குழந்தைகளுக்கு நாம எந்த மாதிரியான வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கப்போறோம்னு பேசுறப்போ, முதலில் அவங்களிடம் என்னென்ன பண்புகளையும் குணங்களையும் உருவாக்கி வளர்க்கணும்னு பேச வேண்டியது முக்கியம். அவங்க வாழ்க்கைக்கு அதுதான் ரொம்ப அவசியம்.

வாழ்க்கைங்கிறது, எப்போதும் மலர்கள் தூவின சுகமான பாதையா இருக்கிறதில்ல. கல்லும், முள்ளும், மேடுகளும், பள்ளங்களும், அபாயகரமான வளைவுகளும், ஆபத்தான சரிவுகளும் நிறைஞ்ச ஒரு பயணம். அந்த மேடு பள்ளங்களைக் கடந்து வெற்றிகரமாக பயணிக்க, தன்னம்பிக்கை அவசியம்!  

உயரம், உடல்வாகு, அடர்த்தியான முடி, கோணலான மூக்கு... இது மாதிரி, தன்னம்பிக்கைங்கிறது மரபியல் ரீதியா கடத்தப்படுற விஷயம் இல்லை. தன்னம்பிக்கையும், தைரியமும் ஆளுமை சம்பந்தப்பட்டவை. அதை நம்மால ஒருவரிடம் உருவாக்கவும் முடியும்... சிதைக்கவும் முடியும். சிலர் அசைக்க முடியாத தன்னம்பிக்கையோடும் எதுக்குமே கலங்காத தைரியத்தோடும் இருப்பாங்க. அது திடீர்னு வர்றதில்ல. குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்றது. அதைப் பெற்றோர்தான் வளர்க்கணும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கண்மணி அன்போடு...’ கௌதமி! - 4

உதாரணமா, என்னையே எடுத்துக்கலாம். என் வாழ்க்கையிலும் எத்தனையோ அப்ஸ் அண்டு டவுன்ஸ். எல்லாத்துக்கும் உச்சமா, கேன்சர். ஆனா, எதுக்குமே அசரல. அதையெல்லாம் தாங்கி, சமாளிச்சு, கடந்து வர்றதுக்கு எனக்குத் துணையா இருந்தது என் தன்னம்பிக்கைதான். அது எனக்குள் உருவானதுக்குக் காரணம்... என் வளர்ப்பு. நான் இதுவரை எந்த விஷயத்தையுமே என்னால முடியாதுனு நினைச்சது இல்லை. ஏன்னா, 'உன்னால முடியாது’ங்கிற வார்த்தைகள் எனக்குச் சொல்லப்பட்டதே இல்லை. நான் பொண்ணுங்கிறதால எந்த விஷயமும் எனக்குப் மறுக்கப்பட்டதும் இல்லை; எதிலிருந்தும் நான் விலக்கப்பட்டதும் இல்லை. 'இது உன்னால முடியும்’னு சொல்லிச் சொல்லித்தான் என்னை வளர்த்தாங்க. அதனால, ஏதாவது ஒரு செயலைச் செய்யணும்னா, அதை எப்படியெல்லாம் செய்ய ணும்கிறதுதான் என்னோட முதல் யோசனையா இருக்குமே தவிர, முடியுமா, முடியாதாங்கிற கேள்வியே வந்ததில்லை.

அப்படித்தாங்க இருக்கணும், ஒவ்வொரு பிள்ளையின் வளர்ப்பும். நம்ம குழந்தைக்கு, தடைக்கற்களே இல்லாத ஒரு வாழ்க்கையை, நிச்சயமா நம்மால கொடுக்க முடியாது. ஆனா, தடைகள் உருவாகிறப்போ அதையெல்லாம் சந்திச்சு, தீர்வு கண்டுபிடிச்சு, அதைத் தாண்டி வரத் தேவையான தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கலாமே! அதுதான் நாம அவங்களுக்குக் கொடுக்கும் பெரிய சொத்து.

வீடோ, நிலமோ, பேங்க் பேலன்ஸோ... வேறு என்ன சொத்தா இருந்தாலும், அது அவங்களை விட்டுப் போக வாய்ப்புகள் இருக்கு. ஆனா, எந்தச் சொத்து போனாலும், தன்னம்பிக்கை இருந்தா போதும், இழந்ததை மீண்டும் சம்பாதிச்சுக்கலாம்! அதனால ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே, 'இது உன்னால் முடியாது’, 'இது உனக்குத் தெரியாது’னு சொல்லி வளர்க்காம, 'உன்னால இது முடியும்; முயற்சி பண்ணு’னு சொல்லி, நம்பிக்கையை ஊட்டி வளர்க்கணும்.

குழந்தைகள் நம்ம வார்த் தைகளைப் பின்பற்ற, அவங் களுக்கு முதல்ல நம்ம மேல நம்பிக்கை வரணும். 'நாம என்ன சொன்னாலும் கேட்கிறதுக்கு அம்மா, அப்பா இருக்காங்க! நமக்கு என்ன பிரச்னைனாலும் நம்ம அம்மா, அப்பாகிட்ட சொல்லலாம்!’கிற நம்பிக்கை, அவங்களுக்குள்ள ஆழமா இறங்கணும். பக்கத்து வீட்டுக் குழந்தை மாதிரி நம்ம குழந்தையை வளர்க்கிறதிலும், 'குழந்தை வளர்ப்பு’ பத்தின புத்தகத்தைப் படிச்சிட்டுக் குழந்தை வளர்க்கிறதிலும் அந்தப் புரிதல் வராது. குழந்தை பேசத் தொடங்கினதிலிருந்து, அவங்ககிட்டே நாம பேச ஆரம்பிக்கணும். அவங்க என்ன சொன்னாலும் கேட்க       ணும்... என்ன கேட்டாலும் சொல்லணும்! நாம என்ன தான் பிஸியா இருந்தாலும், சாய்ஸே இல்லைங்க... அதைப் பண்ணித்தான் ஆகணும்! இதுக்கு, நாம செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான். எவ்வளவு வேலையா இருந்தாலும், நம்ம குழந்தை ஏதாவது சொல்ல வரும்போது, நம்ம வேலையை ஒரு விநாடி நிறுத்திட்டு, குழந்தை என்ன சொல்ல வருதுனு கவனிக்கணும்.

திரும்பத் திரும்ப நான் இதையே சொல்றதா நினைக்கிறீங்களா? அது அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய விஷயம்ங்க!

ஒருவேளை வேலை மும்முரத்தில், 'சும்மா தொணதொணக்காத... அம்மாவுக்கு வேலை இருக்கு!’னு சொல்லி அந்தப் பிஞ்சு மனசைப் புறக்கணிச்சா, அது வேற எங்கே போய் தன் மனசை, கேள்வியை, குழப்பத்தை, சந்தேகத்தை, கோபத்தைச் சொல்லும்? இப்படியான சமயங்களில் என் மகள் எங்கிட்ட வரும்போது, நான் பார்க்கிற வேலை எவ்வளவு முக்கியமானதா இருந்தாலும், ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் எடுத்துக்கிட்டு, 'கண்ணா... அம்மா இப்போ வேலையா இருக்கேன். ஐ’ம் வெரி ஸாரி. இந்த வேலையை முடிச்சுட்டு வந்துடறேன். நீயும் நானும் ஜாலியா பேசலாம்... சரியா?’னு கேட்பேன்.

இதை நீங்களும் ஃபாலோ பண்ணிப் பார்க்கலாம்! இந்த அணுகுமுறையால் குழந்தை சமாதானமாகி, 'ஓகேம்மா!’னு சொல்றதோட, 'அம்மா வேலை முடிஞ்சதும் நம்மகிட்ட பேசுவாங்க. நாம் சொல்றதைக் கேட்பாங்க!’ங்கிற அந்த ஆழமான நம்பிக்கை அதனுள் இறங்கும். அதை விதைக்கிறதுதான் பெற்றோரின் தலையாயக் கடமை. இப்படி இல்லாம, ஒவ்வொரு முறை குழந்தை நம்மைத் தேடி வரும்போதும் அதைப் புறக்கணிச்சுட்டு வேற வேலை பார்த்தோம்னா... குழந்தை அதிகமான மனஅழுத்தத்துக்கு ஆளாகும். இல்லேன்னா, 'என் பேச்சையா கவனிக்க மாட்டேங்கிற?’னு மூர்க்கமாகும்  (aggressive). எதையாவது போட்டு உடைச்சு அல்லது அழுது, கத்தி, ரகளை பண்ணி, நம்ம கவனத்தைத் தன் பக்கமாகத் திருப்ப முயற்சிக்கும் (attention seeking). இது அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுக்க தொடரும்.

இப்போ, சொல்லுங்க... ஒரு குழந்தையை, அதாவது நம்ம வருங்காலத்தை ஆரோக்கியமா வளர்த்தெடுக்கிறதுக்கு, ஒவ்வொரு நாளும் சில நிமிஷங்கள் ஒதுக்கணும்னு நான் வலியுறுத்திச் சொல்றது நியாயம்தானே!

- பேசுவோம்...

தொகுப்பு: பிரேமா நாராயணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism