Published:Updated:

``படிச்சது பத்தாவது; இப்போ 15 பேருக்கு வேலை கொடுக்கிறேன்!" - பனை நார் கட்டில் தொழிலாளியின் நம்பிக்கை

"பனைநார் கட்டிலில் நீண்ட நேரம் உறங்கினாலும், பனைநார் சேரில் நீண்ட நேரம் உட்கார்ந்தாலும் உடல் சூடாகாது." 

Palm tree cot
Palm tree cot

அழிவின் விளிம்பில் இருக்கும் பனைநார் கட்டில் தொழிலுக்குப் புத்துயிர் கொடுக்கும் எண்ணத்தில், தொழில்முனைவோர் ஆகியிருக்கிறார் தினேஷ் குமார். இந்தத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் நாகர்கோவில் அருகேயுள்ள ரோஸ்மியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கிறார். பத்தாவது மட்டுமே படித்த தினேஷ் குமார், தன் புதிய தொழில் முயற்சியைப் பற்றி மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.

Palm tree cot
Palm tree cot

``என் பூர்வீகம், திருச்சி மாவட்டம் மணப்பாறை. ஆறு ஆண்டுகள் சென்னையில வேலை செய்தேன். இப்போ நாகர்கோவில் பகுதியில சுற்றுலா வழிகாட்டியாக இருக்கேன். இதனால நிறைய பயணம் செய்வேன். அப்படித்தான், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகளவில் விளையும் பனை மரங்களின் எண்ணிக்கை குறைஞ்சுகிட்டே வருவதைத் தெரிஞ்சுகிட்டேன்.

பனைப் பொருள்கள் குறித்த விழிப்புணர்வு கிராமப்புறப் பகுதிகளிலும்கூட குறைஞ்சுகிட்டே வருவதுடன், இந்தத் தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் சரியான வேலைவாய்ப்பு இல்லாமல், வேறு வேலைக்குப் போவதும் அதிகரிச்சுகிட்டே வருது. அழிவின் விளிம்பில் இருக்கும் இந்தத் தொழிலை மக்களிடம் பிரபலப்படுத்தணும்னு, பனை நார் மற்றும் கயிறு கட்டில் விற்பனையில் ஈடுபடலாம்னு முடிவெடுத்தேன்.

Dinesh Kumar
Dinesh Kumar

இந்தத் தொழில் பற்றித் தெரிஞ்சுக்கவும் பல்வேறு விஷயங்களைக் கத்துக்கவும் நானும் என் மனைவியும் நிறைய பயணம் செய்தோம். பிறகு, எட்டு மாதங்களுக்கு முன்பு இந்தத் தொழிலைத் தொடங்கினோம். சென்னை போன்ற பெருநகரங்கள்ல வசிக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் பனைநார் கட்டிலின் சிறப்பைப் புரிய வைக்கிறது சிரமமா இருந்துச்சு. இதனால், விற்பனை வாய்ப்புகள் அதிகம் இல்லாத நிலையில், பல்வேறு டிசைன்கள் மற்றும் நிறங்களில் கட்டில்களைத் தயாரிச்சு நம்பிக்கையுடன் தொழிலை நடத்தினேன்.

மூலப்பொருள்கள், வேலையாள் கூலி, போக்குவரத்து செலவு, டெலிவரி உட்பட எல்லாச் செலவுகளும்போக, சில நூறுகளில்தான் லாபம் கிடைச்சுது. தொழிலைத் தொடங்கி எட்டு மாதங்கள் ஆகுது. இப்போதைக்கு லாபத்தைப் பெரிசா எதிர்பார்க்கலை. 

Palm tree cot
Palm tree cot

பனை நார் கட்டிலை பிரபலப்படுத்துவது மற்றும் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கிறது மட்டுமே இப்போதைக்கு என் முதல்கட்ட இலக்கு. இதில் வெற்றி கிடைச்சுட்டா, எதிர்காலத்துல லாபமும் அதிகரிக்கும்" என்பவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பனை மற்றும் கயிறு கட்டில்களை விற்பனை செய்திருக்கிறார்.

``சோஃபா, பிளாஸ்டிக் சேரில் அரைமணிநேரம் உட்கார்ந்துட்டு எழுந்திரிச்சு, உட்கார்ந்த இடத்தைத் தொட்டுப் பாருங்க. அந்த இடமும் உடலும் சூடாக இருக்கும். உடல் சூட்டால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளும் வருது. பனைநார் கட்டிலில் நீண்ட நேரம் உறங்கினாலும் பனைநார் சேரில் நீண்ட நேரம் உட்கார்ந்தாலும் உடல் சூடாகாது. 


Palm tree cot
Palm tree cot

பனைப் பொருள்கள் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். சட்டம் (frame), நான்கு கால்கள் உட்பட பனை நார் கட்டிலில் பயன்படுத்தப்படும் எல்லாப் பொருள்களுமே பனை மரத்திலிருந்துதான் தயாரிக்கப்படுது. இதேபோல கயிறு கட்டிலும் தயாரிக்கிறோம். அவை வேம்பு, பூவரசு, தேக்கு, வேங்கை உள்ளிட்ட மரத்திலிருந்து செய்கிறோம்.

பனை ஓலைக்குப் பின்புறமிருக்கும் மட்டையைத் தண்ணீரில் ஊறவெச்சு சில படிநிலைகளுக்குப் பிறகு, நார் பிரித்தெடுக்கப்படுகிறது. பிறகு, அதை மொத்தமான நூல் பதத்துக்கு மாத்துறதெல்லாம் ரொம்பவே சவாலான வேலை.
தினேஷ் குமார்

மூலப்பொருளான பனை மரம், பனை நார் ஆகியவை எளிதில் கிடைப்பதில்லை. பனை மரம் ஏறும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் ரொம்பவே குறைஞ்சுடுச்சு. பனை ஓலைக்குப் பின்புறமிருக்கும் மட்டையைத் தண்ணீரில் ஊறவெச்சு சில படிநிலைகளுக்குப் பிறகு, நார் பிரித்தெடுக்கப்படுகிறது. பிறகு, அதை மொத்தமான நூல் பதத்துக்கு மாத்துறதெல்லாம் ரொம்பவே சவாலான வேலைதான். 

நார்மல் கட்டில், மடிச்சு வைக்கும் கட்டில், கயிறு டிசைன்களில் பின்னிய கட்டில்னு பல்வேறு வடிவங்கள்ல கட்டில் தயாரிக்கிறோம். இவற்றின் விலை குறைந்தபட்சம் 1,700 முதல் அதிகபட்சமாக 8,000 ரூபாய் வரை விற்பனை செய்கிறேன்.

சுற்றுலா வழிகாட்டியாக பெரும்பாலும் சனி, ஞாயிறுகளில்தான் எனக்கு வேலை இருக்கும். மற்ற ஐந்து நாள்களிலும் பனை நார் தொழிலில்தான் கவனம் செலுத்துவேன். ஆன்லைன்லதான் விற்பனை செய்றேன். டெலிவரியும் நானே செய்கிறேன். இதனால, தமிழ்நாடு மட்டுமல்லாம அண்டை மாநில ஆர்டர்களும் வருது. வரும்காலத்தில் இன்னும் நிறைய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கணும்னு திட்டமிட்டிருக்கேன்" என்று உற்சாகமாகக் கூறுகிறார் தினேஷ் குமார்.