Published:Updated:

அணைகள் பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்ப்பது ஏன்?

முல்லைப் பெரியாறு அணை
News
முல்லைப் பெரியாறு அணை

இந்தியாவின் மிக உயரிய அதிகார மையமான உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும் அணைக்கே இந்த நிலைமை என்றால், மற்ற அணைகளின் நிலை குறித்து யோசித்துப் பாருங்கள்.

அணைகள் பாதுகாப்பு மசோதா கடந்த டிசம்பர் 2-ம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. சுமார் நான்கு மணி நேர விவாதத்துக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கிடையே மசோதாவை தாக்கல் செய்தார் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத். ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டு மக்களவையில் இது நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது முதலே தமிழகம் இதை எதிர்த்துவருகிறது. இந்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்திலும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி-க்களும் இதை எதிர்ப்பதற்கான முதன்மை காரணம், தங்களின் மாநில உரிமைகள் பறிக்கப்படும் என்பதே. இந்த மசோதா குறித்து மேலும் அறிய ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு மற்றும் வைகைப் பாசன விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முல்லைப் பெரியாறு அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளருமான அன்வர் பாலசிங்கத்திடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“இந்த மசோதாவின் மிக முக்கியமான அம்சம், பல மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் உள்ள அணைகள், 15 மீட்டருக்கு மேல் உயரமுள்ள அணைகள் அனைத்தும் மத்திய அரசு புதிதாக அமைக்க இருக்கும் தேசிய அணை பாதுகாப்பு அமைப்பின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் என்பது. அணைகளின் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய அணைகள் அனைத்தும் சென்றுவிடுவது உறுதி. இதனால் அனைத்து பிரச்னைகளும் சுமுகமாகத் தீர்க்கப்படுமா? நிச்சயம் இல்லை.

அன்வர் பாலசிங்கம்
அன்வர் பாலசிங்கம்

மத்திய நீர் வளக் கமிட்டியின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்ற முடியவில்லை. நம் கைகளில் அணையின் உரிமை இல்லாதபடி, மொத்த அதிகாரமும் மத்திய அரசின் கீழ் நேரடியாகச் சென்று விட்டால் எப்படி இருக்கும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். கிருஷ்ணராச சாகர் அணை அமைந்துள்ள கர்நாடக மாநிலத்தை ஆண்டு வருவது பாஜக அரசு. ஒருவேளை கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் மத்திய நீர் வளத்துறை அமைச்சரானால் தமிழ்நாட்டிற்கு அவ்வளவு எளிதில் காவிரி நீர் வந்துவிடுமா என்ன? எனவே பல மாநில நதிகளை இந்த மசோதாவில் கொண்டுவருவது மிக அபத்தமானது. அப்படி செய்யும்பட்சத்தில் மாநிலங்களின் உரிமைகள் முற்றிலுமாக பறிக்கப்பட்டு அவை அனைத்தும் மத்திய அரசிடம் முழுவதுமாக சென்றுவிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாங்கள் போராடிவரும் முல்லைப் பெரியாறு அணையையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். உச்ச நீதிமன்றம் நியமித்த ஐவர் குழுவின் கண்காணிப்பில் இருக்கும் இந்த அணை, உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வைக்குக்கீழ் வருகிறது. இதில் 144 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கலாம் என்று இரண்டு தீர்ப்புகள் இருப்பினும் இதை எதிர்த்து தொடுக்கப்படும் தனிநபர் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது நீதிமன்றம். இந்தியாவின் மிக உயரிய அதிகார மையமான உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும் அணைக்கே இந்த நிலைமை என்றால், மற்ற அணைகளின் நிலை குறித்து யோசித்துப் பாருங்கள். இந்த அணை கேரளாவில் இருந்தாலும், இப்போது நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு வரும்போது நிலைமை மேலும் மோசமடையும் என்பதே என் கருத்து'' என்கிறார் அன்வர் பாலசிங்கம்.. மாநில அதிகாரங்களை மையப்படுத்துவது தவிர்த்து மற்ற விளைவுகளையும் பட்டியலிடுகிறார் அன்வர்.

கிருட்டிணராச சாகர் அணை
கிருட்டிணராச சாகர் அணை

“பெரியாறு பாசனத்தில் பிரதான கால்வாய், நீட்டிப்புக் கால்வாய் என இரண்டு உண்டு. உபரி நீர் வரும்போது மட்டுமே நீட்டிப்பு கால்வாய்க்கு நீர் கொண்டு செல்லமுடியும் என்ற விதி உள்ளது. இந்தப் புதிய மசோதா, பிரதான கால்வாயை மட்டும் மையப்படுத்தி, நீட்டிப்புக் கால்வாயைப் பற்றி கவனம் செலுத்தாது. அந்தப் பகுதி பாசன விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

இது மட்டுமல்லாமல் மத்திய அரசின் கீழ் நீர்நிலைகள் சென்றுவிடுவதால் உள்ளூர் மக்களின் மீன்பிடி உரிமை, படகுவிடும் உரிமை அனைத்தும் பறிபோய்விடும். அதை யாருக்குக் கொடுப்பார்கள்? மத்திய அரசே முடிவு செய்யுமா?
அணைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தால், நம் சொந்த மாநிலப் பிரச்னைகளை விளக்க வேறு ஒரு மொழி அதிகாரியிடம் சென்று முறையிட வேண்டி வரும். அவரால் அரசாணையைப் பின்பற்ற முடியுமே தவிர, இந்நிலத்தில் வாழும் மக்களின் உணர்வுகளை நிச்சயம் புரிந்துக்கொள்ள முடியாது.

முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

விவசாயி என்பவன் அரசின் அதிகாரத்திற்குக் கீழ் நடப்பவன் என்ற நிலை உருவாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. சொந்த மாநிலத்தின்கீழ் என்றால்கூட நம்மால் குறைந்தபட்சம் போராட முடியும். அதற்கு செவி சாய்க்க ஆட்கள் இருப்பார்கள். ஆளும் அரசியல்வாதிகளை அணுகமுடியும். ஆனால், மத்திய அரசிடம் அனைத்து உரிமைகளும் சென்றுவிட்டால், அதிகாரிகள் நினைத்ததே முடிவு என்றாகிவிடும். இந்த அணைகள் பாதுகாப்பு சட்டம் என்பது நம் உரிமைகள் அனைத்தையும் ராணுவமயமாக்கப்பட்ட ஒரு அதிகார மையத்திற்கு தாரை வார்ப்பது போன்றது” என்று பொருமுகிறார் அன்வர் பாலசிங்கம்.