நாம் நாற்பது திவ்விய தேசங்களுக்குச் சென்று பெருமாளை சேவிக்க வேண்டும் என்று புறப்பட்டு இருப்போம். அப்படி செல்லும்போது, ஒரு திவ்விய தேசத்தில் நடை சாத்தப்பட்டுவிட்டால் நாம் என்ன செய்வோம்? சரி, இந்தப் பெருமாளை சேவிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை... அடுத்த திவ்விய தேசத்துக்குச் சென்று அந்தப் பெருமாளை தரிசிக்கலாம் என்று புறப்பட்டுவிடுவோம். நம்மைப் பொறுத்தவரை நம்முடைய கணக்கில் ஒன்று குறைந்துவிட்டது. அவ்வளவுதான்.

ஆனால், திருமங்கை ஆழ்வார் அப்படி நினைக்கவில்லை. அவர் இந்தளூர் பெருமானை சேவித்தே ஆகவேண்டும் என்று தீர்மானமாக ஒற்றைக் காலில் நின்றார். அப்படி இருக்கும்போது, நடை சாத்தப்பட்டுவிட்டால் அவருக்கு ஆதங்கம் இருக்கத்தானே செய்யும்? அந்த ஆதங்கத்தில்தான் அவர் பகவானிடம் உரிமையுடன் கோபித்துக் கொள்கிறார்...

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! - 4

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எல்லோருக்கும் என்ன வேண்டும் என்பது உமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் உம்முடைய பக்தனுக்கு என்ன வேண்டும் என்பது பற்றி உமக்குத் தெரியாது. அதுவும் இந்த திருமங்கையாழ்வானுக்கு என்ன வேண்டும் என்பது உமக்குத் தெரியவே தெரியாது. அதனால்தான் இப்படி நடையை சாத்திக்கொண்டு விட்டீர் போலும்.''

அப்போது அவருடைய காதுகளில் ஓர் அசரீரி ஒலித்தது. பகவான்தான் தம்முடைய பவள வாய் திறந்து பேசினார். ''ஆழ்வாரே, உமக்கு நாம் என்ன செய்யவில்லை என்று இப்படி கோபித்துக்கொள்கிறீர்? உமக்கு நாம் பக்தியைக் கொடுக்கவில்லையா? உம் உள்ளத்தில் நாம் இருக்கவில்லையா?  மற்றவர்களுக்கெல்லாம் அனுக்கிரஹிக்காத மாசற்ற பக்தியை நாம் உமக்கு அனுக்கிரஹம் செய்திருக்கிறோமே. அந்த பக்தி இருப்பதால்தானே நீர் என்னை சேவித்தே ஆகவேண்டும் என்று தவியாய்த் தவித்து, துடியாய்த் துடிக்கிறீர். மற்றவர்கள் அப்படி துடிக்கிறார்களா பாரும்'' என்று பெருமாள் கேட்டார்.

திருமங்கை ஆழ்வார் மட்டும் பெருமாளுக்குச் சளைத்தவரா என்ன? பகவானின் திருவடி ஸ்பரிசம் பெற்றவர் அல்லவா அவர்! எனவே ஆழ்வார் கைகளைக் கூப்பி், ''பெருமானே! அதுதானே அடியேனுக்கு இப்போது கஷ்டமாகப் போய்விட்டது. உம்மை சேவிக்கவில்லையே என்று யாருக்கும் கவலை இல்லை. எனக்கு உம்மிடத்தில் இவ்வளவு பக்தியை கொடுத்துவிட்டதால்தான், உம்மை தரிசிக்க முடியவில்லையே என்று எனக்குக் கவலையாக இருக்கிறது. பக்தியைக் கொடுத்து விட்டீர். சரி, பிறகு சேவை கொடுக்க வேண்டாமோ? பக்தன் ஆசைப்பட்டால் சேவை சாதிப்பதுதானே உமக்கு அழகு?'' என்று கேட்டார்.

இப்படி அவர் கேட்டு முடிக்கவும், அவர் கண்களுக்குத் தெரிந்தது யார் தெரியுமோ? சாட்சாத் அந்த மஹாலக்ஷ்மி பிராட்டிதான். பிராட்டி தனியாகக் காட்சி தரவில்லை. பகவானின் திருமார்பை விட்டு அகலகில்லேன் என்னும்படியாக பெருமானின் திருமார்பை விட்டுப் பிரியாதவள் அல்லவா பிராட்டி!

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! - 4

இங்கே ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஆழ்வார் முதலில், பெருமானின் சிந்தனையில் இருந்து நீங்காதிருக்கும் திருவே என்று மஹாலக்ஷ்மி பிராட்டியைத்தான் போற்றுகிறார். எனவே திருமங்கை ஆழ்வாருக்கு பிராட்டி பெருமானின் திருமார்பில் திகழும் கோலத்துடனே காட்சி தந்தாள். அதனால்தான் அவள் ''மனோக்ஞே திருபுவனபூதஹரி பிரஸீத மஹ்யம்'' என்று போற்றப்படுகிறாள். நம்முடைய மனம் பெருமானுக்குத் தெரியாது. பிராட்டிக்குத்தான் நம்முடைய மனம் நன்றாகத் தெரியும். தன் குழந்தையின் மனம் எப்படி தாய்க்குத் தெரியுமோ அப்படி உலக மக்களாகிய நம்முடைய மனதை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பவள் மஹாலக்ஷ்மி பிராட்டிதான்.

பிராட்டிக்கு 'லக்ஷ்மி’ என்று ஒரு திருநாமம்; 'கமலா’ என்று ஒரு திருநாமம்.

'லக்ஷதே அணையா இதி’...

''லக்ஷதே அணையா'' இவளாலே லோகத்த வர்கள் அனைவரும் இலக்காக்கப்பட்டார்கள். இவளுடைய கண்பார்வைக்கு லோகம் அனைத்தும் இலக்கு. ஆகையால்தான் லக்ஷ்மி என்று திருப்பெயர். பெயரிலேயே லக்ஷ்மி கடாக்ஷம் இருக்கிறதுதானே! லக்ஷ்மியினால்தான், அவளுடைய கடாக்ஷத்தினால்தான் இந்த உலகம் அனைத்தும் கடாக்ஷிக்கப்படுகிறது. அவளுடைய கடாக்ஷம் இல்லை என்றால், இந்த உலகம் பிறந்திருக்காது; பிறந்த உலகமும் வளர்ந்திருக்காது; வளர்ந்ததும் வாழ்ந்திருக்காது; வாழ்ந்ததும் புருஷார்த்தத்தை அடைந்திருக்காது. ஆக, ஜீவன்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து புருஷார்த்தத்தை அடையவேண்டுமானால், இந்த நான்கு நிலைகளிலும் லக்ஷ்மி கடாக்ஷம் மிகவும் அவசியமாகிறது.

அடுத்து கமலா என்பதாக ஒரு திருநாமம்.

'கமௌலாதிதி கமலா’

க + ம + லா= கமலா.

முதல் எழுத்தான 'க’ பகவானைக் குறிக்கும்; அடுத்த எழுத்தான 'ம’ ஜீவாத்மாவைக் குறிக்கும். 'லா’ என்பது கொடுத்து வாங்கல் என்ற அர்த்தத்தில் வந்திருக்கிறது. பெருமானை ஜீவனுக்கும் ஜீவனை பெருமானுக்கும் கொடுத்து வாங்குபவள் கமலா!

'க’வை 'ம’வுக்குக் கொடுப்பதாவது... 'ம’வை 'க’வுக்குக் கொடுப்பதாவது? இது என்ன பெரிய வியாபாரமா இருக்கிறதே என்றால், அது அப்படி இல்லை. பகவானாகிய 'க’ ஜீவனாகிய 'ம’வை சுலபத்தில் வாங்கிக்கொள்ள மாட்டேன் என்கிறார். சரி, அவர்தான் அப்படி என்றால், இந்த 'ம’ இருக்கிறாரே அவர் அந்த 'க’வையே வேண்டாம் என்கிறாரே. இப்படியே போனால் இந்த லோகம் என்னாவது?

இந்த இரண்டுபேரும் ஒருத்தருக் கொருத்தர் அனுசரித்துப் போக உதவுகிறாள் பிராட்டி. 'ம’வே... உனக்குத் தேவை 'க’தான் என்று இவனுக்குச் சொல்ல வேண்டும்; 'க’வே... நீர் என்ன கோபப்பட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டியது 'ம’வைத்தான் என்று பகவானுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்... இப்படி பகவானுக்கும் ஜீவனுக்கும் நடுவில் எழுந்தருளி, அந்த இருவரையும் சேர்த்து வைக்கிறாள் அல்லவா? அதனால்தான் அவள் கமலா!

அதனால்தான், ஸ்ரீவேங்கடேச ஸ்தோத்திரத்தில்,

'கமலாகுச சூசுக குங்குமதோ’

என்று சொல்லப்பட்டிருக்கிறது. லக்ஷ்மி கடாக்ஷம் ஒருவருக்குக் கிடைத்துவிட்டால், அவருக்கு என்னவெல்லாம் கிடைக்கும் தெரியுமோ? இந்த உலகத்தில் உள்ள செல்வங்கள் எல்லாம் வரிசையாக அலை அலையாக ஒருவனை வந்து அடைந்துவிடுமாம். பலரும் 'நான்’, 'நீ’ என்று அவனுக்கு சேவகம் செய்ய முன்வந்து விடுவார்களாம்!

பராசரபத்தில் ஸ்ரீகுணரத்னகோசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஓரிடத்தில் சிலர் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரே ஏழு பேர் இருக்கிறார்கள். இந்த ஏழு பேருக்கும் ஒரு போட்டி. பிராட்டியாரின் கருணைப் பார்வை அந்தச் சிலரில் யார் மீதோ படப்போகிறது. அப்படி பட்டதுமே,  பிராட்டியாரின் கருணை கடாக்ஷம் பட்டவரை யார் முதலில் அடைவது என்பதில் இந்த ஏழுபேருக்குமே போட்டி இருக்குமாம். யார் அவரைப் போய் முதலில் தொட்டாலும், 'பிராட்டி கடாக்ஷித்தவனை முதலில் நான்தான் போய் தொட்டேன்' என்று பெருமிதம் அடைவராம்.

சரி, யார் இந்த ஏழுபேர் தெரியுமோ?

கடாக்ஷம் பெருகும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி