
சாவு வீட்டில் கசியும் மரண வாசனை கற்பனையில் எனக்கு வீசியது. கைகள் நடுங்க கண்கள் கலங்க முழுக் கதையையும் படித்து முடித்தேன்...
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
துக்கவீட்டில் மட்டும் மௌனம் எப்படித்தான் இப்படிக் கெட்டிப்பட்டுப் போகுமோ? மலர்களின் வாசத்திலிருந்து எப்படித்தான் ஒரு மரணம் கசியுமோ? முகத்தில் வரவழைத்துக்கொண்ட செயற்கைச் சோகம்கூட எப்படித்தான் மெல்ல மெல்ல இயற்கைச் சோகமாய் முதிருமோ? எல்லாம் இழவு வீட்டின் ரசவாதம்.
சாவு வீட்டில் கசியும் மரண வாசனை கற்பனையில் எனக்கு வீசியது. கைகள் நடுங்க கண்கள் கலங்க முழுக் கதையையும் படித்து முடித்தேன்.
ஆம். வைரமுத்து எழுதிய மனிதர்களால் ஆனது வாழ்வு சிறுகதையில் மரியாவின் இழவு வீட்டில் நடக்கும் காட்சிளை இப்படி விவரித்து இருப்பார் கவிஞர்.
ஓ... இது வெறும் கதை தானா! ஒரு சிறுகதைக்கா இந்த உணர்ச்சிகள் என்றால்...
கதைகளால் ஆனதுதான் மனித இனம். மனித இனத்தால் ஆனதுதான் கதை.

சிறு வயதில் பாட்டி வடை சுட்ட கதை அதைக் காக்கா திருடிய கதைதான் அநேகமாக நாம் அனைவரும் முதன்முதலாய் கேட்ட கதையாய் இருக்கும்.
அங்கு தொடங்குகிறது நமக்கும் கதைகளுக்குமான பந்தம்.
நம் அனைவருக்குள்ளும் கதை கேட்கும் ஆர்வம் இருக்கும். இந்த ஆர்வத்தின் நீட்சிதான் நாடகங்கள் மற்றும் திரைப்படங்களாக நிற்கின்றன.
இங்கு நான் சொல்லப் போவது எழுத்துக்கள் எனக்குச் சொன்ன கதையை.
எத்தனையோ வடிவில் கதைகளைத் தெரிந்துகொள்ளலாம் எனினும் படித்துத் தெரிந்துகொள்ளும் அனுபவம் அலாதியானது.
படிக்கும் பொழுது ஒரு ஊரில் ஒரு ராஜா என்றிருந்தால் ராஜாவை நான் எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்துகொள்ளும் சுதந்திரம் எனக்கு உண்டு.
கதைமாந்தர்கள் ஒல்லி என்றால் எனக்குப் பிடித்த ஒல்லியை நினைத்துக்கொள்வேன். வெள்ளை என்றால் எனக்குத் தெரிந்த அளவு.
ஆள் நடமாட்டமில்லாத தெரு என்றால் அங்கே செடி கொடிகள் நீண்ட சாலை இன்னும் என்ன வேண்டுமோ அதை நான் சேர்த்துக் கொள்வேன். அதனால் கதைகள் படிக்கும் ஆர்வம் எனக்குள் ஊற்றெடுத்தது.

நான் எப்படி கதைகளுக்குள் சென்று வாழ்க்கையைக் கற்றேன் என யோசிக்கும் பொழுது சில கதைகள் நினைவுக்கு வருகின்றன.
ஏ.ஜெ.கிரொனின் தன் சிறுகதை ஒன்றில்...
தற்கொலைக்கு முயன்ற ஒருவனை மீட்கப் போராடுகிறார் மருத்துவர். சில மணி நேரங்களுக்குப் பின் அவன் மூச்சு விடுகிறான். அந்த நொடி ஒரு மருத்துவராக அவருக்கு எப்படி இருந்திருக்கும்... எத்தனை சந்தோஷம் அடைந்திருப்பார் என்பதையெல்லாம் அருகில் இருந்து பார்க்கும் உணர்வை அந்தக் கதை எனக்கு தந்தது. 25 வருடங்களுக்குப் பிறகு அவன் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்து அவனைக் காப்பாற்றிய மருத்துவருக்கு நன்றி சொல்லும் விதம் கண்டு சிலிர்த்துப் போனேன்.
'நம் இயல்பு சுதந்திரம், அதுவும் ஆதி மனிதன் காலத்து சுதந்திரம் அதை அழுத்தி அடித்தளத்துக்கு அனுப்பிவிட்டது நாகரிகம். பேச்சு சுதந்திரம் நம்மிடம் இருக்கிறதா... நான் பேசுவது போர் அடிக்கிறது என்றால் சொல்ல முடியுமா' - சுஜாதாவின் பாலம் சிறுகதையில் இருந்து.
அந்தக் கதையில் கொலையை கலை என்று பேசியவன் கொலை செய்யப்பட்டே இறப்பான்.
ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் சிறுகதை படித்ததும் ஒரு பெண் இப்படியெல்லாம் முன் பின் தெரியாத நபரின் காரில் தனியாக ஏறிச் செல்வாளா என்று தோன்றினாலும்... அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் என்ன விளையும் என்ற எச்சரிக்கை அந்தச் சிறுகதை.

ராஜேஷ்குமாரின் அவள் ஓர் ஆச்சர்யக்குறி கதையில், ரெக்கார்டு ரூம் என்று நெற்றியில் அப்பியிருந்த கதவினுள் நுழைந்தாள் வாணி என்று ஒரு வரி இருக்கும். ரெக்கார்டு ரூம் என்று கதவுக்கு மேல் இருந்ததைத் கதவுக்கு நெற்றி இருந்ததாகவும் அதில் அப்பியிருந்ததாகவும் வர்ணித்து இருக்கிறார் ஆசிரியர்.
வேண்டிய வர்ணனைகளையும் கதையின் பல இடங்களில் பார்க்கலாம்.
வார இதழ்களில் வரும் யதார்த்தமான சிறுகதைகள் வெவ்வேறு நிலைகளில் வாழும் மக்களின் இயல்பை விளக்குவதாய் இருந்தன.
'ஏந்திழையால் பூந்துகிலாம்' சிறுகதையின் தலைப்பே படிக்கத் தூண்டியது. தலைப்பு தமிழெனும் அமுதால் நிரம்பி வழிந்த மாயம் காரணமாக இருக்கலாம். அந்தச் சிறுகதையை ஒரு பாடல் ஆசிரியரின் நண்பன் விவரிக்கும் விதமாய் அமைந்திருக்கும். படித்து முடிக்கையில் வித்தியாசமான அனுபவம் பெற்றேன். சொல்லப் போனால் ஒவ்வொரு கதை முடிக்கும் பொழுதும் அவர்களோடு வாழ்ந்துவிட்டு வெளி வந்த அனுபவம் கிட்டும்.
சில நேரம் நான் மருத்துவராக உணர்ந்து அவர்களின் வாழ்வியலை அறிவேன்... சில நேரம் ராஜ புத்திர கன்னிகை... சில நேரம் நாள் முழுதும் வியர்வை சிந்தி குழந்தைகளுக்கு சோறு வாங்கி தரும் அப்பாவாக... சில நேரம் பயணியாக...
உணர்ச்சி பொங்க அழ வைத்த கதைகள்... வாழ்க்கை இத்தனை அழகா என ரசிக்க வைத்த கதைகள்... பயம் கொள்ள... பரவசம் கொள்ள வைத்த கதைகள்...
மொத்ததில் ஓசையில்லாமல் ரகசியமாய் பல இடங்களுக்குச் சென்று, பலரை சந்தித்து மனித மனங்களை கற்றுக் கொடுக்கும் பெரும் செயலை செய்கின்றன கதைகள்!
- செ.ரேவதி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.