Published:Updated:

ஆன்லைன் கேமிங்: கொரோனாவால் மக்களுக்குக் கிடைத்த வரமா சாபமா?

ஆன்லைன் கேமிங் - Representational Image ( Image by ExplorerBob from Pixabay )

வெறும் குழந்தை விளையாட்டாகத் தவழ்ந்த கேமிங், இன்று பணம் கொழிக்கும் வியாபாரமாக அசுர வளர்ச்சி பெற்று நிற்கிறது. பதின்ம வயது விடலைகள் மட்டுமன்றி, நன்கு படித்து, பொறுப்பான வேலையில் இருக்கும் நபர்கள்கூட இதற்கு அடிமையாகி உள்ளனர்...

ஆன்லைன் கேமிங்: கொரோனாவால் மக்களுக்குக் கிடைத்த வரமா சாபமா?

வெறும் குழந்தை விளையாட்டாகத் தவழ்ந்த கேமிங், இன்று பணம் கொழிக்கும் வியாபாரமாக அசுர வளர்ச்சி பெற்று நிற்கிறது. பதின்ம வயது விடலைகள் மட்டுமன்றி, நன்கு படித்து, பொறுப்பான வேலையில் இருக்கும் நபர்கள்கூட இதற்கு அடிமையாகி உள்ளனர்...

Published:Updated:
ஆன்லைன் கேமிங் - Representational Image ( Image by ExplorerBob from Pixabay )

மார்ச் 2021-ல் நஸாரா டெக்னாலஜீஸ் பங்கு ஐ.பி.ஒ (Initial Public Offer) வந்தபோது 175 மடங்கு அதிக விண்ணப்பங்கள் குவிந்தன. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா விரும்பி வாங்கியுள்ள பங்கு என்ற தகவல் தீயாகப் பரவி அதன் மதிப்பை அதிகப்படுத்தியது. பங்கு வெளியான முதல் நாள் அதன் லாபம் 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக எகிறியது. ஜுன்ஜுன்வாலா ஏன் அதில் முதலீடு செய்தார், அதிக ரிஸ்க்குகள் நிறைந்த அந்தப் பங்கை மக்கள் ஏன் வாங்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதில், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் தனிப்பட்டு யோசித்து செயல்படாமல், மந்தை மனப்பான்மையுடன் செயல்படுகிறார்கள் என்பதே.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

முதல் கேமிங் பங்கு...

இந்தியப் பங்குச் சந்தையில் வெளியான முதல் கேமிங் பங்கு அது. வீடியோ கேமிங் என்பது ஒரு செலவில்லாத பொழுதுபோக்காக இருந்தது ஒரு காலம். இன்று, கோவிட்டின் வரவுக்குப்பின், அதன் முகம் மாறிவிட்டது. வெறும் குழந்தை விளையாட்டாகத் தவழ்ந்த கேமிங், இன்று பணம் கொழிக்கும் வியாபாரமாக அசுர வளர்ச்சி பெற்று நிற்கிறது. பதின்ம வயது விடலைகள் மட்டுமன்றி, நன்கு படித்து, பொறுப்பான வேலையில் இருக்கும் நபர்கள்கூட இதற்கு அடிமையாகி உள்ளனர். எப்படி நேர்ந்தது இந்த மாற்றம்?

கொரோனாவுக்கு முன்னும் பின்னும்...

சற்று வசதி வாய்ந்த குடும்பப் பிள்ளைகள் போனிலோ, ஐ பேடிலோ, கம்ப்யூட்டரிலோ, மாலில் இதற்கென்று உள்ள களங்களிலோ விளையாடுவதைப் பார்த்திருக்கிறோம். அதை அனுமதித்த பெற்றோர் இது சரியா, தவறா, எவ்வளவு தூரம் அனுமதிக்கலாம் என்று புரியாமல் கவலை தோய்ந்த முகங்களுடன் நிற்பதையும் பார்த்திருக்கிறோம். பிள்ளைகளின் இந்தப் போதை எல்லை மீறாமல் இருக்க அவர்கள் பலவித நடவடிக்கைகள் எடுத்தார்கள்.

ஹோம் ஒர்க், மற்ற வேலைகள் ஆகியவற்றை முடித்த பின்தான் ஆன்லைன் கேமுக்கு அனுமதி என்றார்கள். தினசரி இத்தனை நேரம்தான் விளையாடலாம் என்று எல்லை வகுத்தார்கள். இந்த நேரத்தடைகளை கம்ப்யூட்டரிலேயே அமைக்கும் வசதிகளை உபயோகித்தார்கள். லீவு நாள்களில் அதிகம் விளையாடினால் அடுத்த இரண்டு நாள்களும் ஆன்லைன் விளையாட்டு இல்லை என்று தடை விதித்தார்கள்.

ஊரடங்கு...
ஊரடங்கு...

கம்ப்யூட்டரின் ப்ரவுசர் ஹிஸ்டரியைப் பார்த்து பிள்ளைகள் எந்த கேமில் எவ்வளவு நேரம் செலவு செய்தார்கள் என்பதை அறிந்துகொண்டார்கள். இன்னும் சில புத்திசாலிப் பெற்றோர், தாங்களும் குழந்தைகளுடன் கம்ப்யூட்டரில் விளையாடி உறவை வளர்த்த அதே நேரத்தில், கண்காணிப்பையும் மேற்கொண்டார்கள்.

கொரோனாவுக்கு முன் பிள்ளைகளுக்கு அரணாக நின்ற பெரியவர்களே கொரோனாவுக்குப் பின் இ-கேமில் இறங்க நேர்ந்தது. காரணம், கொரோனா உருவாக்கிய மாற்றங்கள். சமூக இடைவெளியின் பொருட்டு வெளியுலக நடவடிக்கைகள் குறைந்துவிட்டன. இங்கு ஐ.பி.எல்லும், ஐரோப்பாவில் கால்பந்து போட்டிகளும் பார்வையாளர்கள் இன்றி நடைபெறுகின்றன. இசைக் கச்சேரிகள் அருகிவிட்டன. ஒலிம்பிக்ஸ், பாராலிம்பிக்ஸ் போன்ற விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன அல்லது தள்ளிவைக்கப்பட்டன. திரையரங்குகள், விளையாட்டு அரங்கங்கள், உணவுக்கூடங்கள், திருவிழாக்கள் என்று கூட்டம் சேரும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. விளைவு, இதுவரை கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டில் ஈடுபட்டிருந்த பெரியவர்கள் (முக்கியமாக ஆண்கள்) இன்று ஆன்லைன் கேமுக்கு அடிமைகளாகிவிட்டார்கள்.

வேகமாக வளரும் கேமிங் துறை!

உலகப் பொருளாதாரம் நலிவடைந்தாலும், இ-கேமிங் துறை மட்டும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகப் பொலிந்து வருகிறது. காரணம், சினிமா தொழில், மியூசிக் துறை, ஸ்போர்ட்ஸ் துறை போன்ற அனைத்து பொழுதுபோக்குத் துறைகளின் வருமானமும் இன்று கேமிங் துறையின் கையில்.

வெறும் குழந்தை விளையாட்டில் இவ்வளவு பணம் சேர வாய்ப்பில்லை. மொத்த கேமர்களில் 18 வயது முதல் 54 வயது வரை உள்ளவர்கள் 64% என்கிறது ஸ்டாடிஸ்டிகா ஆய்வு. பணம் சம்பாதிக்கும் திறன் பெற்ற இந்த வயதினர் கேமிங்கில் இறங்குவதால் அவர்கள் சம்பாத்தியத்தில் ஒரு பகுதி கேமிங் துறைக்கு வருகிறது.

ஆன்லைன் கேமிங் - Representational Image
ஆன்லைன் கேமிங் - Representational Image
Image by DrMedYourRasenn from Pixabay

நீல்சன் டேட்டா என்னும் நிறுவனத்தின் சர்வேபடி, இந்த ஒரே வருடத்தில் கேம் டவுன்லோட் 40% அதிகரித்துள்ளது. மொத்த கேமிங்கிலும் கிடைக்கக்கூடிய வருமானத்தில் 48% மொபைல் கேமிங் மூலம் வருகிறது. இ-கேமில் இறங்க கம்ப்யூட்டரோ, மொபைல் ஃபோனோ போதும் என்றாலும் கன்சோல், விர்ச்சுவல் ரியாலிட்டி ப்ளே ஸ்டேஷன் போன்ற புதுப்புது கருவிகள் வாங்கினால்தான் மிகச் சிறந்த விர்ச்சுவல் அனுபவத்தைப் பெறமுடியும். ஆகவே நின்டென்டோ, டென்சென்ட், மைக்ரோசாஃப்ட் போன்ற கம்பெனிகள் விற்கும் விலை உயர்ந்த கருவிகளை வாங்க மக்கள் தயங்குவதில்லை. அவற்றிற்கு ஈடுகொடுக்கும் ஹை ஸ்பீட் இன்டர்நெட் கனெக்ஷன், அதிக பேண்ட்வித் போன்றவற்றிற்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

ஒரு கேமை வாங்கும்போது செலவு அத்துடன் நின்றுவிடுவதில்லை. அந்த கேம் அவ்வப்போது அறிமுகம் செய்யும் புதிய அம்சங்கள், கருவிகள், நீட்சிகள் (Expansion Packs) போன்றவற்றையும் வாங்க வேண்டி வருகிறது. லூட் பாக்ஸ் (கேமுக்குத் தேவையான விர்ச்சுவல் பொருள்களை லாட்டரி பரிசாகப் பெறுவது) போன்ற தூண்டில்கள் விளையாடுபவர்களை இன்னும் இன்னும் ஆழத்துக்கு இழுத்துச் செல்கிறது. டெலாய்ட் இந்தியா (Deloitte India) சர்வேபடி, ரம்மி, போக்கர், க்விஸ் நிகழ்ச்சிகள், போர் விளையாட்டுகள் போன்ற பணம் சார்ந்த கேம்களில் இந்தியர்கள் செலவிடும் நேரம் 21% அதிகரித்துள்ளது.

பாசிட்டிவ், நெகட்டிவ் வாதங்கள்...

உலகின் இந்தப் போக்கு நல்லதா, கெட்டதா என்ற விவாதங்களும் நடைபெறாமல் இல்லை. இ-கேம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது; பல வேலைகளை ஒருங்கே செய்யும் மல்டி டாஸ்கிங் திறனை மேம்படுத்துகிறது; முக்கிய முடிவுகளை உடனுக்குடன் எடுக்கும் திறனை அதிகரிக்கிறது; சில கேம்களில் பணம் சம்பாதிக்கவும் முடியும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள். ஆனால், உடல் பருமன் அதிகரிக்கிறது; மனச் சோர்வு, கொடூரத்தன்மை போன்றவை தோன்றுகின்றன; இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது; நிறைய நேரங்களில் பண இழப்புதான் அதிகம் என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

Gaming -Representational Image
Gaming -Representational Image
Image by THAM YUAN YUAN from Pixabay

இனி இ-கேம் நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கப்போவதில் சந்தேகம் இல்லை. இ-கேமின் அங்கமான இ-ஸ்போர்ட்ஸ் பலராலும் விரும்பப்படுகிறது. பல நாடுகளில் இருந்தும் இ-ஸ்போர்ட்ஸ் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, போட்டி நடைபெறுகிறது. இவற்றை ஒளிபரப்பவும், இவற்றில் விளம்பரங்கள் தரவும் விரும்பும் முன்னணி நிறுவனங்கள் ஏராளம்.

இப்படி நாளுக்கு நாள் வளர்ந்துவரும் இ-கேமை முழுமையாகத் தவிர்க்க இயலாது. ஆனால், இதில் ஈடுபடுபவர்கள் வேலை, கல்வி, குடும்ப உறவுகள், பொருளாதாரம் போன்றவற்றிற்கும் உரிய நேரம் ஒதுக்கி, தங்கள் இயல்பு வாழ்வு பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.