Published:Updated:

`பெண்மை போற்றுதும்..!' - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

அத்தையோ, தன்னிடம் சண்டை போட்ட தம்பியை எப்படி அழைத்து தாய்மாமன் முறை செய்ய வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``என்ன மஹா... இன்னிக்கும் ஆன்லைன் கிளாஸ் பாத்துகிட்டு இப்படி டென்ஷனா இருக்க? இந்த பத்து, பதினஞ்சி நாள் பொண்ணுங்களுக்கு கிடைச்ச வரம்... நல்லா சாப்டுட்டு நிம்மதியா இரு..." - நேற்று பூப்பெய்தி உலக்கைக்குள் அமர்ந்திருக்கும் என் அத்தை மகளிடம் கூறினேன்.

``அட்டெண்டன்ஸ் போய்டும். மார்க் வேற எப்படி போட போறாங்கன்னு தெரிலக்கா..." - பரிதாப முகத்துடன் பதில் அளித்தாள்.

``மஹா... நான் பெரிய பொண்ணு ஆன நேரத்துல அரையாண்டு. அதுக்கே நான் படிக்கல, எக்ஸாம் எழுதல..." என்றாள் என் தங்கை.

``ஆமாடி... படிப்பு முக்கியம்தான். ஆனா இந்த பத்து நாள் நீ எதையும் யோசிக்காம ஜாலியா சாப்டுட்டு சந்தோசமா இருக்க வேண்டிய நேரம்" என்றேன்.

``சந்தோசமாவா? வயிறு வேற வலிக்குதுக்கா. நான் நேத்து போட்ருந்த பட்டுப் பாவாடை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா, அம்மா அதை யாருக்கோ கொடுத்துட்டாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு."

``ஹாஹா... டிரெஸ்தான? வேற ஒண்ணு வாங்கிக்கலாம். வயிறு வலின்னு சொன்னல்ல... அதுக்கு ஓய்வுதான் இந்த நாள்கள். புரியுதா..?" - அறிவுரை சொன்னாள் என் அத்தை தன் செல்ல மகளிடம்.

Representational Image
Representational Image

``இங்க பாரு பெரியம்மாவ... நல்லெண்ணெய், வெல்லம் உளுந்தவடைலாம் கொண்டு வந்துருக்காங்க. நல்லா சாப்பிடு" என்று சொல்லியதோடு மட்டுமன்றி முதல் வடையை நான் எடுத்துச் சாப்பிட்டேன்.

``அவளுக்குக் கொடுங்கடி... " - தூரத்தில் இருந்து பாட்டி கத்தினார்.

``கொடுக்குறோம் பாட்டி. நாங்களும் அப்பப்ப சாப்ட்டுக்குவோம். நாங்க வயசுக்கு வந்தப்ப சாப்பிட முடியாம விட்டுட்டோம். இந்த மாதிரி தங்கச்சிங்க உக்கார்ந்தாதான் கொஞ்சம் சாப்பிட்டு உடம்பு போட முடியும்" என்றாள் என் தங்கை.

``அது சரிதான்... நான் வந்த நேரத்துல வீடு நிறைய பலகாரங்கள், உணவுகள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை தலையில இருக்கும் பூவை மாத்தி மாத்தி வெச்சுவிடுற அளவுக்கு எல்லாரும் பூவா வாங்கிட்டு வந்து குவிப்பாங்க. பால், பழம் வெச்சுட்டு இனிப்புகளைக் கொடுத்துட்டுப் போவாங்க. ஆனா, என்னாலதான் எல்லாத்தையும் சாப்பிட முடியாது. தங்கச்சி `வந்தப்போ'தான் சாப்பிட்டேன்'' என்றார்.

உறவினர்கள் வர வர வீடு உற்சாகத்தில் குதித்தது.

அத்தையோ, தன்னிடம் சண்டை போட்ட தம்பியை எப்படி அழைத்து தாய்மாமன் முறை செய்ய வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

மாமா, விசேஷத்தை மண்டபத்தில் வைக்கலாமா, வீட்டிலா, எத்தனை பேரை அழைப்பது, நாள்கள் குறைவாக இருக்கிறதே என்று கணக்குப்போட்டுக் கொண்டிருந்தார்.

``மஹா... என்ன வேணுமோ இந்த பத்து நாளுக்குள்ள வாங்கிச் சாப்ட்டுக்கோ. அப்புறம் அவ்ளோதான்... யாரும் உன்னை பார்த்துக்க மாட்டாங்க" எனச் சிரித்துக்கொண்டே கூறினார் சித்தி.

இரண்டு நாள்கள் சாப்பிடுவதும், ஓய்வு எடுப்பதுமாக இருந்தாள் பூப்பெய்தியவள். பார்க்க வரும் உறவினர்கள் கூறும் அறிவுரையை கேட்டும், கேட்காமலும் இனிப்புகளில் ஒரு கடி கடித்து, ஓரம் வைத்துவிட்டு, தனக்கு இஷ்டமான உணவுகளை செய்துதரச் சொல்லி உண்டு, அலங்காரங்கள் செய்துகொண்டு, முதல் நாள் இருந்த பயத்தையும் குழப்பத்தையும் மெல்ல மெல்ல உதறத் தொடங்கினாள்.

Representational Image
Representational Image

மூன்றாம் நாளோ, உலக்கையை தாண்டி அங்கும் இங்கும் செல்ல முயன்றாள். அலைபேசி வேண்டும் என்று அடம் பிடித்தாள். என் அத்தையும், தான் ஒரு நாகரிக காலத்தின் தாய் என்னும் உணர்வில் அவளை சுதந்திரமாக இருக்கச் செய்தார். அவள் கையை அலைபேசியும் சிறைப்பிடித்தது.

`நல்லவேளை 12 வருஷத்துக்கு முன்னாடி ஆண்ட்ராய்டு மொபைல் இல்ல' என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். நான் பெரிய மனுஷியானபோது சில கட்டுப்பாடுகள் இருந்தும், பல மகிழ்ச்சியான தருணங்கள் நினைவுகளில் உயிர் வாழ்கின்றன.

மாற்றங்கள் எல்லாக் காலத்திலும் நிகழும். வரவேற்கப்படும். அந்த மாற்றம் இயற்கை தரும் மகிழ்ச்சியின் வேரை அறுக்காமல் இருந்தால் சரி!

நாளை மஹாவுக்கு மஞ்சள் நீராட்டு விழா. மருதாணியின் மணம் வீடெங்கும் கமழ்ந்தது. இளந்தளிர்கள் வீட்டைச் சுற்றி ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து மருதாணியை அழியாமல் காப்பாற்றுவது பெரும்பாடாக இருந்தது.
``ரோஜா மாலை சொல்லியாச்சுதான..?" - ஒவ்வொன்றாக யோசித்து யோசித்து செய்து கொண்டிருந்தனர் மாமாக்களும் பெரியப்பாக்களும்.

``விடிகாலை மூணு மணிக்குலாம் எழுந்துக்கணும்டி. ரெண்டு இட்லிய சாப்டுட்டு சீக்கிரம் தூங்கு" - மஹாவிடம் கூறிவிட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றார் அத்தை.
``பாருங்க சித்தி... அவ்ளோ சீக்கிரம் எழுந்துக்கணுமாம்..." - சிணுங்கினாள் மஹா.

``ஆமாடா கண்ணா... உன்னோட பொருள்லாம் எரிச்சி விடுவாங்க. நாளைக்கு ஒரு நாள்தான். அப்புறம் நீ நார்மலா இருக்கலாம்."

Girl child
Girl child
Pixabay

``அப்புறம் நான் மிஸ் பண்ணுவேன்னு நினைக்கிறேன்... முதல்ல, ஏன்தான் பெரிய பொண்ணு ஆனோம்னு பயந்தேன். இப்போ அந்த மாதிரி எண்ணம் இல்லை."

``நல்லா சாப்பாடு போடுறாங்க, நல்லா பார்த்துகிறாங்கன்னு குஷியா இருக்கியா..?" என்றேன்.

``ஆமாக்கா அதும் ஒரு காரணம். அப்புறம் இந்தக் கறை எல்லாப் பெண்ணுக்கும் வர்ற ஒண்ணுதான். இது ஒரு சாதாரண இயற்கையான விஷயம். அது அசிங்கம் இல்ல, கொண்டாட்டம்னு தோணுது. அதனாலயும் பிடிச்சிருக்கு."

அத்துணை சீக்கிரம் பெண்மை கொண்டாடப்படக் கூடியது என்பதைப் புரிந்துகொண்டாளே என்று வாயடைத்து நாங்கள் பார்க்க... தன் மகளுக்கு இதை வார்த்தைகளால் கூறாமலே புரியவைத்து விட்டோமே என்கிற மகிழ்ச்சியில் இன்னும் சுறுசுறுப்பாகத் தன் வேலைகளைச் செய்ய ஓடினார் என் அத்தை.

- செ.ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு