Published:Updated:

அபாயங்களை முன்பே கண்டறிந்து மாற்று வழியில் செயல்படவேண்டும் - வானிலை ஆய்வு மைய நிகழ்வில் அறிவிப்பு!

வானிலை ஆய்வு

அபாயங்களை முன்பே கண்டறிந்து மாற்று வழியில் செயல்பட வேண்டும். காலம்காலமாக பழகப்பட்டு வரும் ‘Fail safe system’-ஐத் தகர்த்து ‘Safe fail system’-க்கு வழிவகுக்கவேண்டும்.

அபாயங்களை முன்பே கண்டறிந்து மாற்று வழியில் செயல்படவேண்டும் - வானிலை ஆய்வு மைய நிகழ்வில் அறிவிப்பு!

அபாயங்களை முன்பே கண்டறிந்து மாற்று வழியில் செயல்பட வேண்டும். காலம்காலமாக பழகப்பட்டு வரும் ‘Fail safe system’-ஐத் தகர்த்து ‘Safe fail system’-க்கு வழிவகுக்கவேண்டும்.

Published:Updated:
வானிலை ஆய்வு

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 23-ம் தேதி ‘உலக வானிலை தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘Early Warning, Early action’ (முன் எச்சரிக்கை, முன் நடவடிக்கை) என்ற தலைப்பை உலக வானிலை அமைப்பு அறிவித்திருந்தது. இந்தப் பின்னணியில், பேரிடர் அபாயங்களைக் குறைப்பதற்கான காலநிலை தகவல்களை மையப்படுத்திய நிகழ்வு ஒன்றைச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்தது. வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் இந்நிகழ்வுக்குத் தலைமை ஏற்கச் சிறப்பு விருந்தினர்களாகச் சென்னை ஐ.ஐ.டி பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பாலாஜி நரசிம்மனும், பூனே மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் முனைவர் குஹத குர்த்தாவும் பங்கேற்றனர்.

உலக வானிலை தினம்
உலக வானிலை தினம்

முதலில் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், “காலநிலை மற்றும் வானிலை பற்றிய போதிய அறிவு மக்களிடம் இருந்தால் எதிர்காலத்தில் நிகழப் போகும் தாக்கம் மிகுந்த நிகழ்வுகளைப் பெரிதும் தவிர்க்கலாம். இதனைத்தான் திருவள்ளுவர் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னரே ‘வரும் முன்னர் காவாதான் வாழ்க்கை’ என்ற திருக்குறளின் மூலம் பதியவைத்துச் சென்றுள்ளார். அதனடிப்படையில், நிகழவிருக்கும் பாதிப்புகளைப் பற்றின அறிதலும் அதற்கேற்ற தணிக்கை நடவடிக்கைகளையும் மக்கள் அறிந்திருப்பது அவசியம்,” என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காலநிலை பாதிப்பினை மதிப்பீடு செய்யும் முறையைத் தெளிவுபடுத்தும் விதத்தில் தன் பேச்சைத் தொடங்கினார் பூனே மண்டல இயக்குநர் குஹதகுர்த்தா. “கடுமையான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களையே இயற்கை அபாயங்கள் என்று நாம் அழைக்கிறோம். மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது இந்த அபாயங்கள் பேரழிவுகளாக மாறுகின்றன. சமீபகாலத்தில் இயற்கைச் சீற்றங்கள் அதிகரித்துவரும் நிலையை நாம் பார்க்கிறோம். மக்களின் இருப்பையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் பொறுத்தே ஒரு இடத்திற்கான காலநிலை அபாயம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே பாதிப்பின் அளவை மதிப்பீடு செய்தால் அது எதிர்காலத்திற்கான திட்டமிடலைச் சரியான முறையில் செயல்படுத்த வழிவகுக்கும்,” என்றார்.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

தொடர்ந்து பேசிய அவர், “பாதிப்பினை சுலபமாகத் திட்டமிடும் ‘Climate Hazards and Vulnerability Atlas’-ஐ (காலநிலை அபாயங்கள் மற்றும் பாதிப்பு வரைபடம்) எனப்படும் ஒரு புத்தக வடிவ ஆன்லைன் இணையதளத்தை பூனே மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ளது. குளிர் அலை, வெப்ப அலை, புயல், வறட்சி போன்ற 13 அபாயங்களைக் கண்டறிந்து அவற்றுக்கான முன்னெச்சரிக்கையினை பதிவிடுவதே இந்த இணையதளத்தின் செயல்பாடு. காலநிலை தரவுகளைப் பயன்படுத்தி அபாயங்களைக் குறிக்கும் வரைபடங்களும், IMD-ன் வருடாந்திர பேரிடர் தரவுகளின் அடிப்படையில் காலநிலை பாதிப்பு வரைபடங்களும் உருவாக்கப்படுகின்றன. மேலும் இதனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டுசெல்லவேண்டியதும் அவசியம்,” என்றும் வலியுறுத்தினார்.

இறுதியாகப் பேசிய சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர் பாலாஜி, வெள்ள அபாயங்களை முன்னறிவிப்பதில் இருக்கும் சவால்களைப் பற்றி விளக்கமளித்தார். “வெள்ளப்பெருக்கு என்பது ஒரு இயற்கையான நிகழ்வுதான்; வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் எப்போது ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றனவோ அப்போதுதான் அது அபாயமாக உருவெடுக்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தோல்வியடையும்வரை காத்திருக்காமல், அபாயங்களை முன்பே கண்டறிந்து மாற்று வழியில் செயல்பட வேண்டும். காலம்காலமாக பழகப்பட்டு வரும் ‘Fail safe system’-ஐத் தகர்த்து ‘Safe fail system’-க்கு வழிவகுக்க வேண்டும்,” என்றார்.

வானிலை
வானிலை

இயற்கை பேரிடர்கள் பல்வேறு வடிவங்களில் நம்மைச் சுற்றி உருமாறிக் கொண்டிருக்க வரும்முன் காப்பதே சிறந்த செயல்பாடாக இருக்கும். காப்பதற்கான வழிமுறைகள் நம்முன் இருக்கச் செயல்படுத்த என்ன தடை? முன்னெச்சரிக்கையாக இருப்போம் முன்னரே செயல்படுத்துவோம்!

-சுபஸ்ரீ

(பயிற்சிப் பத்திரிகையாளர்)