Published:Updated:

`அங்க என்னமோ நிக்குது..!’ - தோழியின் பேய் பயத்தில் எடுத்த ஓட்டம் #MyVikatan

முதன்முறையாக விடுதியில் தோழிகளோடு தங்கியதில் மனம் மகிழ்ச்சியில் இருந்தது. தோழிகளோடு உறங்கப்போகிறோம் என்ற சந்தோசம் வேறு...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

விரல் இடுக்கில் தோழிகளின் ஸ்பரிசத்துடன் சூரியன் உதித்தது. பொள்ளாச்சிக் காற்று பேருந்தின் ஜன்னல் வழியே வந்து என்னை வருடியது.

பொள்ளாச்சியில் ஒரு கல்லூரிக்கு, இரண்டு நாள்கள் வொர்க் ஷாப்புக்காக , எட்டு தோழிகளுடன் சென்று இறங்கினேன்.
கல்லூரியில் எங்களுக்கென ஹாஸ்டல் ரூம் தயார் செய்திருந்தனர். காலையில் பயிலரங்கில் பயின்றுவிட்டு மாலை நேரத்தில் கல்லூரி விடுதிக்குத் திரும்பினோம். விடுதி சூழல் எனக்குப் புதிது. பள்ளியில் படிக்கும்போதும் சரி, கல்லூரியில் படிக்கும்போதும் சரி, வீட்டில் இருந்துதான் சென்று வருவேன். முதன்முறையாக விடுதியில் தோழிகளோடு தங்கியதில் மனம் மகிழ்ச்சியில் இருந்தது. தோழிகளோடு உறங்கப்போகிறோம் என்ற சந்தோசம் வேறு.


``சப்பாத்தி வேணாம் ஒத்துக்காதுனு சொல்லிட்டு... 8 பிரட் எடுத்து சாப்டுட்டா" - ரம்யாவைப் பார்த்து நந்தினி கூறினாள்.

"ஹாஹா... பசிக்குதுடி! இரு இரு... எட்டுலாம் சாப்டிருக்க மாட்டேனே..." - சிரித்துக்கொண்டே ரம்யா கூறினாள்.

Representational Image
Representational Image

"ஏன்டி அவள கிண்டல் பண்ற..? நீ சாப்பிடு ரம்யா" என்றேன்.
"ரம்யாவை சொல்லிட்டு இவ பாரு 4 சப்பாத்தி சாப்ட்டுட்டா" - நந்தினியைப் பார்த்து ப்ரியா கூறினாள்.

"நீ எண்ணிகிட்டே இரு... நான் போய் சாப்ட்றேன்" என்று கூறிவிட்டு மேலும் ஒரு சப்பாத்தியை எடுத்து வந்தாள் நந்தினி.

நாங்கள் உணவை விரும்பிச் சாப்பிட்டோம். இரண்டு நாள்கள் மட்டுமே விடுதி சாப்பாடு என்பதால், எங்களுக்கு அது ருசிக்கிறதோ என்னவோ!

அங்கே தங்கியிருந்த அந்தக் கல்லூரி மாணவிகள், வெகு இயல்பாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வேகமாக வருகிறார்கள். தட்டில் போடுகிறார்கள். 10 நிமிடத்திற்குள் சாப்பிட்டுவிட்டு மீதியை குப்பைத் தொட்டியில் கொட்டிவிட்டுச் செல்கிறார்கள். வெகு சிலரே தோழிகளோடு பேசிக்கொண்டு பொறுமையாகச் சாப்பிடுகிறார்கள்.

நாங்கள் உண்டு முடித்துவிட்டு, விடுதி மைதானத்தில் சில நிமிடங்கள் நடந்துவிட்டு, எங்கள் அறைக்குச் சென்றோம்.
நான்கு மாடிக் கட்டடத்தில் நான்காவது மாடியில் எங்கள் அறை. அரட்டை சத்தமும் சிரிப்பொலியும் காற்றில் வெடித்துக் கொண்டிருந்தது. மணி 10 ஆகியும் ஒருவருக்கும் உறக்கம் வரவில்லை.

"நாம கொஞ்ச நேரம் வெளியில நிக்கலாமா..? காத்தோட்டமா இருக்கும்..." என்றாள் ப்ரியா. "சரி வா போலாம்" என்றோம் நானும் நந்தினியும்... தோழிகளோடு இருளை உணரப்போகும் ஆசையில்.

Representational Image
Representational Image

"வேணாம்டி ஒழுங்கா ரூம் உள்ளேயே இருங்க" என்று தடுத்தாள் ரம்யா. "இங்கதான் ரம்யா... கீழ விடுதி மைதானத்தில பாரு... பொண்ணுங்க நடந்துட்டுதான் இருக்காங்க" என்றாள் பிரியங்கா.
எனினும் ரம்யா வரவில்லை. நான், ப்ரியா, நந்தினி மற்றும் பிரியங்கா நால்வரும் எங்கள் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தோம்.

அவ்வப்போது மரங்கள் அசையும் சத்தத்தை அதன் காற்றோடு சேர்த்து நான் உள்வாங்கிக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் அங்கேயே நின்று மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தோம்.

"கீழ போலாமா... ஒரு 5 மினிட்ஸ்ல வந்து படுத்துக்கலாம்" என்றாள் ப்ரியா. "வேணாம்டி... எல்லாரும் ரூம்க்குப் போய்ட்டாங்கபோல. கீழ யாரும் இல்லை. இங்கேயே கொஞ்ச நேரம் நின்னுட்டு உள்ள போலாம், அது மட்டுமல்லாம நாலு மாடி இறங்கனும்" என்றேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"லிஃப்ட் இருக்குல்ல அதுல போலாம்டி. போய் ரெண்டு போட்டோஸ் எடுத்துட்டு வந்துடலாம்" என்றாள் நந்தினி. நால்வரும் மின்தூக்கிக்குள் நுழைந்தோம்.

"இங்க ஒரு போட்டோ எடுக்கலாம்டி" எனச் சொல்லிக்கொண்டே நந்தினி தனது கைபேசியில் எடுக்கத் தொடங்கினாள்.

"ஆஅஅ... அங்க என்னமோ நிக்குது... பேய்... கதவைத் திறங்க... பேய்..." - கைகள் கொண்டு தன் கண்களை மூடிக்கொண்டு பிரியங்கா அலறினாள்.


எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

"நிறுத்துங்காஆஆ..." - அதீத பதற்றத்தில் கத்தினாள்.


லிஃப்ட் நின்றது. பிரியங்கா வேக வேகமாக வெளியே ஓடினாள். அவள் பின்னால் யாரோ துரத்தி வருவதுபோல் ஓடினாள்.

நாங்களும் அவள் பின்னால் ஓடினோம். எங்களையும் யாரோ துரத்தி வருவதுபோல் இரண்டு, மூன்று படிக்கட்டுகள் சேர்த்துத் தாவினோம், ஒன்றும் புரியாமல் அவள் பின்னால் ஓடினோம்.


இரண்டு தளங்கள் மேல் ஏறியதில் எங்கள் அறை வந்தது. எனில், லிஃப்ட் நின்றது இரண்டாம் தளத்தில் என்று புரிந்துகொண்டோம்.


நான்காவது மாடியில் இருந்த எங்கள் அறைக்குள் ஓடினாள் பிரியங்கா. நாங்களும் உள்ளே சென்றோம். கதவைத் தாழிட்டாள் நந்தினி.


"என்னாச்சு டி..?" - ப்ரியா தொடங்கினாள். பிரியங்கா அழ ஆரம்பித்தாள். "லிஃப்ட்குள்ள யாரோ முடிய விரிச்சி போட்டு திரும்பி நின்னுட்டு இருந்தாங்க... நான் பார்த்தேன்" - தேம்பிக்கொண்டே கூறினாள்.

Representational Image
Representational Image

"அதெல்லாம் ஒண்ணும் இருக்காதுடி" என்றேன் பயத்தை உள்ளே மறைத்துக்கொண்டு.

"நான் வீட்டுக்குப் போறேன்... இப்போவே கிளம்பறேன்" - நந்தினியும் அழத் தொடங்கினாள்.

"இதுக்குதான் வேணாம்னு சொன்னேன். என் பேச்சை கேட்டீங்களா?" - ரம்யா திட்டினாள்.

"ஐயோ ரம்யா... அதெல்லாம் ஒண்ணும் இருக்காது..." - ப்ரியாவும் என்னைப்போல் பயத்தை உள்ளே வைத்துக்கொண்டு நிலைமையைச் சமாளிக்க முயன்றாள்.

"என் கண்ணுக்குத் தெரிஞ்சது" - பிரியங்கா புலம்பிக் கொண்டேயிருந்தாள்.

"நம்ம ரிஃப்லெக்ஷன் லிஃப்ட்ல தெரியும்ல... அதைப் பாத்து பயந்துருப்ப பிரியங்கா..." என்றேன். அதுதான் உண்மையும்கூட.

"முடி தெரிஞ்சது... அதெல்லாம் எப்படி?" - பிரியங்கா விடுவதாக இல்லை.

"என் முடியா இருக்கும்டி. நான்தான் ஓரமா இருந்தேன். போன்ல வேற ஃபிளாஷ் போட்ருந்தோம்..." என்றாள் ப்ரியா.

"அந்த ஃபோன் வெளிச்சம், நம்ம பிம்பம், நம்மளோட முடி... இதெல்லாம் பாத்து பயந்துட்ட. ஒண்ணும் இல்ல. தூங்கு... நாங்க எல்லாம் இருக்கோம்" - நானும் அதையே தெளிவாக மீண்டும் மீண்டும் கூறினேன்.

ஒரு வழியாக அவள் சற்று அமைதி அடைந்தாள்.

மேலும், நான்கு தோழிகள், வேறு அறைகளில் தங்கியிருந்தார்கள். அவர்களையும் எங்கள் அறைக்கு அழைத்துவந்து, கட்டில்களை விட்டு விட்டு, ஒன்பது பேரும் ஒரே அறையில் கீழே கிடைத்த இடத்தில் நெருங்கிப் படுத்துக்கொண்டோம்.

Representational Image
Representational Image
tam wai on Unsplash

"பேயைப் பார்த்தேன்னு சொன்னவளே அமைதியா படுத்துட்டா. நீயும் ஒழுங்கா படு" - நந்தினியைப் பார்த்து ப்ரியா கூறினாள்.

ஓரத்தில் படுத்தால் பேய் அவளைப் பிடித்துச் சென்று விடுவதுபோல், என்னையும் ரம்யாவையும் நகரச் சொல்லிவிட்டு எங்களுக்கு நடுவே படுத்தாள்.

உண்மையில் அங்கு ஒன்றுமே இல்லை. என்றாலும், அடுத்த நாள் காலையில் லிஃப்ட்டில் யாரும் ஏறாமல் படியிலேயே இறங்கிச் சென்றது வேறு கதை. மறுநாள் வகுப்புகள் முடிந்து சீக்கிரமே ஊருக்குக் கிளம்பினோம். பாதுகாப்பாக வந்துவிட்டோம். இதுவே யதார்த்தம்.

என் தைரியத்தைப் பார்த்து என் மூளை என்னைப் பாராட்டியது.

மூளை அசந்த நேரம் பார்த்து என் மனம் என்னிடம் கேட்டது... 'அந்த லிஃப்ட்குள்ள அந்நேரம் பேய் ஏன் வந்துருக்கும்?!'

- செ.ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு