Published:Updated:

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! - 5

செல்வம் கொழிக்கச் செய்யும் தொடர் வேளுக்குடி கிருஷ்ணன், ஓவியம்: சங்கர்லீ

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! - 5

ஸ்ரீமஹாலக்ஷ்மி பிராட்டியாரின் கடைக்கண் பார்வை எவர்மீது படுகிறதோ, அவரிடம் ஏழுபேர் 'நான்’, 'நீ’ என்று போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள் என்று ஸ்ரீகுணரத்னகோசத்தில் சொல்லியிருப்பதாகச் சொன்னோம் அல்லவா? அந்த ஏழுபேர் யார் யார் என்று பார்ப்பதற்கு முன்பு, ஸ்ரீகுணரத்ன கோசத்தை எழுதிய பராசர பட்டரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கூரம் என்ற கிராமத்தில், தன் மனைவி ஆண்டாளுடன் வாழ்ந்து வந்தவர் கூரத்தாழ்வார். ராமாநுஜரை விட ஏழு ஆண்டுகள் மூத்தவரான கூரத்தாழ் வாருக்கு இரட்டையராகப் பிறந்த இரண்டு பிள்ளைகளில் மூத்தவர் பராசர பட்டர்; அடுத்தவர் வியாச பட்டர்.

இந்த கூரத்தாழ்வார் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தினால், எல்லாவிதமான ஐஸ்வர்யங் களையும் பெற்றிருந்தார். தாம் பெற்ற அந்த ஐஸ்வர்யத்தைக் கொண்டு, வருகின்ற பாகவதர்க்கெல்லாம் ததியாராதனம் (சாப்பாடு போட்டு) செய்வித்து அனுப்புவதை வழக்க மாகக்கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளுமே இந்த ததியாராதன வைபவம் நடைபெறும். தங்கத்தினால் ஆன அவருடைய வீட்டுக் கதவுகளில் தங்க மணி, வெண்கல மணி போன்றவை பொருத்தப்பட்டிருக்குமாம்.

ஒருநாள் இரவு பத்தரை மணிக்கு, காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயிலில் அர்த்தஜாம பூஜை முடிந்து, பெருமாளும் தாயாரும் பள்ளியறைக்கு எழுந்தருளி, கோயிலின் நடைகூட சாத்தப்பட்டுவிட்டது. அப்போது எங்கேயோ கதவு சாத்தப்படும் ஓசையும், அதனால் ஏற்பட்ட மணியோசையும் பள்ளியறையில் இருந்த பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் கேட்டது.

மணியோசையைக் கேட்ட பெருந்தேவி தாயார், ''யாருடைய வீடோ ரொம்பப் பெரிய தாக இருக்கும் போலிருக்கிறது. ரொம்ப பணக்காரராக இருப்பார் போலிருக்கிறது. அவர் வீட்டு வாசல் கதவை இவ்வளவு தாமதமாக மூடுகிறாரே. நாமே நம்முடைய உற்ஸவம் எல்லாம் முடிந்து கதவை சாத்திக்கொண்டோம். ஆனால், இன்னும் யாரோ ஒருவர் இதுவரை ததியாராதனம் செய்துவிட்டு, இப்போதுதான் கதவை சாத்துகிறாரே. அவர் யாராக இருக்கும்'' என்று வரதராஜ பெருமாளிடம் கேட்கிறார்.

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! - 5

அதற்கு வரதராஜ பெருமாள் சொல்கிறார்... ''தேவி, அவர்தான் கூரத்தாழ்வார். அவர் நிரம்ப ஐஸ்வர்யம் உள்ளவர். அவருடைய செல்வத்தின் அளவை நம்மால் கணக்கிடவே முடியாது.

ஒவ்வொருநாளும் அவர் எத்தனை பேருக்கு சாப்பாடு போடுவார் தெரியுமா? ஒவ்வொரு
நாளும் காலையில் தொடங்கும் ததியாராதனம் நள்ளிரவு வரை நடைபெறுவது வழக்கம்.''

பெருந்தேவி தாயாரும் வரதராஜ பெருமாளும் இப்படிப் பேசிக்கொண்டது வெளியில் நின்றுகொண்டிருந்த அடியவரின் காதுகளில் விழுந்தது.

காஞ்சிபூர்ணர் என்ற பெயர் கொண்ட அந்த அடியவர், பூவிருந்தவல்லி க்ஷேத்திரத்தைச் சேர்ந்தவர். அவர் தினமும் காஞ்சிபுரத்துக்குச் சென்று வரதராஜ பெருமாளுக்கு திருவாலவட்ட கைங்கர்யம் (விசிறி விசிறுதல்) செய்பவர்.

பெருமாளும் தாயாரும் இப்படி பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட அவர், மறுநாள் கூரத்தாழ்வாரைச் சந்தித்தபோது, ''ஆழ்வாரே, நீர் பெரிய செல்வந்தராமே? நேற்றிரவு உம்முடைய சொத்து மதிப்பை பெரியவர்கள் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்களே'' என்று கூறினார். அவர்களைப் பொறுத்தவரை பெரியவர்கள் என்றால், அது காஞ்சி வரதராஜ பெருமாளையும் பெருந்தேவி தாயாரையுமே குறிக்கும்.

இப்படி ஒருவர் நம்மிடம் சொன்னால், நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? பெருமிதத்தால் பூரித்துப்போய் சிரித்துக் கொள்வோம். ஆனால், கூரத்தாழ்வார் என்ன செய்தார் தெரியுமோ?

''அடியேனுக்கு பக்தி உண்டு; பிரேமை உண்டு; வைராக்கியம் உண்டு என்றெல்லாம் பெரியவர்கள் பேசிக்கொள்ளாமல், அடியேனின் ஐஸ்வர்யத்தின் மதிப்பைக் குறிப்பிட்டு எப்போது பேசினார்களோ, அப்போதே அதைத் துறந்துவிட முடிவு செய்துவிட்டேன்'' என்று கூறியவராக, தாம் பெற்றிருந்த அத்தனை ஐஸ்வர்யங்களையும் தர்ம ஸ்தாபனங்களுக்கு எழுதி வைத்துவிட்டு, தம்முடைய மனைவி ஆண்டாளை அழைத்துக்கொண்டு ஸ்ரீரங்கத்துக்குச் சென்றுவிட்டார்.

அப்படி அவர் செய்ததற்கு காரணம் என்ன தெரியுமோ?

ஒருவன் பெரிய பணக்காரராக இருந்தால், பெருமாள் அவனைக் கைவிட்டுவிடுகிறார். அவன் செல்வத்தை எப்போது துறக்கிறானோ அப்போதுதான் பெருமாளின் அனுக்கிரஹம் அவனுக்குக் கிடைக்கிறது. 'யஸ்யாதம் அனுக்கிரஹிணம்’ யாரை கடாக்ஷிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேனோ, 'தஸ்வித்தமராம்யஹா’ அவருடைய சொத்தை நான் உடனே அபகரித்துவிடுவேன் என்று சொல்லி இருக்கிறார்.

திருமங்கை ஆழ்வார் அஹோபிலம் திருத்தலத்தில் அருள்புரியும் லக்ஷ்மிநரசிம்மனாய் எழுந்தருளி இருக்கும் மாலோல நரசிம்மரை மங்களாசாசனம் செய்யும்போது இப்படி பாடியிருக்கிறார்.

அலைத்தபேழ்வாய் வாளெயிற்றோர்க் கோளரியாய் அவுணன்
கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிடம்
மலைத்தசெல்சாத்தெறிந்தபூசல்வன்துடி வாய் கடுப்ப
சிலைக்கை வேடர்தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே.

அஹோபிலத்தில் பெருமாள் தம்மை சேவிக்க வரும் பக்தர்களிடம் இருக்கும் செல்வங்களை எல்லாம், கொள்ளையர்களை அனுப்பி பறித்துக்கொள்வாராம். அவர் ஏன் அப்படி செய்கிறார் தெரியுமோ? அஹோபிலம் புனிதமான க்ஷேத்திரம் ஆயிற்றே. இந்த க்ஷேத்திரத்தைப் பற்றி திருமங்கை ஆழ்வார் ஏன் இப்படி பாடியிருக்கிறார் என்று அதற்கு விளக்கம் சொல்ல வந்த பெரியவாச்சான் பிள்ளைக்கு ஆதங்கம் ஏற்பட்டது. தம்முடைய ஆதங்கத்தை பெருமாளிடம் முறையிட்டார். பெருமாள் அவரை சமாதானப்படுத்துவதுபோல்,

ஸ்ரீமஹாலக்ஷ்மி கடாக்ஷம்! - 5

''கையில் பொருளுடன் ஒருவர் என்னை சேவிக்க வரும்போது, பெருமாளுக்கு சமர்ப்பிக்க தன்னிடமும் பொருள் உள்ளது என்ற எண்ணம் தோன்றும். அது அகங்காரத்தைக் குறிக்கும் என்பதால்தான் நான் அந்த பொருளை அபகரித்துக்கொள்கிறேன். அப்போதுதான் அவருக்கு என்னுடைய அருள் கிடைக்கும்''’ என்றாராம்.

இதைத்தான் திருமங்கை ஆழ்வார்,

'சிலைக்கை வேடர்தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே’ என்று பாடி இருக்கிறார்.

அப்படி என்றால் மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தினால் நாம் பெற்றிடக்கூடிய ஐஸ்வர்யங்களுக்கு மதிப்பே இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? மஹாலக்ஷ்மி கடாக்ஷத்தினால் நாம் பெற்றிருக்கக்கூடிய செல்வங்களை, சாஸ்திரங்களில் சொல்லி இருக்கிற தர்மமுறைப்படி பயன்படுத்தினால், அதே மஹாலக்ஷ்மியின் கடாக்ஷத்தினால் நாம் பெறக்கூடிய நிறைவான ஐஸ்வர்யமான புருஷார்த்தம் என்கிற மோக்ஷ நிலையை நாம் அடையலாம்.

மஹாலக்ஷ்மி கடாக்ஷத்தினால் நாம் அடைந்திருக்கக் கூடிய செல்வத்தை,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

என்று திருக்குறளில் சொல்லி உள்ளபடி பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் பெற்ற செல்வத்தின் நிறைவான பயனான புருஷார்த்தத்தை அடையமுடியும். அன்பும் அறனும் என்றுதான் சொல்லியிருக்கிறதே தவிர, செல்வத்தைப் பற்றி சொல்லப்படவில்லை. அன்பும் தர்மகுணமும் இருக்கும்போது செல்வமும் இருக்கலாம். ஆனால், செல்வம் வந்துவிட்டால், இந்த அன்பும் தர்ம குணமும் நம்மை விட்டுப் போனாலும் போய்விடும். செல்வம் அதிகம் சேர்ந்துவிட்டாலும் அன்பும் தர்ம குணமும் நமக்கு இருக்க வேண்டும்.

கூரத்தாழ்வார் அப்படிப்பட்ட உயர்ந்த பரிபக்குவ மனநிலையைப் பெற்றிருந்தவர். அதனால்தான் அவர், 'ஹத்ரி’... முக்குணங்களைக் கடந்தவர் என்று போற்றப்படுகிறார். தர்ம, அர்த்த, காம என்னும் மூன்றையும் துறந்து, மோக்ஷத்தில் மட்டுமே விருப்பம் கொண்டவராக இருந்தபடியால்தான், தாம் பெற்றிருந்த செல்வத்தைக் குறித்து பெருமாளும் தாயாரும் பேசிக்கொண்டதாகக் கேட்ட உடனே, தாம் பெற்றிருந்த செல்வம் அனைத்தையும் துறந்து, ஸ்ரீரங்கத்துக்குச் சென்றுவிட்டார்.

கூரத்தாழ்வாருக்கு ஸ்ரீரங்கநாதரின் அருளால் பிறந்த இரட்டைப் பிள்ளைகளில் மூத்தவரான
பராசர பட்டர்,  தாம் அருளிய ஸ்ரீகுணரத்னகோசத்தில், மஹாலக்ஷ்மி பிராட்டி யாரை கடாக்ஷிக்கிறாளோ, அவரை அடைய ஏழுபேர் போட்டி போட்டுக்கொண்டு வருவார்கள் என்று சொல்லியிருப்பதாகப் பார்த்தோம் அல்லவா?

அந்த ஏழுபேரில் முதலில் அவர் குறிப்பிடுவது, 'ரதி’.

ரதி என்றால் யாரை அல்லது எதைக் குறிப்பிடுகிறது தெரியுமா?

கடாக்ஷம் பெருகும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி