வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
ஏன் இந்த இரவு கடத்த முடியாமல் நகர்கிறது ஆழ்மனதை ஹைட்ராலிக் பிரஷர் கொண்டு அழுத்திக் கொண்டே இருப்பவர் யார்? கனகனமாய் வலி அதிகரித்துக் கொண்டே உள்ளதே.
இரவு 11 மணி ஆகிறது. விழிகள் தூக்கத்தை தழுவ எவ்வித முயற்சி மேற்கொள்ளாமலே வெறித்துக் கொண்டு உள்ளனவே.ஒரு படபடப்பும் ஒரு பயமும் விட்டு விட்டு வந்து கொண்டுள்ளது. ஒரு குற்ற உணர்வும் மனப்பிதற்றலும் மாறி மாறி உறுத்திக் கொண்டே உள்ளது.
இதற்கு முன்பு இப்படியான வலி அனுபவங்கள் எனக்கு இல்லை. இப்பொழுது ஷீரோ என்ன செய்து கொண்டிருப்பான்? கடும் பனியாக உள்ளது. மார்கழிப் பனி என்ன செய்யும் என்பதை அறிந்து கொள்ளாமல் இருப்பதற்கு நாம் என்ன நாய் பிறவியா? சொல்லுங்கள். ஷீரோவிற்கு ஒதுங்க இடம் கிடைத்திருக்குமா? விட்டுவிட்டு மழை தூறுகிறது. ஒதுங்க இடமில்லை என்றால் மண்ணை பறித்து ஒட்டி படுத்துக் கொள்வானே! அங்கும் இங்கும் ஓடி அலைவானே. ஐயோ...! ஷீரோ எப்படி இருக்கிறாய் எங்கு இருக்கிறாய்?

அன்று என் மகள் அடம் பிடிக்காமல் இருந்திருந்தால் நீ வந்திருக்க மாட்டாய். நான் வேண்டாம் என பிடிவாதம் செய்திருந்தால் எனது மகளும் உன்னை அழைத்து வந்திருக்க மாட்டாள்.
வெளியூர் சென்று வந்த என்னிடம் அப்பா... உனக்கு ஒரு சர்ப்ரைஸ் எனக் கூறி நான் வேண்டாம் என சொன்ன உன்னை காண்பித்த பிறகு உன்னை எப்படி வேண்டாம் என சொல்வேன்? என் செல்ல மகளின் விருப்பமாயிற்றே. உன்னை எப்படி வெறுப்பேன்?
அன்று நீ பிறந்து ஒரு மாதம் காலம் கூட ஆகிருக்க வாய்ப்பில்லை. மெலிந்து எலும்பு தெரிய இருந்தாய். உன் கால் பாதத்தில் ஒரு வெட்டு காயம் இருந்தது. கழுத்தில் கடி போன்ற செந்நிற புண் இருந்தது. ஆங்காங்கே உதிர்ந்த ரோமம், உண்ணியும் பேனும் உன்னை உறிஞ்சி கொண்டிருந்தது. வெள்ளை நிற முடியும் சாம்பல் நிறமாகும் அளவிற்கு நீ அழுக்கு பையனாய் வந்திருந்தாய். என்னைத் தவிர என் வீட்டில் உள்ள அனைவரும் உன்னை தேர்ந்தெடுத்து விட்டார்கள்.
உனக்கென ஒரு பிளாஸ்டிக் தட்டு, அட்டைப்பெட்டி வீடு, எக்ஸ்ட்ரா கால் லிட்டர் பால் என தயார்படுத்தி விட்டார்கள். போதாக்குறைக்கு அப்பா... ஷீரோவிற்கு கழுத்துக்கு ஒரு காலரும், ஒரு செயினும் வாங்கிடு. மறக்காம அதை குளிக்க வைக்க ஒரு நல்ல சோப்பு வாங்கிட்டு வாப்பா. டுமாரோ டாக்டர்கிட்ட கொண்டு போகணும் பா என கட்டளையிடும் மகளிடம் எப்படி மறுப்பு தெரிவிப்பேன் நீ வேண்டாம் என்று.

நாங்கள் உண்ட மிச்ச மீதிக்கு நீ வரவில்லை என்பதை நான் நன்கு அறிகிறேன். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் பிறர் உயிர்ப்பால் கருணை காட்டுவதில் வாடும் பயிரை கண்டு வாடும் வள்ளலார்கள் என்பதை நீ அப்பொழுது உணர்ந்து இருப்பாய் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், இன்று நீ எங்களை எவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நாங்கள் வருவோம் என்ற நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறாயா? தவறுதலாக வழி மாறி வந்து விட்டோம் உன்னை தேடி நாங்கள் வருவோம் என நம்பிக்கொண்டிருக்கிறாயா?உன் சக்திக்கு மீறி உன் மோப்ப சக்தியை பயன்படுத்தி எங்களைத் தேடிக் கொண்டிருக்கிறாயா?
ஒரு நாள் உன்னை விளையாட்டுக்கு வெளியே தள்ளி கேட்டைச் சாத்தியதும் நீ பட்ட பாட்டை அறிந்தோம். உன் கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்ததை கண்டு மனம் கரைந்தோம். கேட்டை திறக்க நீ செய்த பாவனையையும் அதற்காக நீ எழுப்பி ஐயோ... பாவம்! எனச் சொல்லும் அளவிற்கு உண்டாக்கிய உன் அழுகுரலும் இன்னும் அங்கே உள்ளதடா ஷீரோ.
கேட்டை திறந்ததும் நீ ஓடி வந்து என் கால்களின் கால்களின் இடுக்கில் அமர்ந்து கால் மீது தலை வைத்து ஆறுதல் தேடிய கணங்கள் காட்சிகளாய் கண்களின் முன் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.

ஏரி மேட்டில் நீயும் உன்னுடன் பிறந்தவர்கள் என 9 பேர் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவர் மேல் ஒருவர் படுத்து கொண்டிருந்தீர்கள். அதில் ஒருவன் இறந்து கிடந்தான். உங்கள் அருகில் கிடந்தான் யாரோ ஒருவர் உடைந்த சட்டியில் கொஞ்சம் பால் ஊற்றி இருந்த அடையாளம் தென்பட்டது. இவற்றைக் கண்டு கடந்துப் போய்க்கொண்டிருந்தேன். பின் இருக்கையில் இருந்த என் மகள்,அப்பா... நாய்க்குட்டிங்க ரொம்ப அழகா இருக்குபா! நாம ஒன்னு அதுல எடுத்துக்கலாம் பா என்றாள். வேண்டாமா... நமக்கு ஏனோ அது ஒத்து வர்றதில்ல. இதுக்கு முன்ன நாம கொண்டுவந்த ரெண்டு நாய்க்குட்டிங்க ஒரு நாள் கூட நம்ம கூட இருந்ததில்லை. அது கத்துற சத்தம் கேட்டாலே பாவமா இருக்கு நமக்கு இதெல்லாம் ஒத்து வராது என்றவாறு சென்றுவிட்டேன்.
எவனோ ஒருத்தன் தாயிடம் இருந்து பிரித்து அந்த ஒன்பது நாய்க்குட்டிகளை ஏரி மேட்டில் வீசி விட்டு சென்றிருக்கிறான். அதில் ஒன்று இறந்து போயிருந்தது. எட்டில் ஏழு ஒரே நிறம் பிரவுன். அனைத்தும் பெண்குட்டிகள். ஒரே ஆண். வெள்ளை நிறம். எங்க ஷீரோ!
அந்த ஷீரோவை தான் கொண்டு வந்து எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தாள் என் மகள்.
இன்று அந்த ஷீரோவிற்கு என்னவாயிற்று?
திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் ஷீரோ எங்கள் தெருவில் என் மனைவி குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாரா விதமாக அந்த தெருவின் வழியே இரண்டு நாய்கள் வந்து கொண்டிருந்தன. ஒன்று வெள்ளை நிறம் மற்றொன்று பிரவுன்.
ஷீரோ அவைகளைப் பார்த்து குதுகலித்தது. சிறிய குரலில் அவைகளை மிரட்டும் தொணியில் குறைத்தது. ஓடி வந்து என் மகளின் காலடியில் பாதுகாப்புக்கு அண்டியது. மீண்டும் தன் இன நாய்கள்தானே என அவற்றோடு விளையாட ஆரவாரம் செய்தது.

அருகே வரவரத்தான் தெரிந்தது. அந்த இரண்டு நாயில் ஒன்றுக்கு அதாவது பிரவுன் நிறத்தில் இருந்த நாயிக்கு கழுத்தில் ஒரு பெரிய கட்டி அதன் இடது பக்கம் அடிபட்டு ரத்தக்காயங்களோடு இருந்தது. அதை கண்டதும் ஷீரோவை மீட்க சென்றதுதான் தாமதம் அந்த நாய் ஷீரோவைக் கவ்வி பிடித்தது. வலியால் சீரோ கத்தினான். எனது மகள் சத்தம் போட்டு அழ ஆரம்பித்து விட்டாள். எனது மனைவி கையில் இருந்த தடியால் அந்த நாயை அடித்து மிரண்டு போன ஷீரோவை மீட்டாள். மிரண்டு போன ஷீரோ பயந்தவாறு வந்து என் மகளின் கால்களிடம் அடைக்கலம் அடைந்தது.
கடித்த நாய் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு மெதுவாக அங்கிருந்து நகர்ந்தது சென்றது.
ஷீரோ அன்று இரவும் முழுவதும் பயந்து கிடந்தான். பாலும் சரியாக குடிக்கவில்லை. எங்களுக்கு மன வருத்தம் நீடித்துக் கொண்டிருந்தது. என் மனைவி ஆரம்பத்தில் நாய்க்குட்டி வேண்டுமென என் மகளோடு சேர்ந்து அடம் பிடித்தவள், அது வீட்டை சுற்றி சுற்றி அசுத்தம் செய்வதை காரணம் காட்டி எங்கேயாவது கொண்டு போய் விட்டு விடலாம் என்றாள். நானோ ஆரம்பத்தில் நாயே வேண்டாம் என்றவன் இருந்த கொஞ்ச நாளில் அது பிடித்து போக, வேண்டாம்... இருக்கட்டும். குட்டி தானே போக போக பழகிக்கும் பாத்துக்கலாம் என்று மறுத்த மறுநாளே இந்த அசம்பாவிதம் நடந்து விட்டது.
மறுநாள் செவ்வாய் காலை கால்நடை மருத்துவரிடம் நடந்ததை எல்லாம் சொல்லி மருந்தும் ஊசியும் கேட்டேன் மருத்துவர் ராபிஸ் இன்ஜெக்ஷன் போட்டவர், மூன்று நாள் இடைவெளியில் ஐந்து முறை ஊசி தொடர்ந்து போட வேண்டும் என்றார். நானும் சரியென்றேன்.

சார் ஒரு அட்வைஸ் என அங்கிருந்துச் செல்லும் என்னை நிறுத்தினார்.உங்க ஷீரோவை கடிச்சது ஒரு வெறிநாய். இந்த பாதிப்பு ஷீரோ மூலம் உங்களுக்கும் வரும் சான்ஸ் அதிகம். இப்ப அந்த ஷீரோ வேண்டுமா? வேண்டாமா? என்ற முடிவு நீங்க தான் எடுக்கணும் என்றார். முதல்ல குழந்தைங்க கையில ஷீரோவை கொடுக்காதீங்க. ஃபர்ஸ்ட் பாப்பா கிட்ட இருந்து அதை வாங்குங்க என்றார்.மறுபடியும் சொல்றேன் ஷீரோ உங்க கூட இருக்கிறது அன்சேப். அப்புறம் உங்க விருப்பம் என்றார் கடைசியாக.
மனம் கனத்து போயிருந்தது. ஷீரோவை பார்க்கும் சக்தியை இழந்து விட்டேன். அவன் பாவமாக இருப்பான்.
உன்னை எப்படி விட்டு செல்வேன்? ஓடி வந்து கால்களைப் பற்றிக் கொள்வாய், பின் தொடர்ந்து ஓடி வருவாய், அதன் வலியை நான் எப்படி அனுபவிப்பேன்? ஒரு ஓட்டத்திற்கு பிறகு உன்னை தொலைத்து விட்டு போகத்தான் விட்டு விட்டுப் போகிறேன் என நீ உணரும் தருணத்தில் உன் எண்ணத்தில் நான் என்னவாக இருப்பேன்? நீ என்னவெல்லாம் நினைப்பாய்? இந்த நாய் அன்னைக்கு என்னை அனாதையா விட்டிருந்தா அன்றைக்கே செத்திருப்பேன். இன்னைக்கு உயிரோடு கொன்னுட்டு போறானே என நினைப்பாயா? ஷீரோ என்னை மன்னித்துவிடு.
மனிதனை நம்பி ஏமாந்து போய் ஒருவேளை எச்சி சோற்றுக்கு தெருநாய்களாய் திரியும் நன்றியுள்ள இந்த நாய்கள் மிகப் பெரிய வேட்டைகாரர்கள். காட்டில் இருந்து நாகரிக மனிதனுக்கு விசுவாசமிக்க பிராணியாக வந்தவைகள். இன்று எச்சை சோற்றுக்கு தெருவில் கல்லடிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனிதனை நம்பி மோசம் போன முதல் பிராணி இந்த தெருநாய்கள்.
எதுவொன்று தன் அடையாளத்தை மறைத்து வாழ்கிறதோ அது கல்லடி பட்டுக் கொண்டே இருக்கும்.
-கௌரிலிங்கம்
பென்னாகரம்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.