Published:Updated:

“கணவருக்கே நீச்சல் கத்துக்கொடுத்தவ நான்!”

உ.சிவராமன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

“கணவருக்கே நீச்சல் கத்துக்கொடுத்தவ நான்!”

உ.சிவராமன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

Published:Updated:

தேனி மாவட்டத்தில் இருக்கும் கும்பக்கரை அருவி. அங்கு ஒரு பாட்டியும் பேத்தியும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருந்தனர். ''கையவும் காலவும் இறுக்கமா இல்லாம அது போக்குல விடு. மூச்ச அடக்கப் பழகு. அட, பயத்தை தூக்கி மொதல்ல தண்ணிக்கு வெளிய போடு!'' என்று பாட்டி பூங்கோதை நீச்சல் கற்றுக்கொடுக்க, ''ஒன், டூ, த்ரீ..!'' சொல்லி மேலிருந்து தண்ணீருக்குள் விழுந்தார் பேத்தி ரித்திக்‌ஷா!

''நீச்சல் தெரியாம என்ன புள்ள நீ? வாக்கிங் போறது உங்களுக்கு உடற்பயிற்சி. ஆனா, நீச்சலை கோடை வகுப்புக்கு மட்டும்னு ஆக்கிட்டீங்க. நீச்சல் அடிச்சா கிடைக்கிற உடலுறுதிக்கு இணையில்லை!''

- பாட்டியின் அறிவுரை சுருக்கென இருக்க, பேச்சு கொடுத்தோம். அவரின் இளவயது நீச்சல் அனுபவங்கள்... சுவாரஸ்யம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கணவருக்கே நீச்சல் கத்துக்கொடுத்தவ நான்!”

திண்டுக்கல் மாவட்டம், பழைய ஆயக்குடியைச் சேர்ந்த பூங்கோதை பாட்டி, தன் அறிமுகம் தந்து பேச ஆரம்பித்தார்.

''எங்களோடது விவசாயக் குடும்பம். அப்போவெல்லாம் ஊருக்கு ஒதுக்குப்புறத்துல ஒரு கெணறு இருக்கும். ஊர்க்காரங்க குளிக்க, துவைக்க எல்லாம் அந்தக் கெணத்துக்குதான் போவாங்க. அப்படி ஒரு கெணத்துல தான் நீச்சல் பழகுனேன். சின்ன வயசுல எஞ்சோட்டுப் பொண்ணுங்க எல்லாரும் அவங்கவங்க வீட்டு அழுக்குத் துணிகளை எடுத்துக்கிட்டு போய், கெணத்துக்கரையில துவைச் சுட்டு, அப்படியே கெணத்துல குளிச்சுட்டு வருவோம்.

எங்கள்ல யாரு முதல்ல நீச்சல் கத்துக்கிறதுனு ஒரு போட்டி வெச் சோம். எங்கப்பா எனக்கு நீச்சல் கத்துக்கொடுத்தார். சுரக்குடுக்கையை இடுப்புல கட்டி கெணத்துக்குள்ள என்னை தள்ளிவிட்டப்போ, பயத்துல தானா கையை காலை ஆட்டி கரைக்கு வந்துட்டேன். 'அவ்ளோதான் நீச்சல்!’னு சிரிச்சாரு எங்கப்பா. எங்கூட பொறந்த அஞ்சு பேரும் இப்படித்தான் சுரக்குடுக்கை நீச்சல் கத்துக்கிட் டோம். லீவு நாட்கள்ல எல்லாம், கெணத்து குளியல்தான் எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு. யாரு அதிக முறை, அதே நேரத்தில் வேகமா கெணத்தை சுத்தி வர்றது, மேட்டாங்கால்ல இருந்து கெணத்துக்குள்ள குதிக்கிறது, கெணத்துக்கடியில போய் மண் எடுக்குறதுனு தோழிகளுக்குள்ள நிறைய நீச்சல் போட்டிகள் வெச்சுப்போம்.

“கணவருக்கே நீச்சல் கத்துக்கொடுத்தவ நான்!”

என் கல்யாணத்துக்கு அப்புறம், ஒரு நாள் நான் மேல இருந்து கெணத்துக்குள்ள குதிச்சு குளிக்கிறதைப் பார்த்து மிரண்டு போன என் வீட்டுக்காரர், 'எனக்கும் கெணத்துல குளிக்க ஆசையா இருக்கு. ஆனா எனக்கு நீச்சல் தெரியாதே!’னு ஏக்கமா சொன்னார். 'அட விடுங்க... நான் கத்துக்கொடுக்கிறேன்!’னு சொல்லி, எங்கப்பா என்னைத் தள்ளின மாதிரி நான் அவரை கெணத்துக்குள்ள இழுத்து விட்டுட்டேன். மூழ்கி எந்திரிச்சு திக்குமுக்காடிப் போய் வந்தவரு, 'அடிப்பாவி... புருஷன்னுகூட பாவம் பார்க்காம இப்படி தள்ளி விட்டுட்டியே!’னு சிரிக்க, மறுபடியும் தள்ளி விட்டு நீச்சல் கத்துக்கொடுத்தேன். இப்பவும் நீச்சல் பத்தி பேச்சு வந்தா, 'எனக்கு நீச்சல் கத்துக்கொடுத்ததே என் சம்சாரம்தானப்பா!’னு பெருமையா சொல்வார்!''

- பூங்கோதையின் எக்ஸ்பிரஸ் பேச்சுக்கு சிறு பிரேக் போடுகிறது வெட்கம்!

''ஒருமுறை எங்க ஊருக்கு வெள்ளம் வந்தப்போ, வீட்டுக்குள்ள இருந்த பொருளெல்லாம் வெள்ளத்தோட போயிருச்சு. விடுவோமா? நீச்சல் அடிச்சி  மீட்டதோட,   மத்தவங்களுக் கும் மீட்டுக் கொடுத்தோம். அப்புறம் ஒரு முறை கெணத்துக்கரையில துவைச்சிட்டு இருந்தப்போ, பக்கத்துல உட்கார்ந்திருந்த என் தோழியோட தம்பி, தவறி கெணத்துக்குள்ள விழுந்துட்டான். கண்ணிமைக்கும் நேரத்துல நானும் குதிச்சி, அவன் தலைமுடியைப் பிடிச்சு மேல தூக்கிட்டு வந்தேன். இப்படி நம்ம நீச்சல் நாலு பேருக்கு உபயோகமாவும் இருந்திருக்கு. என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் நீச்சல் கத்துக்கொடுத்தேன். இப்ப கெணறு, குளமெல்லாம் எங்க இருக்கு? அதான் இங்க சுற்றுலா வந்த எடத்துல என் பேத்திக்கு நீச்சல் கத்துக்கொடுத்துட்டு இருந்தேன்.

ஆணோ, பொண்ணோ... நாம கத்துக்கிற வித்தை என்னிக்கும் கைகொடுக்கும். அப்படிதான் நீச்சலும். எங்க ஊருல நீச்சல்லயே பலரோட ஒடம்பு கட்டுமரம் மாதிரி உறுதியா இருக்கும். பொம்பளைங்களுக்கு தேவையில்லாத சதையெல்லாம் வைக்காது. அப்புறம்... ராவுக்கு (இரவுக்கு) நல்ல தூக்கத்தையும் தரும். ஊருக்கு ஊரு 'ஸ்விம்மிங் பூல்’ கட்டி விட்டிருக் காங்களே...  அங்க போய் தள்ளிவிடுங்கத்தா உங்க புள்ளைகள!''

“கணவருக்கே நீச்சல் கத்துக்கொடுத்தவ நான்!”

-  மீண்டும் நீச்சல் பயிற்சியில் மூழ்கினார் பூங்கோதை!

பூங்கோதை சொல்லும் விஷயங்களை அசைபோடும்போதே.... ’விழுப்புரம் அருகேயுள்ள கிராமத்தில் நீரில் மூழ்கி பள்ளிச்சிறுவர்கள் இருவர் மரணம்', ’திருநெல்வேலி அருகேயுள்ள கிராமத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற அண்ணன்  தங்கை நீரில் மூழ்கினர்’ என்றெல்லாம் கிராமப்புறங்களில் இருந்து அவ்வப்போது வரும் கண்ணீர் செய்திகள்... நம் நினைவலைகளில் நீந்தின.

”மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா?' என்பார்கள். கிராமங்களைப் பொறுத்தவரை ஆண், பெண் பேதமில்லாமல் அனைவருமே மீன் குஞ்சுகள்தான் ஒரு காலத்தில்! ஆம், அனைவருக்குமே நீச்சல் அத்துப் படிதான். ஆனால், காலமாற்றத்தால் இன்று எல்லாமே கரையேறிக்கொண்டிருக்கின்றன நீச்சல் உட்பட. பள்ளிக்கூடம் அனுப்புவதற்கு முன்பாக, முதலில் நீச்சல் கற்றுக்கொடுப்போம் இனியாவது!

“கணவருக்கே நீச்சல் கத்துக்கொடுத்தவ நான்!”

சூப்பர் ஸ்விம்மர்!

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த மகாலட்சுமி ஸ்ரீதரன், டாக்டர் ஒருவரின் அறிவுரைப்படி தன் பையனை நீச்சல் வகுப்புக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்.

”என் சின்னப் பையன் சஞ்சய் ராம் சாப்பிடவே மாட்டான். ஒல்லியா இருப்பான். டாக்டர்கிட்ட போனப்போ, 'நல்லா விளையாட விடுங்க. அல்லது ஸ்விம்மிங் கிளாஸுக்கு அனுப்புங்க. கபகபனு பசி எடுக்கும், நீங்க திருப்தியாகிற மாதிரி சாப்பிடுவான்!’னு சொன்னார். நானும் அவனை ஸ்விம்மிங் வகுப்பில் சேர்த்தேன். இப்போ நல்லா சாப்பிடுறான். நாலு வயசாகிற என் வாண்டுதான், இப்போ அந்த சென்டரிலேயே லிட்டில் ஸ்விம்மர். 'குட்டியா இருந்தாலும் சூப்பரா நீந்துறானே!’னு எல்லோரும் பாராட்டுறாங்க!'' என்றார் தாயின் சந்தோஷத்துடன்!

இதுகுறித்து நீச்சல் பயிற்சியாளர் எம்.விஜயகுமாரிடம் பேசினோம். 'நீச்சலை அனைவரும் அவசியம் கத்துக்கணும். உடம்புல இருக்குற எல்லா பாகங்களும் வேலையில் ஈடுபடுகிற ஒரு கலைதான் நீச்சல். மைதானத்தில் ஒரு மணி வாக்கிங் போறதும், குளத்துல 10 நிமிடம் நீச்சல் அடிக்கிறதும் ஒண்ணு. காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பிராக்டீஸ் பண்ணலாம். சாப்பிட்ட பிறகு மட்டும் நீச்சல் பயிற்சி வேண்டாம்.

நீச்சல் பயிற்சி செய்வதால் கை, கால் வலுப்பெறுவ தோடு... உடல் புத்துணர்ச்சியாகும், மனஅழுத்தம் குறையும், உடல் எடை குறையும். நீச்சல் பயிற்சி மூலம் சர்க்கரை நோய், ஆஸ்துமாவை கட்டுப்படுத்தலாம். நீர்நிலைகளில் நீந்தும்போது தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்'' என்கிறார் விஜயகுமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism