வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
தியேட்டர்களில் அடைந்துக் கிடந்த சினிமா, மெல்ல வீட்டிற்கு வந்து, தற்போது ஒவ்வொரு மனிதனின் பாக்கட்டுக்குள்ளும் வந்து விட்டது என்பதே நிதர்சனம். ஒரு காலத்தில்,விருப்பப்படுபவர்கள் திரையரங்குகளுக்குச் சென்று சினிமா பார்த்தார்கள். தொலைக்காட்சி அறிமுகமான பிறகு அது மெதுவாக வரவேற்பறைக்கும், அப்புறம் படுக்கையறைக்கும், ஏன்? சமையலறைக்கும் கூட இப்போது வந்துவிட்டது.
அது போதாதென்று, வெளியில் செல்கையில் அவர்களுடன் பயணம் செய்யவும், பயணக் களைப்பைப் போக்கவும் மொபைலாக உருவெடுத்துவிட்டது. எனவேதான் சினிமாவை எடுப்பவர்கள் ரொம்பவும் உஷாராக இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அனைத்து வயதினருக்கும் சினிமா இப்போது எளிதில் கிடைக்கும் பொருளாகிவிட்டது.
அனைவரையும் திருப்திப்படுத்தும் விதமாகவும், அனைவருக்கும் நல்வழி காட்டும் விதத்திலும் சினிமாவை எடுக்க வேண்டியது, இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கடமையாகி விட்டது. அதிலிருந்து பிறழ்பவர்கள், சமுதாயத்திற்குத் தீங்கு இழைத்தவர்கள் ஆகிவிடுவார்கள். நல்லதைக் காட்டிலும் தீயதே எளிதாகப் பரவுவது உலக இயற்கை. எனவே, கத்திமேல் நடப்பதைப்போல், மிகவும் ஜாக்கிரதையாக நடைபோட வேண்டியது சினிமாக்காரர்களின் தற்போதைய நிலையாகும்.

சமீப காலங்களில் வெளியாகும் பெரும்பாலான படங்கள், பழி தீர்ப்பவையாகவும், டமால், டுமீல் ரகங்களாகவுமே இருப்பதைக் கண்டு ஒரு வெறுப்புதான் உள்ளத்தில் இருந்து வந்தது.
கதாநாயகன் துப்பாக்கி மட்டுமே, அசால்டாகச் சுட்டாலும், இலக்கைச் சரியாக அடைந்து எதிரியைக் கொல்வதும், மெலிதான கதாநாயகர்கள் கூட கட்டு மஸ்தான எதிரிகளைப் பந்தாடுவதும், நிஜ வாழ்க்கைக்கு முரணானது என்றாலும், அதனை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை நம்முள்ளே ஏற்படுத்தி விட்டார்கள். அதற்குக் காரணம்,அநியாயத்தைக் கண்டு ஒவ்வொரு மனிதனின் ஆழ் மனத்திலும் ஒரு கோபம் கொப்பளிப்பதாகவும், தன்னால் முடியாவிட்டாலும் தன் கதாநாயகனாவது அநியாயத்திற்கு எதிரானவர்களை அடித்துத் துவம்சம் செய்வதை நாம் ஏற்றுக் கொண்டு விடுவதாகவும் உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ‘வாத்தி’ படத்தைப் பார்க்க, அதே எண்ணத்துடன்தான் சென்றோம். ஆனாலும் நடந்ததோ அதற்கு நேர் எதிர் காலத்திற்கேற்ற கதையும், நடைமுறைச் சாத்தியங்களான காட்சி அமைப்புகளும், (சில இடங்கள் தவிர) இறுதி வரை தன் மாணாக்கர்களுக்காகப் போராடும் உண்மையான குருவும், சிறு வயதினருக்கே உரித்தான தப்பும் தவறுகளும், அப்புறம் யாருக்கும் பயப்படாமல் நியாயத்திற்காகவும், தன் ஆசிரியருக்காகவும் எதையும் செய்யத் தயாராகும் மாணாக்கர்களுமாக, களை கட்டியது படம். இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஓடிய படத்தில் எங்கும் தொய்வில்லை.
‘நல்ல ஆசிரியர்களே சிறந்த சமுதாயத்தை உருவாக்குகிறார்கள்.’ என்பது என்றைக்கும் பொய்ப்பதில்லை.
’சமுத்திரத்தை நீந்திக் கடக்க முடியாது.’என்று ஒருவர் சொல்ல,’எங்க வாத்தியாரல கூடவா முடியாது?’என்று ஒரு மாணவன் கேட்டானாம். மாஸ்டர் மீது மகத்தான நம்பிக்கை.
மூன்றாந்தர டீச்சர்களை மட்டுமே அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பத் திட்டம் தீட்டி, அதில் வெற்றியும் பெறும் திருப்பதி (சமுத்திரக்கனி)யை, பாலமுருகனாக வரும் தனுஷ் ஏமாற்றி விடுகிறார். அதாவது ‘ப்ரமோஷன்’ பெறுவதில் குறியாக இருந்து, பள்ளிக்கே வராத மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அழைத்துப் பேசி, கல்வியின் மாண்புகளை எடுத்துக் கூறி, நூறு விழுக்காடு ரிசல்டைக் கொண்டு வந்து விடுகிறார். தன்னைத் திருப்பதி பாராட்டிப் ப்ரமோஷன் அளிக்கப்போகிறார் என்று எதிர்பார்த்த பாலமுருகனுக்குப் பரிசாகக் கிடைப்பது, ஏச்சும், பேச்சும், எளக்காரமும் மட்டுமே.

தனுஷின் கதாபாத்திரம், நல்லாசிரியரின் ஆழ் மனத்தை அப்படியே பிரதி பலிக்கிறது!
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் நமது கிராமங்கள் ஒரு சிலரின் பிடியில்தான் உள்ளது என்ற எதார்த்தம் மனதை நோகச் செய்கிறது! பொருளாதாரப் பரவல் இன்னும் வேகம் பெற வேண்டும். ஒரு சிலர் கையில் மட்டுமே பெரும் பொருளாதாரம் குவிவதைத் தடுக்க வேண்டும்.
காவல் துறையின் பெரும்பாலானவர்கள் காசுக்கும்,காசு வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே பணியாற்றுவதைத் தடுக்க அரசு என்ன செய்யப் போகிறது?
ஆமாம்! கதாநாயகன் பலரை அடித்துப் போடும் பார்முலாவுக்கு எப்போதுதான் விடுதலை கொடுப்பீர்கள்? நடுவில் பாலச் சந்தர் அதிலிருந்து எதார்த்தத்துக்கு மாற முயன்றார்! வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏற வேண்டுமா?
நமது தமிழ் நாட்டில் ‘வாத்தி’என்ற சொல் அவ்வளவு மரியாதைக்கு உரிய சொல் அல்ல!
அட்லீஸ்ட் ‘வாத்தியாரு’ என்று வைத்திருக்கலாம்.மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் சந்தோஷத்தைத் தந்திருக்கும்.
இது போன்ற நல்ல படங்களின் மூலம் கல்வி பிரசாதம் ஆக்கப்படுமா?
ஆக்கப்படலாம்! மக்களாகிய நாம் முயன்றால்!
-ரெ.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.