Election bannerElection banner
Published:Updated:

வேதாரண்யம்: ஊரே திருவிழா போல கொண்டாடிய சமுத்திரம் பாட்டியின் பிறந்தநாள்... ஏன் தெரியுமா?

பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி
பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி

பேரன், பேத்திகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கோயிலிலிருந்து பேண்ட் வாத்தியம் முழங்க பாட்டிக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர்.

வேதாரண்யம் அருகே பாட்டி ஒருவரின் 101-வது பிறந்தநாளை திருவிழாபோல கிராமத்தினர் கொண்டாடிய நிகழ்ச்சி பெரும் வியப்பை தந்திருக்கிறது.

பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி
பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா, தலைஞாயிறை அடுத்த பிரிஞ்சுமூலை கிராமத்தில்  வசித்தவர் வைத்தி. இவரின் மனைவி சமுத்திரம். வைத்தி 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். 1921-ம் ஆண்டு பிறந்த சமுத்திரம், நேற்று 100 வயது முடிந்து 101-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். இவருக்கு 2 மகன்கள், 1 மகள், 10 பேரன், பேத்திகள்,  21 கொள்ளுப்பேரன், பேத்திகள் உள்ளனர்.

சமுத்திரம் பாட்டியின்  101-வது பிறந்தநாளையொட்டி இவரின் பேரன், பேத்திகள் வீட்டின் முன்பு பந்தல் அமைத்து, அதில் அலங்கார மின் விளக்குகள் எரியவைத்து, உற்றார், உறவினர் மற்றும் கிராமத்தினருக்கு அழைப்பு விடுத்தனர். பேரன், பேத்திகள் மற்றும்  ஊர் பொதுமக்கள் கோயிலிலிருந்து பேண்ட் வாத்தியம் முழங்க பாட்டிக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர்.

பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி
பிறந்தநாளை கொண்டாடிய பாட்டி

பேரன், பேத்திகள், மகன், மகள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சமுத்திரம் கேக் வெட்ட, அனைவரும் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.  சமுத்திரம் பாட்டிக்கு கொள்ளுப் பேரன் கேக் ஊட்டினார். இவ்விழாவில் கலந்துகொண்ட அனைவரும் பாட்டியின் காலில் விழுந்து வணங்கி, பாட்டியின் கரங்களால் விபூதி பூசிக்கொண்டனர். 'என்னை மாதிரி நீங்களும் ஆயுசுக்கு வாழணும்' என்ற அன்பால் ஆசீர்வதித்து நன்றி தெரிவித்தார் பாட்டி. பிறந்த நாள் கொண்டாட்டம் முடிவில் உற்றார் உறவினர்களுக்கு விருந்து உபசாரமும் நடைபெற்றது.

90'ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் அலப்பறைகளுக்கு நடுவில் 101 பேர்த் டே கொண்டாடியிருக்கிறார் இந்த 20-ம் நூற்றாண்டு கிட்..!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு