Published:Updated:

குழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளதா?

சரிபார்க்க ஒரு குரோத் சார்ட்வே.கிருஷ்ணவேணி

குழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளதா?

சரிபார்க்க ஒரு குரோத் சார்ட்வே.கிருஷ்ணவேணி

Published:Updated:

'நானும் என் பொண்ணுக்கு என்னென்னவோ கொடுத்துப் பார்க்கிறேன். எடை கூடவே மாட்டேங்கிறா. எல்லாரும் 'ஒல்லிக்குச்சி’னு கேலி பண்ணும்போது, கஷ்டமா இருக்கு!’ என்று புலம்பும் அம்மாக்கள் ஒருபுறம். 'குழந்தையா இருக்கும்போது என் பையன் கொழுகொழுனு இருக்கிறதுல ரொம்பவே சந்தோஷப்பட்டேன். ஆனா, வளர்ந்த பின்னாடியும் குண்டாவே இருக்கிறதுதான் பிரச்னையா இருக்கு. பசங்களோட கேலி, 'அவனுக்கு முதல்ல சாப்பாட்டைக் குறை’னு பலரோட அறிவுரைனு நொந்துபோயிருக்கேன்!' என்று புலம்பும் அம்மாக்கள் மறுபுறம்!

''உடல் ஒல்லியா இருக்கிறதோ, குண்டா இருக்கிறதோ முக்கியமில்ல. குழந்தைகள் ஆரோக்கியமா இருக்க வேண்டியதுதான் அவசியம். அந்த ஆரோக்கியத்தை உங்க குழந்தைகளுக்குப் பரிசளிக்க, நீங்க அவங்களுக்கு கொடுக்கிற உணவு சரிவிகித உணவா இருக்கணும்!'' என்று குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சத்தை வலியுறுத்துகிறார் சென்னை, விஜயா மருத்துவமனையின் சீனியர் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.

''சீரான வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும், நோய் தடுப்பாற்றலையும் தரக்கூடியது... சரிவிகித உணவுகள்தான். உங்க குழந்தைகளுக்கான உணவுப் பரிந்துரையும் இதுதான். அதாவது, உடலோட வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், கொழுப்பு, தாது உப்பு, புரதம், விட்டமின், மினரல்கள் என எல்லா சத்துக்களும் தரும் கலவையா அந்த உணவு அமையணும். வாரத்தில் மூணு நாட்கள் இட்லி, நாலு நாட்கள் தோசை, மூணு நாட்கள் சாம்பார், தினமும் கிழங்கு, இரவுக்கு சப்பாத்தினு ஒரே மாதிரி பேட்டர்ன்ல உணவைத் தராம, ஒவ்வொரு நாள் உணவும் பல வகை சத்துக்களையும் தர்ற மாதிரி திட்டமிடணும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளதா?

உதாரணமா, பழங்கள், காய்கறிகள், தானியங்கள், நட்ஸ், இறைச்சி, மீன் உணவுகள், பால் பொருட்கள்னு குழந்தைகளை சாப்பிட வைக்கணும். பால்தான் சத்துனு அவங்ககூட மல்லுக்கட்டி ஒரு நாளைக்கு மூணு டம்ளர் பால் சாப்பிட வைக்கிறது; குண்டா இருக்காங்கனு மொத்தமா கொழுப்பு உணவுகள்ல இருந்து விலக்கி வைக்கிறது; நட்ஸ் நல்லா சாப்பிடுவாங்கனு, தொடர்ந்து அதையே கொடுக்கறதுனு பிடிவாதமா இருக்கக் கூடாது. இதையெல்லாம் செய்தா... சில சத்துகள் மட்டுமே அவங்களுக்கு தொடர்ந்து கிடைக்கற மாதிரியாயிடும். சில சத்துகள் அவங்க உடம்பில் சேராமலே போகும் சூழலையும் ஏற்படுத்தும். அப்புறம்,

குழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளதா?

குழந்தைக்கு ரத்த சோகை'னு டாக்டர் சொன்னதும், 'இவ்வளவுக்கும் நான் தினமும் முட்டை கொடுக்கிறேனே!’னு புலம்புறதில் பலனில்லை. 'கலோரிக்கு முட்டை; அயர்னுக்கு என்ன கொடுத்தீங்க?’னு திருப்பிக் கேட்பார்!'' என்று பொறுமையாக விளக்கிய டாக்டர், எந்தெந்த வயதுக் குழந்தைகளுக்கு, என்னென்ன மாதிரி உணவு கொடுக்கலாம் என்றும் பரிந்துரைத்தார்.

குழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளதா?

''குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு சத்துமாவுக்கஞ்சி, பருப்பு, மசித்த இட்லி, மசித்த சாதம், இடியாப்பம், வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழம், வேகவைத்த கேரட், வேகவைத்த ஆப்பிள் எனக் கொடுக்கலாம். ஒரு வயசுக்கு அப்புறம், பெரியவங்க சாப்பிடும் எல்லா வகை உணவுகளையுமே கொடுக்கலாம். 3, 4 வயதுக்கு மேல் லிமிட்டேஷன் இருக்கத் தேவையில்ல. எப்பவுமே பருப்பு வகைகள், கீரை வகைகள், தானியங்கள், விட்டமின் நிறைந்த உணவு வகைகள், புரதம் சார்ந்தவை, அசைவம் என பேலன்ஸ்டு டயட்டை பழக்குங்க உங்க குழந்தைக்கு!'' என்ற டயட்டீஷியன், அதற்கான சார்ட்டும் தந்தார் (பார்க்க: பெட்டிச் செய்தி).

''நாளொன்றுக்கு 3 வகை தானியங்கள், 2 -  3 வகை பருப்புகள், 2 -  3 வகை காய்கள், 2 - 3 வகை பழங்கள் (ஜூஸாக அல்லாமல் துண்டுகளாக), 2  3 டீஸ்பூன் எண்ணெயை உணவில் சேர்க்கணும். இப்படியான உணவு... வளமான ஆரோக்கியம், சீரான வளர்ச்சி, தேவையான நோய் எதிர்ப்புசக்தினு உங்க குழந்தைகளை முறையா வளர்க்கும்!'' என்று அக்கறையுடன் சொன்னார்.

இருக்க வேண்டிய எடை...  கொடுக்க வேண்டிய சத்து!

பிறந்ததிலிருந்து 12 வயது வரையிலான குழந்தைகளின் எடை எவ்வளவு இருக்க வேண்டும், மேலும் அவர்கள்  நாள் ஒன்றுக்கு எவ்வளவு கலோரி மற்றும் புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும் (Nutrient Requirements and Recommended Dietary Allowance for Indians) என்பதை, 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன்' (National Institute of Nutrition - ICMR) பரிந்துரைத்திருக்கிறது. இந்த அட்டவணையில் சரிபார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் செல்லங்களின் எடையையும், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய சத்தையும்!

குழந்தையின் வளர்ச்சி சீராக உள்ளதா?

இந்த அளவுகள் அனைத்தும் நூற்றுக்கு நூறு உங்கள் குழந்தைகளுடன் பொருந்த வேண்டும் என்று கறாராக இருக்கத் தேவையில்லை. இதில் சற்றே ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். உயரத்துக்கும் சார்ட் உண்டு என்றாலும், மரபு ரீதியாக பெற்றோரைப் பொறுத்து உயரம் மாறுபடலாம் என்பதால் அது இங்கே தரப்படவில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism