Published:Updated:

நூற்றாண்டு காணும் அமெரிக்கப் பெண்களின் வாக்குரிமை; ஆனால்..! - உண்மைநிலை சொல்லும் தரவுகள் #MyVikatan

Kamala harris
Kamala harris ( AP )

எவ்வுளவு பிரமாண்டமான வளர்ச்சி என்று எண்ணிவிட வேண்டாம். அத்தகைய வளர்ச்சிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

100 நாள்களுக்கும் மேலாக கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்தை வைத்திருந்தார் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா. மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட இறப்பு விகிதத்தைக் குறைத்து கொரோனாவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார் ஜெர்மனியை ஆளும் ஏஞ்செலா மெர்கல்.

தைவான் அதிபர் Tsai Ing Wen (டீசாய் இங் வென்) தேசிய பொதுமுடக்கம் இன்றி கோரோனோவை கட்டுக்குள் வைத்திருக்கிறார். மேற்கூறிய அனைத்து நாட்டுப் பெண் தலைவர்களும் தங்களது வியூகங்கள் மூலம் கொரோனாவைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

Kamala harris
Kamala harris
Jacquelyn Martin

திறன் வாய்ந்த பெண் ஆளுமைகளின் பட்டியலில் கமலா ஹாரிஸ் இணைவாரா என நவம்பர் மாதம் வரும் தேர்தல்தான் முடிவு செய்யும். ஆம், அவர் அமெரிக்கத் துணை அதிபருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கமலா ஹாரிஸின் பாட்டி வீடு சென்னையில்தான் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

2016-ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்கத் தேர்தலில் ஆண்களை விட அதிகம் வாக்களித்த பெண்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம், எவ்வளவு பிரமாண்டமான வளர்ச்சி என்று எண்ணிவிட வேண்டாம். அத்தகைய வளர்ச்சிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது.

போட்டியிடுவது மட்டுமல்ல, வாக்களிப்பதே கூட 1920-ம் ஆண்டுக்கு முன் அமெரிக்க பெண்களுக்கு சாத்தியமாக இருந்ததா என்றால், இல்லை என்பதுதான் பதில். 1965-க்கு முன்பு வரை ஏதோ ஒரு காரணம் காட்டி அமெரிக்கர்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்படாமலே இருந்தது. இதனால் தொடர் போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர். இதனால் சில சட்டத் திருத்தங்களை அரசு மேற்கொண்டது.

Indira Gandhi
Indira Gandhi
Photo: Vikatan Archives

சிவில் வார் சட்ட திருத்தங்கள் என 13, 14, 15 சட்ட வரைவுகளை குறிப்பிடுகிறது அமெரிக்க வரலாறு. தொடர் மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு, 13-வது சட்டத் திருத்தம் அடிமை ஒழிப்பு (1864-65), 14-வது சட்டத் திருத்தம் அமெரிக்காவில் பிறந்த அனைவருக்கும் வாக்குரிமை (1868), 15-வது சட்டத் திருத்தம், நிறம், கல்வியறிவு, அடிமை முறையில் இருந்து மீண்டவர்கள் என எந்த பேதமும் காட்டாமல் வாக்களிக்க அனுமதி அளிக்க கோரிய சட்டத் திருத்தம் (1870) கொண்டுவரப்பட்டது.

சட்டங்கள் இருப்பினும் அனைத்து அமெரிக்கர்களும் எளிதில் வாக்குரிமை பெற்றுவிடாதபடி வாக்கு செலுத்துவதற்கு வரி (Poll Tax), வாக்களிக்கத் தகுதியை நிர்ணயம் செய்யும் படிப்பறிவு சோதனை (literacy tests), இன பேதங்கள், மாநில சட்டங்கள் போன்றவற்றைக் காரணம்காட்டி ஏராளமான பூர்வகுடி அமெரிக்கர்களுக்கும், ஆப்பிரிக்க, ஆசிய அமெரிக்கர்களுக்கும் வாக்குரிமை வழங்கப்படவில்லை.

``universal suffrage’’ அனைவருக்கும் பொதுவான வாக்குரிமை கோரி அமெரிக்கர்கள் நடத்திய அரை நூற்றாண்டு போராட்டத்துக்குப் பிறகு, ஆகஸ்ட் 26, 1920-ல் ``19வது திருத்தம்” சட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பாலின (ஆண், பெண்) வேறுபாடுகளைக் கலைந்து அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இதனால், அப்போது 27 மில்லியன் (2.7 கோடி) பெண்கள் வாக்குரிமை பெற்றனர்.

மீண்டும் எழுச்சிபெற்ற போராட்டங்களின் மூலம் 1965-ல்தான் இவ்வரைவு முழுமை பெற்று இன, மாநில பேதமின்றி அனைவருக்குமான சம வாக்குரிமையைப் பெற்றுத்தந்தது.

US People suffrage for voting rights
US People suffrage for voting rights

அமெரிக்கா, தன் நாட்டுமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவதற்கு முன் 1960-களில் உலகில் மூன்று நாடுகளின் தலைமைப் பொறுப்பில் பெண்கள் இருந்தார்கள், அவர்களில் உலகின் முதல் பெண் இலங்கையின் பிரதமராக சிறிமாவு பண்டார நாயகவும் (1960), 1966-ல் நமது பிரதமர் இந்திராகாந்தி அவர்களும், இஸ்ரேல் நாட்டு பிரதமர் கோல்டா மியர் 1969-லும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் தலைவர்களாக இருந்தனர்.

1960-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை மொத்தம் 70 நாடுகள் பெண் பிரதமர்களைக் கண்டிருக்கின்றன.

ஆனாலும், இதுவரை அமெரிக்காவில் அதிபராகப் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த முறை கடின போராட்டத்துக்குப் பின்னும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனதைப்போல் வெற்றிக் கனியை ஹிலாரி கிளின்டனால் எட்டமுடியவில்லை.

எல்லா இடத்திலும் முதலிடம் என்று மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்கா, நாடாளுமன்றத்தில் 23.4% சதவிகித பெண் உறுப்பினர்களுடன் உலகநாடுகளின் பட்டியலில் மத்திய தர நாடாகவே விளங்குகிறது. (இந்திய நாடாளுமன்றம் 14.4% (78/543) பெண் உறுப்பினர்களுடனும் இயங்குகிறது), 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தின்படி உலக அளவில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் பெண், இந்த எண்ணிக்கை 2010 ஆண்டைவிட 24% அதிகம் என்பது சற்றே ஆறுதலான செய்தி.

உலக மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களுக்கு சரியான அளவில் பிரதிநிதித்துவம் உலகம் முழுக்கவே கொடுக்கப்படாததன் விளைவாகவே கீழ்க்கண்ட தரவுகளைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

Representational Image
Representational Image
Pixabay

(ஐ.நா சபையின் அறிக்கை கீழ்க்கண்டவாறு கூறுகிறது).

உலகப் பெண்களில் 4% சதவிகிதம் பேர் ஆண்களைவிட அதிகம் வறுமையிலும், 10% சதவிகிதம் பேர் உணவு பாதுகாப்பின்மையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், வளர்ச்சி குறைந்த நாடுகளில் 61% தாய்மார்கள் மட்டுமே மருத்துவப் பணியாளர்களின் உதவியோடு பிரசவிக்கிறார்கள், 2017-ம் ஆண்டு மட்டும் மூன்று லட்சம் பெண்கள் பேறுகால மற்றும் பிரசவத்தின்போது இறந்திருக்கிறார்கள். ஒன்றரை கோடி மாணவிகளும், ஒரு கோடி மாணவர்களும் பள்ளி வயதைக் கடந்த பின்னும் பள்ளிக்குச் செல்ல வாய்ப்பற்றவர்களாக இருக்கிறார்கள். கடத்தப்படும் மனிதர்களில் 4-ல் 3 பேர் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 39% பெண்கள் பணிக்குச் செல்பவர்களாக இருந்தாலும் அவர்களில் 27% (100 பெண்களில் 27 பேர் ) பெண்கள் மட்டும்தான் மேலாண் பணிகளில் அமர்த்தபடுகின்றனர், இந்தியாவில் இந்த எண்ணிக்கை இன்னும் குறைவு 12.9 சதவிகிதம் பேர்தான் உயர் மேலாண்மை பணிகளிலும், 13 % மத்திய தர மேலாண் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

உலகில் 38.7 சதவிகித பெண்கள் வேளாண் சார் தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களில் 13.8 சதவிகித (100 பெண்களில் 14 பேர் ) பெண்களே நில உடமைதாரர்களாக உள்ளனர், இந்தியாவில் 77% சதவிகித பெண்கள் வேளாண் சார் பணிகளிலும் ஈடுபட்டிருந்தாலும், அவர்களில் 12.77% சதவிகிதத்தினரே நில உடமைதாரர்கள்.

Representational Image
Representational Image
Pixabay

இவற்றைக் குற்றச்சாட்டுகளாக வைக்காமல் நமக்கு முன் இருக்கும் தீர்வு காண வேண்டிய சவால்களாகவே பார்க்க வேண்டி இருக்கிறது.

உலக மக்கள் தொகையில் 50% சதவிகிதம் அளவுள்ள பெண்களின் திறனையும் பலத்தையும் முழுமையாகப் பயன்படுத்தாமல் அனைத்து நாடுகளும் மனித வளத்தை வீணடிக்கின்றன என்றே தோன்றுகிறது.

அமெரிக்காவாக இருந்தாலும் மற்ற உலக நாடுகளாக இருந்தாலும் இச்சவால்களுக்குத் தீர்வுகாண பெண்களின் நாடாளுமன்ற, சட்டமன்றப் பங்களிப்பு மிகவும் அவசியம். மேற்கண்ட பாதிப்புகள் குறித்து அவர்களாலேயே அவர்களுக்கான தீர்வு கண்டு சட்டம் இயற்ற முடியும். சரிவிகித உணவு எப்படி உடலுக்கு நல்லதோ, அதைப்போல சரிவிகித நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை உலகுக்கு நல்லது. அதற்கேற்ற அரசியல் சூழலையும் விழிப்புணர்வையும் நாம்தான் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

- நா.உமாசங்கர், சந்தூர்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு