Published:Updated:

``என் கண் முன்னாடியே மூணு பேரைச் சுட்டுக்கொன்னாங்க!" கலங்கும் அமுதா

``என் கண் முன்னாடியே மூணு பேரைச் சுட்டுக்கொன்னாங்க!" கலங்கும் அமுதா
``என் கண் முன்னாடியே மூணு பேரைச் சுட்டுக்கொன்னாங்க!" கலங்கும் அமுதா

``என் கண் முன்னாடியே மூணு பேரைச் சுட்டுக்கொன்னாங்க!" கலங்கும் அமுதா

தூத்துக்குடி மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் போராட்டமும், அதன் நீட்சியும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. உடலில் குண்டு பாய்ந்த பலரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரத்தத்தில் மிதந்துகொண்டிருக்க, அவர்களின் உறவினர்கள் கண்ணீரில் கரைந்துகொண்டிருக்கிறார்கள். உறவுகளை துப்பாக்கிக் குண்டுகளுக்கு வாரிக் கொடுத்தவர்கள், அவர்களின் உடல்களையாவது பார்த்துவிட மாட்டோமா என்று மருத்துவமனை வளாகத்தில் அலைபாய்ந்துகொண்டிருக்க, அங்கும் தடியடி நடத்திக்கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர். அந்தக் களத்தில் செய்தி சேகரித்துக்கொண்டிருக்கிறார் நம் நிருபர் தமிழ்ப்பிரபா. அவர் செல்போன் வழி, கண்ணிமைக்கும் நேரத்தில் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டிலிருந்து உயிர் பிழைத்த ஒருவரின் மனைவி (அமுதா) பேசினார். 

``மேடம், நாங்க எந்தவித வன்முறையையும் கையில் எடுக்கலை. அறவழியில்தான் போராடினோம். எங்க ஊர்க்காரங்க 100 நாள்களும் அறவழியில்தானே போராடினோம். எங்களுக்கு எந்த நியாயமும் கிடைக்கலையே. மாசுக்கட்டுப்பாடு வாரியத்துல புகார் செஞ்சோம். இதே கலெக்டர்கிட்ட மார்ச் 23-ம் தேதி பெட்டிஷன் கொடுத்திருக்கோம். எங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கலை. அதனாலதான் 22-ம் தேதி போராட்டம் அறிவிச்சோம். அதுக்கப்புறமும் அமைதியாகத்தான் ஊர்வலம் வந்தோம். கலெக்டர் ஆஃபீஸ் முன்னாடி வந்து உட்காரப்போற நேரத்துலதான், கூட்டத்தைக் கலைக்க முயற்சி பண்ணாங்க. ஏன்னா, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவங்க போராட்டத்துல கலந்துக்கிட்டாங்க. ஆனால், நியூஸில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துக்கிட்டதா சொல்றாங்க. அது உண்மையில்லைங்க. அத்தனை பேர் இருந்தபோதும் அமைதியான முறையில்தான் போராடினோம். போலீஸ்காரங்க சுட ஆரம்பிச்சதும்தான், மக்கள் கோபத்தில் கல்லெறிய ஆரம்பிச்சாங்க.

புகைக்குண்டு போட்டப்போ நாங்க யாரும் கலையலை. வாழ்வா சாவான்னு பார்த்துடலாம்னுதான் கலெக்டர் ஆஃபீஸ் முன்னாடி போராட வந்தோம்? மாவட்ட ஆட்சித் தலைவர் எங்களுக்கு நல்ல பதில் சொல்லணும்னுதான் கோஷம் போட்டுக்கிட்டிருந்தோம். திடீர்னு போலீஸ்காரங்க தடியடி நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. வெறும் தடியடியாங்க அது; கொலைவெறித் தாக்குதல். சுட்றதுக்கு முன்னாடி அலர்ட் பண்றது, வானத்தை நோக்கி சுட்றதுன்னு எதுவுமே பண்ணலைங்க. அப்படி செஞ்சிருந்தா இவ்வளவு உயிர்ச்சேதம் வந்திருக்காது. எடுத்ததுமே நெஞ்சுலதான் சுட்டாங்க. போலீஸ் சுட்டு முதல்ல ஒருத்தர் இறந்தார் இல்லீங்களா? அவரைத்தான் சொல்றேன். நெஞ்சிலே சுட்டதும் ஸ்பாட்லேயே இறந்துட்டார். அதுக்கப்புறம் மூணு பேரைச் சுட்டாங்க. எங்க கண்ணு முன்னாடியே தரையில் ரத்தம் சொட்டச் சொட்ட கிடந்தாங்க. எங்களால் பக்கத்தில்கூட போகமுடியலை.

மடத்தூர், பண்டாரம்பட்டி இதைச் சுற்றி இருக்கும் கிராமத்தில் இருக்கும் நாங்க எல்லாருமே, மடத்தூர் வந்துட்டு அங்கிருந்துதான் ஒண்ணா போராட்டத்துக்குக் கிளம்பினோம். அங்கேயே எங்களை போலீஸ்காரங்க நிப்பாட்டினாங்க. நாங்க எதிர்த்துப் பேசினதுக்கு எங்களோடு வந்த ஒரு லேடியின் தலையில் லத்தியாலேயே அடிச்சாங்க. அந்தம்மா தலையிலிருந்து பொதபொதன்னு ரத்தம் வழிய ஆரம்பிச்சது. அதையெல்லாம் மீறியே நாங்க வேற பாதை வழியா கலெக்டர் ஆஃபீஸுக்குப் போனோம். தடியடி மட்டும் நடத்தியிருந்தாங்கன்னா, எங்க சனங்க இவ்வளவு பேர் செத்திருக்க மாட்டாங்க. துப்பாக்கியில் சுட்டு எத்தனை பேரை காவு வாங்கினாங்கன்னே தெரியலை. போராட்டத்துல கலந்துகிட்ட எங்க வீட்டுக்காரருக்குக் கன்னத்தில் குண்டு பாய்ஞ்சிருச்சுங்க. ஆபரேஷன் பண்ணி குண்டை வெளியே எடுத்திருக்காங்க. அது மட்டும் கொஞ்சம் இடம் மாறி பாய்ஞ்சிருந்தால் நினைச்சுப் பார்க்கவே பதறுதுங்க'' என்கிற அமுதாவின் குரலில், சம்பவத்தின் அச்சம் சற்றும் குறையவில்லை. 
 

அடுத்த கட்டுரைக்கு