கர்ப்பகாலத்தின்போதும், பிரசவத்துக்குப் பிறகும் பெண்களின் உடலானது பலவித மாற்றங்களுக்கு உள்ளாகும். தாய்மையின் காரணமாக மார்பகங்கள் பெரிதாகும். ஆனால் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட அரிய உடல்நிலையால் மார்பகம் 11 கிலோ வரை வளர்ந்துள்ளது.

ஹரியானா ஃபரிதாபாத் மாவட்டத்தில் வசித்த 23 வயது பெண்ணிற்கு, முந்தைய ஆண்டுகளில் மூன்று கருக்கலைப்புகள் நிகழ்ந்துள்ளன. இவரது மூன்றாவது கர்ப்பத்தின்போது, `பைலேட்ரல் கெஸ்டேஷனல் ஜிகாண்டோமாஸ்டியா (bilateral gestational gigantomastia) என்ற அரிய உடல்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதன் விளைவாக 22 வாரங்களிலேயே இவருக்குக் கரு கலைந்துள்ளது.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தக் காலகட்டத்தில் இவருக்கு மார்பகம் விரிவடையத் தொடங்கி இருக்கிறது. முழங்காலைத் தொடுமளவிற்கு மார்பங்கள் வளர்ந்துள்ளன. கடந்த 7 மாதங்களாக இந்தப் பிரச்னையால் அவதிப்பட்டவர், ஐந்து நிமிடங்கள் கூட எழுந்து நிற்க முடியாத நிலையில், மருத்துவமனைக்குச் சென்றார்.
மருத்துவர்கள் 11 கிலோ எடைகொண்ட அவரது மார்பகங்களை குறைக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். 10 மணி நேரமாக நடைபெற்ற சிகிச்சையில் மார்பகம், நிப்பிள் அகற்றப்பட்டு ஸ்கின் கிராஃப்ட் வைத்துள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பின் அப்பெண் தேறி வருவதாகவும், அப்பெண்ணால் நடக்க முடிவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

``அறுவை சிகிச்சையின் முடிவுகளால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்போது நான் முன்பு எப்படி இருந்தேனோ அதேபோல் இருக்கிறேன். மீண்டும் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என, தனக்கு சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவமனை மருத்துவர்களுக்கு அப்பெண் நன்றி தெரிவித்துள்ளார்.
அரிய உடல்நிலையால் பாதிக்கப்பட்டு பெண்ணுக்கு 11 கிலோ வரை மார்பகம் வளர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.