Published:Updated:

`ஓகே பூமர்!' அடேங்கப்பா ஜாலி வைரல் ட்ரெண்ட்!

`ஓகே பூமர்!' ட்ரெண்ட் | Ok Boomer
News
`ஓகே பூமர்!' ட்ரெண்ட் | Ok Boomer

90'ஸ் கிட்ஸ் தெரியும், 2K கிட்ஸ் தெரியும்... பேபி பூமர்ஸ் தெரியுமா?

`ஓகே பூமர்!'
தற்போது, சமூக வலைதளங்களில் இந்த வாக்கியம்தான் வைரல்!

மீம்ஸ், கலாய்ஸ் எனச் சர்வதேச அளவில் பயங்கர ட்ரெண்டிங்காக இருக்கிறது இந்த இரட்டை வார்த்தை வாக்கியம். `என்ன ஓவர் பில்ட்-அப்பா இருக்கு, மொதல்ல ஓகே பூமர்னா என்ன'ங்கிற உங்க மைண்ட்-வாய்ஸ் எனக்குக் கேட்குது. இந்தக் காலத்து இளைஞர்களை எப்படி 90's கிட்ஸ், மில்லேனியல்ஸ், ஜென்-Z எனக் குறிப்பிடுகிறோமோ அப்படித்தான், 1945 முதல் 1965 வரை பிறந்தவர்களை `பேபி பூமர்ஸ்' (Baby Boomers) என்று அழைப்பது வழக்கம். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், தற்போது 50 வயதைக் கடந்தவர்களை இது குறிக்கும். `பாஸ் உங்களுக்கு எல்லாம் வயசாகிருச்சு, ஓவரா அட்வைஸ் பண்ணாதீங்க' என்பதன் சுருக்கமாகத்தான் இன்றைய இளைய தலைமுறை `ஓகே பூமர்' எனக் கூறி வருகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த `பேபி பூமர்ஸ்' பெயர் காரணம் தெரியுமா?

பேபி பூமர்ஸ் | Baby Boomers
பேபி பூமர்ஸ் | Baby Boomers
Flickr

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின், வளர்ந்த நாடுகளில் குழந்தைகளின் பிறப்பு சதவிகிதம் கிடுகிடுவென உயர்ந்திருந்தது. ஒரே குடும்பத்தில் பத்து முதல் பதினைந்து குழந்தைகள் பிறந்த காலம் அது. உலகப்போருக்குப் பின் அனைத்து நாடுகளிலும் இயல்பு நிலை திரும்பியிருந்தது. இதனால் இந்தக் காலகட்டத்தில் பிறந்தவர்கள் `பேபி பூமர்' என்று செல்லமாக அழைக்கப்பட்டனர். இன்று வளர்ந்த நாடுகளின் மக்கள்தொகையில் பெரும் பங்குவகிப்பது இவர்கள்தான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஓகே பூமர்' ட்ரெண்ட்

ஓகே பூமர் டீ-ஷர்ட்
ஓகே பூமர் டீ-ஷர்ட்

எப்போதுமே வெவ்வேறு தலைமுறைகளுக்கிடையே காணப்படும் மாற்றங்களாலும் வளர்ச்சியாலும் அவர்களுக்கிடையே கருத்துவேறுபாடுகள் வருவதுண்டு. சமீபகாலமாக இணையத்தில் 90's கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ் இடையேயான வித்தியாசங்களை எடுத்துக்காட்டும் மீம்கள் வலம்வருவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படியான ஒரு செல்ல மோதல்தான் இந்த `ஓகே பூமர்' ட்ரெண்ட்.

இணையத்தில் ஜென் Z தலைமுறையும் மில்லேனியல் தலைமுறையும் வயதானவர்கள்கூறும் அறிவுரைகளையும், ஆட்சேபனைகளையும் கலாய்க்கும் வகையில் `ஓகே பூமர்' எனச் சொல்லி வருகின்றனர். இது எந்த அளவுக்கு வைரல் என்றால் இந்தச் சொற்றொடரை வைத்து டி-ஷர்ட்கள், மொபைல் போன் கேஸ்கள், பொம்மைகள் எனப் பல பொருள்கள் சந்தையில் விற்பனையாகத் தொடங்கிவிட்டன.

இது ஆரம்பித்தது கடந்த வருடம் வந்த ஒரு டிக்டாக் வீடியோவுக்குப் பிறகுதான். அதில் வயதான ஒருவர் சிறுவன் ஒருவனிடம் ``இன்றைய தலைமுறையினருக்கு பீட்டர் பான் சிண்ட்ரோமால் (Peter Pan syndrome) பாதிக்கப்பட்டுள்ளனர், எல்லாருக்கும் ஒருநாள் வயதாகத்தான் போகிறது. அதனால், அவரவர் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்" என அறிவுரை கூறுவர். மறுமுனையில் இருக்கும் சிறுவனோ ஒரு நோட்புக்கில் ``ஓகே பூமர்" என எழுதிவிட்டு, அந்த அறிவுரையைக் கடந்து சென்றுவிடுவான். கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாகிக்கொண்டிருந்த இந்த வாக்கியம் இந்த நவம்பர் மாதத்தில் உலக லெவல் வைரலாகி விட்டது. இன்னொரு சுவாரஸ்யமான நிகழ்வாக நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் இந்த வாக்கியத்தைப் பயன்படுத்தினார். 25 வயதேயான க்லோயி சுவார்பிரிக் (Chlöe Swarbrick) பருவநிலை மாற்றம் குறித்த மசோதாவை வரவேற்றுப் பேசினார். ``இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 49, இவர்கள் வருங்காலம் பற்றி யோசிப்பதில்லை, எனக்கு 2056-ல் தான் 56 ஆகும்" எனப் பேசிக்கொண்டு இருக்கும்போதே இன்னோர் உறுப்பினர் அவரை இடைமறித்தார். அப்போது க்லோயி `ஓகே பூமர்' எனக்கூறி பேச்சைத் தொடர்ந்தார். இது செம வைரல்.

சரி, அப்படி என்னதான் இரு தலைமுறைகளுக்கும் வேறுபாடு இருக்கிறது என்று பார்த்தால் தொழில், வாழ்க்கை முறை என எல்லாவற்றிலுமே மாறுதல்கள் மட்டுமே இருக்கின்றன.

நம்பிக்கை

பேபி பூமர்கள் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு மிகவும் நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் அவர்கள் வாழ்க்கை முழுவதும் அவர்கள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என நினைப்பர். ஆனால், இன்றைய தலைமுறையோ அவர்கள் செய்யும் வேலையின்மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். இதனால் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாறிக்கொண்டே இருப்பர்.

வேலை செய்யும் இடம்

இன்றைய தலைமுறையினருக்கு வேலைசெய்ய இணைய வசதி இருந்தால் போதும். டீக்கடையில்கூட லேப்டாப்பை ஓபன் செய்து வேலை செய்யத் தொடங்கிவிடுவார்கள். அலுவலகத்தில் சிறிது நேரம் கழிப்பதையே விரும்புவர். ஆனால், பேபி பூமர்களோ அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்தால் மட்டுமே மனத்திருப்தி கிடைக்கும். இதனால் நிறைய நேரத்தை அலுவலகத்தில் செலவிடும் நபர்களாக பேபி பூமர்கள் இருந்திருப்பார்கள்.

மதிப்பீடு

இந்தத் தலைமுறையினர் வேலை மாறிச் செல்லும்போது புதிதாகச் சேரும் இடம் தங்கள் திறமை மற்றும் வேட்கைக்குத் தீனி போடுவதாக இருந்தால் மட்டுமே அங்கே செல்வார்கள். இது பேபி பூமர்களுக்கும் பொருந்தும்தான். ஆனால், வேலையின் நீடித்த தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் அவர்கள் முடிவெடுப்பர்.

உடல்நலம்

பேபி பூமர்களுக்கு உடலில் எந்த நோயும் இல்லாமல் இருந்தாலே அவர்கள் நல்ல உடல்நலத்தோடு இருப்பதாக எண்ணுபவர்கள். ஆனால், இந்தத் தலைமுறை மற்றும் அதற்கு முந்தைய தலைமுறையினரும் சரியான உணவை உட்கொள்வதே நல்ல உடல்நலத்தோடு வாழ உதவும் என்ற நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களின் காலத்தில்தான் பல வகையான டயட் முறைகள் நடைமுறைக்கு வந்தது. ஆனாலும் வளர்ந்துவரும் தொழில்நுட்பம் மற்றும் குறைந்த உடற்பயிற்சி போன்றவற்றின் காரணத்தால் அதிக உடல் பருமன் போன்ற உடல்நலச் சிக்கல்களில் மாட்டுவதும் இவர்களாகவே இருக்கின்றனர்.

குடும்பம்

பூமர்கள் பெரும்பாலும் 27 வயதிற்கு முன்பே இல்லற வாழ்க்கையைத் தொடங்குபவராக இருந்தார்கள். ஆனால் மில்லேனியல்ஸும் ஜென் z தலைமுறையினரும் குடும்ப வாழ்க்கையைத் தாமதமாக ஆரம்பிக்கவே விரும்புகின்றனர். இதனால், அதிக அளவில் கல்யாணமாகாதவர்கள் இந்த இரண்டு தலைமுறையில்தான் உள்ளனர்.

கலாசாரம் மற்றும் உடை

மில்லேனியல்ஸ் தங்கள் உடைகளை எப்போதும் நவீனத்துவத்துக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொண்டே வருகின்றனர். அவர்கள் பன்முக கலாசாரம் கொண்ட தனி நபர்களாகவும் இருக்கின்றன. இதனால் பேபி பூமர்களைவிட அதிக அளவில் பொருள்கள் மற்றும் உடைகளை வாங்குவது மில்லேனியல்ஸ் மற்றும் ஜென் z தலைமுறையினரே. பேபி பூமர்கள் தங்களுக்குத் தேவையான உடையை மட்டுமே வாங்குபவர்களாக இருக்கிறார்கள்.

இவ்வாறு எல்லாவற்றிலும் மாறுபட்டே இரு தலைமுறையினரும் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூமர் என்று அழைக்கப்படுவது வயதானவர்களைத் தாக்கும் வகையில் (ageist) அமைகிறது என்ற வாதமும் உண்டு. ஆனால், அது ஒரு மனநிலையையே குறிக்கிறது என்றும் துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலும் இந்த மனநிலை கொண்டவர்கள் 50 வயதைத் தாண்டியவர்களாக இருக்கிறார்கள் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதற்காகக் கலாய்க்கிறோம் என எல்லைமீறுவதும் தவறுதான். எந்தத் தலைமுறையும் அதன் முந்தைய தலைமுறையினரைப் புரிந்துகொண்டு சில நேரங்களில் அனுசரித்து அன்பு செலுத்துதல் வேண்டும். ``நாங்களாம் அப்போ எப்படி இருந்தோம் தெரியுமா..." என பேபி பூமர் தலைமுறையினரும் எல்லா விஷயங்களிலும் இந்தத் தலைமுறையினரைக் கட்டுப்படுத்தாமல் அவர்களை அவர்கள் வழியில் விட்டுவிட வேண்டும்.

இன்றைய இளைய (இணைய) தலைமுறை எல்லாவற்றையுமே வைரலாக்குவதில் கில்லாடிகள். அறிவுரை கூறி இளைஞர்களைத் திருத்தப் போகிறேன் என்று அறிவுரைகளை மட்டுமே கூறிக்கொண்டிருப்பவரா நீங்கள், அடுத்த `ஓகே பூமர்' உங்களுக்காகவும் இருக்கலாம்!