''மேடம், நாம வேலையா இருக்கிறப்போ குழந்தைங்க வந்து ஏதாவது கேட்டா, நம்ம வேலையை ஒரு நிமிஷம் நிறுத்திட்டு, 'ஸாரி... அப்புறமா பேசறேன்!’னு சொல்லச் சொல்றீங்க. ஆனா, அது அவ்வளவு ஈஸி இல்ல. நான் ஒரு இன்ஜினீயர். எனக்கு ரெண்டு பசங்க. அவங்க தொணதொணனு தொந்தரவு பண்றப்போ, நீங்க சொல்ற மாதிரி பொறுமையா சொன்னாலும் கேட்க மாட்டாங்க. இன்னும் கொஞ்சம் அதிகமா சத்தம் போடுவாங்க. அந்த சமயத்தில் கோபம்தான் வருது. நீங்க சொன்னதைப் பிராக்டிகலா செயல்படுத்த டிப்ஸ் கொடுங்களேன்!''னு கேட்டிருக்காங்க சென்னை, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சகோதரி அனுபமா சிவப்பிரகாசம்!

இதுவும் 100 சதவிகித லாஜிக்கலான கேள்விதான். இதே சூழ்நிலை எனக்கும் பல தடவை வந்திருக்கு. இந்த அவஸ்தையை நானும் அனுபவிச்சிருக்கேன்.

நாம மூட் அவுட்டாக இருக்கிறப்போ, எப்படி யார் சொல்றதும் நம்ம காதுல ஏறாதோ, அதேமாதிரிதான் குழந்தைகளும். அவங்க அப்செட்டா இருந்தாங்கனா நாம சொல்றதைக் கேட்டுக்கவே மாட்டாங்க. அது நம்ம டென்ஷனை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்த, நாமும் பதிலுக்குக் கத்துவோம்... திட்டுவோம். இது உங்க வீட்டில் மட்டும் இல்லீங்க, எல்லார் வீட்டிலும் நடக்கிற தினப்படி விஷயம்தான். இதை தீர்க்கிறதும் எளிதானது இல்லை. ஆனா, குழந்தைக்குக் கொஞ்சம் கொஞ்சமா ஒரு நம்பிக்கையை நீங்க கொண்டுவந்துட்டீங்கனா, இந்தச் சூழலை நீங்க சுலபமா கடந்துடலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கண்மணி அன்போடு...’ கௌதமி! - 6

எப்படீங்கறீங்களா?

குழந்தையோ, நீங்களோ... கோபம், டென்ஷன் இல்லாம, அமைதியா, கூலா இருக்கிற சந்தர்ப்பம்தான் இதுக்கு ஏற்றது. உதாரணமா... குழந்தையைக் குளிப்பாட்டும் சமயம், ரெண்டு பேரும் பார்க்கில் 'வாக்’ போற சமயம், ராத்திரியில கதை சொல்லித் தூங்கவைக்கிற நேரம்... இந்தப் பொழுதுகள்ல குழந்தையின் தலையைப் பாசமா கோதிவிட்டுக்கிட்டே, ''இங்கே பாரு கண்ணு... அம்மா ஏதாவது முக்கிய வேலையாவோ, மூடு அப்செட்டா இருக்கிற சமயத்திலோ நீ தொணதொணனு ஏதாவது கேட்டா கோபம் வரும், கத்துவேன். திட்டுவேன். எரிஞ்சுகூட விழுவேன். நீயும் அப்படித்தான்... ஏதாவது மூடு அவுட்னா அதை என் மேல காட்டுவ. கத்தி அழுவ. அடம் பண்ணுவ. இது ரெண்டு பேருக்குமே நேச்சுரல். அதுக்காக நான் உன்னை வெறுக்கிறேன்னோ, உன்னை விட்டுப் போயிடுவேன்னோ அர்த்தம் இல்லை. ஐ லவ் யு டா கண்ணா! அம்மா உன்னை ரொம்ப நேசிக்கிறேன். அது எப்போதுமே மாறாது. உனக்கு என்ன வந்தாலும் நான்கூட இருப்பேன். எப்போதும் இருப்பேன்!''னு அழுத்தமா குழந்தையின் மனதில் பதியற மாதிரி சொல்லிட்டீங்கனா போதும். அதுக்கப்புறம், நீங்க என்னதான் திட்டினாலும் கத்தினாலும் அது புரிஞ்சுக்கும். ''ஓகே... அம்மா ஏதோ டென்ஷன்ல இருக்காங்க. ஆனா, அம்மாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்!''னு அதுக்குள்ள அந்த வார்த்தைகள் வேலை செய்யும்.

இது உண்மையிலேயே என் வாழ்க்கையில் நடந்திருக்கு. நான் எவ்வளவு பிடிவாதமோ, அதே அளவுக்கு என் மகளும் பிடிவாதம், அதே வைராக்கியம்! எங்களுக்குள்ளே பயங்கர சண்டை நடக்கும். நான் கத்துவேன்... அவளும் கத்துவா. எல்லாம் உண்டு! ஆனா, அஞ்சே நிமிஷம்தான்... அப்புறம் வந்து கட்டிக்கிறப்போ, என் அன்பை அவ பரிபூரணமா உணர்ந் திருக்கிறதை அந்த ஸ்பரி சமே உணர்த்திடும். ''நீ தப்பு பண்றப்போ நான் திட்டு வேன். ஆனா, அதுக்காக உன்னை விட்டுப் போயிட மாட்டேன். இங்கேயேதான் இருப்பேன், உன் கூடவே!'' என்பதை நான் என் மகளிடம் பிரியமான தருணங்களில் எல்லாம் சொல்லிட்டு வந்திருக்கேன். 'இது சொல்லித்தான் தெரியணுமா? நம்ம பிள்ளைங்களை நாம நேசிக்கமாட்டோமா?’னு கேக்கத் தோணும். ஆனா, சொல்லியே ஆகணும்.

'கண்மணி அன்போடு...’ கௌதமி! - 6

அனுபமா மாதிரி வேலைக்குப் போற அம்மாவுக்கு மட்டும் இல்ல, இல்லத்தரசி களுக்கும் எக்கச்சக்க டென்ஷன் இருக்கும். காய் வாங்க வெளியே போனாகூட, சேறும் சகதியுமான ரோடு, தண்ணியை அடிச்சு விடற வண்டி, மீட்டருக்கு மேல கேட்டு சண்டை போடற ஆட்டோ டிரைவர்னு அவங்க சந்திக்கிற பிரச்னைகள் ஏராளம். ஏகப்பட்ட எரிச்சலோட வருவாங்க. வீட்டில் நுழையறப்போ, குழந்தையும் ஏதாவது விஷமம் பண்ணுச்சுனா... அவ்வளவுதான்.

இதுமாதிரி பல சமயங்களில் நான் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கேன். பயங்கரமா திட்டிடுவேன். ஆனா, என் பொண்ணு முகம் வாடி அந்தப் பக்கம் போறதைப் பார்த்ததும், கூப்பிட்டு. ''ஸாரிம்மா... என் கோபம் உன் மேல இல்ல!''ன்னு சொல்லிடுவேன். நான் திட்டினதுக்கும், ஸாரி சொன்னதுக்கும் இடையே இருக்கிற அந்த இடைவெளியை (space) தாங்கிற சக்தியைக் குழந்தைக்கு வரவழைக்கணும்.

'நாமும் கெட்டவங்க இல்ல... அம்மாவும் கெட்டவங்க இல்ல...’னு குழந்தை புரிஞ்சுக்கற அளவுக்கு, குழந்தைக்கும் நமக்குமான உறவை வளர்த்து, பலப்படுத்தணும். சின்ன வயசானாலும் சரி, டீன் ஏஜ் ஆனாலும் சரி... அடிப்படை அஸ்திவாரம் உறுதியா இருந்தா போதும். 'என் அம்மா என்னை நேசிக்கிறாங்க... எக்காரணம் கொண்டும் என்னை வெறுக்க மாட்டாங்க!’ என்ற நம்பிக்கை அழுத்தமா அந்தப் பிஞ்சு மனசில் விழுந்துட்டா போதும். அப்புறம் கத்திச் சண்டை, கத்தாத சண்டை எதுவா இருந்தாலும் கவலையே இல்லை. எல்லாம் பனி மாதிரிக் கரைஞ்சிடும் அந்த நம்பிக்கை முன்னே!

திவ்யாவுக்கும், அனுபமாவுக்கும், உங்களுக்கும் திருப்தியாகிற அளவு விளக்கம் தந்துட்டேனான்னு தெரியல. நீங்கதான் சொல்லணும்!

- பேசுவோம்...

தொகுப்பு: பிரேமா நாராயணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism