Published:Updated:

சென்னையில் வாழ்தலும் பிழைத்தலும்..! - கிராமத்துப் பெண்ணின் வேதனை பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இப்படியான பெருநகரங்களில் இத்தனை நீண்ட நாள்கள் தங்கி இருப்பது இதுவே முதன் முறை. (கடைசியும் கூட!)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

`சென்னை பலரின் கனவாகவும் பலரின் கனவு நிஜமாகும் வழியாகவும், வந்தாரை வாழவைக்கும் வரமாகவும் இருக்கிறது’ என்றெல்லாம் நானும் படித்திருக்கிறேன். ஆனால், சென்னையில் என்னுடைய அனுபவம், இதெற்கெல்லாம் முற்றிலும் முரணானது. இந்த நகரம் எனக்குக் காரிருள் சூழ்ந்து குரல்வளை நெருக்கும் நரகமாகிப்போன கதை இது.

Representational Image
Representational Image
Priscilla Du Preez on Unsplash

ஒரு உடல் நலக்குறைவின் பொருட்டு, மூளையை முற்றிலும் மழுங்கடிக்கும் வீரியமுள்ள மருந்துகள் எடுத்துக்கொள்வதால், வகுப்புக்களுக்குச் செல்ல முடியவில்லை. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாமென்று, ஒரு நீண்ட மருத்துவ விடுப்பில் சென்னை, செம்பரம்பாக்கம் சென்றேன். கணவர் பணியிலிருக்கும் புதிய கிளையின் கட்டுமானப் பணிகள் அங்கு நடப்பதால் அவரிருக்கும் ஒரு அடுக்ககத்தில் தங்கி இருந்தேன்.

இப்படியான பெருநகரங்களில் இத்தனை நீண்ட நாள்கள் தங்கி இருப்பது இதுவே முதன் முறை (கடைசியும் கூட!). திருமணமாகி அபுதாபியில் பல வருடங்கள் இருந்தபோதும், அது அத்தனை உவப்பான வாழ்விடமாக எனக்கு தெரியவில்லைதான். எனினும், தாய்மையிலும் மகன்களை வளர்த்துவதிலும் எப்படியோ அவ்வருடங்களை நான் கடந்துவிட்டிருந்தேன். ஆனால், இப்போது தனியே மகன்களின்றி, சென்னையில் இத்தனை நாள் இருந்தது பெரிய திகில் அனுபவமாகிவிட்டது.

Representational Image
Representational Image
Pixabay

நாங்கள் தங்கியிருந்தது புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் 20 தளங்களுடனான அடுக்ககம். பச்சையே எங்கும் இல்லை. மரக்கன்றுகளை கொண்டு வந்து இப்போதுதான் புதிதாக இறக்கிக்கொண்டிருக்கிறார்கள். என்னவரை அனுப்பிவிட்டு, காலை 8 மணிக்கு கதவைச் சாத்தினால் இரவு 8 மணி வரை கொடுந்தனிமை. காலி பங்களாவில் பேய் நடமாடுவதைப்போல அறையறையாக நடந்துகொண்டிருந்தேன். இரண்டு மூன்று நாள்கள் கழித்துதான், நானே என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்தேன்.

புறப்படுகையில் கொண்டு வந்திருந்த புத்தகங்களில் சில, பால்கனி இருக்கும் எட்டாவது மாடியிலிருந்து வாசிக்க உகந்தவையல்ல என்று சில பக்கங்களிலேயே தெரிந்தது. சுகந்தி சுப்ரமணியனின் பதிவுகளை வாசித்தேன் அவரின் எளிய கவிதைகளையும், நாட்குறிப்புகளையும் சுகந்தி யாரென்று அறியாமல் வாசிப்பவர்களுக்கு பொருளற்றவையாகக் கூட தோன்றியிருக்கும், ஆனால், நான் சுகந்தியை முன்பே அறிந்துகொண்டவளென்பதால் அவரது பதிவுகள் என்னை பெரிதும் தொந்தரவு செய்தன. வாசல் தெளிக்க கோலம்போட என்று பெரிதாக எந்த வேலையும் இல்லை.

Representational Image
Representational Image
Pixabay

புறநகர் குடியிருப்பென்பதால் சென்னையின் விரைவும் பரபரப்பும்கூட இங்கில்லை. எல்லாவற்றையும்விட அங்கு மனிதர்களை அதிகம் பார்க்கவோ பேசவோ முடியவில்லை கதவை திறந்தால் இன்னும் இரண்டு வீடுகளின் கதவுகள். எப்போதாவது கீழே போனாலும், மின்தூக்கியில் துக்கவீட்டைபோல இறுகின முகத்துடன் இருக்கும் சிலர் மட்டுமே. யாரும் யாரையும் பார்த்து பேசுவதோ, புன்னைகைப்பதோ கூட இல்லை. அங்கேயே இருக்கும் சிறிய பூங்காவில், சைக்கிள் ஓட்டிக்கொண்டு துரத்தி ஓடி விளையாடும் சில குழந்தைகள் மட்டுமே. ('கூண்டுப்பறவைகளின் காதலில் பிறந்த குஞ்சுப்பறவைகளுக்கு எப்படி, எதற்கு, சிறகு'-ன்னு வண்ணதாசன் ஒரு கவிதையில் கேட்டிருப்பார். அதை நினச்சுக்கிட்டேன்)

ஒரு குட்டி விநாயகர் கோயில், உள்ளேயே வந்து குழந்தைகளை ஏற்றி இறக்கும் பள்ளி வாகனங்கள், செல்போனில் மூழ்கி இருக்கும் இளைஞர்கள். இங்கிருப்பவர்களுக்கு வெளி உலகமென்பது ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லும் மால்களும் சினிமாவும் உணவகங்களும் மட்டும்தான்போல. பகலிலும் இரவிலுமாய் 40 காவலாட்கள் உள்ளிருக்கும் எதையோ தீவிரமாகக் காவல்காக்கின்றனர்.

Representational Image
Representational Image
Unsplash

பெரிய நூலகம், ஏராளமாய் ஆங்கிலப் புத்தகங்களும், தமிழில் ஒரே ஒரு வைரமுத்துவின் புத்தகமும். வாரமொருமுறை கறிகாய்கள் விற்கும் ஒரு அம்மாவுக்காகப் பெண்கள் கூட்டமாகக் காத்திருக்கிறார்கள் நான்கு முழம் மல்லிகைச்சரத்தைக் கொண்டு வந்து நறுக்கி, ஒரு இணுக்கு 20 ரூபாய் என்று அந்தம்மா விற்கிறார். வாங்கி அங்கேயே தலையில் வைத்துக்கொள்கிறார்கள். ``போன வாரமே மாங்காய் கொண்டு வரேன்னு சொன்னீங்களே என்னாச்சு” என்று வயிறு மேடிட்டிருந்த இளம் பெண்ணொருத்தி கேட்டுக்கொண்டிருந்தாள்.

சென்னையில் இருக்கும் உறவினர்களுடன் ஒரு சினிமா போனோம். 6 பேர் இருக்கும் ஒரு குடும்பம் சென்னையில் சினிமா பார்க்க ஆகும் செலவில், ஊரில் ஒரு குடும்பம் தாராளமாக ஒரு மாதத்தை மகிழ்ச்சியாக கழித்துவிடலாம். அத்தனை செலவுள்ள விஷயம் அது. அதுவும் இடைவேளையில் விற்கும் சோளப்பொறியின் விலையைக் கேட்டு கிராமத்து மனுஷியான எனக்கு கண்ணைக்கட்டியது.

முன்புபோல முகமூடியுடனோ, உடம்பெல்லாம் எண்ணெய்யும் கரியுமாகப் பூசி, இருட்டில் பயந்தும் ஒளிந்தும் கொள்ளையடிக்க வேண்டியதில்லை, உன்னத சீருடையணிந்து, குளிரூட்டப்பட்ட சென்னை மால்களில் சோளப்பொரி விற்றால் போதும் போலிருக்கிறது.

Representational Image
Representational Image
Vikatan Team

ஆட்டோவிலும் இருசக்கர வாகனத்திலும் குடங்களுடன் சனம் அலைகின்றது தண்ணீருக்காக. வயதுக்கு மீறி கொழுந்த குழந்தைகள், எங்கெங்கும் துரித உணவுகள், ஒரு மழைக்கே நாறிப்போகும் தெருக்கள் என்று சென்னைப் பெருநகரின் முகத்தைப் பார்த்து மிரண்டு போனேன். உடல் ஓய்வெடுத்தாலும் உள்ளம் இது எனக்கான இடமல்ல என்று அலறிக்கொண்டே இருந்தது. என்னால் அமைதியாக ஒரு மணி நேரம்கூட சென்னையில் இருக்க முடியவில்லை.

பால்கனியைத் திறந்தால் பரந்து விரிந்து, முற்றிலும் வறண்டிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி இன்னும் மனச்சோர்வையளித்தது. கடுமையான உளச்சோர்வுக்கு உள்ளானேன். பாதி இரவுகளில் அலறிக்கொண்டு விழித்தெழத்தொடங்கினேன். பைத்தியம் பிடித்திருக்கும்... நல்ல வேலை என்னுடன் தமிழ்நதியும் யூமா வாசுகியும், க.சீ.சிவகுமாரும் சில நாள்கள் உடனிருந்தனர். சென்னை நண்பர் ஒருவர் பரிசளித்த புத்தகங்கள் உபாயம் எனப் பிழைத்துக் கொண்டேன்.

Representational Image
Representational Image
Pixabay

நரம்புக்கோளாறு, இன்னும் இங்கிருந்தால் மூளைக்கோளாறாக மாறிவிடும் சாத்தியங்கள் தென்பட்டதால், விடுப்பு முடியும் முன்னரே ரயிலைப்பிடித்து, ஊர் வந்து சேர்ந்தேன். வீட்டின் வெளிக்கதவைத் திறந்ததும் திடுக்கிட்டு தென்னையில் தாவி ஏறிய அணில்கள், புன்னம்பூக்களும் பவளமல்லியுமாய் நிறைந்து கிடந்த ஈர வாசல், குலைதள்ளி இருந்த வாழை எனக் கண்குளிர பார்த்தபின்பே பழைய மனுஷியானேன்.

`எப்பய்யா ஸ்கூல் திறப்பீங்க..!' - அப்பாவின் கதறல்ஸும் சின்ன அட்வைஸும் #MyVikatan

இந்த இரண்டு வார சென்னை வாழ்க்கையில் எதையாவது மீள நினைத்துக்கொள்ள வேண்டும் என்றால் இரண்டு விஷயம்தான் இருக்கிறது. துல்லிய நீலவானை பிரதிபலித்துக்கொண்டு, ஒளியலைகளுடன் அங்கிருந்த மாபெரும் நீச்சல்குளமும், மெட்ரோவில் பயணிக்கையில் என்னை நோக்கி சிரித்தபடி கையை நீட்டிய ஒரு குழந்தையும். பிழைப்புக்காக சென்னை போவது, என்பதை நெடுங்காலம் முன்பிருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறேன். சரிதான், சென்னையில் வாழ்தலே இல்லை வெறும் பிழைத்தல்தான்.

- லோகமாதேவி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு