தன்னுடைய 77 வயதில் WWE நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார் வின்ஸ் மெக்மேஹன் (Vince McMahon). WWE என்னும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உலகம் முழுவதும் உருவாக்கி தொழில்முறை மல்யுத்தம் என்று அழைக்கப்படும் 'Pro-Wrestling' உலகின் முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் வின்ஸ் மெக்மேஹன். உலக அளவில் தனக்கென தனி ரசிகர் படையை WWE தற்போது வைத்திருக்கிறது என்றால் அந்தப் பெருமை முழுக்க முழுக்க வின்ஸைத்தான் சேரும். முந்தைய தலைமுறை ரசிகர்களுக்கு மெக்மேஹன் நன்கு அறியப்பட்ட முகமாக இருந்தாலும் தற்கால ரோமன் ரெயின்ஸ் ரசிகர்களான 2k கிட்ஸுக்கு மெக்மேஹனை அறிமுகப்படுத்த வேண்டியது மிக முக்கியம்.
யார் இந்த வின்ஸ் மெக்மேஹன்?
வின்ஸ் எப்போது பிறந்தார் எங்குப் பிறந்தார் என்ற தகவல்கள் எல்லாம் கூகுளைத் தட்டினால் தேய்க்காத துணிகள் அலமாரியிலிருந்து கொட்டுவது போல மடமடவெனக் கொட்டும். அதை எல்லாம் கடந்து வின்ஸ் எப்படி இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார் என்பதுதான் முக்கியம். இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர், 'Pro-Wrestling' என்பது குறித்து ஒரு சிறிய அறிமுகம் தேவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"இந்த WWE எல்லாம் சொல்லி வச்சு ஆடுறதுப்பா... எல்லாம் சும்மா கண்துடைப்பு" என்ற வசனத்தை நிச்சயம் அனைவரும் கடந்து வந்திருப்போம். ஏன் நாமே கூடச் சொல்லியிருப்போம். இதில் உண்மையும் உண்டு பொய்யும் உண்டு. சொல்லி வைத்து ஆடுவது என்பது உண்மை. ஆனால் கண்துடைப்பு என்பது பொய். ஒரு சினிமா ஸ்டன்ட்மேன் போன்ற பணி அங்குள்ள வீரர்களுக்கு! யார் வெல்ல வேண்டும் என்பது முன்னரே நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தாலும் அதை ரசிகர்களுக்குச் சுவைப்படக் கொண்டு சேர்ப்பதில் வீரர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி மிக அதிகம். உண்மையான அடிகள், ரத்தக் காயங்கள்... ஏன், மரணங்கள் கூட நிகழ்ந்தது உண்டு இந்த 'Pro-Wrestling' உலகில்.
வின்ஸின் தந்தை 'கேப்பிட்டல் ரெஸ்லிங் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். வின்ஸ் இது போன்ற தொழிலில் ஈடுபடாமல் நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் அவரது தந்தையின் விருப்பம். இருந்தாலும் வின்ஸ் தொடர்ந்து அவரது அப்பாவின் தொழிலில் ஆர்வம் காட்டவே டான் பட சமுத்திரக்கனி போல் இல்லாமல் வின்ஸுக்கு ஆறுமாத காலம் ஒரு வாய்ப்பு கொடுத்தார் அவர் தந்தை. "ஆறு மாதத்தில் இந்தத் தொழிலில் உன்னால் சாதிக்க முடிந்தால் சாதித்துக் கொள். இல்லையென்றால் இனி இதைப் பற்றி என்னிடம் பேசாதே" வின்ஸின் அப்பாவிடம் இருந்து இந்த வார்த்தைகள் வந்து விழுந்த நிமிடம் மல்யுத்த உலகின் விடிவு ஆரம்பமானது. நமக்கும் ஒரு புதிய பொழுதுபோக்கு கிடைக்கத் தொடங்கியது.
வின்ஸின் தந்தை காலத்தில் பல குட்டி குட்டி மல்யுத்த கம்பெனிகள் இருந்தன. அமெரிக்கா முழுதும் இது பரவி, ஒவ்வொரு கம்பெனியும் தனக்கென சிறு எல்லைப் பரப்பைக் கொண்டிருந்தன. உதாரணமாகச் சென்னையில் ஒரு கம்பெனி இருக்கிறதென்றால் மதுரையில் ஒன்று இருக்கும். கோயம்புத்தூரில் ஒன்று இருக்கும். இவர்களின் பாலிசி என்னவென்றால் ஒருவரின் பிசினஸில் மற்றொருவர் தலையிட மாட்டார்கள். சென்னை கம்பெனி ரசிகர்கள் மதுரைக்குப் போக மாட்டார்கள். மதுரையில் சண்டையிடும் வீரர்கள் கோயம்புத்தூர் சென்று சண்டையிட மாட்டார்கள். 'இந்த பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன்' என்று கைப்பிள்ளையாகவே இருந்து வந்தன கம்பெனிகள்.
இந்த முறையை மாற்ற நினைத்தார் வின்ஸ். ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்குள் என்று இல்லாமல் அமெரிக்கா முழுக்க, ஏன் உலகம் முழுக்க என்று தனது வியாபாரத்தை விருத்தியடையச் செய்தார்.

பல கம்பெனிகளின் சூப்பர் ஸ்டார்களை நல்ல பணம் கொடுத்து தனது நிறுவனத்துக்கு அழைத்து வந்தார். ஹல்க் ஹோகன், ஆண்ட்ரே தி ஜெயன்ட், ரிக் ஃப்ளைர் என அனைவருமே வேறு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்தான். பல மாகாணங்களைச் சேர்ந்த, பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரு சேர இருந்ததால் வின்ஸின் நிறுவனம் அமெரிக்காவையும் கடந்து இங்கிலாந்து, கனடா எனப் பல தேசங்களுக்குச் சென்றது.
அப்போது பெரும் புயலைக் கிளப்பிய கேபிள் டிவி மார்க்கெட்டையும் வின்ஸ் பிடித்து தன்னுடைய மல்யுத்தப் போட்டிகளை டிவியில் ஒளிபரப்பச் செய்தார். உலகம் முழுவதும் வின்ஸ் ஒரு வலம் வந்தார்.
ஒரு கட்டத்தில் மொத்தத்தையும் இவர் கரங்களில் கொடுத்து விட்டு அவரது தந்தை ஒதுங்கிக் கொண்டார். WWF என்ற நிறுவனம் போட்டியின்றி முன்னேறியது. போட்டிக்கு வந்த WCW போன்ற கம்பெனிகளும் ஒரு கட்டத்தில் வின்ஸுக்குக் கப்பம் கட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டன. ஒரு மிகச்சிறந்த தயாரிப்பு நிறுவனம் எப்படித் தனது படங்களை உலகின் மூலை முடுக்கெல்லாம் விளம்பரப்படுத்துமோ அப்படி எல்லாம் செய்தார் வின்ஸ்.
ஆனால் தயாரிப்பு நிறுவனம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா? ரசிகர்கள் ரசிக்கக்கூடிய கதை வேண்டாமா? டி. ராஜேந்தர் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என எல்லாவற்றையும் தூக்கிச் சுமந்தது போல வின்ஸ் கதை எழுதத் தொடங்கினார். இவர்கள் இன்று சண்டையிடுவார்கள் என்பதைவிட ஏன் சண்டையிடுகிறார்கள் என்ற ஒரு பொய்யான காரணத்தை (ஸ்க்ரிப்ட்) ரசிகர்களிடம் காண்பித்தார் வின்ஸ். அண்டர்டேக்கரும் கெய்னும் அண்ணன் தம்பிகள், அண்டர்டேக்கர் செத்தாலும் உயிரோடு வருவார் என்பவை எல்லாம் வின்ஸ் உருவாக்கிய கதைகள்தான். இந்தக் கதைகள் மூலமாக அடுத்த வாரம் என்ன நடக்கும் என்று நம்மூர் சீரியல்கள் போல அப்போதே மக்களின் ஆர்வத்தை வாராவாரம் தூண்டினார் வின்ஸ். அந்த ஆர்வம் எல்லாம் அவருக்குக் கோடிகளாகக் கொட்டியது. ஸ்டோன் கோல்ட், ராக், அண்டர்டேக்கர் என அசாத்திய திறமைகளை எல்லாம் கண்டறிந்து அதை இன்னும் பல கோடிகளாக மாற்றினார்.
வின்ஸ் மெக்மேஹனின் வியாபார யுக்திகள் எல்லாம் இப்போதும் ஆச்சர்யமூட்டுபவை. ஆப்பிரிக்கக் கண்டத்தில் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் அங்கிருக்கும் ஒரு ஆப்பிரிக்க வீரரை உலக சாம்பியன் ஆக்குவார். அப்படித்தான் இந்திய மார்க்கெட்டைப் பிடிக்க 'தி கிரேட் காளி' என்பவரை அறிமுகம் செய்து அசத்தினார். அரபு நாடுகள் என்றால் பெண்கள் எல்லாம் முழு உடலையும் மூடித்தான் சண்டையிடுவார்கள். அர்னால்டு, டொனால்டு ட்ரம்ப், கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் என யார் யாரை எல்லாம் அழைக்க முடியுமோ எல்லோரையும் அழைத்து வந்து கல்லா கட்டிவிடுவார். 24 மணி நேரமும் இயங்கும் WWE ஆப், லைவ் ஆட்டங்கள் என இப்போதுவரை ட்ரெண்டிலேயே இருந்தார் மெக்மேஹன்.

இப்படித் தனி ஆளாக ஒரு புரட்சியை ஏற்படுத்திய மெக்மேஹன் சமீபத்தில் ஒரு பாலியல் புகாரில் சிக்கினார். அந்த வழக்கு போய்க்கொண்டிருக்கும் சமயத்திலேயே இப்போது தனது இந்த ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
எது எப்படியோ, கிரிக்கெட்டிற்குப் பிறகு நமக்கெல்லாம் பல மறக்க முடியாத நினைவலைகளை ஏற்படுத்திக் கொடுத்த வின்ஸ் மெக்மேஹனும் 90ஸ் கிட்ஸ் நினைவுகளுள் ஒன்றுதான்!