Published:Updated:

வேலையின் முதல் நாள்..! - பெண்ணின் அனுபவப் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

புது முகங்களை புது சூழலை புது வாழ்க்கை முறையை எதிர்கொள்ளப் போகும் பயம்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"புதுசா புடவை கட்ட பழகற... நல்லா பின் குத்திக்கோ... வீட்ல இருக்கப்ப கட்டி கட்டிப் பழகு."

"சரிம்மா."

"கூட வேலை செய்யப் போற ஆம்பளைங்க கிட்ட பார்த்து பழகு."

"சரிம்மா."

"பசங்க சொல்லிக் குடுக்க விடாம கிண்டல் பண்ணா சொல்லு... என்னனு உடனே பாத்துக்கலாம்."

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ ஒண்ணும் கவலைப்படாதமா" என்று கூறி அம்மாவை தைரியப்படுத்தினாலும் உள்ளுக்குள் பதற்றம் இருக்கத்தான் செய்தது.

Representational Image
Representational Image
Rowan Chestnut on Unsplash

புது முகங்களை புதுச் சூழலை புது வாழ்க்கை முறையை எதிர்கொள்ளப்போகும் பயம்.

வங்கியில் வேலை வாங்க வேண்டும் என்று லட்சியம் இன்னும் அழியாமல் என்னுள் உயிரோடு இருந்தாலும், வீட்டுச் சூழல் காரணமாகவும், படிப்பதைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசையிலும் வேறு வேலைக்குச் சில நாள்கள் செல்ல முடிவெடுத்தேன்.

பார்ட் டைமில் இன்ஸ்டிடியூட்டில் ரீசனிங் (Logical Reasoning) வகுப்புகளை எடுத்தேன். பின் கல்லூரி ஒன்றில் பயிற்சியாளராகச் சேர விண்ணப்பித்தேன். இன்டர்வியூ மற்றும் டெமோ கிளாஸுக்குப் பிறகு வேலை கிடைத்தது.

அம்மாவுக்குச் சம்பளத்தில் பெரிய திருப்தி இல்லை என்றாலும் ``என் பொண்ணு காலேஜ்ல மிஸ்ஸா போகப் போற" என்று தெரிந்தவர்களிடம் பெருமையாகக் கூறினார்.

இன்று வேலையின் முதல் நாள்...

அம்மாவுக்கு எழுந்தது முதல் வாய் ஒட்டவே இல்லை. அறிவுரைகளாய் கூறிக்கொண்டிருந்தார்.

அப்பா வண்டியில் அழைத்துச் சென்று கல்லூரி வாசலில் இறக்கிவிட்டுச் சென்றார். அந்நிய உணர்வோடு உள்ளே சென்றேன்.

Representational Image
Representational Image
Unsplash

புதுவித அனுபவம் கிட்டப் போகிறது என்கிற ஆர்வம், கல்லூரியில் மாணவர்களோடு பயணிக்கப்போகிறோம் என்ற புத்துணர்ச்சி, வேலை பார்க்கும் சூழல் எப்படி அமையுமோ என்ற பதற்றம் அனைத்தும் ஒன்று சேர இருந்த உணர்வை எனக்குள்ளே ஒளித்து வைத்து விட்டு, வெறுமையாக வைத்துக்கொண்டேன் முகத்தை.

போனதும் சர்டிபிகேட்களை சமர்ப்பித்துவிட்டு, இன்னும் சில ஃபார்மாலிட்டிஸ்களை (formalities) முடித்துவிட்டு என் துறைக்கான அறைக்குச் சென்றேன்.

என்னோடு சேர்ந்து இன்னொரு பயிற்சியாளரும் அன்றே சேர்ந்தார். அவளுக்கும் இது முதல் நாள், அவளும் என் வயதுடைய பெண் என்பதாலும் சில நிமிடங்களிலே ஒட்டிக்கொண்டோம். வாங்க, போங்க என்றிருந்த உறவு சில மணி நேரத்தில் லக்ஷ்மி என்று அவள் பெயர் சொல்லி அழைக்கும் உறவானது.

இருவருக்கும் அன்றைய நாளின் வேலை பிரித்து அளிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்துக்குப் பிறகே கல்லூரி திறக்க இருப்பதால் எங்களுக்கு டைம் டேபிள் போடும் வேலையும் சிலபசை (syllabus) அலசும் வேலை மட்டுமே இப்போது தரப் பட்டது.

இயல்பாக நான் உட்காரவில்லை. புது இடத்தின் நடுக்கம் உள்ளது என்பதை யாரும் கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லை. அத்தனை நேர்த்தியாக மறைத்துவிட்டேன்.

வேலையையும் கவனத்தோடு செய்தேன். பிழை ஏதும் ஏற்படக் கூடாது என்ற சிரத்தையோடு.

"ரெண்டு பேரும் லஞ்ச் கொண்டு வந்துருக்கிங்கல?"

உணவு வேளையில் என்னிடமும் லக்ஷ்மியிடமும் துறைத் தலைவர் கேட்டார்.

"இல்லை" என்றோம் ஒரே ஓசையில்.

"நீங்க என்ன ஸ்கூல்ல எல்.கே.ஜியா ஜாயின் பண்ணிருக்கிங்க.. அரை மதியானம்தான் ஸ்கூல். மதியம் வீட்டுக்குப் போகலாம்னு நினைக்க..."

அவர் அப்படி கூறியதும் நான் வாய் விட்டு சிரித்துவிட்டேன். அநேகமாக அதுதான் அன்றைய என் முதல் சிரிப்பாக இருந்திருக்கும்.

Representational Image
Representational Image
Pixabay

எங்களுக்கு உணவு வாங்கி வந்து கொடுத்தார்கள்.

"எங்க கூட சாப்பிட்டாலும் சரி... இல்லை உங்களுக்கு பிரைவசி வேணும்னா. நீங்க தனியா உட்கார்துகிட்டா கூட நோ ப்ரோப்ளம். "

நானும் லக்ஷ்மியும் அவர்களோடு இணைந்தே சாப்பிட்டோம்.

"எங்களோட இனி சாப்பிடணும்னா தினம் நல்லா சாப்பிட கொண்டு வரணும்... நாங்க நல்லா சாப்பிடுவோம். இதுல கூச்சம்லாம் பட மாட்டோம்."

அவர்களின் வார்த்தைகள் மெல்ல மெல்ல என் மனதுக்குள் அவர்களை நெருக்கமாக்கியது.

வேலை செய்ய தொடங்கினோம்... அவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள் என்பதை ரகசியமாகக் கற்றுக்கொண்டிருந்தேன்.

"மெக்கானிக்கல் டேட்டா கேட்டனே எங்க?" துறைத் தலைவர்.

"கிணறு வெட்டிடேன்... நீங்க அதைப் பார்த்துட்டிங்க... அந்த ரசீது என்கிட்ட இருக்கு" சிரித்துக்கொண்டே கூறினாலும் வேலையும் ஒருபுறம் நடந்துகொண்டுதான் இருந்தது.

ஓரளவுக்கு சூழலையும் மனிதர்களையும் அறிந்தேன். இங்கே யாரைக் கண்டும் தேவையற்ற பயம் கொள்ள தேவையில்லை. கொடுக்கும் வேலையைச் சரியாகச் செய்தால் போதும்.

சரியாக 5 மணிக்கு கிளம்பினோம். என் மேசையின் தூசியைக் கை முட்டியிலும், அந்த அறையின் வாசத்தை என் சேலையிலும், இது என் கல்லூரி என்ற உரிமையை மனதிலும் ஒட்டிக்கொண்டு வீடு வந்தேன்.

- செ.ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு