Published:Updated:

ஆன்லைனில் மது ஆர்டர்... கிடைத்தது என்ன தெரியுமா!?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆன்லைனில் மது ஆர்டர்... கிடைத்தது என்ன தெரியுமா!?
ஆன்லைனில் மது ஆர்டர்... கிடைத்தது என்ன தெரியுமா!?

ஆன்லைனில் ஒயின் ஷாப்பைத் தேடியதில் `பாபா ஒயின் ஷாப்' என்ற கடையின் தொடர்பு எண் கிடைத்திருக்கிறது. அந்த எண்ணுக்கு போன் போட்டதும், கடை முதலாளி பேசுவதாகக்கூறி ஒரு நபர் பேசியிருக்கிறார். அவரிடம் ஒரு பாட்டில் ஒயினுக்கு ஆர்டர் தரவும், அதற்கு 420 ரூபாய் பணம் செலுத்துமாறு கூறியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், ஆன்லைன் மூலம் மதுபானம் வாங்க ஆசைப்பட்டு 24,000 ரூபாயை இழந்த சம்பவம், அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள மாதுங்கா பகுதியைச் சேர்ந்த ராம்நரைன் ரூயா கல்லூரியில் பயோகெமிஸ்ட்ரி துறைப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் பிரசாந்த் மசாலி. இவர், கடந்த வாரம் தனது உதவியாளரிடம் ஆன்லைனில் ஒயின் ஆர்டர் செய்யும்படி கூறியுள்ளார். அவரிடம் தனது கிரெடிட் கார்டு மற்றும் மொபைல் எண் விவரங்களையும் கொடுத்திருக்கிறார்.

உதவியாளர், ஆன்லைனில் ஒயின் ஷாப்பைத் தேடியதில் `பாபா ஒயின் ஷாப்' என்ற கடையின் தொடர்பு எண் கிடைத்திருக்கிறது. அந்த எண்ணுக்கு போன் போட்டதும், கடை முதலாளி பேசுவதாகக் கூறி ஒரு நபர் பேசியிருக்கிறார். அவரிடம் ஒரு பாட்டில் ஒயினுக்கு ஆர்டர் தரவும், அதற்கு 420 ரூபாய் பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். பணம் செலுத்துவதற்காக அவரது கிரெடிட் கார்டு எண் மற்றும் ஓ.டி.பி எண் ஆகிய விவரங்களைக் கேட்டிருக்கிறார். உதவியாளரும், கேட்ட விவரங்கள் அனைத்தையும் கொடுத்திருக்கிறார். சிறிது நேரத்தில், ஆன்லைன் பேமன்ட் முயற்சி தவறாகிவிட்டது என்று கூறி, மீண்டும் முயல்வதாகக் கூறியிருக்கிறார். அதேபோல மீண்டும் ஓ.டி.பி எண்ணைக் கேட்டுள்ளார். இம்முறையும் முயற்சி தோல்வியில் முடிந்ததாகக் கூறி மீண்டும் ஓ.டி.பி எண்ணைக் கேட்டிருக்கிறார். இதேபோல கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக, ஆறு முறை முயற்சி செய்திருக்கிறார். உதவியாளரும், கேட்கக் கேட்க சளைக்காமல் ஓ.டி.பி விவரங்களைக் கொடுத்திருக்கிறார்.

அப்போதுதான் பேராசிரியரின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.420, ரூ.4,420, ரூ.4,420, ரூ.4,420, ரூ.5,000 மற்றும் ரூ.5,000 என மொத்தம் 23,680 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன் பிறகு அந்த ஒயின் ஷாப் ஓனர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அந்த எண் பயன்பாட்டில் இல்லை என்பது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்ட உண்மை உணர்ந்ததும், நடந்த விவரங்கள் அனைத்தையும் பேராசிரியரிடம் விளக்கியுள்ளார். மது ஆர்டர் செய்ய நினைத்தவருக்குக் கிடைத்தது என்னவோ 24,000 ரூபாய் வரை தன் கணக்கில் பணம் கரைந்துவிட்ட பேங்க் எஸ்எம்எஸ்-கள் மட்டுமே!

பேராசிரியர், உடனே மாதுங்கா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பிறகுதான் இதேபோல பலரிடமும் அந்த நபர் ஏமாற்றியிருப்பது தெரிந்தது. ஒயின் ஷாப் ஓனர்களே அவரிடம் ஏமாந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த ஏமாற்றுச் செயலில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், ஏமாற்றுக்காரர்களை இந்திய தண்டனைச் சட்டம் 420 பிரிவின்கீழ் கைதுசெய்வதால் அவர்களை `மிஸ்டர் 420' என்று சொல்வார்கள். இந்தச் சம்பவத்திலும் 420, 4,420 என்ற கணக்கில்தான் பணத்தைப் பறித்திருக்கிறார்கள். அந்தத் தொகையைக் கேட்டதுமே உஷாராகியிருந்தால் தப்பித்திருக்கலாம். 

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் திருட்டுகள் அதிகரித்துவருகின்றன. இதுகுறித்த விழிப்புஉணர்வு பொதுமக்களுக்கு மிகவும் அவசியம். அத்தகைய விழிப்புஉணர்வு இல்லாதவர்கள், கூடுமானவரை ஆன்லைன் மூலம் ஆர்டர் தரும் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. இல்லையெனில், இப்படித்தான் யாரோ ஒரு நபரைக் கடை உரிமையாளர் என நம்பி அனைத்து விவரங்களையும் கொடுத்து ஏமாறவேண்டியிருக்கிறது.

ஆன்லைனில் ஆர்டர் தரும்போது உங்களுடைய கிரெடிட் கார்டு எண் மற்றும் உங்களுடைய மொபைல் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி எண் விவரங்களை யார் கேட்டாலும் தராமல் கண்டிப்போடு மறுத்துவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல், அப்படி ஏமாற்று வேலையில் ஈடுபடுவோர் மீது சந்தேகம் வந்தால் உடனடியாக அந்த செல்பேசி எண் விவரத்தையும், அந்த நபர் குறித்தும் அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

ஆன்லைன் மோசடி ஏமாற்றுக்காரர்கள், புதுப்புது ஐடியாக்களுடன் தங்களது ஏமாற்று வேலையை மாற்றிக்கொண்டே வரும் சூழலில், பொதுமக்களின் ஒத்துழைப்பும் விழிப்புஉணர்வும் இருந்தால் மட்டுமே காவல் துறையால் இத்தகைய ஏமாற்றுப்பேர்வழிகளைப் பிடிக்க முடியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு