Published:Updated:

வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

facebook.com/nelson xavier08:  ஊடகத்தில் இருந்து சொல்கிறேன்... காவல் துறையும் ராணுவமும் அதிகாரிகளும் காப்பாற்றிய உயிர்களைவிட, களத்தில் இருந்த இளைஞர்களும் தன்னார்வலர்களும் மீட்ட உயிர்கள் மிக அதிகம். சென்னையும் கடலூரும் இந்த அளவுக்குத் தப்பிப் பிழைத்திருப்பதற்கு மனிதநேயம் உள்ள மக்கள் சமூகத்தின் உழைப்பு அளப்பரியது. கேமரா கண்களால் அளந்துவிட முடியாதது.
இது, நம் மக்களின் நேரடி வெற்றி; நாம் தேர்ந்தெடுத்த மக்களாட்சியின் தோல்வி!

twitter.com/manipmp: புவி வெப்பமடைவதைவிட போன் சூடாகிறதை நினைச்சாத்தான் கவலையா இருக்கு!

twitter.com/laksh_kgm: `வெள்ளத்தில் போனது எவ்வளவு இருக்கும்?’

`ரூபாய் மதிப்பில் தெரியவில்லை. ஆனால், அது என் 20 ஆண்டுகால உழைப்பு!’

twitter.com/withkaran: இன்று `பீப்' சாங்கை ஆதரிப்பவர்களின் குழந்தைகள் நாளைக்கு வீட்ல வந்து, `என்ன `பீப்'புக்கு இன்னிக்கு சாம்பார் வெச்ச?'னு கேட்கும். அப்ப புரியும் கஷ்டம்!

twitter.com/PARITHITAMIL: கடவுளே... பெருசா எதுவும் வேண்டாம். ஒரு லெக்சஸ் காரும், அதை ஓட்ட ஸ்காட்லாந்து மதுவும், இவற்றோடு ஓர் இந்திய நீதிபதியும்!

வலைபாயுதே V 2.0

twitter.com/g_for_Guru: ரொம்ப ஃபாஸ்ட்டா `Insurance is a subject matter of solicitation'ங்கிற மாதிரி அ.தி.மு.க-வினரின் பேட்டியில் முதல் ஒரு நிமிடத்தை ஓட்டிவிடலாம். :-(

twitter.com/ZhaGoD: போதுமான ஆதாரம்னா செத்தவன் வந்து சாட்சி சொல்லணும்போல. # சல்மான் கான்.

twitter.com/withkaran: தமிழ்நாட்டுல மழை வரும், புயல் வரும், வெள்ளம் வரும். ஆனா, அம்மா மட்டும் கார்டனைவிட்டு வெளிய வர மாட்டாங்க!

twitter.com/kthirumani: ` எங்கே போனாங்க அந்த `கிளீன் இந்தியா’?’ ஒண்ணுமே இல்லாத தெருவை கூட்டி போட்டா எடுத்தாங்க. இப்போ வாங்கய்யா... சென்னையில உங்களுக்கு நிறைய வேலைகள் இருக்கு!

twitter.com/_Hari_twits: சாலை என்பது பாதசாரிகளுக்கும் உண்டு என்பதை, பைக், கார் மற்றும் பிற வாகனங்களை இயக்குபவர்கள் உணருவதே இல்லை!

twitter.com/udanpirappe: சிம்புவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் -T.R # அப்போ நீங்க சிம்பு மேல தான் நடவடிக்கை எடுக்கணும் சென்றாயன்!

வலைபாயுதே V 2.0

facebook.com/umamaheshwaran.panneerselvam:

ஆந்திரா மாநிலத்தில் கடந்த அக்னி நட்சத்திர வெயிலின்போது கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்தார்கள். உச்சி வெயில் மண்டையைப் பிளந்த காலத்தில், மக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என செய்தி கூறியது அரசு. அதையும் மீறி கட்டடப் பணிகளில், கல்குவாரிகளில் வடமாநிலப் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அதில் கணக்கில் வராத மரணங்கள் நிகழ்ந்தன.

அப்போதே இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தோம். தமிழ்நாடு அரசு, `தமிழ்நாட்டில் எத்தனை பேர் Migrant workers என்ற கணக்கெடுப்பு வைத்திருக்கிறதா... இங்கே வரும் புலம்பெயர் வேலையாட்கள் அனைவரின் தகவல்களையும் வைத்திருக்கிறதா... அவர்களை மலிவான சம்பளத்துக்கு வேலைக்கு எடுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முதலாளிகளுக்கு என ஏதேனும் நெறிமுறைகள், குறைந்தபட்ச சம்பள நிர்ணயம் ஏதாவது செய்திருக்கிறதா?' என விவாதித்துக்கொண்டிருந்தோம்.

இன்று வெள்ளத்தில் எத்தனை மக்கள் இறந்துள்ளார்கள் என்ற சரியான புள்ளிவிவரம் இதுவரை வெளியிடப் படவில்லை. காணாமல்போனவர்கள் எல்லாம் இறந்தவர்களாகக் கருதப்பட்டு, அவர்களது குடும்பத்துக்கு நிவாரணம் ஏதேனும் வழங்கப்படுமா என்றும் தெரியவில்லை.

தமிழ்நாட்டு மக்களுக்கே இந்த நிலைமை எனும்போது, எத்தனை Migrant workers இங்கே இன்னும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், எத்தனை பேர் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்ற தகவலுக்கு எங்கே போவது?

அவர்களது குடும்பம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் எல்லாம் தீவிரமாகப் பயன்படுத்தும் குடும்பமாக இருக்க வாய்ப்பு இல்லை. இவரைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என பதிவேற்றம் செய்தாலும், யார் எங்கே சென்று தேடுவார்கள், என்ன பெயர், என்ன நிறுவனத்தில் வேலை என்ற தகவல்கள் யாருக்கும் தெரியாது.

வலைபாயுதே V 2.0

2000-ம் ஆண்டுக்குப் பிறகான காலகட்டத்தில் சென்னையின் கட்டுமானப் பணிகள், உணவகங்களில் வேலை என வடநாட்டு, வடகிழக்கு மாநிலத்தவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அவர்களைப் பற்றி இனிமேலாவது Database உருவாக்க வேண்டும். இங்கே வரும் ஆட்களைப் பதிவுசெய்யாமல் வேலைவாங்கும் நிறுவனங்களைத் தண்டிக்க வேண்டும்.

`வாக்காளப் பெருமக்கள்’ என அன்புடன் அழைக்கப்பட்டவர்களே சென்னை வெள்ளத்தில் செத்து மிதக்கும்போது, இங்கே வாக்கே இல்லாத பெருமக்களைப் பற்றி யார் கவலைப்படப்போகிறார்கள்?

facebook.com/suguna.diwakar:

சென்னையின் இப்போதைய பிரமாண்டப் பிரச்னை  குவிந்து கிடக்கும் குப்பைகள். வெளி மாவட்டத் துப்புரவுப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டபோதும் போதுமானதாக இல்லை. பிரதான சாலைகளில் குப்பைகள் அள்ளப்படுகிறதே தவிர, தெருக்களிலோ, உள்சாலைகளிலோ அள்ளப்படுவது இல்லை. ஆமாம், ஆடம்பரமாக ஆரம்பிக்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம் என்ன ஆனது? கமல்ஹாசன்கூட அதன் தூதுவர்களில் ஒருவர் என்று ஞாபகம்!

facebook.com/chellis1:

சென்னைவாசிகள் கொஞ்ச நாளைக்கு சூப்பர் மார்க்கெட், பெரிய கடைகள் போன்ற பெரிய வளாகங்களில் பொருட்கள், மளிகை, காய்கறிகள், பழங்கள் வாங்கு வதைத் தவிர்த்து தள்ளுவண்டிக் காரர்களிடமும், சிறு பலசரக்குக் கடை களிலும் வாங்கி, இந்த வெள்ளத்தில் நஷ்டம் அடைந்த சிறு தொழில் வியாபாரிகளைக் கைதூக்கிவிடலாம்!