Published:Updated:

ஒரு ‘மறு’மகளின் மறக்க முடியாத அஞ்சலி!

பிரேமா நாராயணன்

ஒரு ‘மறு’மகளின் மறக்க முடியாத அஞ்சலி!

பிரேமா நாராயணன்

Published:Updated:

'ராதா தியாகராஜன்  நினைவலைகள்’ (Radha Thiagarajan Remembered) மதுரையின் புகழ்பெற்ற தொழிலதிபரும், கல்வி வள்ளலுமான கருமுத்து தியாகராஜன் செட்டியாரின் மனைவி ராதா தியாகராஜனைப் பற்றி, அவர் மருமகள் உமா கண்ணன் நெகிழ்ந்து, உணர்வு பூர்வமாகப் பதிவு செய்திருக்கும் ஆங்கில நூல்தான் இது!

செட்டிநாட்டுப் பாரம்பர்யத்தில் வந்த 'கருமுத்து’ எனும் பட்டப்பெயரைத் தாங்கிய குடும்பத்தில் பிறந்து, மதுரையில் தியாகராஜர் நூற்பாலை மற்றும் தியாகராஜா கல்விக் குழுமங்களைத் தொடங்கி, சிறப்புற நிர்வகித்தவர் தியாகராஜன் செட்டியார். இத்துடன் பத்திரிகையாளர், தேசியவாதி எனப் பல முகங்களைக் கொண்டவர். இவர் தொடங்கி நடத்தியதுதான் மதுரை வங்கி. கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின், கிழுவிளம் என்ற சிறு கிராமத்தில் 1926ல் பிறந்தவர் ராதா தியாகராஜன். செட்டிநாட்டுப் பாரம்பர்யத்தில் வந்த ஒருவர், மலையாளக் கிராமத்தில் பிறந்த ராதாவை மணந்த அந்தத் திருமணம், அந்தக் காலத்தில் பலரால் வியந்து பேசப்பட்டது. ஆனால், அசாதாரணமான தனித்துவம் கொண்ட இரு ஆளுமைகளை அந்தத் திருமணம் ஒன்று சேர்த்தது!

தியாகராஜன்  ராதா தம்பதியின் மகன் 'கருமுத்து’ தி.கண்ணன், மகள் லக்ஷ்மி முருகேசன். தந்தையின் மறைவுக்குப் பின், ஆலைகளின் முழு நிர்வாகத்தையும் ஏற்ற கண்ணன், தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் பதவி, தியாகராஜர் கல்லூரியின் தாளாளர் பொறுப்பு உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். இவருடைய மனைவி உமா, தன் மாமியாரைப் பற்றி நூலின் நீட்சியாக பகிர்ந்துகொள்கிறார் இங்கு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு ‘மறு’மகளின் மறக்க முடியாத அஞ்சலி!

''செட்டிநாடு பூர்விகமாக இருந்தாலும், நான் பிறந்து, வளர்ந்தது லண்டனில். எங்களுடையது பெற்றோர் பார்த்து, நடத்திய திரு மணம். 17 வயதில் லண்டனில் இருந்து மதுரையில் இருந்த புகுந்த வீட்டுக்கு வந்தபோது, கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருந்தது. ஆனால், மதுரை மண்ணின் மணத்தையும் மக்களின் பண்பாட்டையும் அப்படியே கற்றுத் தந்தது அம்மாதான் (மாமியார்).

நான் திருமணமாகி வருவதற்கு முன்பே அய்யா (மாமனார்) தவறி விட்டார்! கடந்த ஆண்டு, தன்னுடைய 87வது வயதில் மறைந்தார் அம்மா. அவருடைய வாழ்க்கைப் பயணம், வெகுளித்தனத்தில் தொடங்கி, முடிவில்லாத ஞானத்தில் நிறைவுற்றதையும்... பலவீனத்தில் தொடங்கி, அளவில்லாத வலிமையில் முடிந்ததையும் பற்றி அடிக்கடி பேசுவார்.

திருமணமான புதிதில், மூத்த தமிழறிஞர் அவ்வை துரைசாமிப் பிள்ளையிடம் தமிழ் கற்றார் அம்மா. தினமும் காலையில் திருவாசகம் படிப்பது அய்யா  அம்மாவின் வழக்கங்களில் ஒன்று. தன் மகனுக்கு (என் கணவர்) 14 வயதானபோது, ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படிக்க விண்ணப்பித்தார் அம்மா. அதை முடித்த பிறகு, 'திருவாசகத்தில் அருளியல்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். பின், தன் மகன் இளங்கலைப் பட்டம் பெற்ற அதே பட்டமளிப்பு விழாவில், அம்மாவும் முனைவர் பெட்டம் பெற்றார். நானும் திருமணமாகிக் குழந்தைகள் பிறந்த பிறகு பட்டம் பெற்று, சமூக மற்றும் கலாசார மானுடவியலில் ஆய்வுப் பட்டமும் பெற, இந்த முன்னோடியே காரணம்!  

அய்யா காலமானபோது, பிள்ளைகளின் திருமணம், கணவர் விட்டுச் சென்ற கல்லூரிப் பணிகள், நூற்பாலைப் பணிகள், சமூகப் பணிகள், ஆன்மிகப் பணிகள் எல்லாவற்றிலும் முழுமையான அர்ப்பணிப்போடு தன்னை இணைத்துக்கொண்டார் அம்மா. இரு முறை உலகத் தமிழ் மாநாட்டில் அவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் தலைவராக இருந்த அம்மா, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர். பழநியில் அருள்மிகு பழநியாண்டவர் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி துவக்கியவர்.

பழநி கோயிலின் தக்காராக இருமுறை பதவி வகித்துள்ளார். அம்மா காலத்தில்தான் பழநி பஞ்சாமிர்தத்தை, சுகாதாரமாக இயந்திரம் மூலம் தயாரிக்க ஏற்பாடு செய்தார். பிரதமர்கள், தமிழக முதல்வர்கள் எனப் பல தலைவர்களிடம் பல்வேறு பணிகளுக்காக விருதுகளும் பட்டங் களும் பெற்றிருக்கிறார். இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தொடங்கி, பல அயல்நாட்டு கல்வி நிறுவனங்களுக்குச் சென்று தன் முத்திரையைப் பதித்தவர். 'ஆலை அரசர்’ என்ற தலைப்பில் தன் கணவரின் சரிதையை எழுதியதுடன், தமிழ், ஆங்கிலத்தில் 8 நூல்களையும் எழுதியுள்ளார் அம்மா!

இப்போது சொல்லுங்கள்... அம்மாவைப் பற்றி நான் புத்தகம் எழுதியது ஆச்சர்யமான விஷயமா என்ன..?!''

அன்புப் புன்னகை கசியக் கேட்கிறார், உமா கண்ணன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism