வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
இந்தக் காலத்தில் எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை 'கவனச்சிதறல்' தான். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், தொழில் செய்பவர்கள் என்று பரவித் தழைத்து சிறுகுழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை இந்த கவனச்சிதறல்.
அது சரி, செல்போன்கள், கேட்ஜெட்டுகள், ஆன்லைன் விளையாட்டுக்கள், இன்ன பிற பொழுதுபோக்கு அம்சங்கள் என்று எல்லாமே 'டண்' கணக்கில் கொட்டிக் கிடைக்கும் இந்தக் காலகட்டத்தில், ஒருவருக்கு கவனச்சிதறல் ஏற்படவில்லை என்றால் தான் ஆச்சரியம்.
ஆயினும், சில இப்படி புற காரணிகளால் ஏற்படும் இந்த வகை கவனச்சிதறலை அப்படியே விட்டுவிட முடியுமா என்ன ?? குறைந்தபட்சம், சின்னச் சின்ன யுக்திகளையாவது கையாண்டு, இவற்றை சரி செய்வது தானே புத்திசாலித்தனம். அந்த வகையில், ஒரு தரமான யுக்தியைத் தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம். எளிதாகப் புரியவைக்க, ஒரு உதாரணத்துவக் கதையின் வடிவில்.

ஒரு ஊரில் தர்ம தாட்சன் என்றொரு அரசர் இருந்தார்.
அவர் வேட்டையாடுவதில் ஆர்வம் மிகுந்த அரசர். நேரம் கிடைக்கும் போதெல்லாம், போதுமான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு வேட்டைக்குச் செல்வது அவரது வழக்கம்.
அது மாதிரி, அந்த முறை அவர் வேட்டைக்குச் சென்று திரும்பி வந்த சமயத்தில், அவரது முகத்தில் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டிருந்தது . படபடப்பாக இருந்த அவர், உடனடியாகத் தனது அமைச்சரை அழைத்தனுப்பினார்.
"அமைச்சரே !! தயவு செய்து ஒரு குதிரைப் பயிற்சியாளரை ஏற்பாடு செய்யுங்கள். நாம் வேட்டைக்கு அழைத்துச் செல்லும் குதிரைகளுக்கெல்லாம் தனியாக பயிற்சி ஒன்றை அளித்ததாக வேண்டும்", என்று அவரிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்தார்.

அமைச்சருக்கு குழப்பமாக இருந்தது.
"என்னடா இது ? நமது லாயத்தில் இருக்கும் எல்லா குதிரைகளுக்கும் தான் நன்றாகப் பயிற்சி கொடுத்து வைத்திருக்கிறோமே !! அதுவும் வேட்டைக்கு கூட்டிச்செல்லும் குதிரைகளுக்கு அதற்கெனவே பிரத்யேகமான பயிற்சிகளைக் கொடுத்திருக்கிறோமே !! பின் எதற்காக அரசர் இப்படிக்கு கேட்கிறார் ?" என்று அவர் யோசித்தார். அதையே கேள்வியாகவும் கேட்டார்.
அதற்கு அரசர் சொன்னார்.
"அமைச்சரே !! நீங்கள் சொல்றதெல்லாம் சரிதான். ஆனாலும், இந்தக் குதிரைகள் நான் தீவிரமாக வேட்டையில் ஈடுபடும் சமயத்தில், திடீர் திடீரென்று உடலை உதறி, தலையையும் அசைத்து விடுகின்றன. அது எனக்கு தொந்தரவாக இருக்கிறது. அதனால், அது மாதிரியான சமயங்களில், உடலை உதிராமல் இருப்பதற்கும், தலையை ஆட்டாமல் இருப்பதற்கும் அவற்றுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். அதற்காகத் தான் நான் இப்படிச் சொல்கிறேன்", என்று.
அமைச்சருக்கு இப்போதும் சரியாகப் பிடிபடவில்லை.
"என்ன இது ? ஒரு குதிரை தனது உடலை உதறுவது இயற்கை தானே !! ஏதாவது பூச்சியோ,
எறும்போ தனது காதுக்குள் புகுந்தால், தலையை ஆட்டுவதும் கூட இயற்கை தானே !! இப்படியிருக்க, ஒரு குதிரையை இதையெல்லாம் செய்யாதே என்று அடித்துத் திருத்தி பயிற்சி கொடுக்க நினைப்பது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் ? அப்படியே பயிற்சி கொடுத்தாலும் கூட, அதற்கு எத்தனை நாட்கள் பிடிக்கக்கூடும் ? இப்படியிருக்க, அரசர் எதற்காக இப்படியெல்லாம் யோசிக்கிறார் ?", என்று யோசித்துக் கொண்டார்.
"எதனால் அரசரே இப்படிச் சொல்கிறீர்கள் ?", என்று அரசரிடமே கேள்வியும் கேட்டார்.

அந்த சமயத்தில் தான், தான் இம்முறை காட்டுக்கு வேட்டையாடச் சென்றிருந்தபோது 'என்ன பிரச்சனை நடந்தது ?' என்பதையே சொல்ல ஆரம்பித்தார் தர்ம தாட்சன்.
அதாவது, எப்போதும் செய்வது போல, அன்றைய நாளும் காட்டுக்கு வேட்டையாடுவதற்காகச் சென்றிருந்தார் அந்த அரசர். காட்டின் நடுப்பகுதிக்குச் சென்றதும், சிங்கம் ஒன்று அவர் கண்ணில் பட்டது. தொலைதூரத்திலிருந்த அரசரும், துல்லியமாக அந்த சிங்கத்தைக் குறி பார்த்து வீழ்த்தத் தயாரானார். இரண்டு நொடிகள், அம்பு எய்யப்படுவதற்கு.
இப்படியிருந்த சமயத்தில், திடீரென்று அந்த அரசருடன் சென்றிருந்த வீரர்களில் ஒரு வீரனுடைய குதிரை வேகவேகமாக தனது தலையை ஆட்டி அசைத்துவிட்டது. அச்செயலின்போது, அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணியும் கூட சேர்ந்து அசைய, அதிலிருந்து ஓசையும் எழுந்தது.
அப்புறம் என்ன ?
'படாரென்று' உஷாராகி விட்டது அந்த சிங்கம்.
அது மட்டுமா ??
சடாரென்று பாய்ந்து அரசரையும் அவருடைய வீரர்களையும் கூட தாக்குவதற்காக சீறி விட்டது. அரசர் எப்படியோ சமாளித்து, தன்னையும் காப்பாற்றி, கூட வந்தவர்களையும் காப்பாற்றி விட்டார் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.
ஆனால், கொஞ்சம் தவறியிருந்தாலும் என்ன நடத்திருக்கும் ?
அவர்களுள் ஒருவர்கூட உயிரோடு திரும்பியிருக்க முடியாது.
அதனால் தான், அரசர் குதிரைகளுக்கெல்லாம் வேட்டையின்போது அசையாமலிருக்க பயிற்சியளிக்க வேண்டுமென்று நினைத்ததே.
இப்போது இவை எல்லாமும் அமைச்சருக்குத் தெரியவர, அவருக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. மனத்துக்குள் சிரித்துக்கொண்டே அவர் அரசரிடம் சொன்னார்.
"சரிதான் அரசே !! நீங்கள் சொல்வது போல, ஒரு திறமையான பயிற்சியாளனைத் தேட வேண்டும். குதிரைகளுக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும். ஆனால், அவையெல்லாவற்றுக்கும் முன்னதாக, வேட்டைக்கு அழைத்துச் செல்லப்படும் குதிரையின் கழுத்தில், ஓசையை எழுப்பும் மணியை யாரு கட்டினார்கள் என்று கண்டுபிடித்து அந்த புத்திசாலியைத் திருத்தியே தீர வேண்டும்", என்று.
ஆம் நண்பர்களே !! மணியைக் கட்டி, வேஷம்போட்டு அழகு பார்க்க, அது என்ன பூம்பூம் மாடா ?

வேட்டைக்கு அழைத்துச் செல்லப்படும் குதிரையல்லவா !! அதன் கழுத்தில் மணியைக் கட்டி அழைத்துப் போய்விட்டு, 'நாங்கள் மணியைக் கட்டிவைத்தது பிரச்னையில்லை குதிரை தலையை அசைத்தது தான் பிரச்னை' என்ற ரீதியில் பேசினால், அது எப்படிப்பட்ட முட்டாள்த்தனம் !!
சொல்லபோனால், இந்தக் கதையில் வரும் அந்தக் குதிரை தான் நீங்கள்.
அதன் கழுத்தில் கட்டப்பட்ட மணி, உங்க கவனத்தை எவையெல்லாம் சிதறடிக்கின்றனவோ அவை.
குதிரையை வேட்டைக்கு அழைத்துச்செல்லும் போது, அதன் கழுத்தில் மணியைக் கட்டிக் கூட்டிப் போகக்கூடாது . அது போல, குறிக்கோளை அடைவதற்காக முழு மூச்சாக நீங்கள் முயற்சி செய்யும் சமயத்தில், உங்கள் கவனத்தைத் திசை திருப்புகின்ற மாதிரியான இந்தக் காரணியையும் உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது.
கவனத்தைக் குவிப்பதற்கான முதல் படிநிலையே இது தான்.
அதனால், இன்றுமுதல் எது உங்கள் கவனத்தை சிதறடிக்கிறதோ அதை உங்களை விட்டு கொஞ்சம் தள்ளி வையுங்கள். முழுவதுமாக முடியாது போனாலும் கூட. நீங்கள் கவனத்தைக் குவித்து வேலைபார்க்க விரும்பும் அந்த சிறிய அளவிலான கால அளவிலாவது அவற்றைத் தள்ளி வையுங்கள். அந்தக் குட்டி கால அளவையே எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இப்படிச் செய்வதன் ,மூலம், உங்கள் கவனச்சிதறலை ஓரளவுக்கு சுமூகமாக கையாளலாம் என்று சொல்லி இந்தக் கதையை முடிக்கிறேன்.
முயற்சி செய்து பார்த்து விட்டு ரிசல்ட்டை சொல்லுங்கள் பார்ப்போம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.