வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்
கோவையில் குடியேறிய புதிதில், ஒருமுறை எனது மகனின் சைக்கிள் பழுதடையவே, அதனை சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடைக்கு எடுத்துச் சென்றேன். அந்தக் கடையின் வாசலில் ஒரு முதியவர் நின்று கொண்டிருந்தார். என்னிடம் ஓனர் இன்னும் வர்லீங்க.. நான் ரிப்பேர் பண்ணித் தர்றேன் என்றார்.
நீண்ட தூரம் சைக்கிளை தள்ளிக் கொண்டு வந்த நான், களைப்பில் சரி என்றேன். அந்த மனிதர் ஸ்பேர்பார்டஸ் எங்கிட்ட இல்ல, வேற கடையில தான் போய் வாங்கனும், இருநூறு ருபாய் குடுங்க, சைக்கிளயும் எடுத்துட்டு போய் வாங்கிட்டு வர்றேன் என்றார்... என்னிடம் ஐந்நூறு ரூபாய் நோட்டு தான் இருந்தது. அவரிடம் அதைக் கொடுத்தேன். பத்து நிமிஷத்துல வந்துடறேன் என்று கூறி சைக்கிளை எடுத்துக் கொண்டுச் சென்றவர்., அரைமணி நேரம் ஆகியும் வரவில்லை. இதற்கு நடுவில் அக்கடையின் ஓனர் அங்கு வந்தார்.

அவரிடம் நடந்ததைக் கூறினேன். அவரோ, ஏதோ கோபத்தில் இருந்தார் போலும், பிடிகொடுத்து பேசவில்லை. அவர் பேசியது அவருக்கும் , என் சைக்கிளை எடுத்துச் சென்ற மனிதருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது போல் இருந்தது..
நானோ,.. அறிமுகமில்லாத மனிதரிடம் சைக்கிளையும் கொடுத்து கொஞ்சம் பணத்தையும் கொடுத்து முட்டாள்தனமாக நடந்து கொண்டு விட்டோமோ என கவலைப்பட ஆரம்பித்தேன்.
சைக்கிளை எடுத்துக் கொண்டு மனிதர் எஸ்கேப் ஆகிவிட்டாரோ? என்றெல்லாம் கற்பனை செய்தேன். இந்த கடை ஓனர் வேறு எதுவும் பேசாமல் இருக்கிறாரே என நொந்து கொண்டேன். தெருவையே பார்த்துக் கொண்டே இருந்ததில், தூரத்தில் அந்த மனிதர் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தது தென்பட்டது. அப்பாடி என்றிருந்தது எனக்கு. அவர் கடைக்கு வந்து சாரிம்மா.. ஸ்பேர்பார்ட்ஸ் பக்கத்து கடைல கிடைக்கல.. வேற கடைக்கு கொஞ்சம் தூரம் போக வேண்டியதா போச்சு. அதான் லேட்டு என பேசிய படியே சைக்கிளை சிறந்த முறையில் ரிப்பேர் செய்து அதற்கு மிகக் குறைந்த கூலியே வாங்கிக் கொண்டார்.

அவரைத் தவறாக நினைத்து விட்டோமே என என்னை நானே கடிந்து கொண்டேன். சில சமயங்களில் மனிதர்களையும் அவர்களின் ஏழ்மை நிலையையும் எண்ணித் தப்புக் கணக்குப் போட்டு விடுகிறோம். அது தவறு என்று அவரின் செயல் எனக்கு உணர்த்தியது.
ஒருமுறை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றிருந்தேன். அம்மனுக்கு மலர்மாலை வாங்குவதற்காக கோபுர வாசலின் அருகில் இருந்த பூவிற்கும் ஒரு வயதான பெண்மணியிடம் பூமாலைக் கேட்டேன். அவரோ என்னிடம், அஞ்சு நிமிஷம் காத்திரும்மா, டக்குன்னு கட்டித்தர்றேன் என்றார். சரி என்று அங்கு நின்றேன்.

அவர் என்னிடம் பேசியபடி பூமாலைத் தொடுக்க ஆரம்பித்தார். பேச்சினூடே, அவர் இந்த கோவிலின் வாசலில் பல வருடங்களாக பூக்கள் விற்பதாகவும்,. காமாட்சி அம்மனின் அருளால் தான் அவரின் மூன்று மகள்களுக்கும் திருமணம் முடித்து வைத்ததாகவும் கூறினார். அம்மனின் அருளால் தான் எல்லாம் நடந்து கொண்டிருப்பதாக கூறினார்.. பூக்கள் கட்டுவதையும் ஆனந்தமாக செய்து கொண்டு, தன் கடமைகளையும் முடித்து,,, இறைவனிடம் சரணாகதி அடைந்த அவரின் மனம்..., வாழ்வில் அனைவருக்கும் அவசியம்..
எனக்கு கனகாம்பரம் பூக்கள் கட்டி கடவுள் படங்களுக்கு மாலையாக போடுவது மிகவும் பிடித்த விஷயம். பூக்கள் கட்டுவது தியானத்திற்கு சமம் என நினைப்பவள் நான். தெருவில் செல்லும்போது உதிரிப்பூக்கள் இருந்ததால் வாங்கி விடுவேன். அப்படித்தான் ஒரு நாள், ஒரு பெண்மணி உதிரி கனகாம்பர பூக்களை விற்றுக் கொண்டிருந்தார்.

அவரிடம் நான் ஒரு கவரில் இருபது ரூபாய்க்கு உதிரிப்பூக்கள் கேட்டேன். அவர் என்னிடம் இந்தப் பூக்களை வாங்கி என்ன செய்வீங்க எனக் கேட்டார். நான் அவற்றை மாலையாக கட்டி கடவுளர்களுக்குப் போடுவேன் என்றேன். அவர் ஒரு நொடி யோசித்துவிட்டு, அப்டின்னா இந்தாம்மா.. இங்க இருக்கற எல்லா பூவையும் நீயே எடுத்துட்டுப் போய் கட்டிடு. சாமிக்கு நீ போட்டா என்ன.. நான் போட்டா என்ன.. எனக் கூறி என்னிடம் அனைத்துப் பூக்களை யும் கொடுத்து, அதற்கான பணத்தை வாங்கமறுத்தார்.
எனக்குக் கொஞ்சம் டயர்ட் ஆ இருக்கு இன்னிக்கு, நீயே எடுத்துக்கோ பூவெல்லாம்..என மீண்டும் கூறினார். அவர் நினைத்திருந்தால் அந்தப் பூக்களை இன்னும் பத்து நிமிடங்கள் அங்கேயே வைத்திருந்தால் கண்டிப்பாக யாராவது வந்து வாங்கிக்கொண்டு இருந்திருப்பார்கள்.. ஆனால் அதை வைத்து பணம் பண்ணும் ஆசையில்லை அவருக்கு. நாளைக்குள் வாடிவிடும் பூக்களை அடுத்தவர்களுக்குக் கொடுத்துவிட்டு, அவை வீணாக போய்விடக்கூடாது என்ற அவரின் நினைப்பு ... நாளைக்கு என்றாவது உபயோகப்படும் என நினைத்து தேவையில்லாமல் பல குப்பைகளை வீட்டில் சேர்த்து சேர்த்து பத்திரம் செய்யும் அனைவருக்கும் ஒரு பாடம்.

அடுத்தப் பெண்மணி,, என் வீட்டிற்கு வந்து துணிகளை வாங்கிச் சென்று இஸ்திரி போட்டுத் தருபவர். வயதானவர்.. வந்தால் சிறிது நேரம் பேசிவிட்டுச் செல்வார். உரிமையாக தண்ணீர், மோர் எனக் கேட்டு வாங்கிக் குடிக்கும் பழக்கமுடையவர்.
தீபாவளி அல்லது பொங்கலுக்கு புடவைகள் வைத்துக் கொடுத்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார். அவரிடம் நான், ஏன் இந்த வயசான காலத்துல ரெஸ்ட் எடுக்காம கஷ்டபட்றீங்க? நிம்மதியா வீட்ல இருக்கலாமே நீங்க என ஒருமுறை கேட்டேன். அதற்கு அவர் அது எப்டிம்மா.. என் பிள்ளைங்களுக்கு அவங்கவங்க குடும்பம், பசங்கள படிக்க வக்கனும்..அவங்களும் கஷ்டபட்றாங்க.. என்னால முடிஞ்ச வரைக்கும் இந்த வேல செஞ்சு என்ன நான் பாத்துக்கிறேன். எதுக்கு அவங்களுக்கு கஷ்டம் குடுக்கணும் சொல்லு. முடிஞ்ச வரைக்கும் உழைக்க வேண்டியது தான் என பதிலளித்தார். இவரும் ஒரு வாழும் உதாரணம் தான்..
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.