இந்தியாவின் மாபெரும் இசை ஆளுமைகளுள் ஒருவரான லதா மங்கேஷ்கர் நேற்றைய தினம் தன் 92-ம் அகவையில் மறைந்தார். சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இந்த இசைக்குயில் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1983-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் யாருமே எதிர்பார்க்காத வகையில் வெற்றி பெற்றது கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி. வெற்றி கொண்டாட்டத்தில் நாடே ஆர்ப்பரித்து கொண்டிருக்க அப்போது பிசிசிஐ-க்கு திடீர் சிக்கல் ஒன்று ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆம், இந்திய அணியின் இந்த வெற்றியை இந்திய கிரிக்கெட் வாரியமே சிறிதும் எதிர்பார்க்காததால் நாடு திரும்பும் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த செய்வதறியாமல் தவித்தது பிசிசிஐ. இதுகுறித்து பிசிசிஐ-யின் அப்போதைய தலைவரான NKP சால்வே தனது நண்பரான ராஜ் சிங் தன்கபூரிடம் தெரிவிக்க அவரோ தன்னுடைய இன்னொரு நண்பர் ஒருவரிடம் இதை சொல்கிறார்.

அவர் தான் லதா மங்கேஷ்கர். இதன்படி டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் ஒரு கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் இரண்டு மணி நடந்த அந்த நிகழ்ச்சியின் மூலம் பிசிசிஐ-க்கு போதுமான நிதி திரட்டப்பட்டு அணியின் ஒவ்வொரு வீரருக்கும் 1 லட்ச ரூபாய் பரிசளிக்கப்பட்டது.
“ நாங்கள் உலகக்கோப்பை வென்று திரும்பியபோது ஐந்தாயிரம் தருகிறோம் பத்தாயிரம் தருகிறோம் என்று எங்களிடம் பலரும் தெரிவித்தனர். ஆனால் அது எங்களுக்கு சரியாக படவில்லை. மேலும் அம்மாதத்தின் சம்பள தொகையை கூட்டினாலே 60,000 தான் வரும். ஆனால் லதாஜி எங்களுக்காக பாடிய அந்த மாலை பொழுதினை எங்களால் மறக்கவே முடியாது” என்று கூறினார் முன்னாள் வீரர் சுனில் வால்சன்.

மேலும் லதா மங்கேஷ்கரின் கிரிக்கெட் ஆர்வத்தை பற்றி கூறும் திலிப் வெங்சர்க்கர் “ லார்ட்ஸ் மைதானத்திற்கு பக்கத்தில் தான் லதாஜியின் வீடு இருந்தது. 1986-ம் ஆண்டில் நான் எனது மூன்றாவது சதத்தை அடித்தபோது அணியில் உள்ள நான்கைந்து பேரை வீட்டிற்கு அழைத்து அவரே சமைத்து விருந்தளித்தார். அதேபோல 1979-ம் பாகிஸ்தானை மும்பையில் நாங்கள் தோற்கடித்தபோது தனிப்பட்ட முறையில் எங்களை வாழ்த்தினார் லதாஜி” என்று கூறினார்.
லதா மங்கேஷ்கரருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய மண்ணில் இந்திய அணி விளையாடும் அனைத்து சர்வதேச ஆட்டங்களுக்கும் இரண்டு வி.ஐ.பி டிக்கெட்டுகள் வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தது பிசிசிஐ. ஸ்பான்சர்கள், மாநில கிரிக்கெட் சங்கங்களை போல லதா மங்கேஷ்கருக்கும் இரண்டு டிக்கெட்டுகள் எப்போதும் தயாராக இருக்கும்.

70, 80-களில் எத்தனை வேலைகளுக்கிடையிலும் கிரிக்கெட் போட்டிகளை காண மைதானகளுக்கு தொடர்ந்து வந்துவிடுவாராம் லதா மங்கேஷ்கர். குறிப்பாக 70-களில் அவரும் அவரின் சகோதரர் ஹுரதய்நாத் மங்கேஷ்கரும் மும்பை ப்ராபர்ன் மைதானத்தில் நடைபெற்ற எந்த ஒரு டெஸ்ட் போட்டிகளையும் தவறவிட்டதில்லையாம்.