. ஆனால், மழை பெய்யவே இல்லை. உலகம் முழுக்கவே மழை நமக்கு தேவைப்படும்போது வராது. 2003–ம் ஆண்டு ஃபைனலிலும் சற்று நேரம் மழை குறுக்கிட்டது. ஆனால், அந்தப் போட்டியில் மழை எப்போதும் வந்திருந்தாலும், ஒரு மாற்றமும் நிகழ்ந்திருக்கப் போவதில்லை என்பது தனிக்கதை.

நாங்கள் எப்போதும் அண்டர்டாக்ஸ்தான். செவ்வாய்க்கிழமை சிறப்பாக விளையாடும் அணி வெல்லட்டும்!
ஃபெர்கஸன்

தாங்கள் எப்போதும் அண்டர்டாக்ஸ் என்பதை உணர்ந்தே இருந்தனர் நியூசி வீரர்கள். கிட்டத்தட்ட 1983–ல் இந்தியாவை வெஸ்ட் இண்டீஸ் டீல் செய்தது போலத்தான், இந்தியா அரையிறுதியில் நியூசியை எதிர்கொண்டது. இப்போதும் மழை பெய்யவில்லை என்றால் வென்றிருப்போம் என மனது நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்ளச் சொல்கிறது. இந்தியாவுக்கு செமி ஃபைனல் ஒரு பொருட்டே இல்லை. ஜாம்பவான் சச்சின் போட்டிக்கு முன்பு சொன்னதை தற்போது நினைவுபடுத்த வேண்டியதிருக்கிறது.

Virat Kohli
Virat Kohli
AP
ஃபைனலைப் பற்றித் தற்போது பேசிக்கொண்டிருப்பவர்கள் கிரிக்கெட்டை புரிந்து கொள்ளாதவர்கள். செமி ஃபைனலில் இருக்கும் போது, ஃபைனல் பற்றிப் பேசாதீர்கள். நியூசிலாந்து அண்டர் ரேட்டட் என்றாலும், அது மிகச்சிறந்த அணி. அவ்வளவு எளிதாக இந்தியாவால் வெல்ல முடியாது!
சச்சின்

240 ரன்களை சேஸ் செய்ய வேண்டும். 5 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்கிற நிலை மாறி, 92 ரன்களுக்கு ஆறு விக்கெட் எனச் சற்று கௌரவமான நிலைக்கு நம்மை அழைத்து வந்தனர் பன்ட்டும், பாண்டியாவும். அதன் பிறகு ஜடேஜா ஆடிய இன்னிங்ஸ் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு மட்டுமல்ல, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. ஆனால், சற்றே பின்னோக்கிப் பார்த்தால், ஒவ்வொரு நாக் அவுட் தொடரில் இப்படியாக ஒரு நாயகன் தனியாகப் போராடி இருப்பான்.

கொஞ்சம் பெரிய ஃபிளாஷ்பேக்!

2003 உலகக் கோப்பை ஃபைனல்

MS Dhoni
MS Dhoni
AP

நமக்கு நினைவு தெரிந்து நாம் சென்ற முதல் ஃபைனல். பான்டிங், கில்லி, மார்ட்டின் அதிரடியில் 2 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. ஃபைனலுக்கு முந்தைய பத்து போட்டிகளில் சச்சின் அடித்தது 10 இன்னிங்ஸ் 669 ரன்கள். ஆறு அரை சதம், ஒரு சதம். அந்தப் போட்டியில் முதல் ஓவரிலேயே தன் விக்கெட்டை மெக்ராத்திடம் இழந்தார் சச்சின். கங்குலியும், கைஃபும் அடுத்தடுத்து அவுட்டானார்கள். அந்தத் தொடரில் பெரிதாக ஆடாத சேவக் போராடிக்கொண்டு இருந்தார். 3 சிக்ஸ் உட்பட அன்று சேவக் அடித்த 82 ரன்கள் யாருமே அவரிடம் எதிர்பார்க்காத ஒரு இன்னிங்ஸ். நேற்று ஜடேஜா செய்ததும் அதுதான். அந்தப் போட்டியில் கீப்பர் டிராவிட் செய்ததை, நேற்று கீப்பர் தோனி செய்தார்.

2007 உலகக் கோப்பை டி20

ஃபிக்ஸிங்கே செய்தாலும் அமையாத ஒரு ஃபைனல். ஆம், வட இந்திய ஊடகங்களுக்கு அப்படியொரு ஃபைனல். பாகிஸ்தானுடன் இந்தியா ஃபைனலில் மோதுகிறது. லீக் போட்டியில் டை ஆகிப்போன பாகிஸ்தானுடன். உத்தப்பா, சேவக், ஹர்பஜன் உபயத்தால் வென்ற பாகிஸ்தானுடன்... பௌல் அவுட்டில் கூட ஒய்டு போட முடியும் என உலகுக்குக் காட்டிய பாகிஸ்தானுடன்...

India's Mahendra Singh Dhoni is run out during the Cricket World Cup semifinal match between India and New Zealand at Old Trafford in Manchester.
India's Mahendra Singh Dhoni is run out during the Cricket World Cup semifinal match between India and New Zealand at Old Trafford in Manchester.
AP

காயம் காரணமாக ஃபைனலில் விளையாடாமல் இருக்கிறார் சேவக். அவருக்குப் பதில் யூசஃப் பதான். முதல் இன்னிங்ஸ் இந்தியா. கௌரவமான ஒரு ரன்னை ஸ்கோர் போர்டில் கொடுக்க வேண்டும். முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடிக்கிறார் யூசஃப். சேவக் போலவே விரைவில் அவுட்டும் ஆகிறார். ஒரு பக்கம் உத்தப்பா, யுவராஜ், தோனி என அதிகம் நம்பப்பட்ட வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை இழக்கிறார்கள்.

கம்பீர் தனி மனிதனாகப் போராடுகிறார். கம்பீர் பதினெட்டாவது ஓவரில் அவுட்டான போது, இந்தியாவின் ஸ்கோர் 130/ 5. அதில் கம்பீர் அடித்தது 75. ரோஹித் ஷர்மாவின் கடைசிக்கட்ட அதிரடியில் 157 ரன்கள் எடுத்தது. As dhoni had other ideas , இந்தியா உலகக் கோப்பையை வென்றும் சாதித்தது. அதன் பின் நடந்தது எல்லாம் தோனி வரலாறு.

2011 உலகக் கோப்பை ஃபைனல்!

கிட்டத்தட்ட சச்சினின் இறுதி உலகக் கோப்பை. சீனியர் வீரரான சச்சின் தான் அந்தத் தொடரில் இந்தியாவின் டாப் ஸ்கோரர். 9 இன்னிங்ஸில் 482 ரன்கள். சராசரி 53.55. மலிங்கா வேகத்தில் சேவக் டக் வுட். சச்சின் 18 ரன்களுக்கு அவுட் ஆனபோது, ஒட்டுமொத்தமாக அழுது தீர்த்திருப்போம். ஒன் டவுன் வந்த கம்பீர் அன்று ஆடியது மற்றுமொரு வாழ்நாள் இன்னிங்ஸ். கம்பீர் அவுட் ஆனதற்குப் பின்னர் இந்தியா அடித்தது ஐம்பது ரன்கள். 56 பந்துகளில் அரைசதம் கடந்தார் கம்பீர். இந்தியாவின் நம்பிக்கை என்றால் அந்தப் போட்டியில் சேவக்கும், சச்சினும்தான் நம்பிக்கை நாயகர்கள். ஆனால். அன்று அவர்களின் நாள் இல்லை. கம்பீரின் நாள். அந்தப் போட்டியில் சிக்ஸ் அடித்து தோனி வென்ற போது, மும்பை அதிர்ந்தது.

ப்ளேயர் ஆஃப் தி டோர்னமென்ட் வாங்கிய யுவராஜ், சச்சினுக்காக என்றார். 90 ரன்கள் அடித்த கம்பீர் சச்சினுக்காக என்றார். கோலி சச்சினுக்காக என்றார். நேற்று தோனிக்காக யாரேனும் அடித்திருக்கலாம்.

2017 சாம்பியன்ஸ் டிராஃபி

2003ம் ஆண்டு ஆஸ்திரேலியா செய்ததை, இந்த முறை நமக்குச் செய்தது பாகிஸ்தான். ஐசிசி தொடர்களில் நம்மை வெல்லாத பாகிஸ்தான். 338 ரன்களை சேஸ் செய்ய வேண்டும். இந்தியாவின் சாபக்கேடு தொடர்கிறது. நட்சத்திர வீரர்கள் அவுட் ஆகிறார்கள். ரோஹித் ஷர்மா டக் அவுட். கோலி, தோனி சிங்கிள் டிஜிட்டில் அவுட். அன்று தனியாக ஆடிக்கொண்டிருந்தார் பாண்டியா. நேற்றும் அவர் அப்படி ஆடியிருக்கலாம். ஆனால், ஆசை பாண்டியாவையும், பன்ட்டையும் விடவில்லை.

Hardik Pandya
Hardik Pandya
Ap

இப்படியாகத்தான் ஒவ்வொரு ஒரு முறை அல்ல, ஒவ்வொருமுறையும் நட்சத்திர வீரர்கள் சொதப்புவதும், ஏதோ ஒருவர் உயிரைக் கொடுத்து கரை சேர்ப்பதும், இந்தியாவின் தொடர் கதையாக இருக்கிறது.

சரி, நேற்றைய போட்டிக்கு வருவோம்.

கோலி எளிதாக இந்த ரன்களை சேஸ் செய்து இருக்கலாம். ஆனால், கோலி ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் தொடர்ந்து சோபிக்கத் தவறுகிறார். நாக் அவுட் போட்டிகளில் கோலியின் சராசரி எப்போதும் மோசம்தான். அவரின் ஒரு நாள் சராசரி 60ஐ நெருங்க இருக்கிறது. ஆனால், நாக் அவுட் போட்டிகளில் அவரது சராசரி 30 தான். 14 போட்டிகளில் அவரது சராசரி 31.36. ஒரு நாள்போட்டிகளில் 41 சதம் கடந்த ஒரு வீரரின் இப்படி சொதப்புவதன் காரணத்துக்கான விடையை கோலிதான் தேட வேண்டும்.

India's captain Virat Kohli throws his bat in frustration after being dismissed by New Zealand's Trent Boult.
India's captain Virat Kohli throws his bat in frustration after being dismissed by New Zealand's Trent Boult.
AP

நேற்று கோலி LBW ஆனது ஓர் அட்டகாசமான பால். சச்சின், கோலி என யாராக இருந்தாலும் அந்தப் பந்தில் சற்றேனும் நிலைகுலைந்து போயிருப்பார்கள். அவர் ராகுலைப் போல், அவுட்சைடு ஆஃப் செல்லும் பந்தை அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆகவில்லை. போல்ட் வீசிய பந்து அட்டகாசமாக ஸ்விங் ஆனது. பந்தின் உயரத்தைத் தவிர அதில் எந்தவொரு குறையும். கோலியால் அதை நம்ப முடியாமல் தான், DRS சென்றார். ஆனால், கோலியிடம் இதை அவுட் எனச் சொல்லும் தைரியம் ராகுலுக்கு இருக்குமா என்ன ? மூன்றாவது நடுவரும் அவுட் என்றார். நல்ல வேளையாக ரிவ்யூ வீணாகவில்லை.

India's Rohit Sharma stands outside team's dressing room as he watches the Cricket World Cup semi-final match
India's Rohit Sharma stands outside team's dressing room as he watches the Cricket World Cup semi-final match
AP

இதற்கு மேல் தினேஷ் கார்த்திக்கு எல்லாம் என்ன வாய்ப்பு வழங்க முடியும் எனத் தெரியவில்லை. சீனியர் ப்ளேயர் இன்னும் சில இத்யாதிகள் எல்லாம் தினேஷ் கார்த்திக்கு அடுக்கலாம். இந்தியாவுக்கு கீப்பர் பேட்ஸ்மேன் தேவையெனும்போது, முன்னணியில் இருந்து இருவர்தான். ஒருவர் தினேஷ், இன்னொருவர் தோனி. ராஞ்சியில் பிறந்த ஒருவர் இப்படியொரு சாதனையை கடந்த பத்தாண்டுகளில் செய்ய முடியுமெனில், தினேஷ் கார்த்திக்கை என்னவென்று சொல்வது. நேற்று மற்றுமொரு பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பத்து ஓவருக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து நின்றது இந்தியா.

ஒருவரை டார்கெட் செய்து, சொல்லி வைத்து அடிப்பது எப்படி என்பதை நேற்று நியூசி வீரர்கள் செய்து காட்டினார். `இவனுக்கு இந்த லைன் போட்டால் அவுட்டாவான்’ டெக்னிக்கை பன்ட்டுக்கு பயன்படுத்தியது நியூசி. 23–வது ஓவரை இடது கை ஸ்பின்னர் சான்ட்னர் வீசுகிறார். ஆசை காட்டுகிறார். முதல் பந்தை பன்ட் தடுத்து ஆடுகிறார். அடுத்த பந்தை ஷார்ட் ஃபைன் லெக் பக்கம் அடித்துவிட்டு, சிங்கிள் ஓட முயற்சி செய்கிறார். பாண்டியா வேண்டாம் எனத் திருப்பி அனுப்புகிறார். மீண்டும் அடிடா எனச் சொல்லி ஒரு பந்து. ஸ்டம்ப்ஸ் நோக்கி வீசுகிறார்.

Pant
Pant

அடுத்த பந்து மிடில் ஸ்டிக் நோக்கி வருகிறது. டிஃபண்டு செய்கிறார். அடுத்த பந்தை தூக்கி அடித்து ஸ்வீப் செய்கிறார். பன்ட் தன் தவறை, அடித்ததும் உணர்ந்து இருப்பார். சில வீரர்களுக்கு கல்லி பாயின்ட் என்றால், பன்ட்டுக்கு இப்படி. பிரஷர் சமயத்தில் பன்ட் இப்படி ஐபிஎல் காலம் தொட்டு அவுட் ஆகிறார். தனது விக்கெட்டை வீணடிக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு அவசர நிலையிலேயே காணப்பட்டார்.

இந்தியாவின் அதி வேகப்பந்துவீச்சாளரான வருண் ஆரோன் தன் ஆரம்ப காலத்தில் இப்படித்தான் செய்வார். அவருக்கு வேகமாய் பந்துவீச வேண்டும். வேரியேஷன் பற்றியெல்லாம் யோசிக்க நேரமிருக்காது. வீசிவிட்டேன். பந்தைத் தாருங்கள், அடுத்த பந்து வீசுகிறேன். அவ்வளவுதான் வருண். இப்போது வருண் எங்கே இருக்கிறார் எனப் பார்த்தாவது ரிஷப் பன்ட் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் போட்டியில் பாண்டியாவுக்கு முன்னர் தோனி களம் இறங்கி இருக்கலாம். ரவி சாஸ்திரியோ, கோலியோ அவர் அவருக்கே வெளிச்சம்! இந்தியாவில் தற்போது இருப்பது இரண்டு ஹிட்டர்கள். பாண்டியாவும், பன்ட்டும். இருவருமே அனுபவத்தில் குறைவு. இருவரையும் ஒருசேர ஃபீல்டுக்கு அனுப்பும் மடத்தனத்தை எல்லாம் செய்தால், அந்த அணி இறுதிப் போட்டிக்குச் செல்ல தகுதியற்ற அணி என்று தான் சொல்ல வேண்டும்!

பன்ட் செய்தத் தவறைத்தான் பாண்டியாவும் செய்தார். 240 சேஸிங் என்னும் போது, நாம் ரன்கள் அடிக்க வேண்டியதில்லை. தோனி காலம் காலமாய்ச் செய்யும் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தாலே போதும், எல்லாம் இனிதாய் நடக்கும். அதைச் செய்ய மறுத்து , அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆவதெல்லாம்... அதுவும் நாக் அவுட் போட்டியில். சரி இந்திய வீரராய் இருந்துவிட்டு, எப்படி ஒருவரிடம் பொறுப்பை எல்லாம் எதிர்பார்க்க முடியும். மீண்டும் சான்ட்னர் , மீண்டும் ஓர் அட்டகாசமான பந்து. மீண்டும் பிரஷருக்கு வீழ்ந்தார் பாண்டியா. மீண்டும் ஸ்லாக் ஸ்வீப்.

அடுத்து வந்தது சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் ஆஸ்தான வீரர் ரவீந்திர ஜடேஜா. ஜடேஜா வந்ததும் சிக்ஸ் அடிப்பார் என எவரும் யூகித்திருக்க மாட்டார்கள். இறங்கி வந்து சிக்ஸ் அடித்தார். அந்த Bits and Pieces வீரர். சான்ட்னர், ஃபெர்கஸன், நீசம், ஹென்றி என எல்லோரது பந்துவீச்சிலும் அடித்தார் ஜடேஜா. ஜடேஜா அரைசதம் கடந்ததும், ரோஹித் கொடுத்த சைகைகள் அவ்வளவு ஸ்பெஷல்!. அந்த இக்கட்டான தருணத்தில், ஜடேஜா, அந்த அரைசதத்தை அவ்வளவு கொண்டாடி இருக்க வேண்டாம் என்றுகூட சிலர் நினைக்கலாம்.

Ravindra Jadeja
Ravindra Jadeja
AP

ஆனால், அதில் தேவையில்லாமல் இல்லை. ஜடேஜா இதற்கு முன் அரைசதம் அடித்த ஒரு நாள் போட்டிக்கும், நேற்றைய போட்டிக்கும் இடையே 700 ஒரு நாள் போட்டிகள் விளையாடப்பட்டிருக்கின்றன. ஆம், இங்கிலாந்து 2014ல் இந்தியா சுற்றுப்பயணம் சென்ற போதுதான் ஜடேஜா இதற்கு முன்னர் அரைசதம் கடந்திருந்தார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள். சற்று அதிகம்தான், இருந்தாலும் சொல்லலாம். ஜெர்ஸி படத்தில் பல ஆண்டு முயற்சிக்குப் பின், அணியில் இடம் பிடிப்பார் நானி. சரி, அந்தக் காட்சியை நீங்களே கீழே பார்க்கலாம். ரவீந்திர ஜடேஜா செய்தது அத்தகைய ஒரு நிகழ்வுதான்.

ரவீந்திர ஜடேஜா செய்தது அத்தகைய ஒரு நிகழ்வுதான்.

ஜடேஜா அவுட் ஆனபின்னும் சிறு நம்பிக்கையாக தோனி இருந்தார். அந்த ரன் அவுட்டில் அவரின் தவறு எதுவும் இல்லை. Running between the wickets, இப்போதும் நம்பர் ஒன் தோனி தான். பிரஷரில், இன்னொரு ரன்னுக்காக ஓடிய ஓட்டம் தான் அது. அதில் தவறேதும் இல்லை. கிட்டத்தட்ட அவரின் கடைசி உலகக் கோப்பை இது. இதிலும் ஃபினிஷர் இன்னிங்ஸ் ஆடி, தனக்கான கோப்பையை தானே தான் வாங்க வேண்டுமா என்றால், ஒன்றும் சொல்வதற்கில்லை.

45நிமிட மோசமான ஆட்டம், நம்மை உலகக் கோப்பையிலிருந்து பிரித்துவிட்டது. புது பந்தில் சரியான ஏரியாக்களில் பந்துவீசி நன்றாகவே செயல்பட்டார்கள். எங்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வெற்றிகண்டனர். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியான அணியே. பந்தை நன்றாக ஸ்விங் செய்து தனித்துவமாக வீசி வெற்றியை நம்மிடமிருந்து பறித்தனர். இதற்கு உரிய பாராட்டுகள் அவர்களுக்குச் சேர வேண்டும். நாங்கள்தான் ஷாட் தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
கோலி

ஒரு நாள் போட்டிகளின் சுவாரஸ்யம் குறைந்து வரும் சூழலில், இத்தகைய வெற்றிகள் நிச்சயம் கிரிக்கெட்டின் மீது ஆர்வத்தை அதிகரிக்கும். நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வாழ்ந்து கெட்ட ஜமீன் மேற்கு இந்திய தீவுகள். இந்த மூன்று அணிகள் வெல்லும் போது, எந்தவித கோபமும் பெரிதாக ஏற்படுவதில்லை. காரணம் , அவர்கள் அப்படித்தான்! . இன்றைய போட்டியில், இங்கிலாந்து வென்றால், இன்னுமே மகிழ்ச்சி. ஆம், நியூசிலாந்து, இங்கிலாந்து இவ்விரண்டு அணிகளுமே உலகக் கோப்பை வென்றதில்லை. இரண்டு அணிகளுக்கும் வெற்றி பெற வாழ்த்துகள்.

இந்தியா தோல்வியைத் தழுவியது எந்தத் தருணத்தில் என நினைக்கிறீர்கள் ? கமென்ட்டில் பதிவு செய்யவும்.