தொடர்ந்து நாலு அத்தியாயங்களா உங்ககிட்ட பேசிட்டிருக்கேன். நிறைய விஷயங்களை உங்ககிட்ட பகிர்ந்துக்க ஆசைப் பட்டாலும், குழந்தை வளர்ப்பு பத்திதான் பிரதானமா சொல்லிட்டிருக்கேன். காரணம், இப்போதைக்கு எல்லாத்தையும்விட ரொம்ப முக்கியமானது குழந்தை வளர்ப்புதான். ஏன்னா, உலகத்தின் வருங்காலமே அடுத்து வர்ற தலைமுறைதான். ஆரோக்கியமான தலை முறையை விட்டுச் செல்ல வேண்டியது நம்ம கடமை இல்லையா?

வாசக சகோதரிகள்கிட்ட இருந்து பல பாராட்டுக் கடிதங்கள். சிலர் தங்களுடைய சந்தேகங்களையும் கேட்டிருந்தாங்க. அதில், ரொம்ப ரொம்ப நியாயமான சந்தேகங்கள் ரெண்டுக்கு நான் விளக்கம் சொல்லியே ஆகணும்னு தோணுச்சு. அதனால, அந்தக் கேள்வியிலிருந்தே இந்த அத்தியாயத்தை ஆரம்பிக்கிறேன்.

''தங்களுக்கு நல்லது எது, கெட்டது எதுனு அந்தச் சின்ன வயசில் குழந்தைகளுக்குத் தெரியாது. அவங்களுடைய டிரெஸ், சாப்பாடுனு பார்த்துச் செய்றது நாமதானே? அதே மாதிரிதான் அவங்களுக்கான படிப்பையும் தேர்ந்தெடுக்கிறோம். பிற்காலத்தில் அவங்க வசதியா, சந்தோஷமா வாழறதுக்கு நல்ல வருமானம் தேவை. அப்படி வருமானம் வர்ற மாதிரியான படிப்பைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறது எப்படித் தவறாகும் மேடம்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

-  இப்படிக் கேட்டிருக்காங்க, கோயம்புத்தூர் சகோதரி திவ்யா பார்த்தசாரதி.

'கண்மணி அன்போடு...’ கௌதமி! - 5

திவ்யாவோட கேள்வியில் தப்பில்லை. ஆனா, 'வளமான வருங்காலம்’னு நீங்க எதை நினைக்கிறீங்க திவ்யா? பணம் மட்டுமே 'வளமான’ வருங்காலத்தை அமைச்சுக் கொடுத்து டுமா? அமெரிக்காவில் சிட்டி பேங்க்ல பார்த்த வேலையை விட்டுட்டு, இங்கே வந்து இயற்கை விவசாயம் பண்றவங்க, ஐ.டி துறை வேலையை விட்டுட்டு கேட்டரிங் பிசினஸ் பண்றவங்க, பெரிய கம்பெனியில் உயர்பதவியை உதறிட்டு சமூக சேவை பண்றவங்க, நானோ டெக்னா லஜி படிச்சுட்டு, ஜர்னலிஸ்ட் வேலை பார்க்கறவங்கனு நாம நிறைய பேரைப் பத்தி, எத்தனையோ பத்திரிகைகள்லயும், சேனல்கள்லயும் பார்க்கிறோம்.

எதனால அவங்க எல்லாம் இப்படித் தங்களோட திசையை திருப்பிக்கிறாங்க? அந்த வேலை கிடைக்கிறதுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிச்சிருப்பாங்க, உழைச்சிருப்பாங்க? அவங்க பெற்றோர் அவங்களுக்கு காலேஜ் ஸீட் வாங்கவும், படிக்கவைக்கவும் எவ்வளவு பாடுபட்டிருப்பாங்க, எத்தனை எத்தனை 'எஃபர்ட்ஸ்’ போட்டிருப்பாங்க? அதையெல்லாம் விட்டுட்டு, அவங்க படிச்சதுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு துறைக்கு வர்றாங்கனா, அவங்க எல்லாம் தான் பார்த்த வேலையில் எந்தளவுக்கு திருப்தியின்மையில், அழுத்தத்தில், சோகத்தில் இருந்திருப்பாங்க?

நிறையக் குடும்பங்களில், 'ஆர்ட்ஸ் படிக்கிறதா இருந்தா அப்பா ஃபீஸ் கட்ட மாட்டேனுட்டார்!’, 'நீ டாக்டருக்குத்தான் படிக்கணும்னு அம்மா அழுதாங்க!’னு எல்லாம் சொல்லி, தங்களுக்குப் பிடிக்காத கோர்ஸ்களில் சேர்ந்த பசங்க இருக்காங்க. மாசம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், அவங்க 'வளமா’த்தான் இருக்காங்க அப்படிங்கறது என்ன நிச்சயம்? செய்ற வேலையில் மனசு சந்தோஷமா இருந்தா, எந்தத் துறையிலும் எந்த வேலையிலும் பசங்க பிரமாதமா பண்ணுவாங்க, 'பளிச்’னு முன்னுக்கு வருவாங்க. பலர் பார்வையில் படற மாதிரி முன்னுக்கு வர்றப்போ, நிச்சயம் நீங்க சொல்ற அந்த வளம் (Prosperity) தானா வரும்.

ஆமா! வளம்னா அது பணமாத் தான் இருக்கணும்னு இல்லை. உடல் ஆரோக்கியமா இருக்கலாம், நிம்மதியா இருக்கலாம், வேலை யில் கிடைக்கும் மனத் திருப்தியா இருக்கலாம். அதனால, வருமானம் ஒண்ணு மட்டுமே வளமான வாழ்க்கையைத் தந்துட முடியாதுங்கிறதாலதான், குழந்தைகளின் விருப்பங்களுக்குச் செவிசாய்க்கச் சொன்னேன். பள்ளிப்படிப்போட இறுதிக்கட்டத் துக்கு வரும்போது நிச்சயமா தெரிஞ்சுரும்... அவங்க ஆர்வமும் திறமையும் எதில் இருக்குனு! முடிஞ்சவரை அதிலேயே முன் னுக்குக் கொண்டு வந்தா, நம்ம பிள்ளைங்க ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க, இல்லையா!

ரிச்செஸ்ட், பிக்கெஸ்ட், ஹையெஸ்ட், ஸ்மார்ட்டெஸ்ட்... ஏன் எல்லாமே 'எஸ்ட்’ல முடியணும்? இந்த 'எஸ்ட்’ என்பதே ஆபத்தான விஷயம்தான். ஸ்கூல்ல ஹையஸ்ட் மார்க், பிக்கெஸ்ட் வேலை, ஸ்மார்ட்டெஸ்ட் போன்... இப்படி எல்லாமே 'உச்சி’யில் இருக்கணும்கிற எதிர்பார்ப்பை நீங்களும் வளர்த்துக்க வேண்டாம், குழந்தைகிட்டயும் வளர்க்க வேண்டாம். லட்சக்கணக்கில் டொனேஷன் கொடுத்து காலேஜ்ல ஸீட் வாங்கி, தினமும் காலையில் அஞ்சு மணிக்கு எழுந்து ஓடி, 60 கிலோமீட்டர் பயணம் பண்ணி போய்ப் படிச்சு, இதே லைஃப் ஸ்டைல்ல நாலு வருஷம் தொடர்ந்து... கடைசியில் ஒரு வேலையில உட்கார்ந்த சில மாதங்கள்லயே அலுவலகம் விட்டு வீடு திரும்பினதும், 'அம்மா, எனக்கு சந்தோஷமே இல்ல!’னு பிள்ளை சொன்னா, உங்களுக்கு எவ்வளவு வலிக்கும்? அந்த வலியான நிமிஷத்துக்கு நீங்க கொடுக்கிற விலை ரொம்பப் பெரிசு!

'கண்மணி அன்போடு...’ கௌதமி! - 5

முடிஞ்ச வரை பிள்ளைகளுக்கு வாய்ப்புகளைத் தேடித் தரவேண்டியது நம்ம கடமை. ஆனா, அதில் அவங்களுக்குப் பிடிச்சதை அவங்களே தேர்ந்தெடுக்கட்டும். என் பொண்ணு பியானோ கிளாஸ் போச்சு, பரதம் கத்துக்கிச்சு, கர்னாடக சங்கீதம், டென்னிஸ், செஸ், சயின்ஸ், ரோபோட்டிக்ஸ்னு என்னவெல்லாம் பிடிக்குதோ எல்லா கிளாஸுக்கும் போச்சு. ஆனா, எதிலுமே 'ஸ்டிக் ஆன்’ ஆகல. அதுக்காக நான் வருத்தப்படல. நம்ம குழந்தை சந்தோஷமா இருக்கிறதுக்காகத்தானே இதெல்லாம் செய்றோம்! அதுக்குப் பிடிக்கலனா விட்டுடலாமே! கட்டாயப்படுத்தி அதைத் தொடரச் செய்யணுமா என்ன? அதுக்குப் பிடிச்சிருந்தா, செஸ் கிளாஸுக்கு ஓர் அனுபவமாக போயிட்டு வரட்டும். 'உன் கிளாஸ்மேட் டோர்னமென்ட் போறா... நீ அதுக்கெல்லாம் லாயக்கில்ல’னு சொல்லி காயப்படுத்த வேண்டாம்.

பக்கத்து வீட்டுக் குழந்தை டாக்டருக்குப் படிக்குது, எதிர்வீட்டுக் குழந்தை ஐ.ஐ.டி கோச்சிங் போகுதுனு ஒப்பிடாதீங்க. நம்ம குழந்தைகளை மற்ற குழந்தைகளோட ஒப்பிடற மாதிரி முட்டாள்தனம் வேறு எதுவுமே இல்லங்க. 'உன்னால என்ன பண்ண முடியுமோ அதைப் பண்ணு, எவ்வளவு சிறப்பா கொடுக்க முடியுமோ அதைக் கொடு!’ன்னு உங்க குழந்தைக்கு தன்னம்பிக்கை கொடுத்து வளர்த்தீங்கனா, பின்னால அதுக்கு 'இன்செக்யூர்டு’ ஃபீலிங் வரவே வராது. 'நம்மைவிட சிறப்பா செய்ய, நமக்கு முன்னால 100 பேர் இருந்திருப்பாங்க. நமக்குப் பின்னாலும் 100 பேர் இருப்பாங்க. ஆனா, எத்தனை பேர் வந்தாலும் போனாலும் என் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ங்கிற அசைக்க முடியாத தன்னம்பிக்கையை உங்க குழந்தைக்கு கொடுத்துட்டீங்கனா போதும்... எந்தத் தடையையும் சுலபமா ஜெயிச்சு வருவாங்க!

சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சகோதரி அனுபமா சிவப்பிரகாசம் கேட்டிருந்ததும் முக்கியமான கேள்வி.

- பேசுவோம்...

தொகுப்பு: பிரேமா நாராயணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism