Published:Updated:

32 பல்லையும்... ஒரு கை பார்த்துடுவோம்ல!

க.தனலட்சுமி, படங்கள்: கு.பாலசந்தர்

32 பல்லையும்... ஒரு கை பார்த்துடுவோம்ல!

க.தனலட்சுமி, படங்கள்: கு.பாலசந்தர்

Published:Updated:
32 பல்லையும்... ஒரு கை பார்த்துடுவோம்ல!

''ஊரே எங்களைப் பார்த்து 'ஈ...’னு பல்லைக் காட்டுது! இட்ஸ் கிரேட் யா!''

- குறும்பாக ஆரம்பித்தார்கள், சென்னை, ராமச்சந்திரா யுனிவர்சிட்டியின் இறுதியாண்டு பல் மருத்துவ மாணவிகள்! தங்களின் படிப்புக்கும், துறைக்கும் கிடைக்கும் ஜாலி கேலிகளையும், அதற்கு தங்களின் சின்ஸியர் பதில்களையும் பதிவுசெய்த கேர்ள்ஸின் கிரிஸ்பி சந்திப்பு இது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எம்.பி.பி.எஸ் கிடைக்காத பயபுள்ளைங்கதான், பி.டி.எஸ்ல சேருவாங்கனு ஒரு பொது நம்பிக்கை இந்த சமூகத்துகிட்ட இருக்கு. ஹலோ... நீங்க நினைக்கிற மாதிரி நாங்க தலைவிதியேனு இதை தேர்வு செய்யலை. எவ்வளவோ படிப்புகள் ஊர் உலகத்துல இருந்தாலும்,  ‘பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்'னு அடம் பிடிச்சுதான்

பி.டி.எஸ் படிக்க வந்துருக்கோம்!''

- செல்லக் கோபத்துடன் ஸ்டார்ட்டிங் கியர் போட்டனர் கேர்ள்ஸ்.

' ”32 பல்லைப் பத்தி தெரிஞ்சிக்க 5 வருஷம் படிக்கணுமா? இந்த பல்லு புடுங்கற படிப்பை படிக்கறதுக்கு, நாங்க புல்லை புடுங்கிட்டு போய்டுவோம்!'னு எங்க ஃப்ரெண்ட்ஸ் ஒரேயடியா கலாய்ச்சாங்க. இதையெல்லாம் தாண்டிதான் இப்போ நாங்க இன்டர்ன்ஸ் ஆகிருக்கோம். பல்லைப் பத்தின டீடெய்ல்ஸைப் படிச்சு தெரிஞ்சுகிட்டு, பல் பிராளம்ஸுக்கு என்ன மருந்து, மாத்திரை தரணும்னு கத்துக்கிட்டு, பல்லோட 'பல்ஸ்'ஸை பார்க்கிற அளவுக்குத் தேறியிருக்கோம் தெரியுமா?!  எங்க சொந்தக்காரங்க எல்லாரும் பல் பிரச்னைக்கு மட்டுமில்ல, உடம்புக்கு என்ன பிரச்னைனாலும் 'வான்மதிக்கு போனைப் போடு’னு தேட ஆரம்பிச்சுடுவாங்க!''

- பெருமை வான்மதிக்கு.

32 பல்லையும்... ஒரு கை பார்த்துடுவோம்ல!

''முதல் வருஷத்துல இருந்தே பிராக்டிக்கலாதான் படிப்போம். ரெண்டாவது வருஷத்துலயே கிளினிக்கல் வொர்க் ஆரம்பிச்சுடும். அப்போ 'டைஃபோ’னு ஒரு பொம்மையைக் கொடுத்து, அதோட பல்லுக்குதான் கிளீனிங், பிளீச்சிங் எல்லாம் பண்ணச் சொல்வாங்க. என்ன இது சின்னப்புள்ளைத்தனமா பொம்மை வெச்சு விளையாடுறாங்கனு நினைக்காதீங்க. அதோட பல்லு கொஞ்சம் பிரஷர் கொடுத்தாலும் பொசுக்குனு புட்டுக்கும். மொத்தத்துல அதுதான் எங்களை வெச்சு விளையாட்டு காட்டும்!''

- சிந்து நொந்து பேச, ''என்ன இருந்தாலும் மனுஷாளை போல வருமா? 'ஆ’னு அண்ணாந்து காட்டச் சொன்னாலும், 'ஈ’னு இளிக்கச் சொன்னாலும், 'ஏன்?’ கேட்காம செய்யுற அந்த சமர்த்து பொம்மைங்கதான் சூப்பர்!'' என்றார் பவித்ரா.

''இந்த டென்டல் படிப்புல சர்ஜரி, மெடிசன்னு மொத்தம் 9 டிபார்ட்மென்ட்ஸ் இருக்கு. இதுல 'எக்ஸ்ட்ராக்‌ஷன்’னு சொல்ற பல்லு புடுங்கற வேலைதான் ரொம்ப கஷ்டமா இருக்கும். சீனியர்ஸ் அதை பண்ணும்போது நாங்க வேடிக்கைதான் பார்ப்போம். அப்புறம் ஒரு நாளில் நாங்களும் சீனியர்ஸ் ஆகத்தானே வேணும்? அப்படி நாங்க முதல் முதலா 'எக்ஸ்ட்ராக்‌ஷன்’ பண்ணின அன்னிக்குதான், எனக்கு ஒரு டென்டிஸ்ட் ஃபீலே வந்தது!'' என்று ஃபீலானார் சுகந்தி.

''வாய் துர்நாற்றத்தோட யாராவது பேசினா, பத்தடி தூரம் பாய்ந்து ஓடுற பொண்ணு நான். என்னோட முதல் பேஷன்ட், ஒரு தாத்தா. அவருக்கு பிராஸ்டோ (பல்லு கட்டறது) பண்றதுக்காக நான் கையில கிளவுஸ் எல்லாம் போட்டு ரெடியாக, அவர் எச்சில் என் முகத்துல, கண்ணுல எல்லாம் பட, அப்போ நான் கொடுத்த ரியாக்‌ஷனைப் பார்த்து பரிதாபப்பட்டு, 'எனக்கு பல்லே கட்ட வேண்டாம்!’னு ஓடிட்டாரு!'' என்ற ஸ்ரீனிஷாவுக்கு, குழந்தைகளுக்கு ட்ரீட்மென்ட் செய்வதுதான் பிடித்தமானதாம்.

''உண்மையிலேயே அதுதான் கஷ்டமான விஷயம். மெஷின் போடற சத்தத்தைவிட அந்த வாண்டுங்க பயத்துல கத்தற கத்தல்தான் அதிகமா இருக்கும் ஆனா, இவளை மாதிரி பேய்களுக்குத் தான் அந்த சத்தம் எல்லாம் புடிக்கும்!'' என ஸ்ரீனிஷாவை செல்ல அடி கொடுத்தார் சுகந்தி.

32 பல்லையும்... ஒரு கை பார்த்துடுவோம்ல!

''பி.டி.எஸ் படிக்க வர்றதுக்கு முன்னாடி வரைக்கும், நாங்க எல்லாம் எங்க பல்லு நல்லா இருக்குனுதான் நினைச்சிட்டு இருந்தோம். இப்போதான் தெரியுது பல் ஆரோக்கியத்துல எவ்வளவு விஷயங்கள் இருக்குனு. நீங்க எல்லாம் யார்கிட்டயாவது பேசினா கண்ணைப் பார்த்துதானே பேசுவீங்க. நாங்க உங்க பல்லைப் பார்த்துதான் பேசுவோம்!'' என பல் ஜோசியர் ரேஞ்சில் கேர்ள்ஸ் ஸீன் போட, நாம் அடுத்துப் பேசியதெல்லாம் சைகையில்தான்!

'சில ஆங்ரி பேர்ட் அப்பாடக்கர்ஸோட பன்ச் டயலாக், 'அடிச்சி பல்லை உடைச்சிடுவேன்!’ என்பதா இருக்கும். சாரே, பல்லை அடிக்கிறது, உடைக்கிறதை எல்லாம் நீங்க பண்ண வேண்டாம். அதுக்குதான் நாங்க இருக்கோம்!'' என்று ஃபைனல் பன்ச் வைத்த கேர்ள்ஸிடம்,

’போட்டோ ப்ளீஸ்!’ என்றதும், முக்கால்வாசிப் பல் தெரிய 'பளிச்'!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism