Published:Updated:

`சீவிய பென்சில் குப்பை முதல் மிஸ் யூ கடிதங்கள்வரை!' - டியூஷன் மிஸ் பகிரும் மாணவ அன்பு #MyVikatan

Kids
Kids ( Hariharan.T )

சித்தியின் மகள் அம்பாய் பத்தாம் வகுப்புக் கணக்கில் ஏதோ சந்தேகம் என்று ஒரு நாள் வீட்டிற்கு வந்தாள்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ரப்பர் தூள், கிழித்துக் கசக்கி எறிந்த காகிதங்கள், சீவிய பென்சில் குப்பைகள், தவறவிட்டுப்போன பேனா, சுவரில் தெளித்திருந்த மை..!

எப்படி இரண்டு மணி நேரத்திற்குள் இத்தனை குப்பைகளைப் போட்டுச் செல்கிறார்களோ என் மாணவச் செல்வங்கள்.

சுவரில் இருந்த மையை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். அம்மா வந்து பார்ப்பதற்குள் இதையெல்லாம் சரிசெய்து விட வேண்டும். ஆனால் அவற்றை அழிக்கவோ மனம் வரவில்லை. என் பள்ளி நாள்களை நினைவூட்டுவதாய் இருந்தன, அவர்கள் விட்டுச் சென்ற இருப்பு.

Representational Image
Representational Image
Pixabay

"இன்னிக்கும் உன் டியூசன் பசங்க இவ்ளோ குப்பை போட்டு வெச்சிருக்காங்களா..? சீக்கிரம் ஹாலை பெருக்கு, தோசை ஊத்தறேன் சாப்பிடலாம்." - எதிர்பார்த்ததைப்போல் அம்மா கூறினார்.

சித்தியின் மகள் அம்பாய் பத்தாம் வகுப்புக் கணக்கில் ஏதோ சந்தேகம் என்று ஒருநாள் வீட்டிற்கு வந்தாள். பின் காலாண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்ததாகவும், கற்றுக்கொண்ட கணக்குகள் கை கொடுத்ததாகவும் கூறினாள். என்னுள் கொள்ளை இன்பம் தோன்றியது. கல்வியைப் பரிமாறும் சுகம் அது.

பின்னர் பக்கத்து வீட்டுப் பெண், அவளின் தோழி, சித்தி மகன் என இவர்களின் வருகையால் மாலைப் பொழுதில் டியூஷன் ஆக மாறியது என் இல்லம்.

அம்பாய் தவிர மற்றவர்கள் ஆறு, எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்புப் படித்து வந்தனர். அனைத்துப் பாடங்களிலும் அவர்களுக்கு உள்ள சந்தேகங்களைத் தீர்த்து வைத்து அவர்களைப் படிக்க வைக்க வேண்டும்.

அம்பாய் பொதுத்தேர்வு எழுதப் போவதால் அவளை ஊக்குவிக்கும் விதமாக அவ்வப்போது கதைகள் கூறுவேன். மற்றவர்களுக்கும் எப்பொழுதாவது குட்டிக் கதைகள். அவர்களுக்குக் கூறும்போது என் மனமும் என்னை நெறிப்படுத்தும்.

கறுப்பு மை பேனாவிலோ, கையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பேனாவிலோ அவர்கள் எழுதுவதைத் திருத்திக் கொடுப்பேன். சிவப்பு மையில் திருத்தி 'நன்று' போட வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டதால் முதன்முதலில் சிவப்பு மை பேனா வாங்கினேன் அவர்களுக்காக.

எனக்குப் பிடிக்குமே என்று கலாக்காய், மாங்காயை எல்லாம் அவர்கள் வீட்டில் இருந்து எடுத்து வர, அப்பாவுக்குத் தெரியாமல் உப்பு மற்றும் மிளகாய்த்தூளை அதில் கலந்து பகிர்ந்து உண்போம். எங்கள் வீட்டில் பலகாரங்கள் செய்தால் இவர்கள் விருந்தாளிகள் ஆவார்கள்.

Kids
Kids
Hariharan.T

எப்போதாவது சின்னச் சின்ன தேர்வுகள் வைப்பேன். தினமும் என்ன படிக்கிறார்களோ அதில் இருந்து கேள்விகள் கேட்பேன். அதுவரை நன்றாக இருப்பவர்களுக்கு நான் கேள்வி கேட்கப் போகிறேன் என்று தெரிந்ததும் தலை சுற்றும், தண்ணீர் தாகம் எடுக்கும்... ஏதாவது ஒரு காரணம் கிடைத்துவிடும். 'நாளைக்குச் சொல்கிறேன்' என்பார்கள் சேட்டைகாரர்கள்.

பம்புசெட்டுக் குளியல்; மரத்தடி சோறு! - கிராமத்து இளைஞரின் தற்சார்பு வாழ்வியல் நினைவுகள் #MyVikatan

ப்ரீத்திக்கு தேர்வுக்கு முந்தைய நாள் பயம் தொற்றிவிடும்; தைரியம் கூறி அனுப்ப வேண்டும். தேவேஷ் எதற்கும் அலட்டிக்கொள்ள மாட்டான்; அவனுக்குப் பொறுப்பை வரவைக்க வேண்டும். திவ்யாவுக்குப் படிப்பின் மேல் அத்துணை ஆர்வம், அவளே படித்துக்கொள்வாள். காயத்ரி சொல்பேச்சு கேப்பாள். ஹரிக்கு திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும். சந்தியா பிறர் படிப்பதை பார்த்தால் தானும் படிப்பாள்.

இவ்வொருவரையும் பிரித்து அறிந்து கற்பிக்கும் முறையையும் இவர்கள்தான் கற்பித்தார்கள்.

நான் இங்கு அங்கு நகரக் கூடாது... உடனே பேச ஆரம்பித்துவிடுவார்கள். மீண்டும் என்னைப் பார்த்ததும் அமைதி ஆகிவிடுவார்கள். என்னதான் பேசுகிறார்களோ என்று கோபம் வந்தாலும், 'நாள் முழுக்கப் பள்ளியில் இருந்துவிட்டு இங்கு வருகிறார்கள், இங்கும் படிக்கச் சொல்லி விடாமல் தொல்லை செய்கிறோமே' எனத் தோன்றும். அதற்கு ஏற்றார்போல் நேரம் கொடுத்துப் படிக்க வைக்க வேண்டும்.

Kids
Kids
Hariharan.T

கோபத்தைக் கொட்டிய கணங்களும் உண்டு.

"ரெண்டு நாளா படிக்கிற... இப்போ கேட்டா மறந்துட்டேன்னு சொல்ற. எத்தனை முறை சொல்லிருக்கேன் தெளிவா படிக்கணும்னு. மேலோட்டமா படிச்சா இப்படித்தான். அவ்ளோ விளையாட்டுத்தனம். இன்னிக்குப் படிச்சு சொன்னாதான் வீட்டுக்கு விடுவேன்" - அவனிடம் குரலை உயர்த்திக் கூறினேன். அழத் தொடங்கிவிட்டான் ஹரி.

அவன் அழுகிறான் என்று தெரிந்ததும் சமையலறையில் இருந்து அம்மா ஓடி வந்தார்கள்.

"இப்போ படிக்கலைன்னா என்ன? பொறுமையா படிக்கட்டுமே. அதுக்குப் போய் அழற அளவுக்கு திட்டுவியா? எதுக்குக் கோவப்படுற?" - அனைவர் முன்னிலும் அம்மா என்னிடம் கத்தினார்.

வழக்கமாய் அம்மாவை எதிர்த்து பேசும் நான் அப்பொழுது எதுவும் பேசவில்லை.

ஹரியின் அழுகை நின்றுவிட்டது. படிக்கத் தேவையில்லை வீட்டிற்கு கிளம்பலாம் என்று நினைத்து ஆறுதல் அடைந்தானோ, நான் திட்டு வாங்கியதில் ஆறுதல் அடைந்தானோ!

எனினும் தேவையான நேரங்களில் கண்டிப்பதை நிறுத்தவில்லை.

இப்படி அவர்களோடு நானும் கற்றதோடு அவர்களின் சின்னச் சின்ன சேட்டைகளை ரசித்து, அவர்களோடு சிரித்து, அவர்களைக் கண்டு வியந்து, என் கோபங்களைக் காண்பித்து... ஒரு வருடத்தில் அவர்கள் எல்லாம் எங்கள் வீட்டுப் பிள்ளைகளாக ஒன்றிப் போனார்கள்.

வெற்றிகரமாக ஒரு வருடம் முடிந்தது. இறுதி நாள் டியூஷனில் பார்ட்டி வைத்துக் கொண்டாட வேண்டும் என்று ஒரே அடம்.

அவரவர் வீட்டில் இருந்து அவர்களால் முடிந்ததைக் கொண்டு வந்தனர். எங்கள் வீட்டில் சப்பாத்தி தயாராகிக் கொண்டிருந்தது.

கொண்டாட்டம் ஆரம்பித்த வேளையில் என்னிடம் அவர்கள் கைப்பட எழுதிய கடிதங்களைக் கொடுத்தனர்.

சுட்டிகளின் கடிதங்கள்..
சுட்டிகளின் கடிதங்கள்..

இணைய தலைமுறையினரிடம் இருந்து இப்படி ஒரு பரிசா!! ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஒரு சேர பிரித்துப் படித்தேன். கைகளாலே ஆங்காங்கே பொம்மைகள் வரைந்து அலங்காரங்கள் செய்து காகிதத்தின் நடுவில் கடிதம் எழுதி இருந்தனர்.

நெகிழ்ச்சியான பலவற்றை பகிர்ந்து இருந்தனர். என் கோபம் நியாயமானது எனவும் வருங்காலத்தில் திருத்திக் கொள்வோம் எனவும் எழுதியிருந்தனர். என்னால்தான் கணிதம் படிக்க ஆர்வம் வந்தது என்றிருந்தனர்.

என் ஆர்வம் அவர்களுக்கும் கடத்தப்பட்டது திருப்தியை தந்தது.

படித்து முடித்ததும் என்ன சொல்லப் போகிறேன் என்று கேட்க அனைவரும் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க, மெல்லியதாய் சிரித்துவிட்டுக் கூறினேன்... "தமிழ்ல எழுத்துப் பிழை இல்லாம எழுதப் பழகணும்னு சொன்னேன்ல..? எவ்ளோ எழுத வெச்சிருப்பேன்..? இன்னும் பிழை வருது. இங்கிலிஷ்லயும் தப்பு இருக்கு. வேற நோட் கொடுங்க... திருத்தி எழுதித் தர்றேன்."

வாயடைத்து நின்றுவிட்டனர் என் மாணவக் கண்மணிகள்.

-செ.ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு