Published:Updated:

ஒவ்வாமையை ஓட ஓட விரட்டுங்கள்!

ந.கீர்த்தனா

ஒவ்வாமையை ஓட ஓட விரட்டுங்கள்!

ந.கீர்த்தனா

Published:Updated:

''குழந்தைப் பருவத்தில் ஒவ்வாமை என்பது இயல்பான ஒன்று. ஆனால், குழந்தைகளைத் தாக்கும் ஒவ்வாமைகள் (அலர்ஜி) பற்றியும், அதற்கான காரணங்கள், குணப்படுத்தும் வழிகள் பற்றியும் பெற்றோர்கள் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்!'' என்று வலியுறுத்தும் சித்த மருத்துவர் வேலாயுதம், அவற்றை விளக்குகிறார்.

ஒவ்வாமையை ஓட ஓட விரட்டுங்கள்!

''கருவாப்பு, செவ்வாப்பு எனப்படும் ஒவ்வாமையால் தோளில் தடிப்புகள் வரும். இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். ஏனெனில், குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகத் தொடங்கும்போது உடலில் ஏற்படும் மாற்றம் காரணமாக தோளில் சிவப்பு மற்றும் கறுப்பு நிற தடிப்புகள் தோன்றலாம்.  குழந்தை வளர வளர, இந்தப் பிரச்னை நாளடைவில் சரியாகிவிடும். ஆனால், அந்தத் தடிப்பில் எரிச்சலும் அரிப்பும் ஏற்பட்டு காய்ச்சல் வருமளவுக்குச் சென்றால் மிளகு, சீரகம், அருகம்புல் சாறு ஆகியவற்றைக் கொடுக்க, எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பொதுவாகவே உணவில் மிளகு, மஞ்சள் ஆகியப் பொருட்களை சேர்த்துக்கொண்டால், இதுபோன்ற பிரச்னைகள் வராது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து, சீஸனல் ஒவ்வாமை. அதாவது தட்பவெப்பத்துக்கு ஏற்ப வரும் ஒவ்வாமை. குறிப்பாக மழை மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும் இவ்வகை ஒவ்வாமைகளில் மேல் சுவாசக்குழாயில் மட்டும் தொற்று வரும். இதனால் சளி பிடித்தல், மூக்கடைத்தல், தும்மல், கண் சிவத்தல், முகம் வீங்குதல் முதலியவை இருக்கும். இவ்வகை ஒவ்வாமைக்கு மஞ்சளை விளக்கில் காட்டி அந்தப் புகையை நுகரச் செய்தல், நொச்சி இலையை ஆவி பிடித்தல் முதலியவற்றைச் செய்யலாம். சுக்குத் தைலம் எல்லா சித்த மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதைக் குழந்தையின் உடலில் தேய்த்து வெந்நீரில் குளிப்பாட்டலாம். இதுபோன்ற நேரங்களில் சிட்ரிக் அமிலம் சார்ந்த விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது.

ஒவ்வாமையை ஓட ஓட விரட்டுங்கள்!

பூக்களின் மகரந்தம், தூசு ஆகியவற்றின் மூலம் வரும் தொற்று... அடுத்த வகை. இது சுவாசப்பை, அதாவது நுரையீரலில் தொற்று ஏற்படுத்தி மூச்சுத் திணறலை (வீசிங்) வரவைக்கலாம். பின்னர், ஆஸ்துமாவும் வர நேரலாம். இவ்வகை ஒவ்வாமைக்கு கட்டாயம் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அவரின் அறிவுரையின் கீழ், இந்த ஒவ்வாமையை குணப்படுத்தவல்ல சித்த மருத்துவ மாத்திரைகளை நீரில் குழைத்து குழந்தையின் உடலில் பூச வேண்டும். துளசிச் சாறு, வெற்றிலைச் சாறு, இஞ்சி, தேன், மிளகு ரசம், கற்பூரவல்லி சாறு ஆகியவற்றைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால், இதுபோன்ற பிரச்னைகள் வராமலேயே தடுக்கலாம். மேலும், இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மாசுவான சூழலுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்'' என்று விளக்கிய வேலாயுதம்,

''பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ள ஒவ்வாமைகள் இவைதான். மேலும், தொற்றுகள் காரணமாகவும் பல பிரச்னைகள் ஏற்படலாம். ஒவ்வாமை ஆகட்டும், தொற்றாகட்டும்... குழந்தையிடம் இருந்து அவற்றை தூரத்தில் நிறுத்த மிளகுக் கஷாயம், அருகம்புல் சாறு, நலங்கு மாவு குளியல் முதலியன வாழ்வின் அங்கங்களாக வேண்டும். இதையெல்லாம் சுகாதாரமான முறையில் தயாரித்துப் பயன்படுத்துவது முக்கியம். அலோபதி மருந்துகளை எடுத்துக்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி வளராமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எந்த வகை மருந்தாக இருந்தாலும் அது வெளி உடலுக்கானதாக மட்டுமே இருந்தால் பாதுகாப்பானது. இப்படி சின்னச் சின்ன அம்சங்களில் கவனம் செலுத்தினால், உங்கள் வீட்டு சின்ன மொட்டுகள், நாளை மலரும் ஆரோக்கியமாக!'' என்று முடித்தார் சித்த மருத்துவர் வேலாயுதம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism