Published:Updated:

வெரி ஹுயூமரஸ் மேன்! - சுஜாதா எழுத்தில் எனக்கு பிடித்த நகைச்சுவை வரிகள் #MyVikatan

ஒரு இறுக்கமான கதையிலோ, கட்டுரையிலோ ஒரு நாணயத்தை சுண்டிவிடுவது போல வரும் மின்னல் கீற்று ஒட்டுமொத்த இயல்பையும் மாற்றிவிடும். ..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``கருத்து என்பது மூக்கு போலவும், நகைச்சுவை என்பது மூக்குத்தி போலவும் இருக்க வேண்டும் என்பார்கள். நகைச்சுவையில் துன்பியல், இன்பியல் என இரு நகைச்சுவை உண்டு. முந்தையது குறிப்பிட்ட பிறரை காயப்படுத்துவது பிந்தையது இயல்பான எள்ளலுடன் கூடிய நகைச்சுவை. சுஜாதாவின் எழுத்துகள் இரண்டாம் வகையைச் சார்ந்தவை.

எழுத்தாளர் கடுகு சொல்லுவார் ``ஓர் எழுத்தாளனுக்கு எண்பது சதவிகிதம் திறமை இருக்க வேண்டும். மீதி இருபது சதவிகிதம் தான் கற்றது, கேட்டது, பார்த்தது, ரசித்தது என இருந்தால்தான் தன் திறமையை அதிகரித்துக்கொள்ள முடியும் என்று. இதற்கு சரியான உதாரணம் நம்ம வாத்தியார்தான். தன் திறமையின் மகுடத்தில் உள்ள வைரமாக நகைச்சுவையைப் பயன்படுத்தியிருப்பார். நகைச்சுவை குறித்து கூறும்போது.. ``ஒரு கருத்தை மற்றொரு கருத்தோடு முரண்பட வைத்து அதன் மூலம் எதிர்பாராத ஒரு சந்தோஷத்தை பரவசத்தைக் கொடுப்பது. முடிந்தால் நம் சிந்தனை திறனையும் உயர்த்துவது" என்பார்.

Representational Image
Representational Image

வாத்தியாரின் எழுத்துகளில் யாவும் முதிர்ந்த நகைச்சுவை உணர்வு மிளிரும். ஓர் இறுக்கமான கதையிலோ, கட்டுரையிலோ ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுவதுபோல வரும் மின்னல் கீற்று ஒட்டுமொத்த இயல்பையும் மாற்றிவிடும். இப்படித்தான் பாய்ஸ் பட நீதிமன்ற காட்சியில்.. நீதிபதி சித்தார்த்தைப் பார்த்து உன் பேரு `குஞ்சப்பனா'னு கேட்பாரு. அவ்வளவு நேர இறுக்கமும் சட்டுனு குறைந்து சிரிப்பு வந்துவிடும். அதேபோல் அந்நியனில் உங்க ராஜஸ்ரீயை நான் பார்த்துக்கிறேன் என்னோட பத்மஸ்ரீயை நீங்க பார்த்துக்குங்கனு சொல்லும்போது பணம் கொடுத்து விருது வாங்குவோரை குட்டியிருப்பார். இதுபோல் அவரின் எழுத்துகளில் மிளிர்ந்த, பேசிய நகைச்சுவைகளில் நான் ரசித்தவை சில..

#ஒரு சிரிப்பரங்க நிகழ்ச்சியில் தன் நண்பரை இப்படி நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.. பேராசிரியர் துரைசாமி (பெங்களூர் ஹ்யூமர் க்ளப் நிறுவனர். வயது 85, காது மந்தம் தமிழ் தெரியாது) இந்த ப்ராக்கெட்டுக்குள் ஒரு எள்ளல். மேலும், சொல்லும்போது பட்டிமன்ற பேச்சாளர்கள் தற்போது Stand up comedian போல ஆகிவிட்டார்கள். அடுத்தடுத்து ஜோக் சொல்ல வேண்டும். தென் மாவட்ட ஸ்லாங் இருப்பது கூடுதல் பலம் என இன்றைய யதார்த்த நிலையை எழுதியிருப்பார்.

எழுத்தாளர் சுஜாதா
எழுத்தாளர் சுஜாதா

#அவரின் பரிசுப்பொருள்கள்

ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் ஒரு கேள்வியும் அதற்கான பதிலையும் அறிவிப்பார். அது படிக்க அவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்கும்.

* தமிழ் சினிமாவுக்குத் தேவையில்லாதது எது?

கதை, சதை, உதை வெற்றி பெறுவோர்க்கு இரண்டு வருஷத்துக்கு உண்டான அயோடைடு உப்பு கொடுக்கப்படும்.

* பத்து சங்கத்தமிழ் வார்த்தைகளை அடுத்த வாரத்துக்குள் அனுப்பினால் அவருக்கு சங்கராசு என்ற பட்டமும், காய்ச்சாத இரண்டு லிட்டர் பாக்கெட் பாலும் பரிசாய் கொடுக்கப்படும்.

(நிறைய நீர் சேர்த்துக் காய்ச்சவும்)

* பூர்ணம் விஸ்வநாதனை கோபிக்க வைத்தால் அவருக்கு ஒரு எவர்சில்வர் வாளியும், ஷாம்பூ பாக்கெட்டும் கொடுப்பதாய் சவால்விடுவார்.

* இந்தக் கட்டுரைகளைப் படிப்பவர்க்கு நீண்ட ஆயுளும் கிழக்குத் திசையிலிருந்து லாபங்களும் சுக்கிரன் பார்ப்பதால் மரச்சாமான் செய்வதில் ஈடுபாடு வரும் என அவரின் பரிசுப்பொருள் வித்தியாசமாய் இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

#10 செகன்ட் மின்னல்கள்

ஒரு கணப்பொழுதில் சட்டென மின்னும் மின்னல் போல் போகிற போக்கில் ஒரு four அடிப்பார்..

* டர்க்வர்த் லூயிஸ் விதிமுறையை டர்க்வர்த் லூயிஸைத் தவிர வேறு யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

* பெங்களூரு தியேட்டர் டாய்லெட் சுவரில் எழுதியிருந்தது `இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்' என்று.

* பொன்னாடை குறித்து சொல்லும்போது எப்போதும் போர்த்திக் கொண்டு திரியமுடியாது என்று தெரிந்ததால்தான் மயிலுக்கு போர்வை தந்துவிட்டான் பேகன்.

* அரசாங்க கட்டடங்களில் உட்காரும் நாற்காலியில் கூட 'ஆப் கி மர்ஜி ஹை சாப்' என லஞ்சம் கேட்கிறது.

* குடும்பத்துடன் அளவளாவ சானிட்டரி டவல் விளம்பரங்களுக்காகக் காத்திருக்கிறோம்.

எழுத்தாளர் சுஜாதா
எழுத்தாளர் சுஜாதா

#வரிவிளம்பரம்:

கலைகளஞ்சியம் பத்து பாகங்கள் விற்பனைக்கு.. நல்ல கன்டிஷனில் இருக்கின்றன. சொந்தக்காரங்களுக்கு இனி அவை தேவையில்லை. காரணம், பாழாய்ப்போன மனைவி எல்லாம் தெரியும் என்கிறாள்.

* அப்போலோ கடைசி தினங்களில் தன்னைப் பார்க்க வந்தவரிடம் இப்படிக் கேட்டுள்ளார்..

"கிரிக்கெட் என்னப்பா ஆச்சு, வழக்கம் போலதானா?' என்று.

* பொதுவாக இன்றைய வலைப்பதிவுகள் அனுமார் வால் போல் நீண்டு கிடக்கிறது. அரிதாகக் கிடைக்கிற தகவல்களை உள்ளடக்கியதுதான் ஒரு சிறந்த பதிவாக இருக்க முடியும் என எழுதியிருப்பார்.

(இன்றைய வலைப்பதிவர்கள் கவனிக்க)

* வயசாவதன் அடையாளம்.. பழசை எடுத்தால், புதுசை மறந்து பேசிக்கொண்டே போவது என அவரின் மின்னல் தெரிப்பில் சிரிப்பு நிச்சயம். இதற்கு சிரிக்கவில்லையெனில் அவர் பாணியில் சொல்ல வேண்டுமானால் நீங்கள் போட்டித்தேர்வு புத்தகங்களை அதிகம் படிப்பதாக அர்த்தம்.

#வர்ணனை

ஒரு வர்ணனை எவ்வளவு சுவாரஸ்மாய் இருக்க வேண்டும். நீட்டி முழக்கக் கூடாது. சுருக்கமாய் சொல்ல வேண்டும். உதாராணமாக..

``கிராமச் சூழ்நிலையை வர்ணிப்பது அழகுதான். ஆனால், தெருவில் போகும் ஆட்டுக்குட்டியை அது வடக்கு வாசல் தாண்டி துருத்தியான் தெரு மேட்டுக்கரைப் பக்கம் மறையும் வரை வர்ணித்தால் ஆட்டுக்குட்டிக்குக் கூட அலுத்துவிடும் என்பார்.

அதேபோல் ஓர் இடத்தை மிக இயல்பாக அதே நேரம் நகைச்சுவை உணர்வுடன் நம்மைப் பார்க்க வைப்பது அவரின் ஸ்டைல்.. உதாரணத்துக்கு சென்னை டிராபிக் குறித்து..

எந்த டிராபிக் விளக்கிலும் ஒரு பல்பாவது எரியாது கவனம்.

பெண்கள் பெரும்பாலும் கியர் இல்லாத வண்டிகள் ஓட்டுவதால் பூச்சி பறப்பதுபோல் இங்கே அங்கே நுழைந்து செல்வார்கள். தலையில் பேஸ்பால் தொப்பி போட்டுக்கொன்டு போகிற அழகான நவீன பெண்கள் வேகமாகப் போவார்கள் என்பது எழுதப்படாத விதி.

எழுத்தாளர் சுஜாதா
எழுத்தாளர் சுஜாதா

ஆண்களுக்கு.. டிராபிக் போலீஸ் உங்களை நிறுத்துகிறார்களா.. அல்லது லிப்ட் கேட்கிறார்களா என தெரிந்துகொள்ளும் திறமை அவசியம். மேலும், உங்கள் வண்டி நம்பரை பொடி எழுத்தில் எழுதுங்கள் அல்லது "கஉங" என தமிழ்ப்பலகையில் எழுதவும். பாண்டி ரிஜிஸ்ட்ரேஷன் உள்ளவர்கள் எங்கும் நிறுத்தப்படலாம். பாக்கெட்டில் நூறு ரூபாய் வைத்திருக்கவும்.

* எப்போதும் தனது ஆஸ்பத்திரி அனுபவத்தை தனக்கே உரிய பாணியில் விவரிப்பார்..

எழுபது ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த பல்லை ஏழே நிமிஷங்களில் நீக்கி, டிரேயில் `ப்ளங்க்' என்று போட்டபோது, அதை வாஞ்சையுடன் பார்த்து, `போய் வா, நண்பா!' என்று விடைகொடுத்தேன்" என்று பல்லுக்கும் பிரியாவிடை கொடுத்து எழுதியிருக்கிறார்.

#டி.வி குறித்த பார்வை

தன் வீட்டில் கேபிள் டிவி இல்லாததால் எல்லோரும் தன்னை வித்தியாசமான ஜந்துவாக பார்த்தார்கள்.

டி.வி வர்ணனையாளர்கள் ஏன் கையில் கத்திக்கப்பல் செய்வது போல கை வைத்துக் கொள்கிறார்கள். ஆடியன்ஸ் கை தட்டவில்லையெனில் இலவச கொக்கோ கோலா கிடையாது போல. இன்றைய நிலையிலும் கூட சுஜாதாவின் வார்த்தைக்கு உயிர் கொடுக்கும் வகையில் ஆடியன்ஸ் சற்று தூங்குவதுபோல் தெரிந்தால் அடிக்கடி எழுந்து நின்று கைதட்டச் சொல்லுவதை கண் கூடாக பார்க்கமுடிகிறது.

டிவிக்கு அடுத்து தீபாவளி மலர். இதைப் புரட்டும்போதே புரசைவாக்கம் முழுவதும் சென்ட் மணக்கும். சிறுவயதில் இதை கடன் வாங்குவதற்கென்றே ஒரு கோஷ்டி இருக்கும். ஒருமாதம் கழித்துப் பிரசவத்துக்கு வரும் மகள் போல அல்லது ஹாஸ்டலிலிருந்து லீவுக்கு வரும் மகன்போல திரும்பி வரும் என தீபாவளி நேரத்து அனுபவத்தை சொல்லியிருப்பார்.

#எதிர்காலத்தை கணித்த ஜோதிடராக

வரும் காலங்கள் எப்படி இருக்குமென பல ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருப்பார்.. அவற்றில் சில

* செல் போன்கள் இரட்டிப்பாகும்

* போக்குவரத்து அதிகரித்து நகரங்களில் அனைவரும் மாஸ்க் அணிவோம்

* பெண்கள் வருஷம் மூன்று தினம் புடவை கட்டுவார்கள்.

* ஆண்கள் அதிக அளவில் தலை முடியை இழப்பார்கள்

* தமிழ்நாட்டில் அ.தி.மு.க அல்லது தி.மு.க கூட்டணி ஆட்சி நடக்கும்.

* அலுவலகத்தில் செய்வது அத்தனையும் செல்போனில் செய்ய முடியும். (work from home)

* கவிதைத் தொகுப்புகளில் காதல் குறையும்

வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளும் சிறுகதைகளும் அறவே நீக்கப்பட்டு, முழுக்க முழுக்கப் பெண்கள் படங்களாக, ஒரிரண்டு வாக்கியங்களுடன் வெளிவரும்.

* தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் வெளிநாட்டில் அதிகம் இருப்பார்கள்.

* அரசியல் மேடைகளில் மட்டும் தமிழ் உணர்வு மிச்சமிருக்கும்

*முடிவெட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி வரும்

* எதிர்காலத்தில் data, voice எல்லாமே இலவசமாகக் கிடைக்கும் என்பார்.

என நூற்றாண்டின் இறுதியில் உதிர்த்திருந்தாலும் இப்போதும் பல விஷயங்கள் பொருந்திப்போகிறது.

எழுத்தாளர் சுஜாதா
எழுத்தாளர் சுஜாதா

#மனிதனின் அடையாளங்களாக மாற இருப்பவை

யாரைச் சந்தித்தாலும் இ-மெயில் முகவரி கேட்பீர்கள். நடக்கும்போது போன் பேசவில்லையெனில் ஜென்ம சாபல்யம் அடையமாட்டீர்கள். ஒரு விரலில் எஸ் எம்.எஸ் அனுப்புவீர்கள். எந்த எலெட்ரானிக் பொருள் வாங்கினாலும் ஆறு மாதமானால் பழையதாக தோன்றும். ஒரு போன் நம்பரும் உங்களுக்கு நினைவிலிருக்காது. செல்போன் எப்போதும் கையில் இருக்கும்.

நெட் இல்லையெனில் கைகால் நடுங்கும். பாத்ரூம் போகும்முன் நெட்டில் அலைவோம். இல்லையேல் பாத்ரூம் வராது. செய்தித்தாள், புத்தகமெல்லாம் போனிலேயே படித்துவிடுவோம்.

தியேட்டரில் சினிமா பார்க்கும்போது செல்போன் சிணுங்கியே ஆக வேண்டும் என்பது தலையாய விதி.

#தொல்லைபேசி

கஸ்டமர் கேர் கொடுமைகளை தமக்கே உரிய பாணியில்..

ஒரு முறை உன் சொத்தையே எழுதி வை என்று பில் வந்தபோது தான் கஸ்டமர் கேரை தொடர்புகொண்டேன். 180 டயல் செய்தவுடன் முதலில் வாஞ்சையுடன் வரவேற்றது. மொழியை தேர்ந்தெடுத்து அமுக்கி முடிந்ததும் அர்ஜென்ட்டா, ஆர்டினரியா என கேட்கிறது. ஹோட்டல்களில் சாதாவா, நெஸ் ரோஸ்டா என்பதுபோல் உடனே எண்ணை அழுத்துவது தப்பு. தாமதமானால் மீண்டும் முதலிலிருந்து.. அதான் முன்னாடியே சொல்லியாச்சே சனியனேனு திட்டமுடியாது. கேள்வி காலாவதியாகியிருக்கும். மீண்டும் ஆம் என்றால் 1, இல்லையெனில் 2, தலைமுடியை பிய்த்துக்கொள்ள 3, போனை உடைக்க 4 என இருந்தால் பரவாயில்ல என சொல்லியிருப்பார். இது இன்றுவரை தொடர்கிறது. இன்னும் அந்த அதிகாரிகள் ஏழு மலை, ஏழு கடல் தாண்டி கிளியிடம் பேசுவதுபோலத்தான் சேவைமைய அதிகாரிகளிடமும் பேச முடிகிறது.

ஒரு டெலிபோன் உரையாடல்

நண்பர்: ஹலோ

மகள்: நான் சந்தியா பேசறேன். இரண்டாம் வகுப்பு

நண்பர்: அப்பா இல்லையா

மகள்: ம்..ம்.. இல்லை

நண்பர்: வீட்டில வேற யாரு இருக்காங்க

மகள்: சேகர் இருக்கான். இருங்க போனை கொடுக்கிறேன்

நண்பர்: ஹலோ சேகர்..

சேகர்: ம்ம ல லா

(சேகர் இரண்டு வயது குழந்தை)

இதை நினைத்து நினைத்து சிரித்துள்ளேன். இறுதியில் ஒரு ருசிகர நகைச்சுவை.

#நிரந்தர ஆச்சர்யக்குறி

நல்ல வரிகளைக் கண்டுபிடிப்பதில் அவருக்கு மோப்பசக்தி அதிகம் உள்ளதாக மனுஷ்யபுத்திரன் தெரிவித்திருப்பார். விரும்பிய பாடலில் நமக்குப் பிடித்தமான சுதியோ, இசையோ வருவது போலத்தான் சுஜாதாவின் எழுத்தின் இடையே.. எப்போது நகைச்சுவை வருமென எதிர்பார்ப்பதும், காத்திருப்பதும் சுவாரஸ்யம். காரின் கியர் போடுவதுபோல சங்கத்தமிழ், மேலைநாட்டு இலக்கியம், சமகால பார்வை, எதிர்கால டிஜிட்டல் யுகமென எல்லா இடத்திலும் சிக்சர் அடித்தவர் சுஜாதா மட்டும்தான். இந்த வல்லவனுக்கு வல்லவன் இன்னும் பிறக்கவில்லை என்பதே நிதர்சனம். ஒவ்வொரு வருடமும் சொல்வதுதான் அதையே மீண்டும் மீண்டும் புதுப்பிப்போம்.

``ஒரு பெயர் அதன் பின்னே நிரந்தரமான ஆச்சர்யக்குறி ``சுஜாதா..!"

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு