Published:Updated:

பள்ளத்தில் தள்ளிய விதி... உயர வைத்த நம்பிக்கை!

ஜெ.பாரதி, படங்கள்: ச.வெங்கடேசன்

பள்ளத்தில் தள்ளிய விதி... உயர வைத்த நம்பிக்கை!

ஜெ.பாரதி, படங்கள்: ச.வெங்கடேசன்

Published:Updated:

''எங்களோட ரெண்டு குழந்தைகளும் மாற்றுத்திறனாளிகள்னு ஆனப்போ, ரொம்பவே உடைஞ்சு போயிட்டோம். ஆனா, அதை ஏத்துக்கிற பக்குவம் சீக்கிரமே எங்களுக்கு வந்தது. அந்தப் பக்குவம்தான் காது கேட்காத, வாய் பேச முடியாத என் பொண்ணும் பையனும், இன்னிக்கு எம்.சி.ஏ, பி.டெக் படிச்சுட்டு இருக்கறதுக்கு காரணம்!''

- சொல்லும்போதே கண்களில் நீர் துளிர்த்தது ஜெயபாரதிக்கு!

பள்ளத்தில் தள்ளிய விதி... உயர வைத்த நம்பிக்கை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலூரைச் சேர்ந்த ஜெயபாரதிக்கும், கண்ணனுக்கும் நடந்தது உறவுக்குள் திருமணம். ''என்னோட தாய் மாமா பொண்ணுதான் ஜெயபாரதி. எங்க பொண்ணு உமாவுக்கு ஒன்றரை வயசானப்போ தான், அவளுக்கு காது கேட்கலை என்பதை உறுதிப்படுத்திக்கிட்டோம். 'அடுத்த குழந்தையாச்சும் நல்லபடியா பிறக்கணும்'னு வேண்டினோம். பையன் சூர்யாவுக்கும் அதே பிரச்னை. 'சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டதால, உங்களோட ரெண்டு பிள்ளைங்களும் இப்படி காது கேட்காத, வாய் பேச முடியாதவங்களா பிறந்திருக்காங்க’னு டாக்டர்கள் சொன்னாங்க. ஆரம்பத்தில் கண்ணீர் வற்றும் வரை அழுதோம். அப்புறமா ஜெயபாரதிதான், 'மாற்றுத் திறனாளிகள் எவ்வளவு பேர் படிச்சு, தங்களோட ஊனத்தை கல்வியால் வெல்றாங்க... நாமளும் பிள்ளைங்களை எப்படியாவது படிக்க வெச்சுருவோம். அதுதான் நமக்கு ஒரே குறிக்கோள்’னு வைராக்கியம் எடுத்தாங்க. நான் அதுக்கு உறுதுணையா இருந்தேன்!'' என்ற கண்ணனைத் தொடர்ந்தார், ஜெயபாரதி.

''குழந்தைகளுக்காகவே நான் பி.எட் படிச்சேன். என் மகனுக்கு ஒன்றரை வயசானப்போ, அவனை மாமியார்கிட்ட விட்டுட்டு, சென்னையில இருக்கும் சிறுமலர் காதுகேளாதோர் பள்ளியில மகளை 4வது வரைக்கும் படிக்க வெச்சேன். அதே ஸ்கூல்ல சிறப்பு ஆசிரியருக்கான பயிற்சி எடுத்தேன். அப்புறம் வேலூருக்குத் திரும்பி, என் ரெண்டு குழந்தைகளையும் இயல்பான குழந்தைகள் படிக்கிற பள்ளியிலேயே சேர்த்தேன். மற்ற பசங்ககூட போட்டி போட முடியாம அவங்க தேங்கும்போதெல்லாம், ஆசிரியரா மாறி, வீட்டுலயே தொடர் பயிற்சி கொடுத்து மேடேத்திவிட்டேன்.

"நாம் எடுத்த திருமண முடிவால்தான் இந்தளவுக்கு கஷ்டப்படுறாங்க'னு எங்க அம்மா வீட்டில் இதுநாள் வரைக்கும் வருந்தினாலும், இன்னொரு பக்கம், பிள்ளைகளை வளர்ப்பதில் எங்களுக்கு ரொம்பவே பலமா இருந்தாங்க. அதைவிட, என் குழந்தைகளும் நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தாங்க. சில நேரங்களில், நம்மளோட வைராக்கியத்துக்காக குழந்தைகளோட திறனையும் தாண்டி அவங்களைப் படிக்கச் சொல்லிக் கஷ்டப்படுத்துறோமோ'னு தோணும். அதை அவங்ககிட்டயே கேட்பேன். 'எங்களுக்காக நீங்க இவ்வளவு கஷ்டப்படும்போது, எங்களுக்காக நாங்க கஷ்டப்படமாட்டோமா?!’னு சைகையிலேயே சொல்லும்போது, அவங்களோட உறுதி எனக்கு அவ்வளவு பெருமையா இருக்கும்!'' தன் பிள்ளைகளைக் கட்டி அணைத்துக் கொள்கிறார், ஜெயபாரதி.

வேலூரில் பி.சி.ஏ முடித்த உமா, இப்போது திருப்பத்தூரில் விடுதியில் தங்கி எம்.சி.ஏ இறுதியாண்டு படிக்கிறார். சூர்யா,ஸ்ரீவில்லிபுத்தூர், பல்கலைக்கழகத்தில் பி.டெக்., இறுதியாண்டு படிக்கிறார். இருவரும் நம்மிடம் சைகையில் பேச, அதை நமக்கு விளக்கினார் ஜெயபாரதி... ''வாய் அசைவை வைத்தே கல்லூரிப் பாடங்களைப் படிக்கிறது கஷ்டமாதான் இருக்கு. ஆனா, இந்தப் படிப்புதானே எங்களோட எதிர்காலம். எங்களை மாதிரி மாற்றுத்திறனாளிகளை படிக்க வைக்க, ஒவ்வொரு பெற்றோருக்கும் நம்பிக்கை வரணும். இதுக்கு நாங்க காரணமா இருக்கணும்கிறதுக்காகவே, நாளைக்கு நல்ல வேலைக்குப் போகணும். 'பொண்ணு எம்.சி.ஏவும், பையன் பி.டெக்கும் படிக்கிறாங்க’னு மத்தவங்ககிட்ட சொல்லும்போது, எங்க அப்பா, அம்மா முகத்தில் நாங்க அவ்வளவு சந்தோஷத்தைப் பார்ப்போம்! நல்ல வேலையில் அமர்ந்து, அவங்க சந்தோஷத்தை பல மடங்காக்கணும். நார்மலான குழந்தைகளை வளர்க்கிறதை விட பல மடங்கு முயற்சி, அக்கறை, பொறுமையோட எங்களை வளர்த்து ஆளாக்கியிருக்க அவங்களை சந்தோஷமா பார்த்துக்கணும்!''

சிலிர்த்துக் கொள்கிறார்... ஜெயபாரதி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism