Published:Updated:

`இரவெல்லாம் கண் விழித்தேன் உன்னாலே..!' - இளைஞரின் பிரியாணிக் கனவுகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Javier Peñas / Unsplash )

சே ... நாய்கூட தூங்கிருச்சு போல. வழக்கமா அது கத்தும் சத்தம்கூட இல்லையே... நமக்கு ஏன் தூக்கம் வரவில்லை...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மணி இரண்டு இருக்கும். தூங்கிக்கொண்டிருந்த எனக்கு தூக்கம் கலைந்தது. புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. நாளை ஞாயிற்றுக்கிழமைதானே, காலைல 8 மணி வரையாவது தூங்கணும்னு நினைச்சா இப்படி நடுராத்திரி எழுந்து உட்கார வச்சுருச்சே.

கரகரவென்ற மின்விசிறியின் சத்தமும் அவ்வப்போது காதுக்கருகில் பறக்கும் கொசுவின் கொய்ங் சத்தமும் மட்டுமே இருந்தது... சே... நாய்கூட தூங்கிருச்சு போல வழக்கமா அது கத்தும் சத்தம்கூட இல்லையே. நமக்கு ஏன் தூக்கம் வரவில்லை?

Representational Image
Representational Image
awar kurdish / Unsplash

நேத்து நைட்டு வழக்கமா சாப்பிடற பாய் கடைலகூட புரட்டாசி சனிக்கிழமைனு கல்தோசையும் இரண்டு இட்லியும்தானே சாப்பிட்டோம்... சாம்பார்கூட சாப்டலயே....

அந்த பக்கத்து சீட்டுக்காரனுக்கெல்லாம் புரட்டாசி இல்ல போல. அந்தப் பிரியாணியும் ஆங்காங்கு தெரியும் மட்டன் பீஸும் வெள்ளையான அவித்த முட்டையின் மேல் படர்ந்திருக்கும் பிரியாணி மசாலாவும், மணக்கும் சால்னாவும் அப்பவே ஆடிக்கோ ஆவணிக்கோ தாவிவிட வேண்டும். புரட்டாசி மாதத்தை இல்லாமல் செய்ய ஒரு புரட்சிப் போராட்டம் நடத்திடலாம் போல் இருந்தது.

அங்கு, தோசைகளை சாப்பிட்டுக்கொண்டிருந்த எல்லோருமே போராடத் தயாராக இருந்ததாகவே பட்டது...

படுக்கையில் இருந்து எழுந்துசென்று டி.வி-யைப் போட்டேன். அப்போதுதான் நேரம் நாலரை ஆகிவிட்டது புரிந்தது. பிரியாணி கடுப்பு பசியைத் தூண்டியிருந்தது.

டி.வி-யில் சேனல் ஒவ்வொன்றாய் மாற்றிக்கொண்டு வரும்போது அந்த உணவு சேனலில் பிரியாணி செய்வது பற்றி பிரபல செஃப் சொல்லிக்கொடுத்தார். பசி கூடியது. மணி ஐந்து. அட நம்ம முக்கு கடையில நாலரைக்கே டீ ரெடியாயிடுமே.

எழுந்து வாசலுக்கு வந்ததும், கால்கள் கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தது. இரவு கழுவியதில் பளபளக்கும் அந்த பாய்லரில் சூடான ஆவி பறக்கும். அதிகாலை நேர காட்சி விளக்கிற்கு படையெடுக்கும் விட்டில்களாக மேலும் சிலர் அங்கு. ஒரு டீ என்றேன்...

Representational Image
Representational Image

அந்தக் கண்ணாடி தம்ளரை பாய்லரிலிருந்து பிடித்த ஆவி பறக்கும் வெந்நீரால் ஒரு கழுவு கழுவிக்கொண்டே எனைப் பார்த்து ஒரு புன்முறுவல் செய்தார். ஒருவேளை நமது பிரியாணி கடுப்பு புரிந்திருக்குமோ?

சீனி டப்பாவை பக்கவாட்டில் சாய்த்து, நீளமான ஸ்பூனில் எடுத்து அந்தக் கண்ணாடி தம்ளருக்குள் போடுவதின் லாகவமும் பூத்தூவலாய் சிந்தாமல் சிதறாமல் வந்து விழுந்ததும் ரசிக்க வைத்தது. வெள்ளை நிறமாயிருந்த அந்த சீனி-யின் மேல் ஊற்றப்பட்ட டிக்காக்‌ஷன் கண்ணாடி தம்ளரின் வழியே மேலே எரியும் அந்தப் பிரகாசமான எல்இடி லைட்டின் ஒளிவெள்ளம் மாயங்கள் செய்தன. அரை டம்ளருக்கும் சற்றே அதிகமாக நிறைந்துவிட்ட கரைசலில் சூடான பால் சேர்த்து ஒருசில மீட்டருக்கு ஆற்றி டம்ளரில் நுரை பொங்கச் செய்து, மேலாக டிக்காக்‌ஷனால் அலங்கரித்துக் கொடுத்தார்.

டீயை ரசித்துக் குடித்துக்கொண்டே தொங்கிக்கொண்டிருக்கும் பேப்பரைப் பார்த்தேன். புரட்டாசி மாதம் முடிந்ததால் நேற்று கறி விலை மீண்டும் உயர்வு.... கைகளிலிருந்து நழுவிவிடுவது போலிருந்த டம்ளரை அழுத்திப் பிடித்துக்கொண்டேன்.

-சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு