Election bannerElection banner
Published:Updated:

``விஜய் சேதுபதி இப்படி செய்யலாமா?’’ கொதிக்கும் வியாபாரிகளும் வி.சே தரப்பின் பதிலும்

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

ஆன்லைனில் பலசரக்குப் பொருள்களை விற்பனைசெய்யும் தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருப்பது, தமிழக வியாபாரிகள் இடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

தன்னுடைய அசாத்தியமான நடிப்பால், தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் முத்திரை பதித்துவருபவர், நடிகர் விஜய் சேதுபதி. சாமான்ய மக்களின் மனம் கவர்ந்த வசீகரத்தால் 'மக்கள் செல்வன்' என்கிற பட்டமும் அவரைத் தேடிவந்தது. சமீபத்தில், ஆன்லைன் மூலம் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பது வணிகர் சங்கத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் சேதுபதி நடித்த விளம்பரம்
விஜய் சேதுபதி நடித்த விளம்பரம்
தியேட்டரில் படம் பார்க்காமல், தமிழ் ராக்கர்ஸில் ஆன்லைன் மூலமாகப் படம் பார்த்தால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
- கே.எஸ்.எம்.கார்த்திகேயன்

ஆன்லைன் மூலமாக மளிகைப் பொருள்களை விற்பனை செய்வதற்கு தமிழக வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளிடமிருந்து நேரடிக் கொள்முதல் செய்வதாகக் கூறி பொருள்களை வாங்குபவர்கள், அதை பதப்படுத்தி விற்பதால் மக்களின் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். சமீபத்தில்கூட, கோயம்பேடு சந்தையில் அழுகிப்போன காய்கறிகளைக் கொட்ட வந்த தனியார் ஆன்லைன் பலசரக்கு வாகனத்தை மடக்கிய கோயம்பேடு காய்கனி வியாபாரிகள், சாலை மறியல் போராட்டத்தில் ட்டனர்.

ஆன்லைன் வர்த்தக விவகாரம் சூடு பறக்கும் இந்நிலையில், பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம், ஆன்லைன் மூலமாக பலசரக்குகளை விற்பதற்கு சமீபத்தில் விளம்பரம் செய்திருந்தது. இவ்விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது. விஜய் சேதுபதியைக் கண்டித்து, அவரது ஆழ்வார் திருநகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

கே.எஸ்.எம்.கார்த்திகேயன்
கே.எஸ்.எம்.கார்த்திகேயன்

அப்பேரவையின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.எஸ்.எம். கார்த்திகேயனிடம் பேசினோம். “ஆன்லைன் மூலமாகப் படம் பார்ப்பதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கும் நடிகர்கள், லட்சக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் ஆன்லைன் வர்த்தகத்துக்கு மட்டும் ஆதரவு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. தியேட்டரில் படம் பார்க்காமல், தமிழ் ராக்கர்ஸில் ஆன்லைன் மூலமாகப் படம் பார்த்தால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? மக்கள் செல்வனாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர் இப்படிச் செய்யலாமா?

'விஸ்வரூபம்' படத்தை நேரடியாக ஆன்லைன்மூலம் வெளியிடப் போவதாக நடிகர் கமல்ஹாசன் கூறியபோது, சினிமாத் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சினிமா தொழில் நசிந்துவிடும் என்றனர். அப்போது கசந்தது, இப்போது இனிக்கிறதா? தக்காளி, கத்திரிக்காய் போன்ற காய்கறிகள் இரண்டு நாள்களானாலே, நஞ்சு ஏறி வதங்கி அழுகிவிடும். ஆனால், ஆன்லைனில் வியாபாரம் செய்பவர்கள் அப்பொருள்களைப் பதப்படுத்தி விற்கின்றனர். நஞ்சு ஏறிய காய்கறிகளை மக்கள் வாங்கிப் பயன்படுத்துவதற்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரிக்கிறாரா?” என்றவரிடம், “நீங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு எதிராகப் போராடலாமே... விளம்பரத்தில் நடித்தார் என்பதற்காக விஜய் சேதுபதியை எதிர்ப்பது, உங்கள் விளம்பரத்துக்காக என ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?” என்றோம்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

“படத்தில் நடித்ததோடு விஜய் சேதுபதி சென்றுவிடலாமே, எதற்காக, ‘எனது படத்தை தியேட்டரில் பாருங்கள், பாடல்களைக் கேளுங்கள்’ என விளம்பரப்படுத்துகிறார்? இவர் போன்ற ஸ்டார் நடிகர்களுக்கு என்று மக்களிடம் வரவேற்பு உள்ளது. இவர் சொல்லும் கருத்துகளை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட பொறுப்பில் இருப்பவர், பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். இறுதி வரையிலும் மதுபான, சிகரெட் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உறுதி பூண்டுள்ளார். அவரைப் போல, நடிகர்களும் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும். ஆன்லைன் மூலமாக காய்கறி, மளிகைப் பொருள்களை விற்பனை செய்வதற்குத் தடைவிதிக்க வேண்டுமென முதல்வரிடம் மனு அளிக்க உள்ளோம். லட்சக்கணக்கான வியாபாரிகள் பாதிக்கப்படும் இவ்விவகாரத்தில் விளம்பரம் தேடுவது எங்கள் நோக்கமல்ல” என்றார்.

இவ்விவகாரத்தில் விளக்கமறிய விஜய் சேதுபதியைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் தரப்பில் பேசியவர்கள், “தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவினால்தான் இந்த நிலைக்கு விஜய் சேதுபதி உயர்ந்துள்ளார். யாருடைய தொழிலையும் மனத்தையும் புண்படுத்த வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இல்லை. ஆன்லைன் மூலமாக வியாபாரம் செய்யும் அவரை அணுகிய போது, இப்படி ஒரு சர்ச்சை இதில் இருப்பது அவருக்குத் தெரியாது. மக்கள் விரோதத் திட்டங்களுக்கு விஜய் சேதுபதி துணை போக மாட்டார்” என்றனர்.

“இப்ப வரைக்குமே எனக்கு சினிமா புரியலை!” - விஜய் சேதுபதி
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு