Published:Updated:

டிஸ்லெக்ஸியா குறித்த மோடியின் கருத்தும்... ஒரு சிறப்புக் குழந்தை அம்மாவின் ஆதங்கமும்!

டிஸ்லெக்ஸியா குறித்த மோடியின் கருத்தும்... ஒரு சிறப்புக் குழந்தை அம்மாவின் ஆதங்கமும்!
டிஸ்லெக்ஸியா குறித்த மோடியின் கருத்தும்... ஒரு சிறப்புக் குழந்தை அம்மாவின் ஆதங்கமும்!

தேர்தல் நேரங்களில், அரசியல்வாதிகள் எல்லோரும் எதிரணியைச் சேர்ந்தவர்களை எல்லைதாண்டி விமர்சிப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், அப்படி விமர்சிக்கும்போது அரசியலுக்கு சம்பந்தமில்லாதவர்களைப் பற்றி கேலி, கிண்டல் செய்வது எந்த வகையிலும் நாகரிகம் கிடையாது. மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, ராகுல்காந்தியை கேலி செய்வதற்காக டிஸ்லெக்ஸியா குறைபாடுள்ள குழந்தைகளைக் குறிப்பிட்டு மோடி பேசியதையும், சமூகம் ஒரு நாகரிகமற்றப் பேச்சாகத்தான் பார்க்கிறது. அதனால்தான், அவருடைய அந்தக் கேலிப்பேச்சுக்கு சமூகவலைதளங்களில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டிஸ்லெக்ஸியா குழந்தைகள் பற்றி பேசியதற்கு மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியும் வருகிறார்கள். இதுபற்றி, சிறப்புக்குழந்தையின் தாயும், சிறப்புக்குழந்தைகளின் ஆசிரியருமான ஒருவர் தன்னுடைய கருத்துகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.   

``ஆட்டிசம் மாதிரியான பிரச்னைகள் இருக்கிற குழந்தைகளுக்கு, அவர்களுடைய பிரச்னைகள் வெளிப்படையாகத் தெரியும். ஆனால், டிஸ்லெக்ஸியா இருக்கிற குழந்தைகள் நார்மலாக இருப்பார்கள். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் நார்மலான குழந்தைகளைவிட தனித்திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர் அழகாக ஆடுவார்கள், சிலர் அற்புதமாகப் பாடுவார்கள். இன்னும் சிலர் சூப்பராக ஓவியம் வரைவார்கள். ஆனால், கல்வியில் மட்டும் பின்தங்கியிருப்பார்கள்.

இதன் காரணமாக, ஸ்கூல் டீச்சர்களும் சரி, பெற்றோர்களும் சரி, `பாட்டு, டான்ஸ் எல்லாம் வருது. படிப்பு மட்டும் வராதா...' என்று அந்தக் குழந்தைகளின் நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் கிண்டலடிப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளைத்தான் பிரதமர் பதவியில் இருக்கிற ஒருவரும் ஜோக் அடித்துப் பேசியிருக்கிறார். மன்னன் எவ்வழி; மக்கள் அவ்வழி என்பார்கள் இல்லையா?. இவரே இப்படி ஜோக்கடித்தால் சமூகமும் அப்படித்தானே பின் செல்லும்?. புற ஊனத்தையே குறிப்பிட்டுச் சொல்லாமல், மாற்றுத்திறனாளிகள் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறோம். இந்த நேரத்தில் ஒரு பிரதமர் இப்படிப் பேசியிருப்பது எந்த வகையில் சரி?. என்னைப் பொறுத்தவரை, சமூக வலைதளங்களில் சொல்லியிருப்பதுபோல அவர் மன்னிப்புக்கூட கேட்கலாம். அந்த மன்னிப்புதான், டிஸ்லெக்ஸியா குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு நியாயம் செய்யும். தவிர, பிரதமரின் மதிப்பையும் அது உயர்த்தும்'' என்றார் வருத்தமாக.