Published:Updated:

நெஞ்சத்தைப் பிளக்கும் பிஞ்சுகள் சோகம்!

பேட்டர்டு பேபி சிண்ட்ரோம்... சா.வடிவரசு, படங்கள்: தே.தீட்ஷித்

நெஞ்சத்தைப் பிளக்கும் பிஞ்சுகள் சோகம்!

பேட்டர்டு பேபி சிண்ட்ரோம்... சா.வடிவரசு, படங்கள்: தே.தீட்ஷித்

Published:Updated:
நெஞ்சத்தைப் பிளக்கும் பிஞ்சுகள் சோகம்!

''குழந்தைகளை அடிப்பதும், முரட்டுத்தனமாகக் கொஞ்சுவதும் குழந்தை வளர்ப்பில் ஓர் அங்கம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அந்த துன்புறுத்தல் சில நேரங்களில் அவர்களை அப்நார்மல் குழந்தைகளாக்கும் அளவுக்கு விபரீதமானது!'' என்று எச்சரிக்கிறார்... சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற குழந்தைகள் நல மருத்துவப் பேராசிரியர் செல்வராஜ்.

குழந்தைகள் பெரும்பாலும் வேண்டுமென்றோ, எதிர்பார்க்காத விதமாகவோ இரண்டு விதமான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஒன்று, 'பேட்டர்டு பேபி சிண்ட்ரோம்' (Battered baby syndrome)  என்கிற அடிப்பது, உதைப்பது, குத்துவது, கிள்ளுவது போன்ற துன்புறுத்தல்களால் ஏற்படும் விளைவுகள். மற்றொன்று,    ’ஷேக்கன்   பேபி சிண்ட்ரோம்' (Shaken baby syndrome) என்கிற உடல் அசைவு சார்ந்த துன்புறுத்தல்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவை இரண்டையும் பற்றி விரிவாகவே பேசினார் டாக்டர் செல்வராஜ்.

நெஞ்சத்தைப் பிளக்கும் பிஞ்சுகள் சோகம்!

பேட்டர்டு பேபி சிண்ட்ரோம்!

"குழந்தையைத் தண்டிப்பதாக நினைத்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உடல் ரீதியான துன்புறுத்தல் வழங்குவது வழக்கமாகிவிட்டது. தவிர, குடி போதைக்கு அடிமையானவர்கள், பாலியல் குற்றவாளிகள் போன்றவர்களால் குழந்தை சித்ரவதைக்கு உள்ளாக்கப்படும்போது ஏற்படும் விளைவுகளும் ’பேட்டர்டு பேபி சிண்ட் ரோம்' என்பதில் அடங்கும். உடலில் காயம், ரத்தம் கட்டுவது, எலும்பு முறிவு, மனஅழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் குழந்தைகளை நாங்கள் தினம்தினம் பார்க்கிறோம்.

இந்தப் பாதிப்புகளுடன் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர், தங்களின் குற்றத்தை மறைக்க, குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தை மறைத்து, பொய்க் காரணம் சொல்வது வாடிக்கை. எனவே, அதுபோன்ற குழந்தைகளை அழைத்து வரும்போது, 'என்ன ஆனது?’ என்று நாங்கள் பெற்றோரிடம் கேட்பதில்லை. குழந்தையிடமே கேட்போம். 'பையன் கதவில் மோதிக்கிட்டான்’ என்று பெற்றோர் கூறினாலும், 'முட்டியில் அடித்தது யார்?’ என்று பக்குவமாகக் கேட்டால், 'அம்மா!’ என்று உண்மையைச் சொல்லும் குழந்தை.

சமீபத்தில் சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்த 6 வயதுப் பெண்ணுக்கு பிறப்புறுப்பில் காயம். 'ஸ்கூல்ல விளையாடும் போது பென்சிலால குத்திக்கிட்டா’ என்றார் குழந்தையின் அம்மா. அவரை வெளி யேற்றி விட்டு குழந்தையிடம் பேச, 'பென்சில் குத்திடுச்சுனு யார் சொல்லச் சொன்னது?’ என்றதும், 'எங்க ஸ்கூல் வாத்தியார்!’ என்றது. எவ்வளவு பெரிய பாலியல் துன்புறுத்தல் இது! இப்படித்தான் தன் புறச் சூழலால் பலவிதங்களிலும் உடல், நல பாதிப்புக்கு ஆளாகிறார்கள் குழந்தைகள்.

பரிசோதனை... சிகிச்சை!

தலையில் வீக்கம், உடலில் ரத்தக் காயங்கள் மற்றும் ரத்தக் கட்டுகள், தொடர் அழுகை யால் கண்களைச் சுற்றி கறுப்பு மற்றும் நீல நிற ரத்தக் கட்டுகள், எலும்பு முறிவு என பலவிதமாக துன்புறுத்தலுக்கு உள்ளாகி அழைத்து வரப்படும் குழந்தைகளுக்கு, அவர்கள் எந்த மாதிரியான தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை காயங்களின் அடிப்படையிலும், குழந்தைகளின் வார்த்தைகளிலும் அறிந்துவிடுவோம். முடிவுக்கு வர முடியாத பட்சத்தில், எக்ஸ்ரே, சி.டி ஸ்கேன், ரத்தக் கசிவைக் கண்டறியும் கருவி போன்றவற்றின் மூலமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்போம்.

நெஞ்சத்தைப் பிளக்கும் பிஞ்சுகள் சோகம்!

ஒருவேளை இந்தப் பிரச்னைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்காவிட்டால், உடல் மற்றும் மன ரீதியாக பல விளைவுகளை உண்டாக்கிவிடும். அடிக்கடி அழுவது, வலிப்பு ஏற்படுவது, நீர் கோப்பது, மனஉளைச்சல், படுக்கையில் சிறுநீர் கழிப்பது போன்றவற்றில் ஆரம்பித்து, குழந்தையின் உள் உறுப்பு பாதிப்புகள், உயிர் பறிக்கும் நிலை வரை ஏற்படலாம்.

போலீஸில் புகார்!

குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர் களிடம், அது அவர்களால் ஏற்பட்ட காயம் எனில், இனி குழந்தைகளை இதுபோல் மூர்க்கமாகக் கையாளக் கூடாது என்று அறிவுறுத்தியும், எச்சரித்தும் அனுப்புவோம். ஒருவேளை அது மூன்றாம் நபரால் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் எனில், குழந்தைக்கான பாதுகாப்பை பலப்படுத்தச் சொல்வோம்.

பள்ளிக்கோ, பக்கத்து வீட்டுக்கோ போய் வந்த குழந்தை அழுதால், அதன் அழுகையை அடக்காமல், அதற்கான காரணத்தைக் கேட்டறியச் சொல்வோம். குழந்தைகளின் உடலில் ஏதேனும் காயங்கள் உள்ளதா என்று தொடர்ந்து கண்காணிக்கச் சொல்வோம். ஒருவேளை ஒரு குழந்தையின் உடலில் தொடர் துன்புறுத்தல் காயங்களைக் கவனித்தால், நாங்களே போலீஸுக்கு தெரியப்படுத்துவோம்.

கடுமையான தண்டனை ஒன்றே தீர்வு!

குழந்தைகள் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க கடுமை யான சட்டங்களும், தண்டனைகளும் அவசியம். நம் நாட்டில் மிருகங்கள் மீதான துன்புறுத் தலை தடுக்கக்கூட தனி அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆனால், குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கு தண்டனை வழங்க சரியான நடைமுறையில் சட்டங்கள் இல்லை.

அமெரிக்காவில் ஒரு வீட்டில் குழந்தை அழுகிற சத்தம் கேட்கிறதென்றால், அருகே உள்ளவர்கள் '911’ என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு காவல்துறையிடம் தெரிவிப்பார்கள். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அங்கே போலீஸ் வந்து என்ன பிரச்னை என்று விசாரிக்கும். ஒருவேளை குழந்தை அங்கே துன்புறுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டால் அவர்களை கைதுசெய்து, உடனடியாக தண்டனை வழங்கப்படும். இங்கே குழந்தை துன்புறுத்தல் புகார்களை காவல்துறையிடம் சொன்னால், 'இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று கேட்கும் நிலைதான் உள்ளது'' என்று ஆதங்கப்பட்ட டாக்டர், ஷேக்கன் பேபி சிண்ட்ரோம் பற்றி பேசினார்.

நெஞ்சத்தைப் பிளக்கும் பிஞ்சுகள் சோகம்!

ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்!

''குழந்தையின் உடல் கடுமையான அதிர்வுக்கோ அல்லது அசைவுக்கோ உள்ளாகும்போது ஏற்படும் பாதிப்பு. குறிப்பாக, பிறந்த பச்சிளம் குழந்தைகளில் அதிகமான குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்பு இது. குழந்தை பிறந்து ஐந்து அல்லது ஆறு மாத காலத்தில்தான் அதன் கழுத்தானது ஸ்திரமாக நிற்கும். அதுவரை குழந்தையின் கழுத்துப்பகுதி அசையாத மாதிரி எச்சரிக்கையோடு கையாள வேண்டியது அவசியம். ஆனால், பெற்றோர்கள் இதில் தவறுவது, சில வீடுகளில் மூத்த குழந்தையிடம் பிறந்த குழந்தையை தூக்கக் கொடுப்பது போன்ற காரணங்களால் இது ஏற்படுகிறது. அதன் கழுத்து அபாயகரமான அசைவுக்கு உட்பட்டு, மூளையில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ரத்தக்கசிவு ஏற்பட்டு குழந்தை அசாதாரண (அப்நார்மல்) குழந்தையாக அதிக வாய்ப்புள்ளது.

இந்த பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளை பரிபூரணமாக சரிசெய்வது என்பது இயலாது. அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை, ஒரு தற்காலிக (சப்போர்ட்டிவ்) சிகிச்சையாகத்தான் இருக்கும். 'அப்நார்மல்’ குழந்தையாகவே அவர்கள் வளர்வார்கள். எனவே, குழந்தையின் எதிர்காலத்தையே பாதிக்கும் விளைவுகளை ஏற்படுத்தும் இந்த பாதிப்பைத் தடுக்க, பாதுகாப்புடன் குழந்தையைக் கையாள்வது மிக அவசியம்'' என்ற டாக்டர்,

''மொத்தத்தில், வீடு, வெளியிடம் என்று எல்லா வகையிலும் குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை!'' என்று அழுத்தம் கொடுத்து சொன்னார்.

நெஞ்சத்தைப் பிளக்கும் பிஞ்சுகள் சோகம்!

அதிரவைக்கும் புள்ளிவிவரம்!

"அமெரிக்காவில் பிறந்து 2 முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளில் 70 சதவிகிதம் பேரும், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளில் 30 சதவிகிதம் பேரும் இந்த 'பேட்டர்டு பேபி சிண்டரோம்’ பாதிப்புக்கு உள்ளாவதாக அந்நாட்டு புள்ளிவிவரம் ஒன்று சொல்கிறது. இதைக் கேட்கும்போது 'என்ன கொடுமைக்கார நாடுடா அது?’ என்று சொல்லத் தோன்றினாலும்.. அதைவிட கொடுமைக்கார நாடு நம் நாடு என்பது வெளியில் தெரியாத உண்மை. ஆம், என் போன்ற டாக்டர்களிடம் கேட்டுப்பாருங்கள்... கதைகதையாக சொல்வார்கள். இங்கே, இந்த கொடுமைகள் எல்லாம் கணக்கில் வருவதே இல்லை'' என்று வருத்தம் பொங்கச் சொன்னார் டாக்டர் செல்வராஜ்.

அங்கேயும்... இங்கேயும்!

'ஷேக்கன் பேபி சிண்ட்ரோம்’ பாதிப்பு குறித்து அமெரிக்கா 2010ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை, அமெரிக்காவில் ஒரு லட்சம் குழந்தைகளில் 30 பேர் இதனால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அதில் 20% குழந்தைகள் இறந்தும், மற்ற குழந்தைகள் மூளைவளர்ச்சி குறைபாட்டோடும் வாழ்ந்துவருகிறார்கள் என்கிறது. இந்த பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளை ஆயுள் முழுவதும் பராமரிக்க (மருத்துவச் செலவு உட்பட) 3 முதல் 10 லட்சம் ரூபாய் செலவாகிறதென்றும் அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 2003ம் ஆண்டு வெளியிடப்பட்ட மற்றொரு புள்ளிவிவரம், உலக அளவில் ஆண்டுக்கு 32 மில்லியன் குழந்தைகள் துன்புறுத்துதலுக்கு (கடத்தல் உட்பட) உள்ளாகிறார்கள். இதில், அமெரிக்காவில் மட்டும் 3.6 மில்லியன் குழந்தைகள் என்று அதிர வைத்தது. இதையடுத்து, குழந்தைகள் மீதான துன்புறுத்தலை தடுக்க அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளில் குற்றங்கள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில், என்.சி.ஏ.என்.டி.எஸ் (National Child Abuse and Neglect Data System) என்ற அமைப்பு 2010ல் வெளியிட்ட புள்ளிவிவரப்படி 1 லட்சம் குழந்தைகளில் 3 குழந்தைகள் பல்வேறுவிதமான துன்புறுத்தல்களால் பலியாகின்றன.

பிளே ஸ்கூல் அபாயம்!

ன்றைக்கு அதிகமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பிளே ஸ்கூலில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வதைப் பார்க்கிறோம். அப்படி செல்லும்போது, அங்கே குழந்தைகள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா என்று 99% பெற்றோர் நினைத்துப் பார்ப்பதில்லை. காரணம், அவர்களுக்கு குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஓரிடம் கிடைத்துவிட்டது என்கிற திருப்தியும்.. நிம்மதியும் மனதில் எழுவதுதான். இதுவே இன்றைக்கு அதிகமான குழந்தைகள் 'பேட்டர்டு பேபி சிண்ட்ரோம்’ பிரச்னைக்கு உள்ளாக ஒரு முக்கிய காரணமாகவும்... வாய்ப்பாகவும் அமைகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism