Published:Updated:

மீன் திருட்டும் மதிப்பிற்குரிய மாடார் அவர்களும்…! - பெண் சொல்லும் சுவாரஸ்ய சம்பவம் #MyVikatan

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மாடார் அவர்கள் இப்பொழுது எழுந்து நடந்து கொண்டும், வாலை ஆட்டிக் கொண்டும் இருந்தார். அது என்னவோ என்னை பார்த்து "ஆடிய ஆட்டமென்ன.." என்று நக்கலாக கேட்பது போல் தோன்றியது...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அன்றாடம் நடக்கும் விஷயங்களை அப்படியே கடந்து சென்று கொண்டிருக்கும் நமக்கு ஒரு ரீவைண்ட் பட்டன் கிடைத்து, முந்தைய நாட்களில் நாம் செய்த பிழைகளை மாற்றும் வாய்ப்பு கிடைத்து இருந்தால், இந்நேரம் அது தேய்ந்து உடைந்து போகும் அளவிற்கு நாம் அனைவரும் அதை அழுத்தி இருப்போம் என்பது நிதர்சனமான உண்மை.

மீன் குழம்பு
மீன் குழம்பு

எனக்கு எட்டாவது மாதம். என் தேவதை இந்த பூமிக்கு மோட்சம் கொடுக்கும் நாளை எதிர்நோக்கி நான் காத்திருந்த அற்புதமான நாட்கள். ஆடும் கோழியும் மட்டுமே குழம்பில் கொதிக்கும் எங்கள் கிராமத்தில், என்றாவது தான் மீன் கிடைக்கும். கடைசியாக நான் சென்னையில் தான் மீன் சாப்பிட்ட ஞாபகம். எனது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அன்று வீட்டில் மீன் குழம்பு.

நான், அம்மா, அப்பா மட்டும் இருந்ததால் உள்ளங்கை அளவில் சிறியதாக மூன்று மீன்கள் மட்டும் வாங்கி வந்தார் அப்பா. தலையும் வாலும் குழம்பில் ஊறிக் கொண்டிருந்தன. அப்பாவிற்கு ஒன்று, அம்மாவிற்கு ஒன்று, எனக்கு ஒன்று, வயிற்றில் இருக்கும் குட்டி பாப்பாவிற்கு இரண்டு என பங்கு பிரிக்கப்பட்டது. ஐந்து மீன் துண்டுகளும் மசாலா தடவி வெளியே காய வைக்கப்பட்டது. அம்மா என்றும் தனிக்கட்சி. நானும் அப்பாவும் கூட்டணி கட்சி . சமயத்திற்குத் தகுந்தாற்போல் பல்டி அடிப்போர் சங்கம்.

மீன் வறுவலில் அம்மாவிற்கு சுத்தமாக உடன்பாடு இல்ல. அதுவும் நாங்கள் அதை மசாலா தடவி வெளியே காய வைப்பதற்குள், "அங்கே வைக்காதே... இங்கே வைக்காதே... மண் அடிக்கும்... காக்கா தூக்கிடும்.. தூசி விழும்.." என பல சொற்பொழிவுகளை கேட்டு விட்டோம்.

அப்பாவும் நானும் போட்டிபோட்டு காவல் காத்துக் கொண்டிருந்தோம். சிறிது மேகமூட்டமான நாள். நான் தட்டை எடுத்து மாடிப்படியில் வைத்தேன். சிறிது நேரத்தில் அப்பா வந்து, வாசலில் இருந்த கல் மீது எடுத்து வைத்தார். மீண்டும் சிறிது நேரம் கழித்து அங்கே தூசி விழும் என்று எடுத்து வீட்டின் தாழ்வாரத்தில் நாற்காலியில் வைத்தோம்.

"அதுக்கெல்லாம் குறைச்சல் இல்ல.. கம்முனு கொண்டு வந்து வீட்டுக்குள்ள வைங்க... குழம்பு வச்சுட்டு அத பாக்கறேன்.." என்றார் அம்மா சமையல் கட்டிலிருந்து.

மீன்
மீன்

"இப்போவே செஞ்சா நல்லா இருக்காது. இன்னும் கொஞ்ச நேரம் ஆகட்டும்.." என்று சொல்லிவிட்டு நாங்கள் விதவிதமாக தாமி எடுக்கத் தொடங்கிவிட்டோம் மீன் தட்டுடன் சேர்ந்து.

நடப்பவை அனைத்தையும் எங்கள் வீட்டின் மிக எதிரில் (வாசலில் இருந்து வெறும் 10 அடி தூரம் மட்டுமே) இருக்கும் மாயவன் கோவிலின், வேப்பமரத்தின் அடியில் படுத்து இருக்கும் மாடார் அவர்கள் (சிந்து மாடு வகை) அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்தார். அவரின் அமைதிக்குப் பின்னால் இருந்த அர்த்தம் எனக்கு அப்போது விளங்கவில்லை. நாங்கள் எங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்பாவின் வேண்டுகோளின்படி, பேத்தி வெளியே வந்தவுடன் அப்பச்சியின் அன்பளிப்பாக இந்த மீன் வறுவல் பற்றி தெரிந்துகொள்வதற்காக காணொளி ஒன்றை பதிவு செய்து கொண்டிருந்தோம். வசனங்களில் திருத்தம் செய்து மீண்டும் மீண்டும் பதிவு செய்து கொண்டிருந்தோம். வெளிச்சம் சரியாக இல்லை என்று வீட்டின் பக்கவாட்டில் இருந்த கல் கட்டின் மீது மீன்தட்டை வைத்து அப்பா அருகில் நின்று பேச, சிறப்பாக காணொளி பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.

"அதெல்லாம் சரி.. குழம்பு வந்து யாராவது டேஸ்ட் பாக்கறீங்களா.. உப்பு சரியா இருக்குதான்னு.."என்று அம்மா அழைத்தார்.

"பொறாமை... இதெல்லாம் பார்த்தா எங்க பேத்திக்கு அம்மாய விட அப்பச்சி ரொம்ப புடிச்சு போயிடுமோன்னு அவளுக்கு ரொம்ப பொறாமை.." என்றார் அப்பா.

மீன் குழம்பு
மீன் குழம்பு

மீன் குழம்பின் உப்பை சரி செய்ய நாங்கள் சென்றோம். ஆராய்ச்சியின் முடிவில் திருத்தங்கள் சில தேவைப்பட்டன. அம்மாவிற்கு அனைத்தையும் எடுத்துச் சொல்லிவிட்டு, அப்பா அம்மாவிடம் வம்பு இழுத்துக்கொண்டு இருந்தார்.

மீன் தட்டை எடுத்துவர வெளியே சென்றார் அப்பா. நான் அலைபேசியை எழுப்பிக்கொண்டு வெளியே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். சில நிமிடம் கழித்து அப்பா அருகில் வந்தார். அமைதியாக நின்றார். நான் புரியாமல் விழித்தேன். மீன் தட்டை நீட்டினார். கிட்டத்தட்ட காலியான தட்டு.

குட்டிப் பாப்பாவின் பங்கு மட்டுமே அதில் இருந்தது. நானும் அப்பாவும் பேய் அறைந்தாற்போல அமைதியாக உட்கார்ந்து விட்டோம்.

"சரி..அடுத்தது எங்க... "என்றவாறு வெளியே வந்த அம்மா, தட்டை பார்த்ததுதான் தாமதம். அப்படியே அங்கே இருந்த மாயவன், அம்மா மீது இறங்கி விட்டார் போலும்.

"படிச்சு படிச்சு சொன்ன... இல்ல கேட்டீங்களா... அப்பனும் மகளும் ஆடுனீங்க... தலைகால் தெரியாம.. இப்ப என்ன வந்துச்சு... காக்காவா… அதுவும் மூணு பீஸ காணம். ரேண்ட வச்சு என்ன பண்றது. எல்லாத்தையும் தண்டம் பண்துக்குனே இருக்கிங்க..." என்று தட்டை பிடுங்கிக் கொண்டு,மீனுக்கு பதில் எங்களை வறுத்து எடுத்து விட்டு சென்றார்.

என்னவொரு ஏமாற்றம். அப்பா தனது பீடிக்கட்டை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டார். நான் அம்மாவின் கீதம் கேட்கும் தொலைவில் அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

cat
cat

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மாடார் அவர்கள் இப்பொழுது எழுந்து நடந்து கொண்டும், வாலை ஆட்டிக் கொண்டும் இருந்தார். அது என்னவோ என்னை பார்த்து "ஆடிய ஆட்டமென்ன.." என்று நக்கலாக கேட்பது போல் தோன்றியது.

மாடர் கட்டப்பட்டிருந்த மொளக்குச்சியின் அருகே பூனையார் படுத்திருந்தார். அவர் பக்கத்து தெரு பூனை. உரிமை கொண்டாட ஆள் இல்லாததால் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அப்போதுதான் நான் அவர்களை கவனித்தேன்.

"மம்மீங்க…(ங்க என்பது மரியாதை நிமித்தம்) வெள்ள பூன செனையா இருக்கா.." என்று அம்மாவிடம் கேட்டேன்.

"அப்படி ஒன்னும் இல்லையே... நேத்து தான பார்த்தேன்.." என்றார் அம்மா.

அடிப்பாவி … பாதகத்தி... மூணு மீன முழுசா முழுங்கிட்டு மெதப்புல படுத்திருக்கிறா... என்றவாரே முறைத்துக் கொண்டு இருந்தேன்.. அப்போது மாடார் அவர்கள் அங்கு வந்து பூனையார் அருகே படுத்துக் கொண்டார். அப்போது அவர்கள் இருவரும் என்னைப் பார்த்த அந்த பார்வை இருக்கிறதே..( பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்தால் அது புரியும்). அடுத்த இரண்டு நிமிடத்தில் அனைத்தும் விளங்கி விட்டது எனக்கு.

Fish
Fish

ஆம்…!!!! அது ஒரு திட்டமிட்ட சதி என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? என்னை கீழ்ப்பாக்கம் செல்ல சொல்லுவீர்கள் அல்லவா?

இதோ எனது தரப்பு விளக்கம். ஒரு நாள் முன்பு - (பிளாஷ்பேக்) :

வழக்கம்போல் அம்மாவும் அப்பாவும் வேலைக்கு சென்றுவிட்டார்கள். வெட்டியாக வீட்டில் இருக்கும் எனக்கு அம்மா ஒரு வேளை சொல்லி விட்டு சென்றார்கள். மிகவும் முக்கியமான வேலை.

மாடார் அவர்களின் சாணியை எடுத்து வைப்பதுதான் அந்த வேலை. முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு வாசல்படி இருந்ததோ இல்லையோ மாடுகள் இருந்தன. குறைந்தபட்சம் தெருவிற்கு ஒன்றாவது இருக்கும். சாணிக்கு பஞ்சமிருக்காது. வாசல்களும் ஜொலித்துக்கொண்டிருக்கும்.

ஆனால் இப்பொழுதெல்லாம் மாடுகளும் காணவில்லை. சாணியும் கிடைப்பதில்லை. 10 அடி தூரத்தில் கோவில் மாடு கட்டப்பட்டு இருந்தாலும், அதன் சாணம் கிடைப்பது என்பது அரும்பாடு ஆகிப் போனது எங்களுக்கு. அதிகாலை 3 மணி முதலே துவங்கி விடுவார்கள் இந்த சாணி வேட்டையை.

" ஊர்ல இருக்கறவளுக எல்லா கரெக்டா வந்து எடுத்றாங்க.. இங்க இருந்துட்டு நமக்குதான் ஒன்னும் கிடைக்க மாட்டேங்குது பொழப்பு.." என்பது அம்மாவின் அங்கலாய்ப்பு.

நாங்கள் பெரும்பாலும் வாசல் தெளிப்பது இல்லை. என்றாவது பந்தயத்தில் முந்தி சாணியை கைப்பற்றி விட்டால் மட்டுமே எங்கள் வாசல் பளபளக்கும்.

கோலம்
கோலம்

இந்த மாபெரும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டு அம்மா வேலைக்கு சென்றுவிட்டார். அதற்காக ஒரு சிறிய குண்டாவில் (பேச்சுவழக்கு) தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு சென்றார். நான் அதற்குள் சாணியை எடுத்து போட்டு வைக்க வேண்டும். அதற்காக வெளியே கட்டில் போட்டு நான் காத்திருந்தேன்.

கோவில் கட்டிய போது கன்று குட்டியாக தானம் வழங்கப்பட்டது தான் இந்த மாடு. இப்போது வளர்ந்து இவ்வளவு பெரிய மாடார் ஆகிவிட்டார். இத்தனை நாட்களில் நான் அவர் பக்கம் சென்றதே இல்லை. அம்மாவும் பக்கத்து வீட்டுக்காரர்களும் அவருக்கு சாப்பிட அவ்வப்போது ஏதாவது கொடுப்பார்கள்.

`சுருக்குமடி வலைன்னா என்னங்க?' - மீன்பிடித்தலும் வலைகளின் வகைகளும் #MyVikatan

எனது நேரம் வீண் போகவில்லை. கோமாடார் விரைவிலேயே அருள் புரிந்து விட்டார். அந்த குதூகலத்தில் நான் வேகமாக தண்ணீருடன் குண்டா எடுத்து சென்று அவர் அருகே வைத்து விட்டு, சாணியை எடுத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அவரோ நீர் வைக்கிறேன் என்று நினைத்துக்கொண்டார் போல. வேகமாக தண்ணீர் குடிக்க வந்தார். தண்ணீரில் அவர் வாய் வைப்பதற்கும், நான் சாணியை எடுத்து உள்ளே போடுவதற்கும் சரியான டைமிங். அடுத்த நொடியே அவர் வாயை எடுத்துக் கொண்டார்.. புஸ் புஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டே தண்ணீருக்காக மூக்கணாங்கயிறு முந்திக் கொண்டு இருந்தார்.

"வேற தண்ணி கொண்டு வர்றேன்.."என்று சொல்லிவிட்டு நான் நான் குண்டா எடுத்துக்கொண்டு வந்து விட்டேன்.

Cow
Cow
Ramesh.K

வீட்டிற்கு வந்ததும் என் அலைபேசி அழைக்க அப்படியே வெகுநேரம் பேசிக் கொண்டிருந்த நான் முற்றிலும் தண்ணீர் பற்றி மறந்துவிட்டேன். பாவம். எனது வருகைக்காக அவர் காத்திருந்து இருப்பார். ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கும்.

…...பிளாஷ்பேக் முடிந்தது

ஒரு குண்டா தண்ணீருக்கு தானே ஆசைப்பட்டார் அவர். அதை கூட கொடுக்கவில்லை நான். அதற்கான பிரதிபலனை தான் அவர் உற்ற தோழியான பூனையாரை அனுப்பி எனக்கு இன்று தந்துவிட்டார்.

இங்கு நடந்தவை எல்லாம் சாதாரணமாக நிகழ்ந்திருக்கலாம். பூனை அதற்கே உரிய இயல்பில் மீன் துண்டுகளை உண்டு இருக்கலாம்… அவர்கள் இருவரும் எப்போதும் போல அந்த வேப்பமரத்தின் நிழலிலே படுத்திருக்கலாம்.. மாடார் ஈ ஓட்டுவதற்காக வாலை ஆட்டிக் கொண்டு எழுந்து நடந்திருக்கலாம். இவை எதேச்சையாக நிகழ்ந்தவை தான்.

ஆனால், நான் பார்க்கும் விதம் தான் இப்போது வேறாக இருக்கிறது. மீன் தூண்டின் இழப்பு இப்போது எனக்கு சரியாகத் தானே தோன்றுகிறது. நமது மனமும் , எண்ணங்களும் எவ்வளவு விசித்திரமானவை…

சிறிது நேரத்திற்கு முன் ஏமாற்றமாக தெரிந்த நிகழ்வு இப்போது ஏன் நியாயமாக தோன்றுகிறது... நான் விதைத்ததை தானே அறுகின்றேன்... இது ஏற்புடையது தானே…

என்னிடம் என் வாழ்விற்கான ரீவைண்ட் பட்டன் இல்லை என்பது உண்மைதான்.. ஆனால் என் வாழ்வின் பார்வர்டு பட்டன் நானே தானே… முடிந்துவிட்ட ஒன்றை சரி செய்ய நினைப்பதை விட இனி செய்வதை நேர்த்தியாக்கிக் கொள்ளலாமே…

Fish
Fish
Manjunath H P on Unsplash

இப்பொழுது புன்னகையுடன் மதிப்பிற்குரிய மாடார் அவர்களின் முன்பு நின்று கொண்டிருக்கிறேன்.. நான் அன்புடன் கொடுத்த தண்ணீரை அவர் பருகிக் கொண்டிருக்கிறார் .

இப்போதும் அவர் வாலை ஆட்டிக்கொண்டு தான் இருக்கிறார் எப்போதும் போல ஈ ஓட்டுவதற்காக கூட இருக்கலாம். ஆனால், எனது பார்வைக்கு அவர் என்னிடம் நட்பு பாராட்டுவது போல் தோன்றுகிறது.

அருகே இருந்த பூனையாருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டேன். எதற்காக என்று கேட்கிறீர்களா? எனது குட்டி பாப்பாவிற்காக பங்கு பிரிக்கப்பட்ட அந்த இரண்டு சிறிய மீன் துண்டுகளை விட்டு வைத்ததற்காக தான்…

மீன் சாப்பிட்டு இருந்தால் கூட இப்படி ஒரு நிம்மதி எனக்கு கிடைத்திருக்காது…

இதேபோல் நான் செய்யும் பாவங்களை எல்லாம் எனக்கே கொடுத்துவிட்டு, எனது புண்ணியங்களை மட்டும் என் தேவதைக்கு வாழ்நாள் பலனாக கொடுக்க பரிசீலிக்குமாறு இந்த பிரபஞ்சத்தை மானசீகமாக வேண்டிக்கொண்டேன்…..!

-ஹேமலதா ரமேஷ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு