விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் வாசகர்,"ஏன் திமிங்கலத்தின் அம்பர் கிரிஸ் விற்பனை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது? இயற்கையாக கிடைக்கும் பொருள் தானே அது? அதுமட்டுமில்லாமல் வாசனை பொருள் தயாரிக்க தானே பயன்படுகிறது? " என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.

அம்பர்கிரிஸ் அல்லது க்ரே அம்பர் என்று அழைக்கப்படும் பொருள் "ஸ்பெர்ம் வேல்" (sperm whale) என்று அழைக்கப்படும் திமிங்கலங்களில் இருந்து கிடைக்கப்படும் ஒருவித கழிவுப்பொருள் ஆகும். இது திமிங்கிலங்களின் வயிற்றில் ஏற்படும் பித்த சுரப்பியால் (Bile duct) உருவாக்கப்படுகிறது. திமிங்கலம் கழிவாக உமிழும்போது கடல்களில் மிதக்கும் நிலையிலோ அல்லது கரை ஒதுங்கியோ இந்த அம்பர் கிரிஸ் கிடைக்கும். திமிங்கலத்தின் உடலில் உருவாகும் போது மிகவும் கெட்ட நாற்றத்துடன் இருந்தாலும் அது படிய ஆரம்பித்ததும், மிகுந்த நறுமணமிக்க பொருளாக மாறுகிறது. இதிலிருந்து விலை உயர்ந்த நறுமண பொருட்களும், சிலசமயங்களில் பாரம்பரிய மருந்துப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை இயற்கையாக உற்பத்தி ஆக நீண்ட நாட்கள் ஆகும். அவை நமக்கு கிடைப்பதும் அரிது. அதனாலேயே இதன் மதிப்பு மிகவும் அதிகம். இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் எனச் சொல்கிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திமிங்கலத்திலிருந்து கிடைக்கும் அம்பர்கிரிஸ் நம் நாட்டில் தடை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்தும், அம்பர்கிரிஸ் எடுப்பதற்காக திமிங்கலங்கள் வேட்டையாடப்படுவது குறித்தும் எழுத்தாளர் நாராயணி சுப்பிரமணியன் விளக்குகிறார்.
" பொதுவாக திமிங்கலத்திடம் இருந்து கிடைக்கும் இந்த அம்பர்கிரிஸ் என்பது திமிங்கலத்திற்கு ஒரு கழிவு பொருள் போலத்தான். ஆனால் பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் இந்த அம்பர்கிரிஸைத் திமிங்கலத்தின் உடலிலிருந்து நேரடியாக எடுப்பதற்காக அதிக அளவிலான திமிங்கலங்கள் கொல்லப்பட்டன.

திமிங்கலங்கள் வேட்டையாடப்படுவதற்கு அம்பர்கிரிஸே முக்கியக் காரணமாக அமைந்தது. திமிங்கலத்திலிருந்து கிடைக்கும் எண்ணெய் எந்த அளவிற்கு முக்கியமான பொருளோ அதே அளவிற்கு அம்பர்கிரிஸும் முக்கிய பொருளாக மாறியது. எப்போதாவது கிடைக்கும் அரிய பொருள் அம்பர்கிரிஸ். அதனால் அதன் மதிப்பும் அதிகம். அம்பர்கிரிஸ் இயற்கையாகக் கிடைக்காத பட்சத்தில் இப்படி பல திமிங்கலங்கள் கொல்லப்படுகின்றன. இதைத் தடுப்பதற்கே இந்த அம்பர்கிரிஸ் தடைசெய்யப்பட்டது. மற்ற மீன்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவான வளர்ச்சி விகிதம் மற்றும் இனப்பெருக்க விகிதத்தை உடையவை திமிங்கலங்கள். எனவே ஒரு திமிங்கலம் கொல்லப்படுவது என்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அது தலைமுறைகள் நீடித்த பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. திமிங்கல வேட்டையை ஊக்குவிக்கக் காரணமாக அமைவதாலேயே இந்த அம்பர்கிரிஸ் தடைசெய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!