வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்நடந்த... ஒரு நிகழ்வு... பொங்கலுக்கு மகனின் ஊருக்கு செல்ல இருந்ததால் பரபரப்பாக துணிமணிகளை பேக் செய்து கொண்டு இருந்தேன்., காய்கறி எதையும் வாங்கி வைக்கவில்லை.. ஊரிலிருந்து வந்த பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
மதியம் 2 மணி அளவில் எனது நெருங்கிய தோழி தனது மகன் மற்றும் மருமகளுடன் (புதிதாக திருமணமான) எங்கள் வீட்டிற்கு வருவதாக அலைபேசியில் கூறினார். (விழுப்புரத்தில் இருந்து ) இரவு ஊருக்குப் போவதை சொல்லவும் முடியவில்லை சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.. எப்பொழுது வருவாய் என்று கேட்டதற்கு நான்கிலிருந்து ஐந்து மணிக்குள் வந்து விடுவோம் என்றும் அதன்பிறகு சென்னையில் ஒரு வரவேற்புக்கு செல்லவேண்டும் என்றும் கூறினாள்.

மதியம் விழுப்புரத்தில் சாப்பிட்டுவிட்டு நேரே கிளம்பி வருவதாக கூறினாள். இரண்டு நிமிடம் யோசித்தேன் சட்டென்று சுதாரித்தேன். மனதிற்குள் பச்சை பட்டாணி வீட்டில் இருப்பது நினைவுக்கு வர .. அவர்களுக்கு கொடுக்க
பட்டாணி சூப், பட்டாணி கட்லெட், காரசாரமான ஸ்பைஸி பட்டாணி நூடுல்ஸ், ஹாட் காபி என்று மெனுவை முடிவு செய்தேன். ஆபத்தானவன் அனாத ரட்சகன் போல் எனது வீட்டில் இருந்த பச்சை பட்டாணியை கொண்டு நான் வீட்டில் செய்து அசத்திய ரெசிபிகளின் செய்முறைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
ஹாட்பட்டாணி சூப் '.
பச்சை பட்டாணி _ஒரு கப்
பெரிய வெங்காயம் _ஒன்று இஞ்சி _சிறு துண்டு
பூண்டு _2 பல்
உப்பு_ தேவையான அளவு மிளகுத்தூள் _தேவையான அளவு மல்லித்தழை _ஒரு கைப்பிடி எலுமிச்சம்பழச் சாறு _ஒரு டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் _ஒரு டேபிள்ஸ்பூன்
பூண்டு, இஞ்சி, வெங்காயம் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கி,வெண்ணெயைக் காயவைத்து நறுக்கிய எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி பிறகு முக்கால் கப் பட்டாணி ,மல்லித்தழை சேர்த்து வதக்கி, அதோடு 3 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேகவிட்டேன்..

பட்டாணி நன்கு வெந்த பிறகு நீரை வடித்து தனியே வைத்துவிட்டு, வடிகட்டிய காய்களை நன்கு அரைத்து எடுத்து, அரைத்த விழுதை வடித்து வைத்திருக்கும் தண்ணீருடன் கலந்து மீண்டும் வடிகட்டி மிளகுத்தூள், எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மீதியிருக்கும் கால் கப்பட்டாணியை உப்புப்போட்டு வேகவைத்து கடைசியாக சூப்பில் மிதக்கவிட... கமகமன்னு பட்டாணி சூப் ரெடியானது.
அடுத்தது 'கமகம பட்டாணி கட்லெட்'
பட்டாணி _ஒரு கப் உருளைக்கிழங்கு_ 2
பெரிய வெங்காயம்_ ஒன்று கரம்மசாலா _ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய மல்லித்தழை _சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு_ சிறிதளவு மிளகாய்த்தூள் _ஒரு டீஸ்பூன் மைதா_ கால் கப்
பிரெட் தூள் ,உப்பு ,எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை
பச்சைபட்டாணி, உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு மசித்துக் கொண்டேன். அதோடு மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, கரம் மசாலா, எலுமிச்சைச் சாறு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசைந்து வேண்டிய வடிவத்தில்செய்ய...( நான் செய்தது வடிவம்) மைதாவில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து கட்லெட்டுகளை அதில் முக்கி பிரெட் தூளில் புரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்க... சுட சுட சுட பட்டாணி கட்லெட் ரெடி ஆனது

அடுத்தது 'காரசாரமான ஸ்பைசி பட்டாணி நூடுல்ஸ்.'
தக்காளி நூடுல்ஸ்_ 2 பாக்கெட்
பச்சை பட்டாணி _ஒரு கப்
பெரிய வெங்காயம்_ 2
இஞ்சி _சிறு துண்டு
பூண்டு _ஒரு பல்
சீரகம் _ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் ,தனியாத்தூள்_ தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு தேவையான அளவு.
நூடுல்ஸை இரண்டு நிமிடம் கொதிநீரில் போட்டு நன்கு வடித்து எடுத்தேன். பட்டாணியை வேகவைத்து நீரை வடித்துவிட்டு கையால் மசித்தேன். வெங்காயத்தை நீள நீளமாக மிகவும் சன்னமாக நறுக்கினேன். இஞ்சி, பூண்டு ,சீரகம் மிளகாய்த்தூள், தனியாத்தூள் ஒன்றாகச் சேர்த்து நைஸாக மிக்ஸியில் அரைத்தெடுத்தேன். வாணலியில் எண்ணெயை காயவைத்து வெங்காயத்தை வதக்கி அத்துடன் அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கி மசித்த பட்டாணி சேர்த்து கிளறி கடைசியாக உப்பு, நூடுல்ஸ் சேர்த்து கிளறி இறக்க, காரசாரமான ஸ்பைசி பட்டாணி நூடுல்ஸ் என்னை பார்த்து கண்ணடித்தது.
அடுத்தது ஃபில்டர் காஃபி..தயார்.

நான் செய்து முடிக்கவும் அவர்கள் வரவும் மிகவும் சரியாக இருந்தது ஒரு பௌலில் சூப் , ஒரு பௌலில் ஸ்பைஸி நூடுல்ஸ் மற்றும் பீஸ் கட்லெட் வித் தக்காளி சாஸ் வைத்து அவர்களிடம் கொடுக்க.. தோழியின் மகனும், மருமகளும் செம டேஸ்டா இருக்கிறது ஆன்ட்டி என்று சொல்லி.. கூடக்கொஞ்சம் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள்.
எனக்கு சந்தோஷமாக இருந்தது. சுடச்சுட காபிபோட சமையலறைக்குச் செல்ல.. ஆன்ட்டி ,உங்கள் பட்டாணி சூப் வயிற்றை மட்டுமல்ல மனதையும் முழுமையாக நிறைந்(த்)துள்ளது . அதனால் காபி வேண்டாம் என்று புதிய மருமகள் கூற தோழியும் அதை ஆமோதித்தார். பிறகு தாம்பூலம் கொடுத்து ஆசிர்வதிக்க.... அவர்கள் சென்றனர்.
என்னை இக்கட்டில் இருந்து காப்பாற்றிய பச்சைபட்டாணி க்கு முத்தமிட்டு நன்றி சொன்னேன்.பி.கு. எப்ப வெளியூர் செல்வதாக இருந்தாலும் ஏதேனும் 2,3 காய்கறிகளை கண்டிப்பாக குளிர்சாதனப் பெட்டியில் இருப்பில் வைத்துவிட்டுத் தான் செல்ல வேண்டும் என்பதுஇந்நிகழ்விலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.