Published:Updated:

``பூப்புனித நீராட்டு விழாவைச் சிறப்பித்த முதல்வர்களுக்கு... !" அரசுக்குப் பெண்கள் சார்பாக ஒரு கடிதம்

``பூப்புனித நீராட்டு விழாவைச் சிறப்பித்த முதல்வர்களுக்கு... !" அரசுக்குப் பெண்கள் சார்பாக ஒரு கடிதம்
News
``பூப்புனித நீராட்டு விழாவைச் சிறப்பித்த முதல்வர்களுக்கு... !" அரசுக்குப் பெண்கள் சார்பாக ஒரு கடிதம்

``பூப்புனித நீராட்டு விழாவைச் சிறப்பித்த முதல்வர்களுக்கு... !" அரசுக்குப் பெண்கள் சார்பாக ஒரு கடிதம்

ன்பற்ற அரசுக்கு... அறமற்ற அரசுக்கு... 

தமிழ்நாட்டில் வாழ்வது அவ்வளவு துயரமாகிப்போகியிருக்கிற, தமிழனாக இருப்பது அவ்வளவு பாதுகாப்பற்றதாகப் போயிருக்கிற, இந்த அரசின் தலைமையின் கீழ் ஆளப்படுவது அவ்வளவு அவமானமாகிப்போயிருக்கிற இந்த ரண நாளில், தமிழ்நாட்டின் முதல்வர்களுக்குப் பெண்கள் சார்பாக குடிமகள் எழுதும் கடிதம் இது. 


 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நான் இதுவரை தூத்துக்குடிக்குச் சென்றதில்லை. அங்கு என் உறவினர்கள், நண்பர்கள் யாரும் இல்லை. ஓர் ஊராக மட்டுமே அதை நான் அறிந்திருந்தேன். ஆனால், குடும்பம், குழந்தைகள் என்று சின்ன வட்டத்துக்குள் சுண்டிப் போயிருந்த என் ரத்தம், கடந்த மூன்று நாள்களாக தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்களால் கொதித்துக்கொண்டிருக்கிறது. உடலால் நான் என் ஊரில் இருக்கிறேன். மனதால் தூத்துக்குடி தெருக்களில் ரத்தம் சிந்திக் கிடக்கிறேன். நான் மட்டுமா...  தமிழ்நாட்டுக் குடும்பங்களின் மனங்களெல்லாம் இப்போது தூத்துக்குடி மக்களிடம்தாம் கிடக்கின்றன. 

என் மகள் வயதுடைய பெண்ணை வாயில் சுட்டு சாகடித்திருக்கிறீர்கள். தாய் ஒருத்தியைத் தலையில் சுட்டு, அவள் கபாலமும் மூளையும் தெருவில் சிதறிக்கிடக்க, அவள் உடம்பை ஒரு நாயைப்போல வாகனத்தில் எடுத்துப்போட்டுக்கொண்டு ஓடியிருக்கிறீர்கள். என் மகனின் சாயல்கொண்ட 22 வயது இளைஞனின் செத்த உடம்பை, காவல்துறையினர் எட்டி உதைத்து, `ஏய் சும்மா நடிக்காதடா' என்று ஆர்ப்பரிக்கும் வீடியோவைப் பார்த்த நொடியில்தான், சன்னதம் பிடித்து இந்தக் கடிதத்தை எழுத ஆரம்பிக்கிறேன். 
 


என் கணவரும் பிள்ளைகளும் அரசியல் செய்திகள் பார்க்கும்போதெல்லாம், அதில் விருப்பமற்று இருந்த நான், இப்போது ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை தூத்துக்குடிக்கு வந்த வரலாற்றையும், தூத்துக்குடி மக்களின் 100 நாள் போராட்டத்தையும் கண்ணீர் மல்க பத்திரிகைகளில் புரட்டிக்கொண்டிருக்கிறேன். அரசியலிலிருந்து விலகி இருக்கும் அறியாமையை இந்நொடியில் என்னிலிருந்து விரட்டுகிறேன். அரசியல் என்பது கட்சியும் தேர்தலும் அல்ல; அது மக்களின் நலனுக்கான சித்தாந்தம் என்பதை உணர்கிறேன். நாம் அரசியல் அறிவு பெறுவது ஒன்றே, நாம் அறியாமலேயே நம்மை இறுக்கிக்கொண்டிருக்கும் அநியாயங்களைப் பற்றி அறியவும், அதை எதிர்த்துக் குரல்கொடுக்கவும், போராடவும், தீர்வுபெறவும் வழி என்பதை அறிகிறேன். அதோ... தூத்துக்குடியில் என் அக்காள்களும் தங்கைகளும் போராட்டக் களத்துக்கு வந்ததும், ஒரு தனியார் ஆலை தங்கள் உயிர்களைக் காவு வாங்கிக்கொண்டிருந்த அபாயப் புள்ளியை உணர்ந்த ஒரு நொடியில்தானே?  

ஸ்டெர்லைட் ஆலையின் விஷப்புகை பற்றி அறிந்துதான் குஜராத்தும் கோவாவும் இதற்கு இடம்தர மறுத்திருக்கிறது. அடுத்து, மகாராஷ்டிராவுக்குள் 1994-ம் ஆண்டு, அரசின் ஏகபோக அனுமதியுடன் ஸ்டெர்லைட் ஆலை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாநில மக்களின் போராட்டத்தால் மிரண்டுபோன அரசு, ஆலை தொடர்பான பணிகளை அப்படியே நிறுத்தியிருக்கிறது. அங்கிருந்து கர்நாடகா, கேரளா என எல்லா மாநிலங்களிலும் ஆலையை நிறுவ முயன்று தோற்றுபோனவர்களை, தூத்துக்குடிக்கு வெற்றிலைப் பாக்குவைத்து அழைத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள். அங்குள்ள அப்பாவி மக்கள் அந்த ஆலையில் தங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என நினைத்தார்கள். ஆனால், அதன் நச்சுப்புகை தன் வீட்டுக் குழந்தைகளைக் கொல்லவந்த காலன் என்பதை அப்போது அறியவில்லை. அதன் நச்சுப்புகை வயிற்றில் இருக்கும் கருவையும் அழித்துவிடும் என்பதையும், பிறந்த குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலில்கூட அந்த விஷம் கலந்திருக்கிறது என்பதையும் படித்தபோது, ஒரு தாயாக நடுங்கிவிட்டேன். 

இப்படியெல்லாம் மக்களை மெள்ள மெள்ளக் கொல்கிற ஆலை என்று தெரிந்தும் அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறீர்கள் என்றால், இதில் எவ்வளவு அரசியல் பலம், பண பலம் விளையாடியிருக்கும் என்பது, என்னைப்போல நான்கு சுவருக்குள் வாழ்கிற குடும்பத் தலைவிக்கும் புரிகிறது. தூத்துக்குடி மக்கள் அறியாமையில் இருந்தவரை குளிர்காய்ந்த நீங்கள், அவர்கள் போராட ஆரம்பித்ததும் காக்கா, குருவிகளைப்போல சுட்டுக் கொன்றிருக்கிறீர்கள். 99 நாள்கள் அறவழியில் போராடியவர்களிடம் நேரில் சென்று பேச உங்களில் ஒருவருக்குக்கூடவா நேரம் இருக்கவில்லை? 

ஒரு கலவரச் சூழலில் காவல்துறை மக்களிடம், முதலில் கலைந்துபோகச் சொல்லி மைக்கில் அறிவிக்க வேண்டும். பிறகு கண்ணீர்ப் புகை, அடுத்து, லத்தி சார்ஜ்... இறுதியாக காலுக்குக் கீழே சுடலாம் என்பது விதிமுறை. ஆனால், நீங்கள் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை எல்லாம் குறிபார்த்துச் சுட்டிருக்கிறீர்கள். பொதுமக்கள் முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்த 17 வயது மாணவி, காவல்துறையினரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக, வாயில் சுட்டிருக்கிறீர்கள். நெஞ்சம் நடுங்குகிறது எனக்கு. என் மகள் காலை சென்று மாலை வீடு திரும்புவதுபோலத்தானே, அவள் தாயும் அவளை அன்று அனுப்பிவைத்திருப்பாள்... திரும்பிவந்த தங்கள் மகளின் பிணம், அந்தக் குடும்பத்தில் எழுப்பிய மரண ஓலம் எங்கள் வீடுகளிலும் அதிர்ந்துகொண்டிருக்கிறது. மாநிலமெங்கும் கிளர்ந்துகொண்டிருக்கிறது. நினைத்துப் பார்க்கிறேன்... இன்றிருக்கும் என் மகள், நாளை இல்லை என்றால்... விபரீதமான யோசனைதான். கற்பனைதான். ஆனால், அங்கே பெற்ற பிள்ளைகளை தோட்டாக்களுக்குப் பலிகொடுத்துவிட்டு கதறிக்கொண்டிருக்கும் அந்தப் பெற்றோர்களின் ஆறாத்துயரத்தை இப்படியெல்லாம்தான் நினைத்துப் பார்த்து பகிர்ந்துகொள்கின்றன எங்கள் மனங்கள். அதிகார வர்க்கத்தின் பேயாட்டத்தால், `நாளைய தோட்டா  நமக்கானதாகவும் இருக்கலாம்' என்ற உண்மையையும் உணர்கிறோம். 

காவல்துறை, நள்ளிரவில் வீடு புகுந்து ஒரு சிறுவனை துரத்திச் செல்கிற வீடியோவைப் பார்த்தேன். அவனை என்ன செய்தீர்கள்? நடு ரோட்டில் ஒரு பதின் வயதுப் பையனை, 10 காக்கிச் சட்டைகள் சூழ்ந்துகொண்டு நொறுக்குகிறீர்கள். வெறியேறிப்போயிருக்கும் உங்கள் லத்திகளை,  நச்சுக்காற்றில் உளுத்துப்போயிருக்கும் அந்த அப்பாவிகளின் எலும்புகள் எவ்வாறு தாங்கியிருக்கும்? `ஏன்ப்பா என் மக்களைச் சுடுறீங்க?' என்று கேட்ட மூதாட்டியை அந்த இடத்திலேயே சுட்டிருக்கிறீர்கள். அநாதையாக நிற்கும் அவருடைய மகள்களுக்கு நஷ்டஈடு தரப்படும் என்கிறீர்கள். ரத்தம் தெறித்து, சதை பிய்த்தெறியப்பட்டு, கேமராக்களிலும் வரலாற்றிலும் பதிவாகிப்போயிருக்கும் தங்கள் தாயின் கோர மரணம், அவர்களைத் தூக்கத்தில்கூட விரட்டுமே... அதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்? தாயை இழந்து இரண்டு இளம்பெண்கள் அநாதையாக, தனியாக இருக்கிறார்கள் என்று சொல்வதற்கும்கூட அச்சமான சூழல் இதுவாக இருக்கிறது. 

அப்படி, உங்களிடம் என்ன கேட்டுவிட்டார்கள் தூத்துக்குடி மக்கள்... தங்கள் குழந்தைகள் சுவாசிக்க நல்ல காற்றுதானே கேட்டார்கள்... என் அப்பா வயதையொத்த ஒரு மனிதரின் தொண்டையில் உங்கள் தோட்டாக்களை இறக்கியிருக்கிறார்கள். 15 வயதுகூட தாண்டாத சிறுவனின் காலிலிருந்து ரத்தம் வடிய வடிய மருத்துவமனைக்குத் தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். போராட வந்த பெண்ணின் தலையை லத்தியால் பிளக்கிறீர்கள். லத்தியால் அடிவாங்கி வயிற்றிலிருந்து ரத்தம் வடிய நிற்கும் மனைவியைத் தூக்கிக்கொண்டு கதறுகிற கணவனைப் பாருங்கள்... எத்தனை பெண்களின் தாலியை அறுத்தீர்கள்? எத்தனை பிள்ளைகளின் தாயைப் பறித்தீர்கள்? எத்தனை பெற்றோர்களுடைய பிள்ளைகளின் உயிர் குடித்திருக்கிறீர்கள் என்ற கணக்கு இன்னமும் தெரியவில்லை. 


 

`வானத்தைப் பார்த்துத்தானே சுடணும், இல்லைன்னா முழங்காலுக்குக் கீழேதானே சுடணும்? ஏன் எங்க நெஞ்சுல சுட்டாங்க?' என்று படிக்காத அந்த மீன்காரம்மா கேட்கிற கேள்விக்கு உங்கள் சட்டப் புத்தகங்கள் என்ன பதில் சொல்லப்போகின்றன?. ஆனால், இந்தச் சட்டங்கள் அனைத்தும் சாதாரண மக்களுக்குத்தானே. 

செத்தது எல்லாம் தூத்துக்குடிகாரர்கள் என்றா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? அவர்கள் கண்ணீரும் செந்நீரும் உப்பு மண்ணிலேயே உலர்ந்து மறைந்துவிடும் என்றா எதிர்பார்த்திருக்கிறீர்கள்? அந்த மூன்று மாவட்டங்களுக்கும் தொலைத்தொடர்பைத் துண்டித்துவிட்டால் நிலைமை உங்கள் கைக்குள் வரும் என்றா கணக்குப்போட்டிருக்கிறீர்கள்? வந்து பாருங்கள் தமிழக வீதிகளை. ஒவ்வோர் ஊரிலும் கனன்றுகொண்டிருக்கும் போராட்ட நெருப்பு கண்ணுக்குத் தெரிகிறதா? எந்தப் புள்ளியில் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்,  ஆட்சி கவிழ்க்கும் என்பது வரலாற்றில் இதுவரை ஒருபோதும் கணிக்கப்பட்டதில்லை. அதிகாரத் தோட்டாக்கள் 13 அப்பாவி குடிமக்களின் உயிர்களைப் பறித்திருக்கும் இந்தத் துயர தருணத்தில், பூப்புனித நீராட்டு விழாக்களைச் சிறப்பித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு தகவல். தமிழ்நாடு முழுக்க இப்போது தூத்துக்குடியாக மனமாற்றம் அடைந்திருக்கிறது. தோட்டாக்கள் எத்தனை இருக்கின்றன உங்களிடம்?!
இப்படிக்கு,
களத்துக்கு வரும் தமிழச்சிகள்